
கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு
மூன்றாம் அத்தியாயம்: கடவுள் என்றல் என்ன?
முந்திய இரண்டு அத்தியாயங்களில் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு இடமுண்டா என்ற சங்கைக்கு ஓர் சுருக்கமான விடையும், கடவுளென்ற பதத்திற்கு, தத்துவ விவேகரும், மதஸ் தரும், பக்தர்களும், என்ன அர்த்தத்தை குறிக்கின்றார்கள் என்பதையும் சற்று விபரமாக எடுத்துரைத் தோம். இந்த அத்தியாயத்தில் “கடவுளென்றால் என்ன என்று விஞ்ஞான முகத்தே விசாரித்தறிவாம்.”
ஆப்ரகடாப்ரா (Abracadabra), அல்லது காடலாப்ரா என்று (Cadalabra) ஆங்கில பாஷையில் சொல்லும் இரண்டு வார்த்தைகள் உள. இந்த இரண்டு சொற்களைப் போன்றதுவே கடவுள் என்ற பதமுமென அறிக. அதாவது எந்தப் பொருளையும் குறிக்காது, வெறுஞ் சொல்லாக முடி யும் சொற்களில் கடவுள் என்ற சொல்லும் ஒன்று என்ப தாகும்.
உலகில் மனிதன் தோன்றுவதற்கு முந்தி, பல சீவன் கள், புல், பூண்டு, செடி, விருட்சம், புழு , மீன், ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய பிராணிகளும், பலகோடி காலம் வாழ்ந்து வந்தன. இதனை விபரமாக இனிவரும் அத்தியாயங்களில் எழுதுவோம். தற்போது நாம் கவனிக்கவேண்டிய தென்னவெனில், தற்போது வாழும் தாவரங்களும் பிராணிகளும் மனிதர்களுக்கு முந்தி வாழ்ந்த தாவரம், பிராணி வகையராக்களின், சந்ததிகளாதலால் இவைகளில் கடவுளென்ற பதம் கிடையா. பல கோடி பிராணிகள் சத்தமிடுவதைக் கேட்டு வருகின்றோம். அவற் றுள் ஒரு பிராணியாகிலும், கடவுளென்ற பதத்தை உச்சரிப் பதைக் கேட்டிலேம். ஆனால், மனிதன் ஒருவன் தான் கடவுளென்ற பதத்தைச் சொல்லுகின்றான். அவன் சமூகத்திலும், பிறந்த குழந்தைகள் கடவுள் என்ற பதத்தைச் சொல்வதாகவும் காணோம்.
குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தாலொழிய, அவை, கடவுளென்ற வார்த்தையைச் சொல்லா. நாம் குழந் தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் சொற்களில், கடவுளென்ற பதமும் ஒன்று. ஆனால் கடவுளென்ற பதத்திற்கும் மற்ற பதங்களுக்கும், ஒரு வித்தியாசமுண்டு. அதாவது மற்ற பதங்கள், ஏதாகிலும் பொருளைக்காட்டிக் கற்பிக்கப்படும் சொற்கள். கடவுளென்ற பதமோ, பழக்கச் சொல்லே யொழிய, பொருளைக்காட்டிக் கற்றுக்கொடுத்த சொல்லாகாது. வீட்டிலும் கோயில்களிலும், முதியோர் படங்களைக் கொண்டும், விக்கிரகங்களைக்கொண்டும், “கடவுளே” என்று வணங்குங்காலங்களிலும், மத நூல்களை வாசிக்கும் காலை யிலும், கஷ்ட காலங்களில் “கடவுளே” என்று அழைக்கும் போதும், இவர்கள் காதில் விழுஞ்சொற்களில் இதுவொன்றாகும். சிறு வயதிலேயே இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தும் பழக்கமாய் விட்டபடியால், அதுவே வழக்கமாய் விட்டது. இதனை விசாரிப்பதும் கிடையாது. கடவுளென்றால் என்னவென்று சில குழந்தைகள் கேட்கின்றன. “உனக்குத்தெரியாது. பெரியவனாப் விட்டபோது உனக்குத் தெரியுமென்று” தாய் தகப்பன்மாரும், புரோகிதர் முதலியோரும் சொல்லிவிடுகின்றார்கள். பெரியோர்கள் கல்லை வணங்கும் போதும் குழந்தைகளும் கூடவே வணங்கு கின்றன. கற்சிலைகளுக்குத் தூபதீப நைவேதனம் செய்யும் போதும், குழந்தைகளும் செய்கின்றன. ” அரகரா” என்று தாய் தகப்பன்மார்கள் சொல்லும் போதும், அவைகளும், கிளிப்பிள்ளைகளைப்போல் “அரகரா” என்று சொல்லுகின்றன. குழந்தைப் பருவத்தில், எதைச் சொல்லச் சொன் னாலும் சொல்லுகின்றோம். அந்தக் காலங்களில், சொல்லிக் கொடுத்த பதங்களில் “கடவுள்” என்ற பதம் அடுத்தடுத்து சொல்லப்படுகின்றபடியால், இந்தப் பதம் வாயில் அழுத்த மாய்ப் பழகிவிடுகின்றது. தொட்டில் பழக்க வாசனையாலேயே கடவுளென்ற பதம் தொண்டையில் தடித்துவிட்டது. அக்கால முதல், பல வருஷங்களாக, நமக்குள் தடிப்பேறிய நிமித்தத்தால் தான், ” கடவுள் ” என்ற சொல்லுக்குள்ள மகத்துவமெல்லாம் இருக்கின்றதென அறிக.
மனிதனுக்குப் பழக்கமே விசேஷம். தெய்வமென்று சொல்வதும் பழக்கம். அந்த வார்த்தையைக் கேட்டு வணங்குவதும் பழக்கம். தூபதீபங்கள் ஏந்துவதும் பழக் கம். தெய்வங்களுக்கென கோயில், குளங்கள் கட்டுவதும் பழக்கமேயாகும்.
மதங்களில் அபிமானமுள்ளவர்கள் இந்தப் பழக்க வாசனையால் “கடவுள்” என்ற பதம் எதைக் குறிக்கின்றது என்று விசாரிப்பதுமில்லை. அந்த வார்த்தையை விசாரிக்கப் புகுந்தவர்களை “நாஸ்திகர் ‘ “சண்டாளர் ” என்று ஏளனம் செய்கின்றார்கள். பக்தர்களில் சிலர், விவேகிகளாயிருக்கின்ற வர்களை ” சந்தேகி” என்று கண்டிக்கின்றார்கள். பழக்க வார்த்தையை எவ்விதம் மறுப்பதென்று, மதஸ்தர்கள் பயப் படுவ தாகத் தெரிகிறது.
“கடவுள் ” என்ற இந்தப் பதம், நாம் பேசும் எல்லா வார்த்தைகளைப் பார்க்கிலும் அதிக வைராக்கியம் பெற் றுளது.
மதவைராக்கியமென்பதும் இந்தப் பதத்தைக் குறித்ததே. இந்த வார்த்தையைப்பற்றி எழுதாத நூல் களில்லை. தர்க்கிக்காத வார்த்தைகளில்லை. தத்துவம் பேசாத பேச்சுக்களில்லை. இந்தச் சொல்லைக் குறித்து அடைந்திராத மூடபக்தியில்லை. இவ்வளவு மகத்துவம் கொண்டது இந்த பதம். இதற்குக் காரணமுண்டு. முதலாவது, இந்தச் சொல், பண்டைக் காலத்து பழக்கச் சொல். இரண்டாவது, இந்தச் சொல்லைச் சொல்லிக்கொண்டு பிழைக்கின்றவர்கள் அனந்தம். இந்தச் சொல்லுக்காக அநேக ஸ்தாபனங்கள் உண்டாயிருக்கின்றன. இந்த ஸ்தாபன மூலமாக, பலருக்கு சீவனமுண்டு. இவ்வித காரணங்களால் இந்தச் சொல்லே இன்னும் நிலைத்து வருகின்றது. இந்தச் சொல், புராதன சொற்களில் ஒன்றென மேலே குறித்துள்ளோம். இதன் உற்பத்தியைக் குறித்து சற்று ஆராய்வாம்.
கடவுள் என்ற வார்த்தை இல்லாத சில மனிதர்கள் இருப்பதாகச் சொல்கின்றார்கள். அப்படி இருந்தாலும் இருக்கட்டும். ஆனால் மனிதனுக்குக் கீழாய் உள்ள சீவராசி களிலும், மனிதக் குழந்தைகளிலும் இந்த வார்த்தை இயல்பாக வழங்குவதாக இல்லை. இது கண்கண்ட விஷயம். ஆனால், நாகரீக மடைந்துள்ள சமூகங்களிலும், நாகரீகமில்லாத சமூகங்களிலும் இந்தச் சொல் பழக்கத்தில் இருப் பதைக்காணலாம். ஒன்றையும் குறிப்பாகக் காட்டாத இந்தச் சொல் எவ்விதம் உற்பத்தியாயிருக்கும்? இந்தச்சொல் இரண்டுவிதமாக மனித வர்க்கத்தில் தோன்றி யிருக்கலா மென்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
நமக்கு முந்தி வாழ்ந்து வந்த நம்முடைய மூதாதை கள், சுமார் 5, 6 லட்சம் வருஷங்களுக்கு முன், காட்டு மிராண்டிகளாக இருந்து வந்தனர். இது கட்டுக்கதையல்ல. விசாரணையில் ஏற்படும் முடிவு என அறிக. நம் முன்னோர் உலகில் வாழுங்காலை, உபயோகித்து வந்த பொருள்கள், ஆடை, ஆபாணம், கற்சட்டி, படகு, குகை முதலிய வாசஸ்தலங்களை இற்றைக்கும் காணலாம். இன்னும் பல ஆதாரங்களைக்கொண்டு, நம்முன்னோர் அடைந்திருந்த சமூக வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம். அந்தக் காலத்தில் விஷய வார்த்தைகளுக்கும், கற்பித வார்த்தைகளுக்குமுள்ள வித்தி யாசத்தை மனிதன் அறியா தவனாயிருந்தான். அவன் காணும் கனவு உண்மையெனத்தோன்றும். தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்தால் தானும் அங்கே இருப்பதாக எண்ணு வான். மூர்ச்சையாக இருப்பவன் விழித்துக்கொண்டதும், அவனிடமிருந்து ஏதோ ஒன்று வெளிப்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானிப்பான். கனவில் ஆடும் வேட்டையும், பிடிக்கும் மீனும், போடும் சண்டைகளும், வாஸ்தவமென்றே எண்ணுவான். இத்தியாதி அனுபவங்களிலிருந்து, தனக்குள் ஒரு தனிப்பொருள் உளதெனத் தீர்மானிப்பான். அதே மாதிரி தன்னுடைய தேக அசைவை அனுபோகத்தி லிருந்து தேகமன்னியில் வேறு ஒரு வஸ்து இருந்துகொண்டு ஆட்டுவதாக அனுமானித்தது போல், தனக்கு அன்னியப் பொருள்கள் அசைவைக்கண்டு, அவைகளையும் ஆட்டுவிப் போன் ஒருவன் உளதாகத் தீர்மானிப்பது எளிதாகும். இடி,மின்னல், வெள்ளம், புயல், பூகம்பம் முதலிய கொடூர சம்பவங்கள், தனக்குக் கெடுதி விளைவிப்பதைக் கண்டு அவை களும் கடூர கர்த்தாக்களால் உண்டாயிருக்கவேண்டுமென்று தீர்மானித்தான். மனித வர்க்கம் குழந்தைப் பருவத்திலிருந்த போது, இம்மாதிரியாக நிகழும் சம்பவங்களுக்குத் தனி கர்த்தா, பலரோ, ஒருவனோ இருக்கவேண்டுமென்று எண்ணுவது சுலபமே. இவ்விதமாக, பொருளற்ற வார்த்தை கள் உண்டாயின. 33 கோடி தேவர்களும், நொண்டி, சண்டி, சாமுண்டிகளும், பேய் பிசாசுகளும், சிவன், விஷ்ணு, பிர மன், அல்லா, ஜுஹோவா, கடவுள், பிரமம் என்ற பதங் களும் உண்டாயின. இஃதோர் யூகை.
காட்டுமிராண்டி யுகத்தில், மனிதச் செயலுக்கும், பிரகிருத செயல்களுக்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது மிகக் கஷ்டம். தான் எவ்விதம் உயிருள்ளவனாக எண்ணினானோ, அவ்விதமே தனக்கு அன்னியில் நிகழும் சம்பவங் களுக்கும் உயிர் கொடுத்தான். கொடூர சம்பவங்களுக்குத் தனது கொடூர குணங்களை காரண கர்த்தா வாக்கினான். நன்மையான சம்பவங்களுக்குத் தன்னுடைய நற்குணங்களைக் காட்டினான். இடி இடித்துத் தன் குடிசை நாசமானால், இடிராசனுக்குத் தன் மேல் கோபமூண்டதாக எண்ணி, பயந்து வணங்கினான். பூசை, நைவேத்தியமிட்டு, தாள் பணிந்தான். இன்றைக்கும் சில காட்டுமிராண்டிகள், இடியைக் கேட்டால் கீழே விழுந்து கும்பிடுகிறார்கள். நம்மில் பலரும் இடி முழக்கத்தைக் கேட்டதும் ” அர்ச்சுனா” என்று கூப்பாடு இடுகின்றார்கள். குழந்தைகளும் நடுங்குகின்றன. அதைப்போலவே, நம் முன்னோர்கள் தங்கள் புறத்தில் நடக்கும் சம்பவங்களுக் கெல்லாம் ஒரு கர்த்தாவைக் கற்பித்துக்கொண்டு, நல்ல சம்பவமாய் இருந்தால் அதற்கு நல்ல தெய்வமெனவும், அன்புடைய கடவுளென்றும், கற்பனை செய்தார்கள். கெட்ட சம்பவங்களுக்குக் கோபமுள்ள தெய்வமென்றும், கடூர தெய்வமென்றும் கற்பனை செய்தார் கள். அன்புடைய கடவுளை வாழ்த்திப் போற்றுகின்றார்கள். கடூர கடவுளுக்குக் காவு, பலி முதலியவை இடுகிறார்கள். இது இரண்டாவது யுக்தி. இவ்விதங்களால், ஆதியில் கடவுள் என்ற சொல் கற்பிக்கப்பட்டு வந்திருக்கலாம்.
உலகில் பேசும் பிராணி மனிதன் ஒருவனே. இந்தப் பேச்சால் மனிதன் இரண்டு உலகங்கள் படைத்துக் கொண் டான். தான் பார்க்கு முலகமொன்று ; தான் பேசு முலகமொன்று. பார்க்கும் உலகம் , நேர்முகவுலகம்; பேசும் உலகம் மறை முகவுலகம், இந்த உள்முகவுலகம் இரண்டு வகைத்து. காணும் பொருளைக் குறிக்கும் உலகமொன்று ; பொருளற்ற கற்பனையுலகம் மற்றொன்று. இந்தக் கற்பனை யுலகத்தைச் சேர்ந்தவை கடவுள், தெய்வம், பூதப்பிசாசுகள், நாகம், மோட்சம், நிர்வாணம், பரமண்டலம், பரமபதம், சூட்சும லோகம், சத்து, சித்து, ஆனந்தம் முதலியன.
காரணமொன்று இருக்க, இதனையறியாமல் கற்பித்த வார்த்தைகளைக் கற்பித்துக்கொண்டு, அவைகளுக்குக் கோயில், குளங்கள், பூசை, நைவேத்தியம், பிரார்த்தனை, தொழுதல் முதலிய மூடப்பழக்கங்களைச் செய்துகொண்டு, இன்றும் உலகம் மூடநம்பிக்கையில் ஆழ்ந்து கிடப்பதை நோக்கில், மனித உலகம் இன்னும் குழந்தைப் பருவத் தில் தான் ஆழ்ந்து கிடக்கின்ற தென்பதற்குச் சந்தேகம் வேண்டுமா?



