கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு

ஐந்தாம் அத்தியாயம்: கடவுளுக்கு நமது உலகில் வேலை உண்டா ?

முன் அத்தியாயத்தில் கடவுளுக்கு நமது தேக வளர்ச்சியிலாவது அல்லது அதன் நடத்தையிலாவது யாதொரு வேலையும் இல்லை என்பதைக் கண்டோம். தேகத்திற்கு அந்நியமாக உள்ள நமது பூமி நிகழ்ச்சிகளில் யாதாமொரு சம்பந்தமாவது கடவுளர்க்கு உளதா எனப் பார்ப்போம். நமது பூமியில் நிகழும் தோற்றங்கள் பல உள. மழை, காற்று, புயல், வெள்ளம் முதலிய நிகழ்ச்சிகள் யாவும் இயற்கையாகவே நடந்தேறிவருகின்றன. பௌதிக பூகோள நூலில், பூமியின் மேல் நிகழ்ந்து வரும் பிரகிருத சம்பவங்கள் யாவும் நடந்து வரும் முறையை நன்றாக விளக்கப்பட்டிருக் கின்றன. பூமி சூரியனைச் சுற்றி ஓடும் மார்க்கத்தில் சற்று அசைந்து ஓடுவதால், நான்கு காலங்களாகிய கோடைக்காலம், மாரிக்காலம், வேனிற்காலம், உதிர்காலம் உண்டாகின்றன. இந்தக் காலங்களுக்குத் தக்கவாறு வெய்யிலும், மழையும், பனியும் உண்டாகின்றன. மழைக் காலங்களில் மின்சார சக்தியால், இடியும் மின்னலும் உண்டாகின்றன. வெய்யில் காலத்தில் பூமியின் மேலுள்ள ஜலம் நீராவியாகி, குளிர் காற்று பட்டவுடன், இரவில் பனியாக நிலத்தின் மேல் விழுகின்றன. குளிர்ச்சி அதிகரித்தால், காற்று மேல் எழுகின் றது. மேலெழுந்த காற்று குளிர்ச்சியடைந்தால் புயலாக அடிக்கின்றது.

