
ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை
ஆரியரும் திராவிடரும்
இந்த ஆரியர்கள் யாரோ, திராவிடர்கள் யாரோ, உண்மை அறியவே முடியவில்லை. இதைப் பற்றி ஆராய்ச்சி சொன்னவர் அத்தனை பேரும் அவரவர்களுடைய அனுமானங்களையே ஆதாரமாக்கி ஒவ்வொருவரும் புதுப்புது சிக் கலைத்தான் புகுத்தினார்களேயன்றி ஒருவராவது உண்மையைக் கண்டு விட்ட தாகத் தெரியவில்லை.
ஆரியர்கள் என்ற ஒரு குலத்தார் வடதுருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கே வந்து பரவினதாக நெடுநாளாக ஆராய்ச்சிக்காரர்கள் அழுத்திச் சொல்லி வருகிறார்கள்.இன்றும் பல புது ஆராய்ச்சிக்காரர்கள் முன்னே சொன்னது முற்றிலும் தவறு என்று கூறி, இந்த ஆரியர் என்ற இனத்தார் தெற்கே இருந்துதான் வடக்கே போனார்களே ஒழிய வடக்கே யிருந்து தெற்கே வரவில்லை யென்று பலப்பல நூதன ஆதாரங்களுடன் பலமாக. வாதாடுகிறார்கள்.
வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேற்றுமை தெரிகிறது.
வட நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் தென்னாட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் வித்தியாசம் தெரிகிறது. வடதேசத்துப் பண்புகளுக்கும் தென் தேசத்துப் பண்புகளுக்கும் உள்ள பேதமும் தெரிகிறது. இப்படியே மற்ற வேறு பாடுகளும் விளங்குகின்றன. ஆனால், இந்த ஆரியனும் திராவிடனும் யாரென்பது மட்டும் தெரியவில்லை. ‘கங்காதரா மாண்டாயோ’ என்ற கதை போல ஒருவரைக் கேட்டு ஒருவர் இதைக் கண்டு விட்டவர்கள் போலவே நாமெல்லோரும் கத்திக்கொண் டிருக்கிறோம். இந்த ஆரியர்கள் வெகு உயர்ந்த இனம் என்று யாரோ சொன்னதை எண்ணிக் கொண்டு தமிழர்களும் வெகு காலமாகத் தங்களை ஆரியர்களோடு ஒப்பிட்டுச் சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்டிருந்தார்கள். ஆரியர்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டுதான் ஹிட்லரும் இந்த கதியடைந்து ஜெர்மனியும் சீர்குலைந்தது.
மற்ற நாடுகளை விட்டுவிட்டுத் தமிழ் நாட்டை மட்டும் எடுத்துக்கொண்டால் தமிழ் நாட்டில் இப்போது வசிக்கும் எவர் ஆரியர், எவர் திராவிடர் என்று யாராலும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர்களை ஆரியர் என்று சிலர் நினைக்கின்றார்கள். தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்று, அவர்களே எண்ணிக் கொண்டாலும் சரி, அல்லது மற்றவர்கள் எண்ணினாலும் சரி அது வெறும் மயக்கம்தான். தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் அந்த ஆரியர்கள் எப்போது இங்கு வந்தார்கள்? சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு உற்ற தோழியாக இருந்த தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணும் அவளுடைய கணவன் சாத்தனும் வடக்கேயிருந்து வந்த ஆரியர்களா? உக்ர பாண்டியன் ஆட்சியில் கடைச் சங்கத்தில் பல பார்ப்பனப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஆரியர்களா? எங்கிருந்தோ பாண்டிய நாட்டுக்கு வந்து பண்டிதர் களாகி சங்கப் புலவர்கள் ஆகிவிட்டவர்களா?
தமிழ் இலக்கியம் கண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. இந்தப் பார்ப்பனர் களை ஆரியர்கள் என்றும் வடக்கே யிருந்து வந்து புகுந்து கொண்டவர்கள் என்றும் வெறும் வம்பு பேசுகின்றோம்.
உண்மையில் தமிழ் நாட்டில் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. ஆரியர்கள் இல்லையென்றாலும் திராவிடர்கள் இல்லையென்பது எப்படி என்று நீங்கள் திடுக்கிடலாம். ஆனால் சற்று நிதானித்துப் பாருங்கள். திராவிடம் என்ற பதம் தமிழ்ப் பதமல்ல; இந்தியாவின் வடபாகத்தை வடமொழிக்காரர் கள் ஆரியா வர்த்தம் என்று சொல்லிக் கொண்டார்கள். அதே வடமொழிக் காரர்கள் இந்தியாவின் தென்பாகத்தை திராவிடம் என்று சொன்னார்கள் : தமிழ் நாட்டையும் தமிழர்களையும் குறிக்கின்ற இடங்களிலெல்லாம் வடமொழிக்காரர்கள் திராவிடம் என்ற பதத்தைத்தான் உபயோகப்படுத்தி யிருக்கிறார்கள். இந்த திராவிடம் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்றால் அது அவர்களுக்கே தெரியாது. திராவிடம் என்ற சொல்லும் ஆர்யாவர்த்தம் என்ற சொல் எப்படி வந்ததோ அப்படித்தான் வந்திருக்கும். என்ன காரணத்தாலோ வட நாட்டை ஆரியாவர்த்தம் என்றார்கள். அப்படியே தென்னாட்டை அவர்களே திராவிடம் என்று சொன்னார்கள். பின்னால் வந்தவர்கள் இந்த இரண்டு பாகத் தையும் சேர்த்து இமயம் முதல் குமரி வரைக்கும் உள்ள நாட்டை ஆரியதேசம் என்று சொல்லிவிட்டார்கள். பிற்காலத்திய தமிழ் இலக்கியங்களிலும் இந்தியாவை ஆரியநாடு என்று அநேக இடங்களில் சொல்லப்படுகிறது. சுப்பிரமணிய பாரதியாரும் “ஆரிய பூமியில், நாரியரும் நர, சூரியரும் சொலும், வீரிய வாசகம் வந்தேமாதரம்” என்று பாடு கிறார்.
எனினும் ஆரியர்’, ‘திராவிடர் என்ற இரண்டு பதங்களும் தமிழுக்கு அன்னியமானவை. தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் தமிழனை திராவிடர் என்று சொன்னதில்லை. தமிழன் தன்னை ‘திராவிடன் என்று சொல்லிக்கொண்டால் அவன் கூசாமு தன்னை ‘ஆரியன்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். யாரோ ஒருவர் நம்மை என்னவோ என்று கூப்பிட்டால் அந்த ‘என்னவோ’ என்பது நம் பெயராகி விடுமா? உதாரணமாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவனை நாம் ‘ஆங்கிலேயன்’ என்று சொல்லுகிறோம். இதனாலேயே அவன் தன்னை ‘ஆங்கிலேயன்’ என்று சொல்லிக்கொள்ள சம்மதிப்பானா என்பதை எண்ணிப் பாருங்கள்.
இனி, தமிழ்நாட்டில் நெடுங்கால இருந்து வரும் பார்ப்பனர்கள் யார் என்பதைப் பார்ப்போம்:
வெகு காலமாகத் தமிழர்கள் திரை கடலோடித் திரவியம் தேடினவர்கள். திரவியத்தைமட்டு மல்லாமல் அயல் நாடுகளில் அங்கங்கே யிருந்த கலையறிவுகளையும் திரட்டிக் கொண்டு வந்து தங்களுடைய தனி நாகரிகத்தையும் பண்புகளையும் வளர்த்தவர்கள். அறிவுகளைத் தேடுவதிலும் அறிவாளிகளை ஆதரிப்பதிலும் தமிழர்களுக்கு மிஞ்சியவர்கள் தரணியில் இருந்ததில்லை. அந்த அருங்குணத்தால் வட மொழியில் இருந்த பல நல்ல ஆன்ம விசாரணைக்கான சாஸ்திரங்களையும் கதைகளையும் தமிழ் நாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஆர்வங்கொண்டு வடமொழிப்படிப்பை தமிழ் நாட்டில் போற்றி வளர்ந்தார்கள். அதற்காக வடமொழியை நன்றாகப் படித்து அதிலுள்ள அறிவுகளைத் தமிழ் மக்களிடை பரவச் செய்வதே வாழ்க்கையாகக் கொள்ளும்படி தமிழ் நாட்டு மக்களுள் ஒரு சிறு தொகுதியை அதற் கென்றே ஏற்படுத்தினார்கள். அப்படி ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆராய்ச்சிக் காரர்களுக்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தனியாக மானியங்களையும் மரியாதைகளையும் ஏற்பாடு செய்தார்கள். இந்த வழக்கம் இன்றைக்கும் செட்டிமார் நாட்டில் இருந்து வருவதைக் கண்ணாரப் பார்க்கலாம். அனேக செட்டிமார்கள் தங்கள் சொந்தச் செலவில் ஒரு கோவிலைக் கட்டி அருகே ஒரு குளத்தை வெட்டி அதைச் சுற்றிலும் ஒரு அக்ரஹாரத்தைக் கட்டி, அதில் வட மொழி வேத பாடசாலை ஒன்றை உண்டாக்கி, அந்தக் கோயிலுக்கு வேண்டிய மானியத்தைக் கொடுத்து, வேத பாடசாலைக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நிரந்தரமாக்கி, அந்த வீடு களைப் பார்ப்பனர்களுக் கென்றே இலவசமாக விட்டு, அவர்களில் சிலரை அந்தக் கோயிலுக்குப் பூசாரிகளாக இருக்கச் செய்து, கோயில் திருவிழாக்களை நடத்த திரவிய சகாயமும் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை ஓர் உயர்ந்த தர்மமாகச் செய்து வைக்கிறார்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமல்ல. நெடுங்காலத்துக்கு முன்னால் தமிழ்நாட்டு வேந்தர்களும் குறுநில மன்னர்களும், பணக்காரர்களும் செய்து வைத்த பழக்கம்.
இப்படி, ஆரியமொழி என்று சொல்லப் பட்ட சம்ஸ்கிருத நூல்களைப் படித்து அவற்றிலுள்ள நல்லறிவுகளைத் தமிழர் களுக்குச் சொல்லுவதற்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியார் அந்த வட மொழியையே அதிகமாகப் படித்து வந்தார்கள். அவர்களுக்குத் தாய் மொழி தமிழ் தான் என்றாலும் வடமொழியைத் தான் அவர்கள் வருந்திக் கற்றார்கள். ஏனெனில் அதிலேதான் அவர்களுடைய பிழைப்புக்கு வழி இருந்தது. அவர்களுடைய வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் மன்னவனும் மற்றத் தமிழர்களும் சேர்ந்து தனியாகச் செய்து வைத்து, ஊரின் ஒரு தனிப்பகுதியில் இவர்களை ஒரு தனி இனமாக வைத்துத் தாங்கி வந்தார்கள். தமிழ் சமூகத்திலுள்ள மற்றவர்களை விட்டு விலக்காக வாழ்ந்து வந்ததினால் இவர்கள் தங்களுக்கென்று ஒரு தனியான பழக்க வழக்க சம்பிரதாயத்தை உண்டாக்கிக் கொள்ள நேர்ந்தது. அந்த சம்பிரதாயங்களைச் சரியென்று மற்ற தமிழர்களும் மதிப்புக் கொடுத்து வந்தார்கள். கொஞ்சங் கொஞ்சமாக இவர்கள் தங்களை ஒரு தனி இனமாகவே எண்ணிக் கொண்டு தாங்கள் புதிதாக மேற்கொண்ட பழக்க வழக்கங்களே தங்கள் குல வழக்க மென்றும், தாங்கள் புதிதாகக் கற்றுக் கொண்ட வட மொழியே தங்களுடைய வம்ச பாஷை என்றும், அந்த வடமொழியிலுள்ள ஆரிய குலம் கோத்திரங்க ளையே தங்களுடைய குலம் கோத்திரங்களாகவும் பழகிக் கொண்டு, மற்ற தமிழர்களை விட்டு வேறாக விலகிவிட்டார்கள். அன்றியும் தாங்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.மற்ற தமிழர்களும் அதை ஒப்புக் கொண்டு மரியாதை செய்து வந்தார்கள். தமிழர்களுடைய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்கப் பட்டது.
அந்தச் சிறு தொகுதியின் வழி வந் தவர்களே இங்குள்ள பார்ப்பனர்கள். இவர்கள் எங்கேயோ இருந்து வந்து தமிழ்நாட்டில். திடீரென்று புகுந்து கொண்டவர்கள் அல்ல. அன்றியும் அவர்கள் கோயில்களுக்கு குருக்கள் ஆனதும், தமிழர் வீட்டுச் சடங்குகளுக்குச் சாஸ்திரிகளானதும் மன்னவர் களுக்கு மந்திராலோசனை சொன்னதும் அவர்களுடைய சொந்த முயற்சியால் நேர்ந்துவிட்ட சூதுகள் அல்ல. பாண்டி யனும், சோழனும், சேரனும், பார்ப்பனரல்லாத மக்களின் உழைப்பைக் கொண்டு கட்டிவைத்த கலா நிலயங்களான கோயில்களில் இந்தப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டது அவர்களுடைய தந்திரத்தாலோ மந்திரத் தாலோ அல்ல. அக்காலத்திலிருந்த தகுதியினால் தமிழ் மன்னர்களும் தமிழ் மக்களும் தாங்களாகவே தந்த பெருமை. பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது என் கட்சியல்ல. எல்லா வகுப்பினர்களும் சிறப்படைய வேண்டும். ஆனால் அதற்காக ஒரு வகுப்புக்கும் சிறுமை செய்ய வேண்டியதில்லை.
இவைகளையெல்லாம் இவ்வளவு விரிவாக நான் சொல்ல நேர்ந்த கார ணம் பார்ப்பனர்களுக்காகப் பரிந்து பேசுவதற்காக அல்ல. பார்ப்பனர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள் வார்கள். நான் பரிந்து பேசுவது மற்றவர்களுக்காகத்தான். நம்மில் சிலர் இந்தப் பார்ப்பனர்களை ‘எங்கிருந்தோ வந்து விட்ட ஆரியர்கள்’ என்றும் மற்றத் தமிழர்களை ‘திராவிடர்கள் என்றும் திரித்துக் கூறி, பார்ப்பனர்கள் அல்லாத தமிழர்களுக்குள் வளர்த்து வரும் மனக்கசப்பை மாற்றுவதற்கான முயற்சிகளில் எழுத்தாளர்களுடைய கவ னத்தை இழுக்க வேண்டும் என்பதே என் கருத்து.
ஒரு பார்ப்பன ரல்லாதவர் – இயல்பாக வெகு நல்ல குணம் உள்ளவர் வெறும் கட்சி பேசும் காரணத்தினால் சொன்னார் – “இந்த ஆரியப் பார்ப் பனர்களை யெல்லாம் யூதர்களை ஹிட்லர் ஜெர்மனியிலிருந்து ஒழித்ததைப் போலத் தமிழ் நாட்டிலிருந்து ஒழித்து விட வேண்டும்” என்று. இந்த உபமானம் மிகவும் வருந்தத் தக்க உப மானம். ஹிட்லர் யூதர்களை ஒழித்ததையும் அதன் பின் நேர்ந்துள்ள விளைவு களையும் ஒரு கண நேரமாவது சிந்தித் துப் பார்க்கும் திறமை யுள்ளவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.
இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதும் மிகவும் பாவம். ஆனால் ‘பாவம்’ என்று பயப்படுகிறவர் இப்போது யார் இருக்கிறார்கள் என்று நாம் எண்ணலாம். எனினும் இந்த ‘பாவம்’ ‘புண்ணியம்’ என்ற பதங்களின் அவசியம் மீண்டும் உலகத்தில் விரைவில் உண்டாகுமென்றே நம்பலாம். “பாவிகளே! உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி ரக்ஷகனிடத்தில் பணிந்து விண்ணப்பம் செய்யுங்கள். பரம பிதா உங்களை ரக்ஷிப்பான்” என்று ஏசுநாதர் பன்னிப் பன்னிச் சொன்னார். ஆனால் இந்த உபதேசங்கள் அடங்கிய பைபிளை எல்லாக் கிருஸ்துவ நாடுகளிலும் அழகாக அச்சடித்து மாதா கோயிலுக்குப் போகும்போது அலங்காரமாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு ஒரு அணியாகத்தான் உபயோகித்தார்கள். ஜப்பான் மீது அணு குண்டை வீசி ஒரு நகரத்தையே நாசமாக்கி விஸ்தாரமான பிரதேசத்தை வேகடித்த போதுதான் இந்தக் கிருஸ்துவ நாடுகளெல்லாம் அப்படி அணுகுண்டைப் போட்டது ‘மிகவும் பாவம்,பாவம்’ என்று பதறினார்கள். ஏனென்றால் அந்த அணுகுண்டு, தங்கள் தலையிலும் விழலாம் என்ற பயம் வருகிற போது அதைத் தடுத்துக் கொள்ள இந்த ‘பாவம்’ என்ற பதத்தைத் தவிர வேறு பரிகாரம் இல்லை.
தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்ல. ஆன்ம விசாரணைக்கான ஞான நூல்கள் மிகுந்த வடமொழியைப் படிப்பதையே தொழிலாகக் கொள்ளும்படி தமிழ் மக்களும் தமிழ் மன்னர்களும் பிரித்து வைத்த தமிழர் களே பார்ப்பனர்கள். தமிழில் ஆன்ம விசாரணை நூல்கள் இல்லை. அதை ஒப் புக் கொண்டதில் தமிழருக்கு அவமா னமு மில்லை. எந்த ஒரு மொழியிலும் எல்லா அறிவும் இருந்துவிட முடியாது. தமிழ் நாட்டில் ஆரியர்களும் இல்லை, தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதும் அறியாமை. இங்கிலீஷைப் படித்து விட்டவர்களெல்லாம் இங்கிலீஷ் காரர்களாகி விட மாட் டார்கள். அதைப் போலவே ஆரிய மொழியைப் படித்தவர்கள் ஆரியர்கள் ஆகிவிட மாட்டார்கள். சொல்லத் தெரியாதவர்கள் ‘தஞ்சாவூரை’ ‘டாஞ்சூர்’ என்று சொல்லி விட்டதினாலேயே தஞ்சாவூர்க் காரர்கள் தங்களை ‘டாஞ்சூரியர்’ என்று சொல்லிக் கொள்வது தகுதியல்ல. அதைப் போலவே யாரோ அன்னியர்கள் தமிழர் நாட்டை ‘ திராவி டம்’ என்று சொன்னதற்காக தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வது சரியல்ல.
வடநாட்டு மக்களுடன் தமிழர்கள் நெடுங்காலமாக நேசமாக இருந்து வருகிறார்கள். வடநாட்டு உறவுகளுக்காகத் தமிழர்கள் வருத்தப்பட வேண்டியது ஒன்றுமில்லை. அநேக தமிழ் அறிஞர்கள் வடக்கத்தியார்களுடன் தாங்கள் தொடர்புடையவர்கள் என்று பெருமையோடு பேசிக் கொண்டதுண்டு. ஒரு நல்ல உதாரணம் சொல்லுகிறேன். காலஞ் சென்ற பா.வெ.மாணிக்க நாய்க்கர் என்பவர் ஒரு வெகு நல்ல தமிழறிஞர். அவர் சர்க்கார் எக்ஸிகியூடிவ் எஞ்சினி யராக இருந்தவர். எனக்கு அன்பரும், உறவினரும் ஆவார். இந்த ஆரிய திராவிட விவாதத்தில் வெகு தீவிரமாக ஈடு பட்டிருந்தவர். தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளைத் தனியான முறையில் சொல்லியும் எழுதியும் தந்தவர். மிகவும் சாதுரியமாகத் தர்க்கிக்க வல்லவர். அவர் தாம் விஜய நகர மன்னர்களுடன் உற வுள்ள வம்சத்தில் வந்தவராகச் சொல்லிக் கொண்டார். விஜய நகர சமஸ்தானத்தை உண்டாக்கியவர்கள் தமிழர்கள் அல்ல. அதை ஆண்டவர்களும் தமிழர்கள் அல்ல. அவர்கள் வட நாட்டின் தொடர்புடையவர்கள். தமிழ் மொழி யையும், தமிழ் இனத்தையும் மிகவும் பெருமையோடு பேசித் தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் வெகு சந்தோஷப்பட்ட மாணிக்க நாய்க்கர் தாம் விஜய நகர மன்னர்களின் தொடர்புடையவர் என்று சொல்லிக் கொள்ள நேர்ந்தது எப்படி யென்பதைக் கேளுங்கள்.
மாணிக்க நாய்க்கருக்குச் சொந்த ஊர் சேலத்தை அடுத்த பாகல்பட்டி என்ற சிறு கிராமம். அதன் அருகில் ஒரு மண் மேடு உண்டு. அது வெகு காலத்துக்கு முன் அழிந்துபோன ஒரு அரண்மனையாக இருக்கக் கூடும் என்று அனுமா னிக்கப்பட்டது. அப்படியானால் அதில் ஏராளமான செல்வம் புதைந்திருக்கலாம். அந்தச் செல்வத்தைத் தோண்டி எடுக்க நேர்ந்தால் அது யாரைச் சேர வேண்டியது? சாதாரணமாக அது அரசாங்கத்தைச் சேரும். அப்படி அது அர சாங்கத்துக்குப் போய்விட விடுவானேன் என்ற எண்ணம் மாணிக்க நாய்க்கருக்கு எழுந்தது. பாகல்பட்டி என்பது ஒரு சிறு ஜமீன். அந்த ஜமீனுக்கு ஒரு காலத்தில் மாணிக்க நாய்க்கரின் முன்னோர்கள் சொந்தக்காரராக இருந்தார்கள். நாய்க்கர் என்ற பட்டம் விஜய வீரர்களுக்கும் அவர்கள் பரம் ரைக்கும் உண்டு.
இதை யெல்லாம் ஒன்றாகச் சேர்த்து மாணிக்க நாய்க்கர் வாதாட ஒரு அபூர்வ மான யுக்தி செய்து, அந்த உரிமையை நிலைநாட்ட ஒரு விண்ணப்பம் தயார் செய்து, சென்னை நகர கவர்னருக்கும், கவர்னர் ஜெனரலுக்கும், சீமையிலுள்ள ‘செக்ரடரி ஆப் ஸ்டேட்ஸ்’ அவர்களுக்கும் அனுப்பிக்கொண்டார். அந்த விண்ணப்பத்தை நாய்க்கரவர்களே எனக்குக் காட்ட நான் படித்துப் பார்த்தவன்.
அந்த விண்ணப்பத்தில் ‘பாகல்பட்டி என்பது ‘பகை இல்பட்டி’ (பகைவர்களே இல்லாத பட்டி) என்றும், அது ஒரு சிற்றரசு என்றும், விஜய நகர மன்னர்களின் சிற்றரசர்களைச் சேர்ந்த நாய்க்கர்கள் ஆண்டதென்றும், அந்த நாய்க்கர்கள் வழியில் வந்தவர்கள்தான் தம்முடைய முன்னோர்கள் என்றும் அந்த சிற்றரசர்களின் அரண்மனை கால கதியால் அழிந்து போய் இப்போது மண் மேடாக இருக்கிறதென்றும், அந்த மண் மேடு, அதில் புதைந்திருக்கக்கூடிய அனைத்தும் தங்கள் குடும்பத்துக்குச் சேரவேண்டும் என்றும், அப்படி உத்தரவாக வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதற்கு அனுகூலமான பல ஆதாரங்களும் கூறப்பட்டிருந்தன.
சரித்திர பூர்வமாக இது சரியோ அல்லவோ நமக்குத் தெரியாது. ஆனால் தமிழர்களை மிகவும் பெருமைப்படுத்தி, தாமும் ஒரு தமிழன் என்பதில் பெருமிதங் கொண்டு, ராமன் ஆரியன் என்றும், ராவணன் தமிழன் என்றும், ராமாயணம் என்பது ஆரியனுக்கும் தமிழனுக்கும் நடந்த ஒரு சண்டைதான் என்ற விவகாரத்தில் வெகு தீவிரமாக ஈடுபட் டிருந்த மாணிக்க நாய்க்கரும் கூடத் தம்மை ஆரியர்களின் சம்பந்தமே அதிகமாக உள்ள விஜய நகரத்தாரின் குலத்தைச் சேர்ந்தவராகச் சொல்லிக் கொண்டார் என்பது மட்டும் உண்மை.
ராமன் ஆரியனாக இருந்து விட்டால் நமக்கென்ன? ராவணன் தமிழனாக இருந்து விட்டால் நமக்கென்ன? ராமன் ஆரியனாக இருக்கலாம். ஆனால் ராவணன் தமிழன் அல்ல. ஏன் எனில் இலங்கையில் இருந்தவர்கள் தமிழர் அல்ல. இலங்கையின் மொழியும் தமிழல்ல. அதை இலங்கையின் சரித்திரமாகிய ‘மகா வம்சம்’ இன்றைக்கும் சொல்லுகிறது. இப்போது இலங்கையின் சொந்தக்காரர் களாக இருக்கிற சிங்களவர் தமிழர்களைத் தங்களுக்கு இடையூறு செய்கிற விரோதிகளாகக் கருதி விரட்டுகிறார்கள். கண்ணுக்கு நேராகத் தமிழனுக்கும் இலங்கைக்காரருக்கும் உள்ள உறவு இப்படி யிருக்க, கண்ணுக்கும் மனத்துக்கும் எட்டாத ராமாயணகால சரித்திர உண்மை களை ஊகிக்க முடியுமா? ?



