கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு

ஆறாம் அத்தியாயம்: கடவுளால் நடப்பது ஒன்றுமில்லை

முன் அத்தியாயத்தில், கடவுளுக்கு நமது உலகில் எந்த வேலையாகிலும் இருப்பதாகத் தெரியவில்லை யென்று எடுத்துக் காட்டினோம். ஆனால், பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தோன்றும் உலகங்களும், தோன்றா உலகங்களும் கோடான கோடி இருப்பதாக வான நூலோர் கூறுகின்றனர். அவைகளை இவ்விடத்தில் குறிப்பாக எடுத்துக்காட்டி, அங்கு நிகழும் சம்பவங்களுக்குக் “கடவுள் ” காரண கர்த்தராக இருக்கக்கூடுமாவென விசாரிப்பாம்.

இதுகாறும் நமக்குத் தெரிந்தவரையில் பிரபஞ்சத்தில் நமது உலகைத் தவிர வேறு பலவித பொருள்களுமிருப்பதாகத் தெரிகிறது. நமது உலகைப் போன்று நவக்கிரகங்களென்று கூறப்படும் (நமது உலகம் நீங்கலாக உள்ள) மற்ற எட்டு உலகங்களும், எந்தவித உயிரும் இருப்பதற்குத் தகுதியான இடமாக இல்லையென்று யூகிக்கலாமாம். அந்த உலகங்களில் சிலவற்றில் நமது பூமியிலுள்ள பொருள்கள் இருப்பதாகத் தூர திருஷ்டிக் கண்ணாடி மூலமாக யூகிக்கப்படுகின்றது. மற்ற உலக வஸ்துக்கள் ஆவி மயமாக இருக்கக் கூடுமென யோசிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. புதன், சுக்கிரன், அங்காரகன் முதலிய சிறு கிரகங்களில் தாக்கும் சூரியனது வெப்பம் நமது உலகத்தைவிட மிகுந்தும் குறைந்துமிருக்கின்றது. இவைகளுக்கப்பாலுள்ள வியாமுன், சனி, யுரேனஸ், ரெப்சூன் முதலிய பெரிய கிரகங் களில், குளிர் அதிகமாக இருக்கக் கூடுமென யூகிக்கப்படுகின்றது. இவைகளுக்கப்பால் சென்ற வருஷம் (1930) கண்டுபிடிக்கப்பட்ட புலோவெனாப் கிரகத்தில் தாங்கக் கூடாத குளிர் இருக்குமென்பதற்குத் தடை இல்லை. இவ் வுலகங்களில் குளிர்ந்த அல்லது உஷ்ணமுடைய புயற்காற்று அடுத்தடுத்து நேரிடலாம். தண்ணீர் இருக்குமாகில் பனிக் கட்டியாக உறையலாம். இந்த உலகங்களில் எங்கும் கடின வஸ்துக்கள் இல்லாமல் குழம்பிய தாகவே இருக்கக்கூடுமென் னும் யூகை வலுத்து வருகின்றது. வஸ்துக்கள் குழம்பியும், வெப்பமும் குளிரும் அதிகரித்தும், பனிப்புயல் அடித்தும் இவைபோன்ற சம்பவங்கள் நேர்ந்திருப்பின் இவை யாவும் பூதபௌதிக குணத்தால் நிகழ்கின்றன வென் றெண்ண வேண்டும். ஆதலின் ஆகாய வஸ்துக்களின் பௌதிக இலக் கணத்தால் நிகழும் சம்பவங்களுக்குக் கடவுள் உதவி என் வேண்டும்? நமது உலகில், பௌதிக குணத்தால் ஏற்படும் தோற்றங்களாகிய மழை, காற்று, புயல், அலை, துவலை முதலிய வைபவங்களுக்குக் கடவுள் அருள் வேண்டுமென எந்த அறிஞரும் கருதார். அது போன்று மற்ற கிரகங்களில் நிகழும் பௌதிக சம்பவங்களுக்குக் கடவுள் அருள் வேண்டு மென்பார் யார்? ஆதலின் மதஸ்தர்கள் கூறும் கடவுளொருவர் இருப்பாராயின், அவருக்கு நவக்கிரகங்களில் எவ்வித வேலை யும் இல்லையென்றே தீர்மானிக்கலாம்.
இவ்விடங்களில் கடவுளுக்கு வேலை இல்லையானால், இவைகளுக்கெல்லாம் பிறப்பிடமாகிய சூரியனிடத்தாகிலும் வேலையிருக்குமோ? நமது சூர்யன் கோடான கோடி நட்சத்திரங்களில் ஒன்று. சூர்யனிடத்து எல்லாப் பொருள் களும் மூலவஸ்து (Elements) மயமாக இருக்கின்றன.

