ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை

தமிழ்ப் பண்பு

ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பான ஒரு குணம் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தனியான வழக்கமுண்டு. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு சம்பிரதாயமுண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சரித்திரம் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு போக்கு உண்டு.

தமிழ்ப் பண்பு என்பது, தமிழ் மக்களின் இயல்பும் தமிழ் நாட்டுச் சரித் திரத்தின் மரபும், தமிழ் மொழி இலக்கி யங்களின் போக்கும் ஆகிய இந்த மூன்றும் கலந்து தொகையான குணம்.

இந்தத் தமிழ்ப் பண்பை, பிற மொழி இலக்கியங்களையும் பக்கம் பக்கமாக வைத்துப் படித்துப் பார்த்து அவற்றிலுள்ள வித்யாசங்களைக் கவனிக்கிறபோது சுலபமாகக் காணலாம். வியாச பாரதத்தையும், வில்லி பாரதம் அல்லது பெருந் தேவனார் பாரதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தமிழ்ப் பண்பு அங்கங்கே சிறிது காணப்படும். வடமொழியிலுள்ள நளன் கதையையும், புகழேந்தி பாடிய நளவெண்பாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே இந்தத் தமிழ்ப் பண்பை முன்னிலும் அதிகமாகக் காணலாம். வான்மீகி ராமா யணத்தையும், கம்பராமாயணத்தையும் அவற்றுள் ஒப்பு காண்பதே அரிது. கதா பாத்திரங்களாகிய பேர்களும் ஊர்களும் தவிர மற்றெல்லா நிகழ்ச்சிகளும் கதைப் போக்கும் கதாபாத்திரங்களின் குணங்களும் நடவடிக்கைகளும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். இந்த மாறுபாடுகள் எல்லாம் வட நாட்டுப் பண்புக்கும் தமிழ் நாட்டுப் பண்புக்கும் உள்ள வித்தியாசங்களே. அங்குள்ள மாறுபாடுகள் அனைத்தும் தமிழ்ப் பண்பினால் தரப்பட்டவை என்பது எளிதில் தெரியும். வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்களெல்லாம் அந்த இலக்கியங்களின் முக்கிய கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை யெல்லாம் தமிழ்ப் பண்புகளோடு கூட்டியே தமிழாக்கியிருக்கிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இந்தப் பண்பு வேறுபாட்டைப் பார்க்கலாம். உதாரணமாகத் தமிழ் நாட்டுப் பிராமணர்களிடம் வட நாட்டுப் பிராமணர்களிடத்தில் காணவே முடியாத பல பண்புகளைப் பார்க்கலாம். வட நாட்டுப் பார்ப்பனரிடத்தில் சுசிகரமான வழக்கங்கள் மிகக்குறைவு.

உடை உணவு உடல் இவற்றின் சுத்தத்தில் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் வட நாட்டாரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். தமிழ் நாட்டில் தினம் ஒரு தரமாவது முழுகிக் குளிக்காத பார்ப்பனரைப் பார்க்க முடியாது. மூன்று தரம் முழுகுகின்றவர்களும் இருக்கிறார்கள்; வட நாட்டுப் புரோகிதர்களாகிய பண்டாக்களிலும் கூட நித்தமும் குளிக்கின்றவர்கள் மெத்தக் குறைவு. தமிழ்நாட்டில் மிக ஏழைப் பிராமணர்கூட, கசக்கியாவது பிழியாத உடையை இரண்டாம் நாள் கட்ட மாட்டார்; வட நாட்டு பிராமணரில், செல்வர்களைத் தவிர மற்றவர்கள் அனேக நாட்களுக்கு அழுக்கு ஆடையையே அணிவார்கள். (இது குளிர் தேசத்தை ஒட்டியது என்று சொல்லலாம். ஆனால் நடுங்குகின்ற குளிரிலும் கொட்டுகின்ற மழையிலும் கூட தமிழ் நாட்டுப் பிராமணர் அப்படிச் செய்ய மாட்டார். தென்னாட்டு பிராமணன் வட நாட்டுக்குப் போனாலும் அங்கேயும் குளிக்காமலும் உடை மாற்றாமலும் உண்ண மாட்டான்) வட நாட்டு பிராமணர்களில் பெரும்பாலோர் புலால் உண்பவர்கள். தமிழ் நாட்டில், கெட்டுப் போன இரண்டொரு தனி மனி தர்களைத் தவிர மற்ற எல்லாப் பிராமணர்களும் புலால் உணவைச் சிந்தையாலும் தீண்டாதவர்கள். இந்த வித்தியாசங்கள் ஏன் என்றால் இவர்கள் வாழ்க்கையில் தமிழ்ப் பண்பு இருக்கின்றது அவர்கள் வாழ்க்கையில் அது இல்லை.

எந்த மதத்துக்கும், எந்த நிறத்துக்கும், எந்த நாட்டானுக்கும், எந்த மொழிக்கும் இடங் கொடுத்தது தமிழ் நாடு. தமிழ் நாட்டுக் கிறிஸ்துவருக்கும் மற்ற நாட்டுக் கிறிஸ்துவருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. தமிழ் நாட்டு மகம்மதியருக்கும் மற்ற நாட்டு மகம்மதியருக்கும் மாறுபாடுகள் உண்டு. தமிழ் நாட்டு பெளத்தனுக்கும் வேறு நாட்டு பௌத்தருக்கும் வித்தியாசம் உண்டு. மற்ற மதங்களும் அப்படியே. ஒரே மதத்திலும் தமிழ்நாட்டு சைவம் வேறு, வடநாட்டு சைவம் வேறு. தமிழ்நாட்டு வைஷ்ணவம் வேறு, வடநாட்டு வைஷ்ணவம் வேறு. இந்த வித்தியாசங்களுக்கெல்லாம் தமிழ் நாட்டில் வசிப்பவர் களுடைய வாழ்க்கையில் தமிழ்ப் பண்பு கலந்திருப்பதே காரணமாகும்.

இந்தத் தமிழ்ப் பண்பின் அந்தரங்க அடிப்படை இந்த உலக முழுவதும் இறைவன் தன் மக்களுக்குக் கட்டி வைத்த ஒரே வீடென்றும், உலக மக்களெல்லாம் அந்த வீட்டிலுள்ள ஒரு குடும்பத்தின் குழந்தைகளென்றும், உலகத்தி லுள்ள வெவ்வேறு மொழிகளும் அந்தக் குழந்தைகளின் வெவ்வேறு குரல்களென்றும் உலகத்திலுள்ள வெவ்வேறு மதங்களும் அந்தக் குழந்தைகளின் வெவ்வேறு விதங்களென்றும், உலகத்தில் ஒரு சமூகத்துக்கு நேருகின்ற இன்ப துன்பம் அந்த வீட்டிலுள்ள எல்லாருக்கும் நேருகின்ற இன்ப துன்ப மென்றும் எண்ணுகின்ற விஸ்தாரமான எண்ணத்தில் வேரூன்றியது.

தமிழ்ப் பண்பு, இறைவன் உண் மையை மறுக்காது, தெய்வ நிந்தனை பொறுக்காது, பெரியோரைப் பிழை சொல்லாது, முன்னோர்களை மூடர்களாக்காது, பழைமையைப் பழிக்காது நிகழ்கால அவசரத்தால் நிதானம் தவறி விடாது, எதிர்கால ஆசைகளுக்காக எதையும் செய்துவிடாது. இந்தத் தமிழ்ப் பண்பினால் நாம் என்ன பலன் கண் டோம் என்று வெகு எளிதாகக் கேட்டு விடலாம். அதற்கு இந்தப் பண்பில்லாத ஏனைய நாடுகள் அடைந்து விட்ட நலன்களைச் சற்றாகிலும் எண்ணிப் பார்த்தால் தக்க பதில் கிடைக்கும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *