
கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு
எட்டாம் அத்தியாயம்: கடவுளுக்கும் உலகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை
அநேக ஆயிரம் நூற்றாண்டுகளாக நமது உலகமே பிரபஞ்சமென்றும், வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், சூரிய சந்திரர்களும் நமது உலக நன்மைக்கே உண்டாக்கப்பட்டவைகள் என்றும் நமது முன்னோர்கள் எண்ணிவந்தார்கள். நமக்குப் பகலில் வெளிச்சத்தைக் கொடுக்க சூரியனையும், இரவில் வெளிச்சத்தைக் கொடுக்க சந்திரனையும் நட்சத்திரங்களையும் கடவுள் படைத்தாரெனவும், கிருஸ்தவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதற்குமுன் இவ்வுலகில் வாழ்ந்துவந்த பூர்வகால மனிதரும், நமது உலகை நடுவிலும், அதனைச் சுற்றி மற்ற ஆகாயப் பொருள்களாகிய சூர்ய சந்திரர்களும், நட்சத்திரங்களும் ஓடிக்கொண் டிருப்பதாகக் கருதினார்கள். பாலமி (Paolemy) என்ற ஓர் பூர்வகால வானசாஸ்திரி, நமது உலகம் நடுவிலிருந்து கொண்டிருக்கவும், மற்ற வானத்தில் பிரகாசிக்கும் லோகங்கள் யாவும் வட்டமாக பூமியைச் சுற்றிவருகின்றன வென மிகச் சாதுர்யமாக ஏட்டில் காட்டிவந்தார்.
பிரபஞ்சத்தில் நமது உலகந்தான் சிறந்தது. மற்ற உலகங்கள் யாவும் நமது உலக உபயோகத்திற்கென அமைக் கப்பட்டுள்ளனவென, 2000 வருஷமாக நமது முன்னோர் கள் எண்ணிவந்தார்கள்.
ஆனால் 1543ல் காபர்னிகஸ் (Copernicus) என்ற ஜர்மன் வானசாஸ்திரி, பண்டைக்கால மதக்கொள்கை தப்பித மென்றும், பூமி, பல உலகங்களில் ஒன்றென்றும், பூமியும் மற்ற சிறு உலகங்களும் சூரியனைச் சுற்றியோடுகின்றன வென்றும் தெரிவித்தார். இந்த ஞானத்தை வற்புறுத்திய புருனே (Bruno) என்ற பெரியாரை, மதத்திற்கு மாறாக அவர் கூறிய தாக மதகுருக்கள், நெருப்பிலிட்டுக் கொளுத்தி விட்டனர். அதுமுதல் மதக்கற்பனை பின்னடைந்து, அடுத் தடுத்து செய்து வந்த வான ஆராய்ச்சியால், காபர்நிகஸ் பெரியார் சொன்ன விஷயம் நிரூபிக்கப்பட்டு, கோடான கோடி உலகங்களில் நமது பூமி ஓர் அற்பப் பொருளென எண்ண நேரிட்டது.
நாம் இந்தச் சந்தர்பத்தில் கவனிக்கவேண்டிய தென்ன வெனில், கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஏதாகிலும் சம்பந்தம் உளதாவென அறியவேண்டிய விஷயங்களே.
நமக்குத் தெரிந்தவரையில் பிரபஞ்சம் என்னென்ன பொருள்களை உடைத்தாயிருக்கின்றதென முதலில் அறிந்து கொள்வோம். அதன் பிறகு அது எவ்விதமாகத் தற்போது காணும் உருவங்களைப் பெற்றுளது என்பதையும் சுருக்கமாக விளக்கிக் கடைசியாக இத்தியாதி ஆதாரங்களைக் கொண்ட பிரபஞ்சத்தில், கடவுளுக்கு எந்தவித சம்பந்தமாகிலும் வைக்க வேண்டுமா என்பதை யோசிப்பாம்.
பிரபஞ்சப் பொருள்களில் நமது உலகம் ஒன்று. இந்த உலகைப் போன்ற நவக்கிரகங்கள் எட்டு. இந்த ஒன்பது உலகங்களும் நடுவிலிருக்கும் சூர்யனைச் சுற்றி ஓடிக்கொண் டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தை சூர்ய திட்டம் (Solar System) என்று அழைப்பார்கள். இந்தத் திட்டத்தில் வால் வெள்ளிகள் (Comets), எரி வெள்ளிகள் (Meteors), அந்தந்தக் கிரகத்தைச் சுற்றும் சந்திரர்கள், இவைகள் மத் தியில் கிடக்கும் தூசு (Dust), கிரணங்கள் (Radiation), சேர்ந்துள்ளன. இந்தத் திட்டத்திலுள்ள பொருள்கள் யாவும் கவர்ச்சி என்னும் சக்தியால் (Gravitition), ஒன்றோடொன்று இழுக்கப்பட்டு ஒரே குடும்பமாக இருந்து வருகின் றன. இந்தக் குடும்பத்தைப் போன்ற வேறு குடும்பங்கள் பிரபஞ்சத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
நமது சூர்ய குடும்பத்திற்கு அப்பால் நட்சத்திரங்கள் இருக்கின்றன. சில நட்சத்திரங்கள் தனித்தும், சில கும்பலாகவும் (Star Clusters), ஆகாயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரட்டை நட்சத்திரங்களாகவும், மூன்று நான்கு சேர்ந்த கூட்டங்களாகவும் பல நட்சத்திரங்கள் இருக்கின் றன. இவைகளன்னியில் சில மேகங்களைப்போல் தென்படும் ஆவியும் (Nebula) கலந்து இருக்கின்றன. இவை யாவும் சேர்ந்து நட்சத்திர திட்டமென (Steller System) வழங்கும். இந்த நட்சத்திர திட்டம் அல்லது குடும்பத்தில் நமது சூர்யனும், கிரகங்களும், வால் வெள்ளி, எரி வெள்ளி சந்திரர்கள் யாவும் சேர்ந்தவை. இந்த பெரிய குடும்பத்தில் நமது உலகம் எங்கோர் மூலையில் கிடந்து வருகின்றது. இந்த நட்சத்திர குடும்பத்தை காலஸி (Galasey) என்று அழைப்பார்கள். இந்தக் குடும்பத்தில் லட்சங்கோடி நட்சத்திரங்கள் உளவாம்.
இந்தக் காலஸி அதாவது நமக்கருகாமையிலுள்ள நட்சத்திர குடும்பத்திற்கு அப்பால் மெடகாலனி (Metagalaney) என்று அழைக்கப்படும் பெரிய நட்சத்திர கூட் டங்கள் இருக்கின்றன. இந்த மெடகாலனியில், கோடி கோடி கோடான கோடி நட்சத்திரங்கள் உளவாம்!!
இவையாவும், நமது உலகை இருந்த இடத்தில் இருக் கச் செய்யும் கவர்ச்சி (Gravtation) யில், ஆளப்பட்டு வருகின்றனவாம். இங்கும், அங்கும், எங்கும் கவர்ச்சியால் பிரபஞ்சப் பொருள்கள் சகலமும் ஒன்றோடொன்று பிணைக் கப்பட்டு இருக்கின்றனவாம்.!!! இத்தியாதி பொருள்களும் மகத்துக்கள் எனப்படும்.
இனி அணுக்களை விசாரித்தறிவாம். மகத்துக்களெல்லாம், அணுக்களின் (Atoms) சையோகத்தால் கூட்டப்பட்டவை. அணுக்கள், பரமாணுக்களால் (Glectroms and Protom) கூடியவை. இவைகளுக்கு மேற்பட (Molecules) மாலிகூல்ஸ் என்ற அணுத்திரள்கள் இருக்கின்றன. இந்த அணுத்திரள்களால் தான் நாமும் நமது உலகத்திலுள்ள பல சே தன அசேதனங்களும் உருவடைந்திருக்கின்றோம்.
சென்ற 25-வருஷங்களாகச் செய்து வரும் ஆராய்ச்சியில் அணுக்களும், அணுத்திரள்களாகிய நாமும் இழுக்கும் சக்தியால் (Attraction) கட்டுண்டு தனிப் பொருள்களாக இருந்து வருகின்றோம். ஆதலின் நமது தேகமும் அதற்குக் கீழாகவுள்ள அணுக்களும், அணுத்திரள்களும் இவைகளுக்கு மேலாகவுள்ள சூர்ய சந்திர நக்ஷத்திர கூட்டங்களும் கவர்ச்சியால் கட்டுண்டு பிரபஞ்சத்தில் உலாவுகின்றன. இதைத் தவிர வேறெந்த அறிவோ, மனமோ, சைதன்யமோ சத்தோ, சித்தோ, ஆன்மாவோ, கடவுளோ, தெய்வமோ தெரிந்துள்ள பிரபஞ்சத்தையாகிலும், அதிலடங்கியுள்ள நம்மையும், நமக்கு மேலும் கீழுமுள்ள பொருள்களை நடத்து வதை மனிதர்களாகிய நாமறியோம்.
பிரபஞ்ச உற்பத்தியைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் இந்த கவர்ச்சியே பரமாணுக்களிலிருந்து உண்டாகும் பிரபஞ்சப் பொருள்களுக்கு மூல காரணமெனவும் தெரிவிக்கின்றார்கள். ஆதலின் பிரபஞ்சம் உண்டாகும் போதும் தற்போதும் கவர்ச்சியால் சகலப் பொருள்களும் ஆளப்பட்டு வந்திருக்கின்றன. இது தான் அனுபவஞானம். பிரபஞ்சம் கடவுளால் சிருஷ்டி என்பதும் மனத்தினால் எண் ணித்தானே வந்த தென்பதும், ஈஸ்வரனுடைய அருளால் நடைபெறுகிற தென்பதும் கற்பிதங்களென அறிக. இது தான் விஞ்ஞான ஆராய்ச்சியால் இதுவரையிலும் நமக்குத் தெரிந்துள்ள விஷயமாகும்.