இந்த மூலதத்துவங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வ தால் அனல்கொண்டு கோடான கோடி தூரம் சூர்ய கிரணங் கள் எழுகின்றன. இந்த கிரணங்கள் தான் நம்முலகில் வெய்யலாகக் காட்டுகின்றன. சூர்யனிடமெங்கும் உள்ள அனல் புயலாகவே காணப்படுகிறது. நமது வீடுகளில் கட்டையோ கரியோ எரியும்போது வெளிச்சமும் அனலும் உண்டாவதைப்போல் சூர்யனிடத்திலும் வஸ்துக்கள் எரி கின்றபடியால் வெளிச்சமும் அனலும் உண்டாகின்றன. கட்டைபற்றி எரியவாகிலும், கரி பற்றி எரியவாகிலும், காடு பற்றி எரியவாகிலும் கடவுள் ஒருவர் வேண்டாமைபோல், சூர்யன் பற்றி எரிவதற்கும் கடவுள் அனாவசியமன்றோ ?

நட்சத்திரங்களும் சூர்யனைப்போல் பற்றி எரிந்து கொண் டிருக்கின்றன. அவைகளில் பற்றி எரியும் சம்பவத்தைத் தவிர மற்றெந்த சம்பவமும் யூகிக்க இடமில்லை. சில நட்சத்திரங்கள் சூர்யனைவிட கோடி பங்கு பெரிதாக இருக்கின் றன. அவைபோன்ற நட்சத்திரங்கள் கோடிக்கணக்காக இருக்கின்றன. இந்தக் கோடான கோடி நட்சத்திரங்களுக்கு மத்தியிலும் அப்பாலும் வெளி இருக்கின்றன. இந்த வெளிகளுக் கப்பாலும் நட்சத்திரக் கூட்டங்களடங்கிய வெண்மாசிக் கூட்டங்களிருக்கின்றன -வெண்மாசிக் கூட்டங்களுக் கப்பாலும் வெளி இருக்கின்றன.

இவ்விதமாக நட்சத்திரங்களும், அவைகளுக்கப்பால் வெளி எனும் பாழும், பாழுக்கப்பால் வெண்மாசியும், வெண் மாசிக்கப்பால் பாழும், பாழுக்கப்பால் நட்சத்திரங்களும் வரிசை வரிசையாகக் காணப்படுகின்றன. நமது கவிகள், “முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய் அப்பாலும் பாழென்று அறி” என்று பாடியது போல், வான ஆராய்ச்சியிலும் அங்குமிங்கும் நட்சத்திரங்களும், மிகுதி இடங்கள் யாவும் பாழாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த அகண்டாகாரப் பாழ்வெளியில் கடவுளுடைய வேலை தான் மனித சிந்தனைக்கு எட்டவில்லை. சிந்தனைக்கு எட்டாத வேலையை இல்லை என்று கூறலாமன்றோ?

மேற்கூறிய மகத்துக்களில் கடவுளுடைய வேலை இன்ன தென்று சொல்ல இடந்தராவிடினும், அணுக்களிலாகிலும் கடவுளுடைய திருவிளையாடல் காணப்படுமாவெனப் பார்ப் போம்.

உலகப் பொருள்கள் மூன்று நிலவரத்தில் காணப்படுகின்றன. அவையாவன:
ஆவி மயமாகவாவது (Gas), நீர் மயமாகவாவது (Liquid), கனத்த மயமாகவாவது (Solid), எல்லாவிதப் பொருள்களும் இருக்கக் காணலாம். இவ்வித நிலவரத்தை யொத்த பொருள்கள் யாவும் 90 பூதங்களாக, அதாவது மூலப் பொருள்களாகப் பிரிகின்றன. இம்மூலப் பொருள் கள் (Elements), அணுக்கள் சையோகத்தினால் (Atoms) வெவ்வேறாகின்றன. சுமார் 20 வருஷங்களுக்கு முன் இந்த அணுக்களைப் பிரிக்கமுடியாதென்று எண்ணி வந்தார்கள். ஆனால் விசாரணை முற்ற முற்ற இந்த அணுக்களும் இவைகளுடைய சிறிய பரமாணுக்களில் கலப்புற்றிருக்கக் காணப் பட்டன. இந்த பரமாணுக்களை எலெக்டிரான்ஸ் (Electrons) பிரோடான்ஸ் (Protons) என்று பெயரிட்டழைக்கின்றனர்.

இவைகளுடைய சையோகத்தினால், அணுக்களும், அணுக்களின் சையோகத்தினால், மகத்துக்களும் உண்டா கின்றன. பற்பலவித சையோகங்களால் அணுக்களும் அணுக்களின் சையோகங்களால், அணுத்திரள்களும் (Molecules) அணுத்திரள்களின் சையோகத்தால், கலப்புற்ற பொருள்களும் உண்டாகின்றன. இத்தியாதி நிலைமைகளில் பூத பௌதிக குணங்களே காணப்படுகின்றனவே பொழிய வேறு பிரத்தியேகமான ஓர் கர்த்தா , அல்லது பல கர்த்தர் களையாகிலும் காணமுடியவில்லை. வஸ்துக்கள் கனத்த நிலை மையிலிருந்து நீர் மயமடைகிறது. நீர் மயத்திலிருந்து ஆவி மயமாகிறது. இதேமாதிரி, ஆவி, நீராகவும், நீர் கன மாகவும் மாறுகிறது. இத்தியாதி மாறுதல்கள் சீதோஷ்ண ஸ்திதி மாறுதலால் உண்டாகின்றன. அணுக்கள் அடையும் மாறுதலும், இவ்வாறே சீதோஷ்ண காரணத்தால் நிகழ்கின்றன. இதே விதமாக, அணுக்கள் சையோகத்தினால் பரமாணுக்களின் சையோகங்களும் பிரபஞ்சப் பொருள்கள் யாவும் பல்வேறு சீதோஷ்ண ஸ்திதிகளால் உண்டாக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் காணப்படும் சீதோஷ்ண ஸ்திதிகளைக் கடவுளெனலாமா? இவ்வாறு கூறினால் உலகம் நகைக்கும் அல்லவா?

பிரபஞ்சப் பொருள்களில், சீதோஷ்ண ஸ்திதி எவ்விதம் மாறுதல் பெறுகின்றதென்பதை விசாரிப்போம். சூர்யனிடத்தில் உள்ள அணுக்கள் துப்பாக்கிக் குண்டு ஓடும் வேகத்தைக் காட்டிலும் ஆயிரம், பதினாயிரம் பங்கு அதிகமாக ஓடுகின்றமையால் அவ்வளவு அனல் எழுகின்றது. நமது மின்சார விளக்கில், அணுக்கள் குண்டைவிட 100 பங்கு அதிகமாக ஓடுகின்றமையால், அவ்வளவு வெளிச்சமும் அனலும் உண்டாகிறது. சாதாரண நிலக்கரி, கட்டைகளி லுள்ள அணுக்கள், குண்டைவிட 10 பங்கு அதிகமானால், நமது சாதாரண தீயையும் அனலையும் உணர்கின்றோம்.

