
கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு
முதல் அத்தியாயம்: கடவுள் தங்கும் இடம் எது?
நாளதுவரை தெரிந்துள்ள பிரபஞ்சத் தில், எங்கேயாகிலும் கடவுளுக்கு இடமுண்டா? என்று வான ஆராய்ச்சி செய்வோர் கண்டாராய்ந்தும், எந்தப் பிரபஞ்ச மூலையிலேனும் கடவுளைக் காணவில்லை என்று சொல்லலாம். பிரபல வான நூலாசிரியராகிய ஸர். ஜேம்ஸ் ஜீன்ஸ் என்பார் (Sir James Jeans), தனது நூலாகிய “பிரபஞ்ச வான நூலில்” (Cosmogony and Astronomy), பிரபஞ்சத்தில், எங்கேயாகிலும் சைதன்யம், அதாவது மனம் (Mind) இருப்பதாக யூகிக்க ஆதாரமில்லை என்கிறார். நமது பூமியைத் தவிர மற்ற எங்கேயாகிலும் பிரபஞ்சத்தில் உயிர் (Life), அல்லது, சீவன் உளதோ வெனில், அது சந்தேக மென்கின்றார். நம்மைச் சுற்றியுள்ளப் பிரபஞ்சத்தில் கடவுளுக்காகிலும், சீவனுக்காகிலும் இருக்க இடமில்லை எனில், மற்ற வேறு எந்த இடம் இருக்கக்கூடும்? இதன் சம்பந்தமாக ஒரு ருசிகரமான கதை யொன்றுண்டு. நட்சத்திர ஆபிஸ் (Observatory) ஒன்றினிடம் வான சாஸ்திரி ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்துவ மார்க்கத்துப் பாதிரி. அவரிடம், வானத்தைப் பார்க்கவேண்டுமென ஒருவர் சென்று, தூர திருஷ்டிக் கண்ணாடி மூலமாக, (Telescope) காணப்படும் பற்பல வான மண்டலங்களைக் காட்டும்படி கேட்டுக்கொண் டார். வானசாஸ்திரி முதலில் பூமிக்கு அருகாமையிலுள்ள சந்திரமண்டலத்தைக் காட்டி, அடுத்துள்ள நவக்கிரக மண் டலத்தையும், சூர்ய மண்டலத்தையும் அதற்கப்பாலுள்ள நட்சத்திர மண்டலத்தையும் காட்டி வந்தார். இவைகளை எல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தவர் பாதிரியை நோக்கி, “ஐயா தாங்கள் காட்டி வந்த பற்பல மண்டலங்களையும் பார்த்து வந்தேன். ஆனால், இவைகளுக்கப்பால் உள்ள தாகச் சொல்லும் பரமண்டலத்தையும், அதில் வீற்றிருக்கும் பிதாவையும், காட்டவில்லையே” என்றார். பாதிரியார் இந்தக் கேள்வியைக் குறும்பென்று கருதி, அவரிடம் ஒன்றும் சொல்லாமலே அவரை விடைகொடுத் தனுப்பிவிட்டார். ஆனால் தற்கால வான நூலோர், இந்தக் கேள்வியைக் குறும்பென்று கருதுவதில்லை. ”மெஞ்ஞான நோக்கு” என்பதே “விசாரித்து உணர் தல்” ஆனபடியால், கேள்வி எவ்வித ஆபாசமான தாயிருந்தாலும், அதனைத் தாழ்மையோடு எற்றுக்கொண்டு, அதற்கு விடையுண்டோவென ஆராய்ச்சி செய்யப் புகுவர்.
” அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ” என்ற தாயுமானார் தத்துவத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிரபஞ்சத்தில் பிரகாசமில்லாத இடம் அதிகமென்று வான நூலோர் சொல்லுகின்றார்கள். கடவுள் பிரகாசமென்றால், இருள் யாது? கிறிஸ்துவர் சொல்லுவது போல், இருள் பிசாசென்றேற்படும். பிரபஞ்சத்தில் இருளடைந்த இடங்களே அதிகமாதலால், பிசாசே பெரிதென வேற்படும். தாயுமானர் தத்துவம் இந்த ஆபாசங்களுக் கெல்லாம் இடம் தரும். ஆதலின் கவிஞர்களிடமிருந்து உண்மை ஞானத்தை எதிர் பார்க்க முடியாது,
“தூணிலுமிருப்பார் துரும்பிலுமிருப்பார்” என்று பிரகலாத சரித்திரமொன்றைக் கட்டிவிட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின்படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை, தூசும் தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு ஞாயமுமில்லை. வேதாந்தி கள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும், பிரபஞ்சத்தில் காணோம். அங்குமிங்கும் ஓடுங் கிரணங்களும், (Radiation) தூசும், (Dust), பரமாணுக்களும், (Electrons and Protons), இருப்பதாக யூகையேயொழிய நிலைத்திருக்கும் சத்தாகிலும், அறியும் சித்தாகிலும், உணர்வாகிய ஆனந்தமும், மனிதனுடைய எண்ணத்தின், அதாவது, வார்த்தை , அல்லது, சொற்கள் அன்னியில் வேறு தனித்து இருப்பதாக யூகிக்க இடமே இல்லை. உலகில் பாவியுள்ள பற்பல, தத்துவ ஞானங்களெனக்கூறும், (Philosophies), வார்த்தைகள் யாவும் கற்பனைகளாக முடிகின்றபடியால், எதையும் அனுபவமாகப் பார்க்க முடியவில்லை. அந்தந்த தத்துவப் பொருள் களெனப்படும் சொற்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப் பட்டே இருக்கின்றன. கடவுளைப்பற்றிப் பேசும் ஞானி களும், பக்தர்களும் யானையைக் கண்ட குருடர்களைப்போல், பேசுகின்றார்கள். யானையைக் கண்ட குருடர்களாகிலும், ஏதோ ஒரு மிருகத்தைக் கண்டு தங்கள் அனுபவத்திற்குத் தக்கவாறு சொல்லுகின்றார்கள். ஆனால் ஞானிகளோ வெனில், யாதொன்றையும் பார்க்காமலே, வாய்க்கு வந்த வாறு சொற்களைக் கட்டிவிடுகின்றார்கள். கடவுள், ஆன்மா, பிரமம், சிவன், விஷ்ணு, பிரமா முதலிய முப்பத்து முக்கோடி தெய்வங்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும், கின்னரர், கிம்புருடர், அஷ்டபாலகர் முதலிய உபதெய்வங்களும், இருளன், வீரன், காட்டேரி, நொண்டி, சண்டி, சாமுண்டி, தோட்டி, தூண்டி, நல்லண்ணன், சின்னான், பெத்தண்ணன், மாரி, முனியன், சங்கிலி, பாவாடை, குழி இரிசி முதலிய பேய் பிசாசுகளும், நாம் தொட்டிலில் பழகிய சில வார்த்தை களைக் கொண்டு, வயது வந்த பிறகு கட்டிய கற்பனா வார்த்தை களே யாகும். இந்த சொற்களுக்காகத் தான் உலகத்தில் எங்கும் கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும், கெதிடிரல் களும் கட்டப்பட்டிருக்கின்றன என அறிக! இருளன், வீரன், முனியனுக்குப் பிரபஞ்சத்தில் இடமில்லை எனில், பக்தர் வணங்கி வழிபடும் ஈஸ்வரனுக்கு இடமேது? பாமர ஜனங்கள் வணங்கும் கோடான கோடி சிறு தெய்வங்கள் கற்பனை எனில், அறிஞர்கள் வணங்கும், அல்லது, போற் றும் பிரமமும், கற்பி தமன்றோ ?
உலகை நாம் தினம் பார்த்து வருகின்றோம். அதன் மேலுள்ள பொருள்கள் பலவற்றைக் கையாள்கின்றோம். அநேகமாக உலகம் இன்ன பொருளை யுடைய தாக இருக்கிற தென்று தெரியும். உலகத்தில் உள்ள சகலமும் பரிசோதனை யில் மண்ணாகவே முடிகின்றது. இந்த மண்ணில், சிற்சில உயிர்கள் தோன்றி இருக்கின்றன. இவைகளும் மண்ணில் தோன்றி மண்ணிலேயே மடிகின்றன. அவ்வுயிர்களில் நாம் ஒன்று. (From Dust to Dust), அதாவது, மண்ணிலிருந்து வந்து மண்ணாய்ப் போகின்றோமென, கிறிஸ்தவ வாக்கிய மொன் றுண்டு. இது தான் நாம் கண்டுவரும் காட்சி. இது தான் பிரத்தியட்ச அனுபவம். நமது உலக மண்ணில் எங்கேயாகிலும் கடவுள் (God) என்ற பொருள் தங்கி வாழ இட முண்டாவென கேட்கின்றோம் ? ‘ இருளன்’ ‘வீரனுக்கு’ எங்கே இடமென்று கேட்கின்றோம்? கன்னி அம்மனுக் கும் பச்சை அம்மனுக்கும்’ ‘பெரிய பாளையத்தாளுக்கும் ‘ எங்கே இடமென்று கேட்கின்றோம். இச்சிறு தெய்வங்கள் எல்லாம் ஆபாச வார்த்தைகளெனில், பெரிய தெய்வங்களும் ஆபாச வார்த்தைகளாகாவா? கடவுளென்பதும், தெய்வங்க ளென்பனவும், மோட்சமென்பதும், நரகமென்பதும், ‘ஐந்து கண்ணன்’ போன்ற மழலைச் சொற்களே. இந்த மழலைச் சொற்களை இயேசு சொன்னாலும், மகமது சொன்னாலும், சங்கரர் சொன்னாலும், விவேகானந்தர் சொன்னாலும், காந்தி சொன்னாலும், இவை யாவும் கேள்விப்பட்ட சொற்களே – அல்லது பொருளைக் குறிக்கும் சொற்களாகா. தத்துவ ஞானிகள் கூறும் பிரமமும் (Brahman), சத்தும் (Sat), சர்வமும் (Absolute), தெரியப்படாததும் (Unknowable), எண்ண மும் (Idea), இச்சையும் (Will), யாவும் கற்பனைக ளென அறிக. இந்த கற்பனா வார்த்தைகளைக் குறித்து எழுதியுள்ள நூற்கள் எத்தனை! கட்டியுள்ள கட்டடங்கள் எத்தனை !! செய்யும் வாதங்க ளைத்தனை!! இவைகள் யாவும் பாமரமக்களுக்கு மெஞ்ஞானத் தெளிவு உண்டாயதும், குப்பைத்தொட்டியில் தான் போடவேண்டிவரும். இதற்கு ஐயமில்லை. காலந்தான் கடக்கவேண்டும். அன்று தான் அந்த முடிவுக்கு அரும்பாடு பட்டு வரும் நமது பகுத்தறிவுச் சங் கத்தார்களாகிய சுயமரியாதைக் காரர்களுடைய எண்ணம் சித்திபெறும். அன்று தான் பொதுவுடமையோருடைய முயற்சியும் பயன்படும். இந்த மெஞ்ஞான உண்மையை நமது இந்திய உலகம் அறிந்துய்யுமாறு இந்தச் சிறு வியாசத்தை எழுதத் துணிந்தனம்.
இது நிற்க, கடவுளுக்குத் தங்க நமது உலகம் இடந் தராவிடினும், அதனைச் சுற்றியுள்ள பிரபஞ்சப் பொருள் களில் யாதேனும் இடம் கொடுக்குமாவென்று பார்ப்போம். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சப் பொருள்கள் யாவை?
நமக்கு அருகேயுள்ளது நமது சந்திரனாகும்; அதில் காற்றில்லை, தண்ணீரில்லை. ஒரு பக்கத்தில் 14 நாள் ஒரே வெய்யில் காயும்; மற்றொரு பக்கத்தில் 14 நாள் இருளடைந்து தாங்காத குளிராக இருக்கும். இதில் எந்த உயிர் வாழமுடி யும்? உயிர் வாழ முடியாவெனில் அங்கே கடவுளுக்கு என்ன வேலை? சிறு உயிர் வாழ முடியாத இடத்தில் பேருயிர் வாழ இடமேது?
சந்திரனுக்கு அடுத்திருக்கும் உலகங்களை நவங்கிரகங்க ளென்பார். அவ்வித உலகங்களில் இரண்டொன்றில் மாத்திரம் நமது உலகிலுள்ள சீதோஷ்ண ஸ்திதி இருப்பதாக யூகிக்கப்படுகின்றது. அவைகளில் உயிர் உண்டோ ? அங்காரகனில் உயிர் ஏதாகிலும் இருக்கலாமென்பது வெறும் உத்தேசம். ஆனால் அங்காரகன் நமது உலகத்தைவிட வயதில் மூத்த உலகமாதலால், உயிர் இருந்தால் நம்மைவிட விசேஷ அறிவை அவ்வுயிர்கள் படைத்திருக்க வேண்டும். அதற்கு சாட்சி இதுகாறும் ஏற்படவில்லை. சுக்கிரனில் தண்ணீர், நிலத்தைவிட மூன்று பங்கு அதிகமாக இருத்தலால், அதில் மீன்கள் உற்பத்தியாய் இருக்கலாம் என்பதோர் யூகை. சுக்கிரனில் மீன்கள் மாத்திரம் உற்பத்தியாய் இருந் தால், ‘ எதாபத்தா ததாதேவா ‘ என்ற வேத வாக்கியப்படி அவைகளில் கடவுள், மீன் வடிவமாக இருப்பார்போலும்! ஆனால் நமது கடலில் வாழும் மீன்களுக்குக் கடவுளிருப்ப தாகத் தெரியாதாகையால் சுக்கிரனில் வாழும் மீன்களுக்குக் கடவுள் இருப்பதாக நாம் எண்ண வேண்டியதில்லை.
நவக்கிரகங்களை விட்டபிறகு, நமது சூர்யன் இருக் கிறது. சூர்யன் நமது உலகத்தைப் போன்ற பல லட்சம் உலகங்களை விழுங்கி விடக்கூடிய அவ்வளவு பெரிது. அது சுமார் பத்து கோடி மைல் தூரமிருந்து பிரகாசிக்கின்றது. அது ஓர் பெரிய நெருப்பு; அதன் அனல் வெளியில் 9000 டிகிரியாம் ! உட்புறத்தில் 40000 டிகிரியாம்!! நமது உலகில் 120, 125 டிகிரிக்கு மேல் சகித்து வாழ முடியா . சூர்யனில் அணுக்களும் நிலைக்க முடியாதென்றால், உயிர் நிலைத்திருப் பது எப்படி?
சூர்யனுக்கு அப்பால் கோடான கோடி சூர்யர்களை நட்சத்திர ரூபமாகப் பார்க்கின்றோம். அவைகளில் சில, நமது சூர்யனைவிட பத்து லட்சம் பெரிதாம். அவை 100000 டிக்ரிக்குமேல் உஷ்ணமுளதாம். அவைகளில் பரமாணுக் களும் தங்க இடமில்லை போலும்! பரமாணுக்களுக்கும் தங்க இடமில்லாத நட்சத்திரங்களில், மகத்தாகிய கடவுள் தங்க வசதி ஏற்படுமா என்பது தான் சந்தேகம்!! நட்சத்திரங்கள் இல்லாத வெளியில் பாழ் (வெட்டவெளி) எங்கும் நிறைந்துள தாம். அதன் விசாலத்தை கணக்கிட முடியாதாம். இந்த பாழில் தாங்கக்கூடாத குளிர் இருக்குமாம். இந்த அகண்டா காரப் பாழிலாகிலும் கடவுள் வசிக்கலாமோ? பிரபஞ்சத்திலுள்ள பொருள்களில் கோடான கோடி நட்சத்திரங்களில் சூடு தாங்க முடியாமலிருக்கும். நட்சத்திரமில்லாத பாழில் குளிர் தாங்க முடியாமலிருக்கும். ஆனால் இந்தப் பாழில் கடவுளுக்கு என்ன வேலை என்று கேட்கலாம்? இதற்கு ஞானிகள் தான் விடைபகால் வேண்டும். ஆதலின் பிரபஞ்ச முழுதும் கடவுளுக்குத்தங்க இடமில்லையென ஏற்படும்.
ஆனால் இதன் மத்தியில் எங்கோ ஓர் மூலையில் நாம் உற்பத்தியாகி, அற்பநாள் இருந்து வாழ்ந்து வந்த இடமும் போன இடமும் தெரியாமல் மறைந்து போகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் நமது சொற்ப வாழ்வுக்கு வேண்டிய விஷயங் களைக் கருதாது, கடவுளர் என்றும், பேய் பிசாசுகளென்றும், காட்டேரி முனீஸ்வரன் என்றும் சொல்லப்படுகின்ற வியர்த்தமான சொற்களைக் கற்பித்துக்கொண்டு, அவைகளுக்கு கூட கோபுர மாடமாளிகைகளைக் கட்டுவித்துக் கொண்டு, எல்லாம் உள்ள உலகில், வாய்க்குப் பிடி அரிசிகூட கிடைக்கப்பெறாத கோடான கோடிமக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, நாமா கிய சில அற்ப தூசின் சையோகங்கள், எல்லா சுகபோகங் களையும் அனுபவித்துவரச் செய்துவரும் சூழ்ச்சி என்றால், இந்த திட்டத்தை வெறுக்காத உத்தமன் எங்குமில்லையா? இதனை நமது தமிழ் நாட்டு அறிஞர் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டுகிறோம்.



