
கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு
அனுபந்தம் 1
கோழி முதல் உண்டானதா? அல்லது முட்டை முதல் உண்டானதா?
இரங்கூன் நிருபருக்கு விடை.
நாம் எழுதிய ‘கடவுளும் பிரபஞ்சமும் ” (God and the universe) என்னுங் கட்டுரைகளைப் படித்ததன் மூலம் தமக்குண்டான சில சந்தேகங்களை விளக்குமாறு இரங்கூனி லிருந்து ஒரு நிருபர் கீழ்க்கண்ட கடிதத்தை நமக்கு எழுதினார்.
ஐயா,
“குடி அரசு ” பத்திரிகையில் வெளியிட்டுவந்த தங்களுடைய (God and the universe) “கடவுளும் பிரபஞ்சமும் ” என்னும் கட்டுரையானது என்னை மயங்கச் செய்கிறது. ஆகையால் தங்களுக்கும் கொஞ்சம் கஷ்டத்தைக் கொடுத்து என் சந்தேகம் நிவர்த்தி செய்து கொள்ளலாமென்றும் இக்கடிதம் எழுதலானேன். மன்னிக்கவும்.
- கோழி முதல் உண்டானதா? அல்லது முட்டை முதல் உண்டானதா?
- இவைகள் இரண்டில் எவை முதலில் உண்டானவை? அல்லது எப்படி உண்டானது? அதை யார் உண்டாக்கினது என்பவைகளே.
தயவுசெய்து ” குடி அரசு’ வாயிலாகத் தங்கள் அன்பான பதிலை வெளியிட்டால் என் போன்ற சந்தேகமும், மனக்குழப்பழ முடையவர்களுக்கும் பேருதவியாக இருக்குமென்று நம்புகிறேன். இந்தக் கடிதத்தில் நமது இரங்கூன் நிருபர் கேட்டுள்ள இரண்டு கேள்விகளைச் சுருக்கமாக ஒரு கேள்வியாக அதாவது ” முதல் உண்டானது கோழியா முட்டையா?” என்று வரைந்து, அதனை விளக்குவாம். இந்தக் கேள்வி புராதனக் கேள்வி. உயிர்கள் உற்பத்தியைப்பற்றி, மெய்ஞ்ஞானம் தனது வெளிச்சத்தை வீசுவதற்கு முந்தி, கேட்டுவரும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
ஜீவப் பொருள்கள் (அதாவது) தாவரங்களும் பிராணிகளும் (Plants and animals) வந்த விதத்தை அறிவதற்கு முன் இவ்விதக் கேள்விகள் கேட்கப்பட்டுவந்தன. உலகம் வந்தவிதமென்ன? உயிர்கள் வந்தவிதமென்ன? பிரபஞ்சம் வந்தவிதமென்ன? மனிதன் வந்தவிதமென்ன? இந்தக் கேள்விகளைப் பல அறிஞர்கள், பல தேசங்களில் கேட்டு வந்தார்கள். மதஸ்தர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை அளித்து வந்தார்கள். அதாவது பிரபஞ்சம் ஈறாகவுள்ள உயிர்கள் உள்பட சகல வஸ்துக்களும் சிருஷ்டி” (Creation) என்றார்கள். ஆனால் சில தத்துவ ஞானிகள் (Philosophers) ஆதிகாலமுதல் பிரபஞ்சப் பொருள்கள் யாவும் “பரிணாமத்தால்’ (Evolution) வந்தனவென்று யூகித்துவந்தார்கள். இதைத் தான், “சத்தமாம் சோதி தன்னில், சொல்லிய விண்ணும் விண்ணில்…….” என்று பிரபஞ்ச உற்பத்தியைப்பற்றி கைவல்ய அதிகாரி எழுதி யுள்ளார். ஆனால் இவைகள் யாவும் வெறும் உத்தேசங்க ளாக இருந்து வந்தன.
சென்ற 100 வருஷங்களுக்கு முன் தான் பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றியும், உலக உற்பத்தியைப் பற்றியும், மனித உற்பத்தியைப் பற்றியும் விஞ்ஞானம் விசாரிக்கப் புகுந்தது. அது முதல் தனது ஆராய்ச்சியாலும் பிரத்தியட்ச அனுபவத்தாலும் இந்தக் கேள்விகளுக்கு இயற்கையாயுள்ள விடை களைக் கொடுத்து வர, விஞ்ஞானம் (Science) சக்தி பெற்று வருகிறது.
நமது இரங்கூன் நிருபர் கேள்விக்கு விஞ்ஞானம் என்ன விடை கொடுக்கின்றதென்று பார்ப்போம். முட்டை முந்தி யதா? அல்லது கோழி முந்தியதா? என்றால், கோழி முட்டையும் கோழியும், இவை இரண்டில் ஒன்றும் முந்தி யவை அல்ல. நாம் பார்க்கும் கோழியும் அதன் முட்டை யும் ஒருகாலத்தில் தோன்றியவைகள் அல்ல. பல கோடி வருஷங்களாக இவை இரண்டும் வேறு உருவங்களாக இருந்து பரிணமித்து வந்தவை. கோழி, பட்சி வகையை (Birds) சேர்ந்தவை. பட்சிகள், ஒணான் பல்லி முதலிய ஊர்வன (Reptiles) மூலமாகப் பெறப்பட்டவை. ஊர் வனங்கள், தவளைக் கூட்டங்களிலிருந்து (Amphibians) மாறியவை. தவளைகள் மீன் வடிவங்களிலிருந்து (Fishes) உண்டாவனவை. மீன்கள் புழுப் பூச்சிகளாக இருந்து (Worms) மாறியவை. புழுப் பூச்சிகள் சிறு சிறு கிருமி களால் (Microbes) சையோகம் பெற்று வந்த உயிர்கள். கிருமி இன்னும் சிறு சிறு முட்டைகளால் (Cells) கூட்டப் பட்டவை. இந்த சிறு சிறு முட்டைகளால் தான் உலகிலுள்ள உயிர் பெற்ற பொருள்கள் யாவும் கட்டப்பட்டுள்ளன. நாமும், நமக்குக் கீழாகவுள்ள மிருகாதிகள், பட்சி, பறவை கள், தவளை, மீன், புழுப்பூச்சி முதலியவை யாவும் சிறு சிறு முட்டைகளால் (Cells) ஆக்கப்பெற்றுள்ளன. இந்த கோடான கோடி முட்டைகளில் ஒன்று நமது தேகத்தினின் றும், அல்லது கோழி தேகத்தினின்றும் சுக்கில சுரோணி தங்களாக (Sperm and egg) மாறி சையோகத்தில் கர்ப்பத்தில் வந்து மனித உருவமாகவும், கோழி முட்டையாகவும் அந்தந்த உயிருக்குத் தக்கபடி வளர்கின்றன. எல்லா உயிர்களும் மேற்கூறிய முட்டை வடிவத்திலிருந்தே கர்ப்பத்தில் தரித்து அந்தந்த உயிர் வகையாக வளர்கின்றன. மனிதன் ஈறாகவுள்ள சகல உயிர்களும், செடி, புல், மரமாக இருந்தாலும் சரி, கிருமி, மீன், கோழி, மிருகம், மனிதனாக இருந்தாலும் சரி, சகல உயிரும் வித்து அல்லது முட்டையிலிருந்தே உண்டாகின்றன.
தாவர வித்துக்கும், பிராணி முட்டைக்கும் வித்தியாசம் அதிகமில்லை. உயிர்கள் யாவும் அதனதன் முட்டை யிலிருந்தே உற்பத்தியாகின்றன. உயிர்கள் உண்டாகும் முட்டைக்கு “செல்” (Cell) என்று பெயர். கோழி முட்டையில் உயிர் முட்டை நடுவில் கண்ணுக்கு எட்டாத வடிவமாக இருக்கின்றது. மற்ற வெள்ளை அம்பிலியும், மஞ்சள் அம்பிலியும் அந்த சிறு முட்டையிலிருந்து வளரும் குஞ்சுக்கு உணவாக இருந்து வருகிறது. இவ்விதமாகவே எல்லா உயிர்களும் சிறு முட்டையிலிருந்தே பரிணமிக்கின் றன. நாமெல்லோரும் உற்பத்தியாகும் வித்து 120 பங்காக ஒரு அங்குலத்தை வகுத்து, அதில் ஒரு பாக மாத்திரையைக் கொண்டுள்ளது (1/120 of an inch) என அறிக. இந்த அற்ப உருவந்தான் புத்தராகவும், ஏசுவாகவும், மகமதாகவும், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகராகவும் பரிணமித்தது. உலகில் இன்று வசித்துவரும் பல கோடி ஜீவராசிகள் ஆதியில் இச்சிறு முட்டையிலிருந்து பரிணமித் தவைகள் என்றால், அந்த ஆதி முட்டை (Premitive Cell) ஆதியில் எங்கிருந்து பெறப்பட்டு இருக்கலாமெனக் கேட்கலாம். இதற்கு விடை அளிக்கத்தான் பிராண விஞ்ஞானி களும் (Biologists) பூத பௌதீக விஞ்ஞானிகளும் (Physico-Chemists) ஆராய்ச்சி ஸ்தாபனங்களில் கண்டறியப் பாடுபட்டு வருகின்றார்கள். இதன் இரகசியம் எந்தக் காலத்தில் விளங்கினாலும் விளங்கட்டும். இப்பொழுது தெரிந்தவரையில் எல்லா உயிர்களும் சிறு கிருமியாகிய முட்டையிலிருந்தே உண்டாகின்றன. இரண்டாவது எல்லா உயிர்களும் நாளடைவில் ஆதிகால உயிர்களிலிருந்து பெறப் பட்டவை. தற்கால உயிர்கள் முற்கால உயிர்களிலிருந்தும், முற்கால உயிர்கள், அவைகளுக்கும் சிறிய உயிர்களிலிருந்தும் உண்டானவை. அத்தியாதி சிறிய உயிர்கள் ஆதியில் சிறு சிறு முட்டைகளிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும். அச் சிறு முட்டைகள் ஓர் சிறிய ஆதி முட்டையிலிருந்து வளர்ந்திருக்கவேண்டும். அந்த ஆதி முட்டை (Primordial Cell) அதற்கும் சிறிய முட்டையிலிருந்தும் (Bacteria, Viruses) இவை போன்ற உயிரும் உயிருமில்லாதப் பொருள் களிலிருந்து உற்பத்தியாகி யிருக்கலாமென்பது தற்கால மெய்ஞ்ஞான யுக்தி என்று சொல்லலாம். உலகம் ஒருகாலத் தில் உயிரற்று இருந்தது. உயிர் முளைக்க உலகம் பக்குவ மடைந்தகாலையில் கல்லாய்ட் (Colloid) என்ற குழப்பிய பதார்த்தங்கள் உண்டாயிருக்க வேண்டும். அந்தப் பதார்த் தங்களிலிருந்து பிரோடபிலாசம் (Protoplasm) என்ற ஆதி உயிர் கல்லாய்ட் பொருள் பிறந்தது. அதிலிருந்து ஆதி முட்டை (Primitivc Cell) உண்டாகி அதுபரிணமித்து பல வேறு உயிர்களாக பரிணமித்தன என்பது மெய்ஞ்ஞான யூகை.
நமது இரங்கூன் நிருபர் கேள்விக்கு (முட்டை முந்தி யதா? அல்லது கோழி முந்திய தா?) என்ன விடை எனில், தற்கால கோழிபூர்வ கால காட்டுக் கோழியிலிருந்து பெறப்பட்டது. ஆதி கோழி ஆதி பட்சியிலொன்று. ஆதி பட்சி, ரின்கோஸெபேலஸ் (Rhyncocephalus) என்ற ஊர்வனத்திலொன்று. இதைப்போன்று மேல் குறித்தவண்ணம் ஆதி தவளை, ஆதி மீன், ஆதி புழு முதலிய உருவங் களிலிருந்து இவைகள் பல முட்டை உருவங்களிலிருந்தும், பல முட்டைகளில் ஒரு முட்டை உயிரிலிருந்து அந்த ஆதி முட்டையும், அந்தக் காலத்து சில ரசாயனப் பொருள் களாகிய பொட்டாசியம் (Potassium), திமுறி பாஷாணம் (Phosphorus), இரும்பு (Iron), கரி (Carbon) முதலிய வைகளால் சையோகப்பட்டு வந்திருக்கவேண்டும். ஏனெனில் எல்லா உயிர் முட்டைகளும் மேற்கூறிய வஸ்துக்களால் ஆக்கப்பட்டிருப்பதால் இவைகளுக்கெல்லாம் ஆதி முட்டை யும் இந்த வஸ்துக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கலாமென்பது அனுமானம், தற்கால முட்டையும், கோழியும், ஒரு காலத்தில் இல்லாமலிருந்தன. ஆதலின் கோழியும் அதன் முட்டையும் முதலன்று. அவைகளுக்கெல்லாம் முதல் நமது உலகிலுள்ள தாதுக்களே. இந்த மூல தாதுக்கள் எங்கிருந்து வந்தது. சூர்யனிடத்திருந்து வந்தன. சூர்யன் எங்கிருந்து வந்தது? இதை வான நூலில் தெரிந்து கொள்ளலாம். ஆதலின் நீரும், நானும், நமது நிருபரும், சகல உயிர்களும் மண்ணிலிருந்தே பிறந்து, கடைசியில் ஒருபிடி மண்ணாக ஆவதே உலக அனுபவம். இந்த அனுபவத்தை எண்ணியாகிலும், நம்மைச் சுற்றி வாழும் பாமர மக்களை வஞ்சியாது, அவர்களுக்கு உண்மை ஞானத்தை உரைத்து, அவர்களைப் புனிதர்களாக்க முயல்வோமாக ! இந்த உயர்ந்த ஞானமாகிய பரிணாமத்தை இவ்விடம் சுருக்கமாக உரைக்கச் சந்தர்ப்பம் அளித்த நமது தோழர் இரங்கூன் நிருபரைப் பாராட்டுகிறோம்.
அனுபந்தம் 2
கல்லுக்குள் தேரையும் மாங்கொட்டையில் புழுவும்.
இவை ஈசன் சிருஷ்டியா?
ஈரோட்டிலிருந்து ஒரு நிருபர் கீழ்க்கண்ட கடிதத்தை நமக்கு அனுப்பி, கடவுளும் பிரபஞ்சமும் என்னும் வியா சத்தில் சில சந்தேகங்களைக் கேட்டுள்ளார்.
திரு. ம. சிங்காரவேலு அவர்களுக்கு,
தாங்கள் “குடி அரசு” பத்திரிகையில் எழுதிய ”கடவுளும் பிரபஞ்சமும் ” என்ற வியாசத்தைக் கண்ணுற என்னைப் பல சந்தேகத்தில் ஆழ்த்திவிட்டது. ஆதலின் ஷை பத்திரிகையின் மூலமாக அடியிற்கண்ட கேள்விகளுக்குத் தகுதியான பதில் வெளியிடுவீர்களானால் என் சந்தேகம் ஒருவகையில் நீங்குமென்று நினைக்கின்றேன்.
கேள்விகள் :
(1) கல்லிற்குள் தேரை எப்படி ஏற்பட்டது?கடவுள் உதவியில்லாமல் அது எப்படி ஜீவிக்க முடியும்?
(2) மாம்பழத்தின் கொட்டையில் காற்றுப் புகக் கொஞ்சம் கூட வழியில்லாமலிருக்கையில், அதற்குள் இருக்கும் வண்டு கடவுள் உதவியில்லாமல் எப்படி ஜீவிக்க முடியும்
நமது ஈரோடு நிருபர் கல்லுக்குள் தேரை எப்படி வந்ததென்றும், மாங்கொட்டையில் வண்டு, புழு எவ்விதம் வந்து ஜீவிக்கின்றதென்றும், வினயத்துடன் வினாவுகின் றார். அவை, கடவுள் உதவியில்லாமல் எப்படி உண்டாகி ஜீவிக்குமென்கிறார். இவ்வித கேள்விகள் பண்டைக் காலத் துத் தவறான பார்வையால் (Observation) எழுகின்றன. மாபெரும் ஞானிகளும், பழைய காலத்தில், தவறான அபிப் பிராயங்களை இத்தியாதி விஷயங்களில் கொண்டிருந்தனர்.. குளவி, புழுக்களைக் கொண்டுவந்து, தன்னைப்போல் மாறும் படிச் செய்வதாக சில ஞானிகளும் பாடியுள்ளார். மனிதர் பலநாள் காற்று இல்லாமல் குகைகளில் வாசம் செய்வதாக வும், மண்ணில் புதைக்கப்பட்டு சிலநாள் கழித்து, உயிருடன் மேலெழுவதாகவும் இதைப் போன்ற சில அற்புதங்களென்று (Miracles) கூறும் நடவடிக்கைகளைக் கேட்டு, அநேக பாமர மக்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். இவைகளெல்லாம் தவறான பார்வையால் உண்டாகும் மருள். கவ னித்துப் பார்க்கும்பக்ஷத்தில் இத்யாதி தோற்றங்களில் ஆச் சரியமொன்றுமிரா. இந்தக் கேள்விகளை, ஆங்கில சிறுவர் சிறுமிகள் கேட்பதரிது. ஏனெனில் அவர்களை சிறுவயது முதல், பிராணிகள் நூலைக் கற்கச் செய்கின்றனர். அத்தி யாதி மெய்ஞ்ஞானத்தைப் புகட்டாமல், நமது சிறுவர் களுக்கு, “ஆத்திசூடி அமர்ந்த தேவனை ” என்று வித்தியாப்பியாசத்தைத் தொடங்கும் தோஷத்தால் நமது சிறுவர் களும் பெரியோரும், சாதாரண பிரகிருத விஷயங்களைத் தெரிந்துகொள்ள சக்தியற்றவர்களாகின்றார்கள்.
சாதாரண அற்ப உயிர்களாகிய பல்லி விழுவதையும், சாதாரணமாக ஜலதோஷத்தால் தும்முவதையும், ஏதாகிலும் பேசுகையில் மணி அடிப்பதையும் நல்ல சகுனங்களெனக் கருதும் மூடப் பழக்கங்கள், சாதாரண விஷயங்களை விசாரித்தறியாத தோஷத்தாலென அறிதல் வேண்டும். பல்லி விழும் பலனைப்பற்றிக் குறிப்பிடாத பஞ்சாங்கம் நமது தமிழ்நாட்டில் கிடைப்பதரிது.
ஒற்றைப் பார்ப்பனனைக் கண்டாலும், எண்ணெய்க் குடம் எதிரிட்டாலும், விதவை எதிர்ப்பட்டாலும் கோரிய காரியம் நிறைவேறாவென்று எண்ணுவதும் இந்த அறியாமை யால் தான். இவ்வித பொய் நம்பிக்கைளால் கெட்ட குடும் பங்கள் எத்தனை? அரசுகளும் எத்தனை??
கல்லுக்குள் தேரை இருப்பது சகஜமான விஷயம். கற்பாறைகள் சந்து இல்லாமலிருப்பதாக நமது கண்களுக்குத் தோன்றினும் நுட்பமான சந்துகள் (Crevices) பல கற்பாறைகளிலிருக்கின்றன. பூதக் கண்ணாடியைக்கொண்டு கற்பாறைகளைப் பார்த்தால், சிற்சில கீறல்கள் தோன்றும். இத்தியாதி கீறல்களின் வாயிலாகத் தேரையின் நுட்பமான முட்டை நுழையலாம். தவளை முட்டை மிகச் சிறியதாக இருக்கும். கல் சந்துகளில் தண்ணீர் இறங்குவது சகஜம். அந்த காலங்களில் தேரை முட்டையில் ஒன்றிரண்டு தண்ணீருடன் கல் சந்தின் வழியாகச் சென்று, கற்களில் சகஜ மாகவுள்ள போரைக்குள் தங்கி, தண்ணீரில் ஜீவித்தும் வளர்ந்தும் வரும். அதற்குணவு தண்ணீரிலுள்ள அழுக்கும், சிறிய கிருமிகளுமே. தேரை தங்கி வாழும் போரையிலுள்ள தண்ணீரைப் பரீக்ஷித்துப் பார்த்தால், அதில் அடங்கியுள்ள தவளைக்கு வேண்டிய உணவுகள் தெரிய வரும். இதை மிக எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
பழத்தில் வண்டுகள் நிறைந்திருப்பது ஆச்சரியமல்ல. வண்டின் கிருசாலில் (Chrisalis) அதாவது, அதன் முட்டை யிலிருந்துவரும் புழு மெல்லிய பழத்தோலைக் குத்திக் கொண்டு உட்செல்லுகின்றன. நமது தோலைக் குத்திக் கொண்டு உட்செல்லும் சிரங்கு முதலிய கிருமிகள் போலவே வண்டு முட்டைகளும் பழங்களில் உட்செல்லுகின்றன. பழங்களில் புழு முட்டைகள் உள் நுழைய சந்தில்லை என்று சொல்வது அறியாமை. பூதக் கண்ணாடியால் பார்த்தால் நமது தோலில் உள்ள சந்துகளைப் போன்றே, அநேக ஆயிரம் சந்துகளுள்ளதை (Pores) பார்க்கலாம். சூரிய கிரணமும் காற்றும் நுழையாத இடமொன்றுமில்லை என்றே சொல்லலாம். இவை இரண்டில் சீவிக்கும் உயிர்கள் பலவுள.