இவ்விதமாக, காற்று, மழை முதலிய பிரகிருத சம்பவங்கள் யாவும், கடவுளோ, அல்லது தெய்வங்களோ, அல் லது பேய் பிசாசுகளோ, யாருடைய உதவி, ஒத்தாசையுமின்றி நிகழ்ந்து வருகின்றன. கடலில் அடிக்கும் அலைகளும், சமுத்திரங்களில் எழும் வத்தம், வெள்ளம் யாவும் சாதாரண காரணங்களால் நடக்கின்றன. மழை பெய்தால் ஆற்றில் வெள்ளமும், ஏரி முதலிய பள்ளங்களில் ஜலமும் காண்கின்றோம். கால மழையால் வெள்ளாமையும், அதில்லாவிட்டால் பஞ்சமும் நேரிடுகின்றன. பிரகிருதத்தில் நிகழ்ந்துவரும் சகல சம்பவங்களும் நாம் பார்க்கக்கூடிய காரணகாரிய முறையில் நடைபெறுகின்றன. எதன் மத்தியிலும் கட வுளோ, அல்லது தெய்வமோ, அல்லது பிரமமோ பிரவேசிப்பதை யாரும் அறியார். சில புராணங்களில், சில அபூர்வ நிகழ்ச்சிகள் கடவுளால் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஊமைப்பெண்ணைப் பேசவைத்ததாகவும், எலும்பைக்கொண்டு பெண்ணை உயிர்ப்பித்ததாகவும், குஷ்டரோகி களை ஸ்பரிசத்தால் சுகப்படுத்தியதாகவும், சமைத்துச் சாப்பிட்ட பிள்ளை உயிருடன் தோன்றிய தாகவும், இறந்த மூன் றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும், சூரியனை ஓடாமல் நிறுத்தியதாகவும், ஜலத்தைப் பெண்ணாக்கித் தலையில் வைத்துக் கொண்டதாகவும், இன்னும் இவைபோன்ற அற்புதங்கள் நிகழ்ந்ததாகவும், அவை கடவுளாலோ அல்லது கடவுள் அனுக்ரகத்தாலோ நிகழ்வுற்றதாகவும், அநேக மதஸ்தர்கள் எழுதிய புத்தகங்களில் படிக்கின்றோம். இந்த அபூர்வக்கதைகளை மெய்யெனப் பலகோடி பாமர மக்கள் நம்பியும், அந்த நம்பிக்கைமேல் தங்கள் வாழ்வையும் நடத்துகின்றார்கள். அறிஞர்களில் சிலரும் பண்டைக்காலங்களில் இவைபோன்ற அற்புதங்கள், நடந்திருக்கலாமெனவும் கூறுகின்றனர். இன்னுஞ் சில அறிஞர்கள், முற்காலங்களில் நிகழ்ந்தனவாகச் சொல்லும் அபூர்வ நிகழ்ச்சிகள் அநேகம் கற்பனா கதைகளா யினும், சில மாத்திரம் உண்மையாயிருக்கலாமெனக் கூறுகின்றனர். விசாரணைக்குப் பகுத்தறிவை அஸ்திவாரமாகக் கொண்ட அறிஞர்களில் சிலர் இவ்வித அபூர்வ நிகழ்ச்சிகளுக் குச் சாட்சியம் போதாதெனச் சிலவற்றைத் தள்ளியும், சிலவற்றை மாத்திரம் உண்மையாய் இருக்கலாமென அந்தந்த வேத புத்தகங்களிலிருந்தே ருசு செய்வதாகக் கூறுகின்றனர். இத்தியாதி வாதத்திற்கு இரண்டு திருட்டாந்தங்களை எடுத் துக்கொள்ளலாம். முதலாவது, இயேசு மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தது ஒன்று, இரண்டாவது பிரகலாதன் கதை மற்றொன்று. இதன் சம்பந்தமாக ஒரு பிரச்சினையைக்குறிக்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதைகளில் சொல்லியிருக்கும் கதைகளை உண்மையென நம்பும் குழந்தைகளுக்கும், வேத புராண விவிலிய நூல்களில் சொல்லும் கதைகளை உண்மையென நம்பும் மனிதர்களுக்கும், என்ன வித்தியாசம்? இந்த சங்கை, தத்துவஞான ஆராய்ச்சியிலும், மதவாதங்களிலும் முக்கிய சங்கையாகும். இவ்விருதரத்தாருடைய நம்பிக்கை களில் எது உண்மை ? இந்தப்பிரச்சினை விஷயமாகக் கோடான கோடி நூல்கள் இயற்றியுள்ளனர். மதங்களில் கூறப்பட் டுள்ள கடவுளர்கள் உண்மையாயின், புராணங்களில் கூறப் பட்டுள்ள கதைகள் உண்மையென்று ஏற்படும். அல்லது புராணங்களில் கூறியுள்ள கதைகள் உண்மையாயின், அந்த திருவிளையாடல்களைச் செய்துவந்ததாகச் சொல்லும் கடவுளரும் உண்மையாவர். ஆதலால் புராணக் கதைகளின் உண் மையில் கடவுள் உண்மையும் அடங்கியுள்ளது. அதே பிரகாரம் புராணக் கதையின் உண்மையின்மையில் கடவுள் இன்மையும் அடங்கியுள்ளதென அறியவும். உலகில் மத வாதிகளும், தத்துவ ஞானிகளும், பகுத்தறிவு சித்தாந்திகளும் வாதிக்கும் வாதங்களில் இதுவும் ஒன்று. இது மத தத்துவ விசாரணையில் முக்கிய பிரச்சினையாதலால் இவ்விடத்தில் சற்று விவரமாக இதனைக் குறிப்பிடுவாம்.

பஞ்சதந்திரக் கதைகள் சிறு குழந்தைகளுக்கு விளை யாட்டாக எழுதப்பட்ட கதைகளாதலால், அதனைக் குழந்தைகள் சிலகாலம் உண்மையென நம்பிவந்தபோதிலும், வயது வந்தவர்களுக்கு அவை கதைகளே. மிருகங்கள் மனிதரைப் போல் பேசுவது கூடாமையால், அப்படி மனிதரைப் போல் நடித்ததாகச் சொல்லுவது வெறும் கதைகளேயாகும்.

ஆனால் வேதங்கள் தெய்வ வாக்கானவையென்று நம்பு கின்றபடியால், அவைகளில் கூறியுள்ள கதைகளை உண்மையாகக் கொள்ளல் வேண்டுமென்பார். இந்த வாதத்தின் முதல் வழுக்கு என்னவெனில், வேதங்கள் தெய்வவாக்கென்று ருசுப்பிக்கும் வரை, இவர்கள் கூறும் வாதம் பொருந்தாது. ஆதலின் இந்த வாதம் முற்றுந் தவறு. இரண்டாவது வேத புராணங்களில் கூறியுள்ள அபூர்வ காரியங்கள் தற்காலத்தில் நடவாமையால் ஈஸாப் கதைகளைப் போன்ற (Easop’s Fables) கதைகளெனவே ஏற்படும். இந்த கண்டனைக்கு என்ன விடை கூறுகின்றார்கள் எனில், சரித்திரங்களில் கூறியுள்ள முற்கால சம்பவங்களை உண்மையெனக் கொள்வது போல் ; அதே நியாயமுகத்தானே, வேத புராணக் கதைகளையும் நம்ப வேண்டுமென்பார். ஆதலின் சரித்திரங்களில் கூறியுள்ள கதைகளின் மேல் வைத்துள்ள நம்பிக்கையின் விசேடத்தை, வேத புராணக் கதைகளின் மேல் வைக்கலாமா என விசாரிப்பாம்.

சரித்திரத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கையின் விசேடமென்ன? முதலாவது, சரித்திர சம்பவங்கள் இன் றைக்கும் நடந்தேறி வருகின்றன. இரண்டாவது, அந்த சம்பவங்களில் யாதும் அபூர்வமில்லை. மூன்றாவது அச்சம்பவங்களுக்குத் தகுந்த சாட்சியும் இருக்கின்றன. முக்கியமாக சரித்திர சம்பவங்களை அதே காலத்து சரித்திர வாதி களோ, அல்லது பார்த்தவர்களோ, அந்த சம்பவங்களை எழுதியிருக்கின்றனர். இதை Contemporaneous evidence என்பார் ஆங்கிலத்தில். சில சம்பவங்கள் சிலா சாஸனங் களில் வரையப்பட்டுமுள்ளன. செப்பேடுகளில் சிலதைக் குறிப்பிட்டிருக்கவும் காணலாம். சரித்திரங்கள் கூறும் கதைகளுக்கு சாட்சியம் அவை எழுதியுள்ள புத்தகங்களிலேயே ருசுவாக்கப்படுகின்றது. இவை போன்ற காரணங்களைக்கொண்டு பகுத்தறிவு சித்தாந்திகள், சரித்திரக் கதை களை நம்புவதற்கு இடமுண்டு என்று கூறுகின்றனர். இவ்வித சாட்சியங்கள் வேத புராண சம்பவங்களுக்குக் கிடைக் காமையால், அவைகள் வெறும் கட்டுக் கதைகளெனவே கொள்ள வேண்டுமென்பார். இந்த நியாயத்தை மேற்குறித்த இரண்டு திருஷ்டாந்தங்களினிடையே காணலாமாவென்று பார்ப்போம். இயேசுநாதர் உயிர்த்தெழுந்தாரென்று விவிலிய நூலில் எழுதியுள்ள தாகக் கூறுகின்றார்கள்.

முதலாவது, வாஸ்தவத்தில் உயிர் மரித்தவர், மூன்று நாள் பொறுத்து பிழைத்தார் என்பது சாதாரண அனுபவமல்ல. ஆனால் சில பிராணிகள், உயிரைத் துறக்காமலே, பல நாள் புதைக்கப்பட்டும், அசைவு அற்றும் இருந்த பிறகு அசைவு அடையும் சம்பவங்களைப்போல், ஏசுவும் (Suspended animation) உயிரை இழக்காமலேயே இருந்து, கல்லறை திறக்கப்பட்டவுடன், காற்றின் சம்பந்தத்தால் உயிர்த்து எழுந்திருக்கலாமென்பது ஓர் யுக்தி. மூன்றாவது அவர் உயிர்த்தெழுந்ததாகச் சொல்லும் நூல்களிலேயே, அந்த சம்பவம் சரித்திர பூர்வகமாக நடந்ததாகச் சொல்லுவதற்கு இடமில்லை. அதாவது, எசு உயிர்த்தெழுந்த சம்பவத்திற்கு சாட்சியம் போதா, ஏசு உயிர்த்தெழுந்த கதை நான்கு சுவிசேஷங்களில் சொல்லியிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். ஆனால், இந்நான்கில், இரண்டு தான் உயிர்த்தெழுந்த அபூர்வ சம்பவத்தைக் குறித்திருக்கின்றன. செயிண்ட் ஜான் (Saint John) சுவிசேஷம், இச்சம்பவம் நடந்ததாகச் சொல்வதில்லை. செயின்ட் லூய்க் (St. Luke) ஓர் போக்காகக் குறிக்கின்றது. இந்த சுவிசேஷத்தில் சொல்லியபடி செயின்ட் மாத்யு (St.Mathew) வில் சொல்லவில்லை. ஆதி சுவிசேஷமெனக் கூறும் செயின்ட் மார்க் (St. Mark ) இதனைக் குறிக்கவே காணோம். உலகப் பிரசித்தி பெற்ற இந்த சம்பவத்தின் கதி விசாரணையில் இதுவானால், மற்ற அபூர்வ சங்கதிகளின் கதி என்னாம். பிரகலா தன் கதைக்கு ருசுவென்ன? தூணிலுமிருப்பார், துரும்பிலுமிருப்பார் என்று பிரகலாதன் சொன்னதும், அவன் தகப்பனாகிய இரண்யன், தூணை உதைக்க, நாசிம்மம் தூணைப் பிளந்து வந்த கதை எவ்வித விசாரணைக்கும் இடங் கொடுக்கவில்லை. மத வைராக்கியத்தால் எழுதி வைத்த கதையென்றே முதல் பார்வையிலேயே தோன்றுகின்றது. சைவத்தைத் தாழ்த்தி, வைணவத்தை உயர்த்த ஏற்பட்ட கதையே அல் லாது, இது உண்மையல்ல.
இவ்விதமாகப் பண்டைக்கால நூல்களில் கூறியுள்ள அபூர்வக் கதைகள் யாவும், கற்பனைகளென முடிந்தால், கடவுளுக்கு மற்றென்ன வேலை? பூமி மேல் நிகழும் பூத பௌதீக சம்பவங்கள், இயற்கையாகவே நிகழ்வுறக் கண் டோம். பூமி மேல் நடமாடும் இவர்கள் நடத்தையெல்லாம் தாங்களே செய்து வருவது பிரத்தியட்சக் காட்சி. மனிதருடனும், மிருகங்களுடனும், தாவரங்களுடனும், மணல், மலை, நீர், சமுத்திரம் முதலிய அசேதனங்களுடனும், கடவுள் கலந்து செய்து வந்ததாகச் சொல்லும் வேதபுராண திருவிளையாடல் யாவும், விசாரணையில் கற்பனையாக முடி வதைக் கண்டோம். இனி, கடவுளுக்கு உலகில் என்ன வேலை? ஒரு வேளை நமது உலகில் கடவுளுக்கு யாதாமொரு வேலையில்லாமற் போன போதிலும், பிரபஞ்சத்திலுள்ள எந்த உலகிலாகிலும் கடவுளுக்கு ஏதாகிலும் வேலை உளதாவென இனிக் கண்டறிவோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *