
ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை
தமிழ் நாடு
தமிழ் நாடு ஒரு தனி மாகாணம் ஆகவேண்டும் என்பதும், அதில் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதும் மிகவும் சரியான உரிமைகள். பாஷா வாரியாக மாகாணங்களைப் பிரிக்கிற போது தமிழ் நாடு ஒரு தனி மாகாணமாக்கப் படும் என்றுதான் எதிர் பார்க்கிறோம். அன்றியும் திருவாங்கூரின் தெற்கிலும், தென் கிழக்கிலும் தமிழர்களே பெருந் தொகையாக இருக்கிற பகுதிகளையும் தமிழ் மாகாணத்தோடு சேர்க்க வேண்டும் என்று செய்யப்பட்டு வரும் முயற்சியும் மிகவும் நியாயமானது. தமிழ் நாடு என்று சொல்லும்போது வெறும் இறந்த கால உண்மைகளை மட் டும் எண்ணாமல் நிகழ்கால நியாயங்களை யும் எதிர்கால நோக்கங்களையும் சேர்த்து எண்ண வேண்டும். சரித்திர உண்மை யாக தமிழ் நாட்டின் எல்லை, வடக்கே வேங்கட மலையும், தெற்கே குமரியாறும் மற்ற இரு புறங்களிலும் கடலுமாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால் அந்த எல்லை இப்போது இல்லை. பழைய எல்லைக்குள் இப்போது இருந்து வருகிற மலையாளிகளும், கன்னடக் காரரும் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி களை யெல்லாம் தமிழ் மாகாணத்தோடு சேர்க்க வேண்டும் என்பது தான் சரி யான நியாயமாகும். அந்த முறையில் ஒரு தமிழ் மாகாணத்தை நிறுவி தமிழர் களின் தனி முறையில் கலைகளையும், கல்வியையும் பெருக்கி தமிழ் அரசு நடத்தி, தமிழர்களுடைய பெருமைகளுக் குக் காவல் புரிவோம்.
ஆனால், தமிழ் மாகாணத்தில் தமிழன் தனியரசு கொண்ட பின் இந்திய நாட்டை மறந்து விடக்கூடாது. மறந்தால் தமிழ் மாகாணத்தின் தனியரசும் தடுமாறி விடும். இந்திய நாட்டில் பாஷைகள் எத்தனை இருந்தாலும் பல்லாயிரம் வருஷங்களாக இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய்ப்பாலை உண்டு ஒரே நாகரிக முடையவர்கள் என்பதை இகழ்ந்து விடக் கூடாது. இகழ்ந்தால் பல கஷ்ட நஷ்டங்கள் உண்டு. வட கோடியில் வசிக்கும் ஒரு இந்தியன் தெற்கேயுள்ள திருப்பதி, சீரங்கம், ராமேசுவரம் என்ற உடனே வணக்கம் செய்வதும், தென் கோடியிலிருக்கும் ஒரு தமிழன் வடக்கேயுள்ள காசி, ஹரித் துவாரம், பிரம்ம கபாலம் என்ற பெயர்களுக்குக் கையெடுத்துக் கும்பிடுவதும் ஒரு நாள் இரண்டு நாளில் உண்டாகி விட்ட உறவுகள் அல்ல. அறுக்க முயல்வதும் அநியாயம்.
வட நாட்டிலும் தென்னாட்டிலும் குணங்களும் குற்றங்களும் ஒரே மாதிரி யாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. ங்களைப் பற்றித் திருப்பித் திருப் பிச் சொல்ல வேண்டிய தில்லை. குற்றத்துக்கு மட்டும் ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இந்தியாவில் இறந்து போன கணவனுடன் மனைவி உடன் கட்டை ஏறி எரிந்து போகிற வழக்கம் வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது. ரஜபுத்திரப் பெண்கள் போரில் இறந்து போன கணவன் மார்களைக் கருதிக் கூட்டம் கூட்டமாகத் தீக் குளித்ததை சரித்திரமாகப் படித்திருக்கிறோம். இந்தக் கொடிய வழக்கத்தை நீக்க நூறு ஆண்டு ளுக்கு முன்னாலிருந்த ராஜாராம் மோஹன் ராய் என்ற வங்காளிப் பிராமணர் வெகு பாடுபட்டு அதற்காக இங்கிலாந்துக்கும் தூது சென்றார். கடைசியாக லார்ட் வில்லியம் பென்டிங்க் என்ற கவர்னர் ஜெனரல் அந்த வழக்கத்தைச் சட்டம் செய்து ஒடுக்கினார். இந்த ‘சககமனம்’ வழக்கம் வடநாட்டுக்காரர்களிடம் தான் இருந்ததாக நாம் எண்ணிக் கொண்டோம். ஆனால் இந்த வழக்கம் தமிழ் நாட்டிலும் இருந்திருக்கிறது என்பதை அறிந்தால் அதிசயப்படுவீர்கள்.
மிகச் சிறந்த தனித் தமிழ் இலக்கியமாகச் சொல்லப் படுகிற “புற நானூறு என்ற நூலில் பூதப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் இறந்து போனபோது அவனுடைய மனைவியும் உடனிறக்கத் தீக்குளிக்கச் சென்றதை அருகிலிருந்த அமைச்சர்களும், அறிஞர்களும் தடுத்து அறிவுறுத்துகிறார்கள். அவர்களை மீறி அந்தப் பெண் தீயில் இறங்கி இறந்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
இந்த வழக்கம் புறநானூறுக்குப் பின் வந்த தமிழ் இலக்கியம் எதிலும் இல்லை. புற நானூறு காலத்துக்குப் பின் அதாவது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கம் தமிழ் நாட்டில் இல்லா தொழிந்து விட்டதாக ஊகிக்கலாம். அப்படியானால் இந்த வழக்கம் தெற்கே ஆரம்பித்துதான் வடக்கே போயிருக்க வேண்டும் என்று எண்ணவும் இடமிருக்கிறது.
இதனால் பல தமிழ் நாட்டு மன்னர்கள் ‘இமய வர்மன், அதி வீர ராம பாண்டியன்’ ‘ராஜ சூயம் வேட்டவன் ராஜ ராஜன் ‘ராஜ ராஜேந்திரன்’ ‘ராஜேந்திர மார்த்தாண்டன்’ என்ற பெயர்களை வைத்துக் கொண்ட காரணத்தாலும் வட நாடும் தென்னாடும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத நாகரிகத்தில் பின்னிக் கிடப்பதாலும் நாம் இந்தியாவின் பொது நலத்தையும் போற்ற வேண்டும். இந்திய நாட்டின் இந்த முழுமையைப் பாரதியார்
“முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள் செப்பும் மொழிபதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்“
என்று பாடி இருக்கிறார். இப்போது இந்திய நாட்டின் ஜனத்தொகை நாற்பது கோடி யென மதிப்பிடப்படுவதால், இப்பாட்டை
“நாற்பது கோடி முகமுடையாள் உயிர்
நலமிக ஒன்றுடையாள் – இவள் ஏற்கும்
மொழிபதி னெட்டுடையாள், எனில் எண்ணுதல் ஒன்றுடையாள்.”
என்பது போலப் பாடிக் கொண்டாலும் பொருந்தும்.
தமிழ் நாடு தனியரசான பின்னும் இந்த எண்ணம் நம்முடைய மனதில் மாறாதிருந்தால்தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோஷத்தினால் தவறு வராது. தமிழ் நாட்டில் தாய் மொழி தமிழல்லாத அனேக வகுப்பார்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் அருந்ததியர் (தாய் மொழி தெலுங்கு) சேணியர்கள் (தாய் மொழி கன்னடம்) ஆரிய வைசியர்கள் (தாய் மொழி தெலுங்கு) சௌராஷ்ட்ரர் (தாய்மொழி சௌராஷ்ட்ரம்) முதலானவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
தொகை தனித் தனி லட்சக் கணக் கிலிருக்கிறது. இவர்களை விட சிறு தொகையினரான மற்ற மொழிக்காரர்களும் உண்டு. மேலே சொல்லப் பட்டவர்களுக்குத் தாய் மொழி தமிழில்லா விட்டாலும் அவர்கள் எல்லா விதத்திலும் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு அநீதி நேர்ந்து விடும்படி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஆகி விடக் கூடாது. ஆனால் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கோஷிப்பதில் நான் மேலே குறிப்பிட்ட வகுப்புகளை யெல்லாம் விட்டு விட்டு, ஆரியர்கள் என்று நம்மிற் சிலர் நினைக்கிற தமிழ் நாட்டுப் பார்ப்பனர் களை மட்டும் தான் எண்ணப் படுகிறது என்றால் அதை விட அநீதி வேறு எதுவும் இருக்க முடியாது. அது நான் முன்னே சொன்னபடி பாவம் அல்லது ‘பாதகம்’ தான் ஆகும்.