அசைவற்று இருக்கும் உயிர்களுக்கு, உணவு அதிகம் வேண்டுவதில்லை.
உழைப்பவனுக்குத் தான் பசி அதிகம். உழைக்காத சந்நியாசிக்கு அதிக உணவு வேண்டியதில்லை. ஆதலின் பள்ளத்தில் புதைக்கப்பட்டவன், சில நாள் அன்ன ஆகாரமின்றி உயிருடன் இருக்கலாம். தவளை அநேக நாளாக ஈரம் உண்டாகும் வரை காய்ந்த கருவாடு போல் கிடப்பது சாதாரணம். அது போலவே மனிதனும் கருவாட்டைப்போல் இருக்கவேண்டுமானால், அதில் யாதொரு மகத்துவமுமில்லை.
நமது ஈரோடு நிருபர், கல்லிலுள்ள தேரைக்கும், பழத்திலுள்ள புழுவுக்கும் வேண்டிய உணவைக் கடவுள் அளிப்பதாக எண்ணுகின்றார் போலும்! ஆனால் நமது நிருபருக்கு எந்தக் கடவுள் அன்றாடம் வேண்டிய உணவைக் கொடுக்கின்றார் என்று கேட்கின்றோம். விளையும் உணவை உண்டு வருவது பிரத்தியட்சம். அதற்குமேல் கடவுள் நமது உணவை அளிக்கின்றார் என்பது கற்பிதம். அதுபோலவே தேரைக்கும் வண்டுக்கும் அவை வசிக்கும். இடங்களில் கிடைக்கக்கூடிய காற்று, ஜலம், அழுக்கு, சிறு கிருமிகள் முதலிய உணவால் ஜீவிக்கின்றன. அதற்குக் கடவுள் ஒரு வர் என் வேண்டுமென்பது விளங்கவில்லை! நமது நிருபருக்கும், தேரைக்கும், தவளைக்கும், புல் பூண்டுகளுக்கும் வேண்டிய உணவை அளிக்க, கடவுள் ஒருவர் வேண்டும் என்பது அனாவசியம்.
சுருங்க உரைக்கில், கற்பாறைகளில் பிளவுகள் (Cracks) இருக்கின்றன. பிளவுகள் மூலமாக மழைத் தண்ணீரில் கிடக்கும் தவளை அல்லது தேரை முட்டைகள், கல் போரை யின் மூலமாகக் கொண்டுபோகப்பட்டு பாறைக்குள் வளர் கின்றன. தவளை வழவழப்பான பிராணியா தலால், ஈரமிருந்தால் போதும். தேரை கற்குள் அசைவற்றிருக்கிறபடியால், வேண்டிய உணவு சொற்பம். காற்றும் வெளிச்சமும் இருக் தால் எந்த உயிரும் வேண்டிய நேரம் மற்ற உணவின்றி ஜீவிக்கலாம். இது தான் “கல்லுக்குள் இருக்கும் தேரை யின்” வாழ்க்கையின் சரித்திரம். வேண்டுமானால் சிறு தவளையை சிறு பெட்டியில் போட்டு, காற்றுக்கும் ஈரத்திற்கும் சிறு துவாரத்தைவிட்டுப் பார்த்து, எந்த ஈசன் அதற்கு உணவு அளிக்கின்றான் என்பதைத் தெரிந்து தெரிவிக்குமாறு நமது அன்பு மிகுந்த நிருபரை வேண்டிக்கொள்கின்றோம்.
வேண்டுமானால் காற்று, கிரணம், ஜலம் நுழைய வழியில்லாத பெட்டி ஒன்றில் (Hermetically closed Box) ஒரு தவளையை இரண்டொரு நாள் மூடி வைத்தபிறகு அதை உயிருடன் பார்வதி பரமசிவன் வைத்திருக்கின்றார்களா என்று தெரிந்து நமக்குத் தெரிவிக்கவாவது கேட்டுக் கொள்கின்றோம்.
முற்றும்.