இவ்விதமாக பரமாணுக்களும் விரைவாக அசைவதால் அனலும், தீயும், உஷ்ணமும் உண்டாகின்றன. பரமாணுக் களின் அசைவால் தான் சூர்யனிடத்து 40,000-டிக்ரிக்கு மேற்பட்ட உஷ்ணமும், நட்சத்திரங்களில், அதற்குமேற் பட்ட உஷ்ணமும் வெண்மாசிக் கூட்டங்களில், அதனினும் அதிக விரைவால், கண்களுக்கு எட்டாத உஷ்ணமும் உண்டாகின்றன. இந்த விரைவு குறையக் குறைய, பரமாணுக்கள் அணுக்களாகவும், அணுக்கள் அணுத்திரள் கூட்டமாகவும், அணுத்திரள்கள் மகத்தாகவும் மாறுகின்றன. ஆதலின் பிரபஞ்ச உற்பத்திக்கு ஆதிமுதல்வன் யாரெனில், பரமா ணுக்களின் சலன மென்றே கூற வேண்டும். இந்தச் சலனத்தைக் “கடவுள் ” என்று அழைக்கலாமா? இந்தச் சலனத்தால் தான் சூர்ய சந்திரர்களும் நட்சத்திரங்களும், நமது உலகமும், மற்ற கிரகங்களும், உலகிலுள்ள சில ஜீவராசிப் பொருள்களும் நீங்களும், நாங்களும் மற்றுமுள்ளோரும் ஆக்கப்படுகின்றோம். இந்தச் சலனந்தான் கடவுளென்ன லாமா? மெஞ்ஞானத்திற் கெட்டியவரையில் இந்தப் பரமா ணுக்களின் சலனமே, பிரபஞ்ச உற்பத்திக்கும், நிகழ்ச்சிக் கும், அழிவுக்கும் காரண பூதமாய் இருப்பதென அறிக.
இந்தச் சலனத்திற்கு ஆதி அந்தமிருப்பதாக எண்ண வும் இடமில்லை. உயிருள்ள வஸ்துக்களிலும், உயிரற்ற வஸ்துக்களிலும், இந்தச் சலனம், அதாவது அசைவு இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த அசைவு தான் நட்சத்திரங்களி னிடத்தும் உலகங்களினிடத்தும், உலகப்பொருள்களினிடத் தும், நாம் காண்பதாகும். பிரபஞ்சப் பொருள்கள் ஆவதும், அழிவதும் இந்தச் சலனத்தால் தான். சிருஷ்டி, திதி, சங்கார மெனப்படும் மூவகை வேலைகளும் இந்தச் சலனத்திற்கே பொருந்தும். நமது சலனத்தின் பிரசண்ட ஏகாதி பத்தியத்தில் மதஸ்தர் தொழும் கடவுளுக்கு என்ன வேலை என்று கேட்கின்றோம் ? பரமாணு முதல், சூர்ய சந்திர நட்சத்திர மகத்துக்கள் வரை நிறைந்துள்ள பிரபஞ்சத்தில், அசைவே எல்லாசம்பவங்களுக்கும் காரணபூதமா யிருக்கும் போது கடவுளுக்கு என்ன வேலையெனவும் கேட்கின்றோம்? கற்பிதவார்த்தைக்கு என்ன இருப்பிடமென்று சொல்லக் கூடும்? என்ன வேலை எனவும் சொல்லக்கூடும்? இந்திரஜால, மந்திரஜால, தந்திரஜாலக்காரர்களே இதற்கு விடைகூற வேண்டுமேயொழிய, அறிஞர்களுக்கு “கடவுள்” ஒருவர் இருப்பதாகவும், அவர் எங்கே இருக்கின்றார் எனவும் அவர் வேலை இன்னதென்றாகிலும் பல்லாண்டுகளாகவே விளங்கா மலே இருந்து வருகின்றது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *