கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு

ஏழாம் அத்தியாயம்: கடவுள் நல்லவரா அல்லது கெட்டவரா?

கடவுள் ஒருவர் இருப்பாராயின் அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்ற கேள்விக்கு, மதவாதிகள் என்ன சமாதானம் சொல்லுகின்றார்கள் என்று பார்ப்போம். எந்த மதஸ்தரும், நாம் மனிதனைத் தீர்க்கமாக நல்லவனென்றாகிலும் கெட்டவனென்றாகிலும் மதிப்பது போல் கடவுளை மதிப்ப தில்லை. ஆனால் எல்லா மதஸ்தரும் பொதுவாகக் கடவுளை நல்லவரென்றே சொல்லுகின்றார்கள். எப்படி? அதாவது எந்த நடவடிக்கையால் அவரை நல்லவரென்று சொல்லுகின்றீர்கள் என்றால் அதற்குச் சரியான விடை இல்லை. “கிருபா நிதி” “காருண்ய மூர்த்தி,” தயாபரன் ” ஆபத்பாந்தவன்” என்று தங்கள் கடவுளாகிய விஷ்ணுவை வைணவர் துதிக்கின்றார்கள். சைவரும், “சிவம் ” என்றால் மங்களம் என்று தங்கள் கடவுளை வாழ்த்துகின்றார்கள். (God is good) “கடவுள் நல்லவர்” என்று கிறிஸ்துவர் சொல்லுகின்றார்கள். வேதாந்திகள் தங்கள் கடவுளுக்கு குணமுண்டென்று சொல்வதாகத் தெரியவில்லை. “குணாதீதன் ” “குணராகிதன்” ”மனவாக்குக் காயத்திற்கு எட்டா தவன்” என்று வழங்குகின்றார்கள்.

இந்து சாசனங்களில் (Philosophies) அதாவது வேதாங்தம், சாங்கியம், மீமாம்சம், முதலிய தத்துவ நூல்களில் கடவுள் குணத்தைக் குறித்து ஒன்றும் சொல்லதாக இல்லை. சாங்கிய தத்துவத்தில் ஈஸ்வரனே கிடையாதாகையால் அவர் குணத்தைப்பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. ஆயினும் அதிலிருந்து முளைத்த யோக தர்சனத்தில் ஈஸ்வானைக் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. யோகத்தில் கூறியுள்ள குணங்கள் மனித குணத்தை விசாலப்படுத்தி அதை ஈஸ் வான் மேலேற்றி யிருப்பதாகவே தெரிகிறது. வேதத்தில் (இருக்கு வேதம்) கடவுள் மனிதனைப்போலவே சில விஷயங் களில் நடப்பதாகச் சொல்லுகிறபடியால் மனிதனுக்குள்ள குணங்களை வேதத்தில் கூறியுள்ள கடவுள் வகித்திருப்ப தாகக் காண்கின்றோம்.

மேல்நாட்டுத் தத்துவ நூலாசிரியர்கள் பலர் இருக்கின் றார்கள். இவர்களில் மதசம்பந்தமாக “கடவுளைப்பற்றி” எழுதுகின்றவர்களும் உண்டு. இவர்கள், மனிதகுணங் களைத் தாங்கள் கூறும் கடவுளுக்குக் கொடுப்பதில்லை. ஸ்பைனோஸா (Spinoza) என்ற ஓர் பெரியார் தனது கடவுளுக்கு நன்மை தீமையாவது, சந்தோஷம் கோபமாவது, அன்பு வெறுப்பாவது இருப்பதாகச் சொல்லவில்லை. மனிதன் விஷயத்தில் யாதாமொரு சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதது தான் தனது கடவுள் என்கின்றார். காண்ட் (Kant) என்ற பிரபல ஜர்மன் தத்துவ ஞானியும், ஸ்பென்சர் (Spencer) என்ற பிரபல தத்துவ ஞானியும் கடவுளைத் ”தெரியப்படாதவர்” (Unknowable) என்று கூறுகின்றனர். தெரியப்படாத வஸ்துவின் குணத்தை அறிய முடியா தாயினும், அது அறியப்படாததென்று எப்படி அந்த ஞானிகளுக்குத் தெரியவந்ததோ என்பது தான் விளங்கவில்லை. ஜர்மனியில் இன்னொரு பிரபல பெரியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் எகெல் (Hegel) என்பது. அவருடைய கடவுள் ” எண்ண ம்” (Idea) ஒன்று தான் உடைய வராம்! இவருக்குப்பின் வந்த ஷோபன் யெர் (Shopenheur) என்ற பிரபல ஞானி, தன்னுடைய கடவுளுக்கு வில் (Will) அதாவது இச்சை மாத்திரம் உண்டு என எழுதுகின்றார்.

பிராட்லே (Bradly) என்ற ஆங்கில தத்துவ ஞானி, தனது கடவுளுக்கு அப்ஸலூட் (Absolute) என்று பெயர் கொடுத்து அதன் லக்ஷணங்கள் இன்னதென விளங்கச் சொல்லாமல் விட்டுவிட்டார். இன்னும் அந்த தத்துவ விவேகிகள் மேல்நாட்டில் கடவுளைப்பற்றி எழுதுகின்றார் கள். இவர்கள் மனிதனுக்குள்ள குணகுணங்களையே தங்கள் கடவுளுக்குக் காட்ட வெட்கப்படுகின்றார்கள். இவ் விதமாக மேல்நாட்டுக் கீழ்நாட்டு மதஸ்தர்களும், தத்துவ விவேகிகளும் தத்தம் கடவுளை நல்லவரென்றாகிலும் கெட்ட வரென்றாகிலும் தீர்க்கமாகச் சொல்லுவதைக் காணோம். “குணாதீதன்” என்று சொன்னால் யாருக்கு என்ன தெரிந்து விடும்? குணமின்றி எந்தப் பொருளும் விளங்க முடி யாது. கடவுளுக்கு குணமில்லாவிட்டால் எப்படி அவர் இருப்பதாகவாவது தெரிந்து கொள்ள முடியும்? ஆனால் கீழ்தரத்திலுள்ளவர்கள் கடவுளைக் குணாதீதனென்று சொன் னால் அறியமாட்டார்களென்று சில கற்பனா குணங்களை அந்தச் சொல்லின் மேல் ஏற்றியதாகத் தெரிகிறது. மனிதனுடைய குணங்களே நமக்குத் தெரியுமாதலால் அந்த லட் சணங்களையே தங்கள் கடவுளுக்குக் கொடுத்ததாகவும் தெரிகிறது. சாதாரண ஆகம புராணங்களில் கடவுளை, சாமான்ய ஜனங்கள் நடிக்கும் மாதிரியாகவே நடந்து காட்டுகிறார் என்று சொல்லப்படுகிறது. அவர் சில அபூர்வ காரியங்களைச் செய்ததாகச்சொல்லுகின்றார்கள் (Miracles) இவர் செய்த மாதிரியாகவே சில பக்தர்களும் செய்ததாகவும் கட்டிவிட்டிருக்கின் றார்கள். பழைய ஏற்பாட்டில் (Old Testament) கடவுள் செய்த அபூர்வ திருவிளையாடல்கள் அவர் சீஷர்கள் செய் ததாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மனிதகுமாரனாகிய ஏசு செய்த அபூர்வ காரியங்கள் அவருக்குப்பின் அனேக ஆண்டு களாக அநேக பாதிரிமார்கள் (Church Fathers) செய்த தாகவும் சொல்லுகின்றார்கள். ரோமன் கத்தோலியர் புஸ்தகங்கள் முழுமையையும், கிறிஸ்துவர்கள் செய்த அபூர்வ வேலைகளைப் பற்றியே விசேடமாக எழுதப்பட்டுள்ளன. தங்கள் கடவுளுக்குச் சந்தோஷத்தையும், கோபத்தையும் சாட்டுகின்றார்கள். பொய், களவு, கட்காமம் முதலிய தீச்செயல்களைக் கடவுள் செய்ததாகவும் எழுதியுள்ளார்கள். எந்த மதக்கதைகளை எடுத்துக் கொண்டாலும், அந்தந்த மதக் கடவுள் நன்மையான குணங்களையும், தீமையான குணங்களையும் படைத்திருப்பதாகவே மத நூல்கள் கூறுகின்றன. கிறிஸ்துவக்கடவுள் தகாத காரியங்களைச் செய்ததாக விவிலி ய நூலில் கண்டிருக்கிறது. இந்துக்களுடைய புராணங்களில் திருடி கோயில் கட்டினவனுக்குக்கூட மோட்சத்தை அருளியதாகச் சொல்லுகின்றார்கள். கள்ளனாகிய திருமங்கை ஆழ்வாருக்கு கடவுள் மோட்சம் அருளிய தாக வாய் கூசாமல் சொல்லுகின்றார்கள். இந்த ஆபாசங்களுக்கெல்லாம் என்ன சமாதானம் சொல்வதென்று தெரியவில்லை. சிலமத பாசாங்குக்காரர் (Apotogists) இவைகளைப் பொய்யென்று சொல்லாமல் இதற்கு வேறு அர்த்தமென்று சாக்குப்போக்குச் சொல்லி வயிற்றை வளர்க்கின்றார்கள். இந்த மோசம் எத்தனை காலம் இவர்களைக்காப்பாற்றும்?

கடவுளைப்பற்றி, மதஸ்தர்கள், பக்தர்கள் கூறும் கதைகளை விசாரிக்கப்பகுந்தால், அவைகள் எல்லாம் கட்டுக் கதைகளென ஏற்படுகின்றன. இந்தக் கட்டுக்கதைகளை எப்படி உண்டாக்கப் பழக்கம் வந்ததென்றால், மனிதனுக்கு இயற்கை யாகவே, பேச ஆரம்பித்த பிறகு தன் குணங்களைப் போல் கடவுளுக்கும் குணங்கள் உண்டு என, ஆலோசிக்கும் சக்தி உள்ளவனானான். இந்தப் பழக்கத்தால், கடவுளரும் தன்னைப் போலவே குணங்களைப் பெற்றிருக்கவேண்டுமென்று சிந்தித்தான். இந்த சிந்தனைகளைச் சொல் மயமாக்கி, புத்தகங்கள் எளிதில் வரையப் பெற்று அதனால் கடவுளர் அபூர்வ காரியங்களென பெயர் பெற்றன. இந்தக் கட்டுக்கதைகள் தான், புராணங்களிலும், வேதங்களிலும், விவிலிய நூல்களிலும், கொரான், செண்ட அவிஸ்தா (Send Avesta) என்னும் பார்சீ ஆகமங்களிலும், மற்றுமுள்ள மத நூல்களிலும் வரைந் துள்ளனர். இந்நூல்களை விசாரிக்குமளவில் மனிதனுக் குள்ள குணங்கள் யாவும் கடவுளுக்கு அதிகமாயிருத்தலை உணரலாம். தான் தனக்குக் கீழ்ப்பட்டவர்களைப் பயப்படுத்தச்செய்யும் செய்கைகளைப்போல், தனது கடவுளுக் கும் அவ்விதச் செய்கைகளைக் காட்டினன். சிவபெருமான் சூர்யனைப் பல்லைப் பிடுங்கியும், சந்திரனை மூக்கையறுத்தும் தண்டித்ததாகச் சொல்லும் புராணக் கதைகள் இவன் கட்டிய கதைகளே.

பைபில் நூலில், கடவுள் கோபித்துக்கொண்டதாகவும், வெள்ளங்களை உண்டாக்கிய தாகவும், புயல்களைக் கொண்டு மனிதரை அடக்கியதாகவும், நோய்களை உண்டாக்கி, தன்னுடைய பகைவர்களை அடித்ததாகவும் சொல்லும் கதைகள் யாவும் கட்டுரைகளே. சூனியத்தால் மனிதன் திடீரென நோயுற்றான், பிசாசால் பிடிக்கப்பட்டு அவறுகின்றான் என்று நமது பாமர மக்கள் சொல்வதும், இந்தக் கற்பிதக் கதைகளைக்கொண்டே சொல்லுகிறார்கள். கடவுள், அபூர்வ காரியங்களைச் செய்தார் என்ற கற்பனைகளை மனிதர் நம்புவதால் பாமர ஜனங்களுக்கு விளையும் கெடுதிகளுக்கு அளவே இல்லை. விஷநோய்கள், அம்மன், பிடாரி, மாரியாத்தாள், வெள்ளைச் சேலைக்காரி, முனீஸ்வரன் முதலிய தேவதைகளால் உண்டாகின்ற மூட நம்பிக்கை நமது ஏழைமக்களிடம் குடிகொண்டு விட்டது. 100-வருஷகாலமாக செய்து வந்த விசாரணையால் மேற்கூறியது போன்ற நோய்கள் சிறு சிறு கிருமிகளால் உண்டாகின் றதெனத் தெரிந்திருந்தும், நமது ஏழைத்தொழிலாளிகள் அதை நம்பாமல், மூட வயித் தியர்களும், கிழவிகளும் சொல்லும் கழிப்பு, பூசை, பிரார்த் தனை, பலி முதலியவைகளால் நோய் நீங்குவதாக நம்புகின்றார்கள். தேங்காயில் மூன்று “கண்களில் ” மூன்று வத்தியைக்கொளுத்தி அல்லது மிளகாயைச் சுட்டுத் தெருக்களில் போடுவதற்கும், ஈக்களால் உண்டாகும் குழந்தைக் கழிச்சலுக்கும் என்ன சம்பந்தமென விசாரித்தறிந்தார் இல்லை. இந்த மூட நம்பிக்கைகளால் அருந்தம் குழந்தைகள் வீணே சாகின்றன. முக்கியமாக இவ்வித மூட நம்பிக்கையால், அநேக சிறுவர்கள் நல்ல சிகிச்சையின்றி இவ்வுலக வாழ்வை அனுபவிக்காமலே இறக்கின்றார்கள். இவ்வித கொடுமையான மூட நம்பிக்கைகளைப் போக்காமல் உயிர்களைக் காப்பாற்றாமல், வீணாக கதர், மதுபானம் மறியல் முதலிய சொற்ப வேலைகளைச் செய்யச்சொல்வது கொடுமையிலும் கொடுமையாகும். நமது நாட்டுக்கு உயிர்கள் வேண்டுமோ அல்லது உயிரை வாட்டும் கதர் வேண்டுமோ? எது முதலில் முக்கியமாக வேண்டும்? இதனை யோசியாது காந்தியாரும் அவருடைய திருக்கூட்டங்களும் வியர்த்தமான காரியங்ளைச் செய்து, பாமர மக்களின் துக்கங்களை நீளவைப்பது மிக்க பரிதபமானதே.

மூடபக்தியால் பாமர மக்களுக்கு விளையும் கெடுதிகள் யாவும், மதஸ்தர்களும் மதபக்தர்களும் முன் கட்டிய பொய்க் கதைகளாலென அறிக. இவர்கள் மூடத்தனமான காரியங்களில் கட்டிய கதைகளை நம்பியே பாமர ஜனங்களுக்குப் பில்லி, சூன்யம், பேய், பிசாசுகளின் மேல் நம்பிக்கை விழுந்திருக்கின்றது. கடவுள் நாம் பார்க்கும் இயற்கைக் காரியங்களுக்கும் சம்பவங்களுக்கும் மாறாகக் காரியங்களைச் செய்தார் என்றும், சம்பவங்கள் நடந்தனவென்றுங் கூறும் கட் டுக் கதைகளை நம்பி நோய்களுக்குச் செய்யவேண்டிய பரிகாரங்களைச் செய்து தீர்த்துக்கொள்ளாமல், தெய்வங்களா லும், பேய் பிசாசுகளாலும் நோய்கள் உண்டாகின்றனவென நம்பி, அந்த தேவதைகளுக்குப் பூசை, பலி முதலிய உபயோகமற்ற காரியங்களைச் செய்து, நோய்களைப் போக்கிக் கொள்ளாமல் சாகின்றனர். இந்த மூடப் பழக்கத்தினாலேயே நமது நாட்டில் அரைக் கோடி மக்கள் அகால மரணமடைகின்றார்கள். பேதி, வயிற்றுப் போக்கு, விஷசுரம், பார்ச வாய்வு, வயிற்றுவலி, சீதபேதி, இழுப்பு, ஜன்னி, பித்தப் பெனத்தல் முதலிய நோய்கள், சாதாரணமாக சிற்சில விஷக் கிருமிகளால் (சிறுசிறு பூச்சிகள்) உண்டாகின்றன. அந்தப் பூச்சிகளைக் கொன்றவுடன் நோய் நீங்கிவிடும். ஆனால், இதனை அறிந்தவரும் அறியாதோரும் முனீஸ்வரனுக்குப் பூசையும், மாரி அம்மனுக்குப் பிரார்த்தனையும் செய்து, நோயை அதிக ரித்துக்கொள்கின்றார்கள். இந்த தீவினைகளெல்லாம் மூட பக்தியால் நிகழ்கின்றன. இல்லாத கடவுளுக்கு, இல்லாத குணங்களெல்லாம் உள்ளதாகக் கற்பித்து கடவுள் இதைச் செய்வார், அதைச் செய்வாரென்று மூட நம்பிக்கையைக் கொண்டு பல பயனற்ற மந்திர தந்திரங்களில் பணத்தை வியர்த்தமாக்கி, அனியாயமாக மடியும் மக்களை என்ன வென்று அழைப்பது?

கடவுள் நல்லவரென்றால் புலியையும், ஆட்டையும், சிங்கத்தையும், பசுவையும், பாம்பையும், தேரையும், அம் மைப் பூச்சி, பேதிப்பூச்சி, சுரப்பூச்சி முதலிய கொடிய பூச் சிகளையும் என் சிருஷ்டித்தாரென கேட்கின்றோம்? கடவுள் நல்லவராய் இருந்தால், அவரைப்பற்றி ஏன் பயப்படவேண் டும்? இந்த கற்பிதங்களால் பல ஆயிர வருஷங்களாக நமது நாட்டு மனிதர் மதிமயங்கிப் பல பயனற்ற சரியை கிரியைகளைச் செய்து பரிதபித்துச் சாகின்றனர்.
பிரபஞ்சத்தில், நமக்குத் தெரிந்தவரை, இருக்கும் பிராணிகளில் மனிதனைப்போன்ற மூடப்பிராணி இல்லை என்றே சொல்லலாம். இல்லாத தெய்வங்களையும், பிசாசுகளையும் தானே சிருஷ்டி செய்துகொண்டு, அந்த சொற்களுக்குத் தானே நற்குணங்களையோ, துற்குணங்களையோ காட்டி தான் கொடுத்த குணத்திற்கு பயந்து, அந்த பயத் தைப் போக்க, பிரார்த்தனையும், பூசையும், காவையும், பலியையும் செய்து, அவைகளால் தன்னையும், பிறரையும் இம்சித்துக் கொண்டு, இவ்வுலகில் உயிர் வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில் எங்கும் இருக்காது என்று தீர்க்கமாக எண்ண லாம். கடவுளையும், தெய்வங்களையும், முனீஸ்வரனையும், காட்டேரியையும். பேய்பிசாசுகளையும் தானே சிருஷ்டித்தது ஒரு பக்கமிருக்க, இந்தச் சொற்களுக்கேற்ற உருவங்களை கற்களால் அமைத்துக்கொண்டு, அவைகளின் முன் தாள் பணிந்து தெண்டனிடுவதென்றால், இந்த மனிதனுடைய மதியை என்னவென்று மதிப்பது! இதுவும் இன்னொரு பக்கமிருக்கட்டும். இவர்கள் சிருஷ்டித்த கடவுளையும் தெய்வங் களையும் வகுப்புவாரி கடவுளாக்கிக்கொண்டு, உன் தெய்வம் என் தெய்வமென்று வித்தியாசப்படுத்திக்கொண்டு, அந்த மனோகற்பிதங்களை ஒன்றுக்கொன்று போட்டி போடச் செய்து தத்தம் தலைகளை உடைத்துக்கொள்வதென்றால், இதைவிட உன்மத்தம் உலகில் வேறு என்ன இருக்கின்றது?

பிரபஞ்சத்தில் உள்ள உலகங்களில், நமக்குத் தெரிந்த வரையில் இவ்வுலகில் வாழும் பிராணிகளுக்குள்ளே மனிதன் ஒருவன் தான் “கடவுள்” என்ற கற்பனையைக் கற்பித்திருக்கின்றவன். இவன் குணத்திற்கும், இவன் அறிவிற்கும், இவன் அனுபவத்திற்கும், இவன் நடையுடை பாவனைக்கும் தக்கவாறு தான் கற்பித்த கடவுளுக்குக் குணத்தை யும், அறிவையும், அனுபவத்தையும், நடையுடை பாவனை யையும் அமைக்கின்றான். வேடனுடைய கடவுள் வேட்டை யாடுகின்றது; திருடனுடைய கடவுள் திருடுகிறது. (கள்ளர் அழகர் கடவுள்) விபசாரிகளுடைய கடவுளும் விபசாரம் செய்கிறது. மோசக்காரர்களுடைய கடவுள் மோசம் செய்கின்றது. மீன் பிடிப்போர் கடவுள், மீன் பிடிக்கின்றது. சண்டை போடுகின்றவன் கடவுள் சண்டை யிடுகின்றது. ஆண் பெண் உருவங்களைப் பாவனை செய்து, (Mongomy) அதாவது ஒரு பெண்ஜாதி திட்டத்தில் கட்டுப்பட்டவனுடைய கடவுள் ஒரு பெண் ஜாதியுடனும், பல பெண் ஜாதி திட்டத்தில் இருப்பவனுக்கு (Polygomy) உரிய கடவுள் பல பெண்ஜாதியையும் உடையதாகப் பாவிக்கின் றான். குளிர் தேசத்திலுள்ள கடவுளுக்கு, கம்பளியை ஆடையாகப் போர்த்துகின்றான். உஷ்ணபூமியில் நிர்வாண மாகவே கடவுளை அமைக்கின்றான். இன்னும் பற்பல வினோத திருஷ்டாந்தங்களால் பக்தனைப் போலவே கடவுளும் அமைக்கப்படுகின்றாரே ஒழிய, கடவுளுமில்லை, கடவுளுக்குக் குண முமில்லை, எல்லாம் மனிதனுடைய கற்பனைகளென அறிக.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *