
கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு
நான்காம் அத்தியாயம்: கடவுள் செய்யும் வேலைதான் என்ன?
முன் அத்தியாயங்களில் கடவுள் ஒருவர் இருந்தால், அவர் தங்குமிடம் பிரபஞ்சத்தில் உளதா என விசாரித்தோம். நமக்குத் தெரிந்தவரையில் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு இடமிருப்பதாக எற்படவில்லை. கடவுளின் லட்சணங்கள் நமக்கு விளங்குகின்றதா என்பதை விசாரித் தோம். அதுவும் நமக்குத் திருப்திகரமாக எதுவும் விளங்கவில்லை. பிறகு பக்தர்களும் சமயவாதிகளும், தத்துவ நூல் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைப் பருவத்தில் கேட்டுவந்த சொல்லாகிய ”கடவுளை” இன்னதென்று பொருள் தெரியா மலே நம்பி வருகின்றனர் எனவும் காண்பித்தோம். கடவுள் என்ற பதத்தின் ஆதாரத்தையும் சுருக்கமாகக் குறிப்பிட் டோம். இனி, கடவுள் என்ற ஒருவர் இருப்பாராயின், அவரது வேலை என்ன என்பதைச் சற்று விசாரிப்பாம்.
கடவுள், அல்லது கடவுளர் வேலை என்ன? புராணங்களில் கடவுள் சிவனாகவோ, விஷ்ணுவாகவோ அவதரித்துச் சிற்சில கிர்த்தியங்களைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதை அறிஞர் உலகம் நம்புவதற்கு இடமில்லை. சிவன், பிரமன், விஷ்ணு செய்ததாகச் சொல்லுங் காரியங்கள் தற்கால மனிதருக்கு அருவருப்பைத் தரத்தக்கவை என்றே மதிக்க வேண்டும். சில மதங்களில் கடவுளுடைய அருள் பெற்று சில மனிதர்கள் அபூர்வச் செய்கைகள் செய்ததாகச் சொல்லுவதும் உண்டு. கிருஸ்துவ ஆகமத்திலும், மகம்மதிய ஆகமத்திலும் கிருஸ்தும், மகம்மதும் கடவுளருள் பெற்றவர் களென்று சொல்லப்படுகின்றது. ஆனால் மற்ற மனிதர்கள் செய்து வரும் வேலைகளைவிட இவர்கள் செய்ததாகச் சொல் லப்படும் காரியங்கள் விசேஷமாகத் தோன்றவில்லை. அந்தக் காலங்களில் தோன்றிய இயேசுவும், மகம்மதுவும், சிவன், விஷ்ணு, பிரமனும், துக்கம் நிறைந்த நமது காலத்தில் தோன்றலாகாதா? அந்தக் காலத்தில் இருந்த அவசரம் இந்தக் காலத்தில் இல்லையா ? புண்ணிய காலத்தில் தோன்றிய கடவுளரும், தீர்க்கதரிசிகளும், பாபம் நிறைந்துள்ள நமது உலகில் ஏன் தோன்றலாகாது? இதற்கு விடை யாதெனில், அக்காலங்களில் கடவுளர் உலகில் அவதரித்ததாகச் சொல்லும் கதைகளும், அவர்கள் செய்ததாகச் சொல்லும் கிர்த்தியங்களும், பொய் என்பதற்குச் சந்தேகமில்லை. மூட நம்பிக்கை காலங்களில் தான் கடவுளர் திருவிளையாடல்கள் யாவும் எழுதப்படுகின்றன. விசராணை மேலிட்ட காலங் களில், எந்தக் “கந்தபுராணங்களும்” வெளிவர அச்சப்படும். பாமர ஜனங்கள் கூட பழைய புராணக்கதைகளை நம்பினாலும், நமது காலங்களில் புதிய புராணங்கள் எழுதப்படுமேயாகில், அவர்கள் நகைப்புக்கு இடமுண்டாகும். இது புராணிகர் களுக்கு நன்றாகத் தெரியும். இதன் காரணமாகவே புதிய “கந்த புராணங்கள் ” எழுத அச்சப்படுகின்றார்கள். திருவிளையாடல் முதலிய புராணங்கள் யாவும், பார்ஸி கதையைப் போன்றனவும், அராபிக் கதைகளைப் போன்றனவும், பஞ்ச தந்திரக் கதைகளைப் போன்றனவுமான ஸாகித்தியங்கள் ; அதாவது இலக்கியங்கள் என அறியவேண்டும். இவைகள் கூறும் விஷயங்கள் உண்மை என யாருங் கருதார். ஆனால் இவை கூறுங் கூற்றினை நமது நாட்டில் தான் மதவிஷயமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது மிகவும் வருந்தத்தக்கதே. பாமர ஜனங்கள் தங்கள் பகுத்தறிவை உபயோகிக்கும் பட்சத்தில், புராணங்களின் ஆபாசங்கள் வெள்ளென விளங் கும். இதனை எடுத்துக்காட்டி, பலகோடி மனிதரை மூட பக்தியினின்று மீட்க வேண்டிய கடமை அறிஞருடையதே. இதனை எடுத்துரைப்பாரை, நாஸ்திகர் களென்றும், கடவுள் இல்லாப் பாவிகளென்றும் கூறுவதில் பிரயோஜனமில்லை. “சொல்லுவதில் நியாயமுளதா” என விசாரித்தல் வேண்டும். இது தான் உத்தமருக்கழகு. புராணங்கள் கூறும் கடவுளுடைய திருவிளையாடல்கள் யாவும் கழைக் கூத்தைப் போன்றவைகளென்றால், கடவுளுக்கு என்ன தான் வேலை? சிருஷ்டி என்பார்கள் பக்தர்கள். அவர்களில் சைவர்கள் சொல்வ தாவது :- ஆன்மா அனாதியாக கர்மத்தில் தோய்ந்திருந்ததை சிவன் ஆன்மாவுக்குத் தனு, கரண, புவன, போகத்தைத் தனது கருணையால் அருளி, ஆன்மா பாசத்திலிருந்து விடுபட பக்தி மார்க்கத்தை உணர்த்தியதாகச் சொல்லுகின்றார்கள். இது முழுமையும் கற்பிதமென்று எண்ண வேண்டி வருகிறது. ஆன்மா என்பதே கற்பிதம். இதனைக் கற்பித்துக்கொண்டு அனாதியாகப் பாசத்தில் ஆழ்ந்து கிடந்ததை எடுத்துத் தூக்கிவிட, தேகம், உலகம் முதலியவற்றைச் சிருஷ்டி செய்தாராம். கடவுளுடன் அனாதி யாக இருந்த ஒன்றை மீட்டார் என்பதும் முரணே. எப்படியெனில், அனாதி என்றால் காலா தீதமாகும். காலத்திற்கு மீறியதை எப்படி மீட்பதாகச் சொல்லுவது?
இது நிற்க, சர்வசக்தியுள்ள கடவுள் ஆன்மாவோடு அனாதியாகவே இருந்ததாகச் சொல்லுகின்றார்கள். இரண்டும் அனாதி என்றால், ஒன்று மற்றொன்றை சிருஷ்டிப்பது எப்படி? தனு, கரண, புவன, போகத்தைக் கடவுள் சீவனுக்கு அளித்தாரென்றால், எவ்விதம் அளித்தார்? கை, கால், முகம், தலை முதலிய தேக உறுப்புக்கள் எங் கிருந்தோ ஓடி வந்தனவா? அல்லது பிள்ளையாரைப் பிடித்து வைப்பது போல் ஈசன் நம்மைப் பிடித்து வைத்தாரா? நம் முடைய அனுபவமெல்லாம் சீவனெனப்படுவோர் யாவரும், சிறு வித்திலிருந்து படிப்படியாக உருவங்களைப் பெறும் காட்சியே. ஆதலின், கடவுள் முதலில் வித்தைப் படைத் தாரா? அல்லது சீவர் உருவங்களைப் படைத்தாரா? சைவர் சொல்லும் ஆபாசம் ஒருபக்கம் இருக்க, வேதாந்திகள் என்ன சொல்லுகிறார்கள் பார்ப்போம். சத்தம், அதாவது சொல்லிலிருந்து சோதி வந்ததாம்; சோதியிலிருந்து ஆகாயம் வந்த தாம். அதிலிருந்து தீ, தண்ணீ ர், மண் முதலிய தத்துவங்கள் உண்டாயினவாம்! வேதாந்திகளுக்கு, மனிதனும், மற்றுமுள்ள சீவர்களும் சிருஷ்டிக்கப்பட்டதாகச் சைவர் சொல்லுவது உடன்பாடில்லை. வேதாந்திகள் பிரமத்திலிருந்து உலகமும், உயிரும் பரிணமித்தன வென்பார்பரிணமித்தல் என்றால் ஒன்றிலிருந்து ஒன்று இயற்கை யாகவே மாறுதல். ஆதலின், இயற்கையாகவே மாறும் பொருள்களுக்குக் கடவுள் உதவி என் வேண்டும்? இத்தியாதி சிருஷ்டிக் கதைகளிலிருந்து கடவுளுடைய பக்தர்களுக்கே கடவுள் இன்ன வேலை செய்கின்றார் என்று திட்ட மாகச் சொல்ல முடியவில்லை என்றே ஏற்படுகின்றது. இவ் விதமான சிருஷ்டிக் கதைகளுக்குக் கணக்கு வழக்கில்லை. ஒரு மதஸ்தர் சொல்லும் கதை மற்றொரு மதஸ்தர் சொல்லும் கதைக்குப் பொருத்தமோ, சம்பந்தமோ கிடையாது. ஒரு மதஸ்தர் முட்டையிலிருந்து வந்தது உலகமும், உயிரும் என்பார் ; வேறொரு மதஸ்தர் பிரமன் தலையிலிருந்தும், முகத்திலிருந்தும், வயிற்றிலிருந்தும், கால்களிலிருந்தும், நான்கு வருணத்தார்களாகிய பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய,சூத்திரர்கள் ” பிறந்ததாகச் சொல்கின்றார்கள். ”எதா பக்தாததாதேவா ”, அதாவது, பக்தன் எப்படியோ அப்படியே கடவுளும் என்ற வாக்கியப்படி, அந்தந்த பக்தனுக் குத் தோன்றியவாறு, கடவுளுடைய வேலையைக் கற்பிக் கிறார்களேயொழிய கண்டதாக யாரும் சொல்லவில்லை. கடவுளும், கடவுள் செய்ததாகச் சொல்லும் கிர்த்தியங்களும், காவிய கற்பனைகளென்று காட்ட (Poetic Creation) சில சிருஷ்டிக் கதைகளை இங்கு உதாரணமாகக் காட்டுவாம்.
சிகப்பு இந்தியர் (Red Indians) சொல்லும் கதை வினோதமான தாக இருக்கும். பூமி ஒரு காலத்தில் மூடு பனியால் மூடப்பட்டிருந்தது. பெரிய ஆவி, அதாவது கடவுள் தன்னுடைய அம்புவில்லால் அவைகளைப் பிரித்தார். களிமண்ணை எடுத்து மனித உருவமாக்கி அனலில் வேக வைத்தார் ; சுடுகை போதாமையால் ஒரு மண் மனிதன் வெளுப்பாய் வந்தான். அதிக சூட்டினால் ஒரு மண் மனிதன் கருப்பாய் வந்தான். அனலும், குளிர்ச்சியும் சேர்ந்து மிதத்தில் வேகவைத்த மண் மனிதன் சிகப்பாய் வந்தானாம்! அவன் தான் மனிதருக்குள் உத்தம புருஷனாம்! அமெரிக்கா தேசத்து இந்தியர் சிவப்பாய் இருப்பார்கள் என்பதை இக்கதையின் சந்தர்ப்பத்தில் கவனிக்கத் தக்கது. தென் அமெரிக்கர்கள் தங்கள் கடவுளாகிய ஒரு நட்சத்திரக் கணத்திலிருந்து தாங்கள் வந்ததாகவும், இந்த தாராகணம் மறைவுள்ள காலத்தில் தங்கள் பிதாவாகிய கடவுள் நோயால் வேறுபடாமல் இருப்பதாகவும் சொல்லுகின்றார்கள்.
கால்முக்ஸ் (Calmucks) என்ற கூட்டத்தாரின் ஆதி மனிதன் பிரகாசிக்கும் முகத்தையுடையவனாய் இறக்கை களுடன் பறந்து கொண்டிருந்தானாம்! ஆனால் கடவுள் கட்டளைக்கு மாறாக நடந்தபடியால் இறக்கை கழன்று உலகில் நடக்க ஆரம்பித்தானாம்!
செமுநோய் (Semunoi) இந்தியர் வேடிக்கையான கதை ஒன்றைச்சொல்லுகிறார்கள். கடவுள் உலகத்தைப் படைத்து மூன்று அழகிய மனிதரைச்செய்து அவர்களை ஒரு குளத்தில் குளிக்கச்சொன்னாராம். சுத்தமான தண்ணீரில் குளித்தவன் வெளுப்பாகவும், அழுக்குத் தண்ணீரில் குளித் தவன் கருப்பாகவும், அழுக்கும் சுத்தமும் இல்லாத தண்ணீ ரில் குளித்தவன் சிவப்பாகவும் ஆனார்களாம். அவர்கள் முன் மூன்று பெட்டிகளை வைத்துத் திறக்கச் சொல்லவும் முதலில் திறந்தவனுக்கு அம்பும் வில்லும், இரண்டாவது திறந்தவனுக்கு உளியும் சம்மட்டியும், மூன்றாவது திறந்தவனுக்குக் காகிதமும் பேனாவும் கிடைத்தனவாம். அது முதல் அந்தந்த தொழிலாளிகள் உற்பத்தியானார்களாம்!
சீனர்கள் சொல்லும் கதை வேடிக்கையாக இருக்கும். ஒரு பெரிய முட்டையிலிருந்து தங்கள் கடவுள் உற்பத்தியானார். அவர் பெயர் பூன் கூவாங். முட்டையின் மேல் பாகம், வானமாகவும், அடிப்பாகம், பூமியாகவும் ஆயிற்றாம். கடவுள் தனது வலது கையால் சூரியனையும், இடது கையால் சந்திரனையும் நட்சத்திரங்களையும் சிருஷ்டி செய்தாராம். அதன் பிறகு ஐம்பூதங்களையும் (அப்பு, பிரிதிவு, தேயு, வாயு, ஆகாயம்) படைத்து இரண்டு மேகங்களை எழுப்பி, பொன்னிலிருந்து எழுந்த மேகத்தை ஆணுருவமாக்கியும், கட்டையிலிருந்து எழுந்த மேகத்தைப் பெண்ணுருவாக்கியும், இவ்விரண்டு உருவங்களின் சையோகத்தால் ஏற்பட் டது ஆணும் பெண்ணுமாம்! பிறகு இவ்விருவரிலிருந்து மனித சந்ததி உற்பத்தியாயிற்றாம். இதைப்போன்ற வினோத வேடிக்கை சிருஷ்டிக்கதை ஒன்றைக் கிருஸ்துவப் பாதிரிமார் சொல்லுகின்றார்கள். களிமண்ணைக்கொண்டு மனி தனையும், அவன் பக்க எலும்பைக்கொண்டு பெண்ணையும் செய்து, அவர்கள் மூக்கில் தனது காற்றை ஊதி உயிர்ப்பித் தார் எனவும் சொல்லுகின்றார்கள். இதுவோர் ஜால வித்தையாக எண்ண வேண்டி வருகிறதேயொழிய, பராபா வஸ்துவின் காரிய மென்று எண்ண முடியவில்லை.
கால்டியன் (Chaldean), அஸ்ஸீ ரியன் (Assyrian) கூட் டத்தார், ஆதி நாகரீகத்தை அடைந்தவர்களில் இருவர். இவர்கள் சுமார் 50,000 வருஷங்களுக்கு முந்தி வாழ்ந்தவர் கள். இவர்களின் கடவுள், பற்பல ஆபாசத் தொழில்களைச் செய்து வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளை இவ்விடத்தில் வரைவது அனாவசியம். இந்தக் கதைகள் யாவும், சைவர்கள் சொல்லும் கதைகளாகிய, தங்கள் சிவனார், சூரியனை உதைத்தார், சந்திரனைப் பல்லைப்பிடிங்கினார், என் றதை யொக்கும்.
சகல மதஸ்தர்களும், கடவுளுக்குச் சிருஷ்டி செய்யும் வேலையைத் தவிர, மற்ற வேலை எதுவும் செய்வதில்லை என்று கருதினார்கள் போலும். ஏனெனில் வேதங்களும், புராணங்களும், சிருஷ்டியைக் குறித்தே முக்கியமாகப் பேசுகின்றன. விவிலிய நூலிலும், நமது திருவிளையாடல் புராணத்திலும், சிருஷ்டி செய்த பிறகும் சில ஆண்டுகளாக, தங்கள் கடவுள், மனிதருடன் கூடி விளையாடி வந்ததாகத் தெரிகிறது.
இதனை எழுதியுள்ள புஸ்தக ஆசிரியர்கள் தங்கள் கடவுளை மனித உருவத்தைப் பெறச் செய்தாகிலும், அல்லது அசரீரீ வாக்கு முதலிய மறைந்த ஆதாரங்களாலும், இவ்வுலகில், தங்கள் கடவுள், வேலை செய்து வந்ததாகச் சொல்லுகின்றார் கள். கடவுள், பகுத்தறிவு இல்லாதாரிடம் அக்காலங்களில் காட்டிய மகத்துவங்களைத் தற்கால அறிஞர்கள் முன் காட்டி அவர்களை, தான் இருப்பது உண்மை என நம்பச் செய்ய லாகாதா? இந்த விஷயமாகச் செய்து வரும் ஆராய்ச்சிகளில், கடவுள் ஒருவரோ, பலரோ, இருப்பார்களேயானால் தாம் இருக்கும் விஷயத்தை மாத்திரம், தற்கால அறிஞர் முன் காட்டியிருப்பார்கள். மதஸ்தர்கள் கூறும் கடவுளர் இல்லாமையால் தான் அவர்களுடைய வேலையை இன்னதென்று சொல்ல முடியவில்லை என்று யூகிக்க வேண்டி வருகின்றது. இதன் சம்பந்தமாக இன்னொரு கேள்வியுமுண்டு. சிருஷ்டி ஒன்றைத்தானோ செய்தார். சிருஷ்டி செய்வித்து அதன் பிறகு மனிதர்களுக்கு உதவியாகவோ அல்லது அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு என்ன வேலை செய்து வருகின் றார்? அவரை இல்லை என்ற நாஸ்திகர்களை ஆஸ்திகர்களாக்க, ஏன் கடவுள் அவர்கள் முன் பிரசன்னமாகலாகாது? இருந்தாலன்றோ பிரசன்னமாவார் ! இத்தியாதி கேள்விகளுக்குத் தக்க விடையாரும் கொடுத்தாரில்லை ; விடைகொடாமையால், மதஸ்தர்கள் கூறும் கடவுளும், அவருடைய திருவிளையாடல்களும், வெறும் கற்பனைகளெனக் கருத என்ன தடை?
மனிதர், தனி வாழ்க்கையிலாகிலும் சமூக வாழ்க்கையிலாகிலும் பிரத்தியட்சமாகக் காட்டாவிட்டாலும், அனுமா னிக்கவாவது, கடவுள் எதையாவது செய்து வருகின்றாரா என்று பார்ப்போம்.
நாம் பிறந்தது முதல் சாகும் வரை, நமது பெற்றார், உற்றர், உடன் பிறந்தார் மற்றுமுள்ள ஜனசமூக மக்களை விட, கடவுளாவது, தெய்வங்களாவது நமக்கு உதவி இருந்த தாகத் தெரியவில்லை. காலை முதல் இரவு வரை, இரவு முதல் காலை வரை, நமக்குத் துணையாய் நிற்கின்றவர்கள் நம் மைப் போன்றவர்களைத் தவிர மற்றபடி யாருமிலர். நமது முயற்சியால் எதுவும் திருவினையாகின்றதே யொழிய தெய் வத்தால் அல்ல.
நம்முடைய தேக அவயவங்களும், தாய் தகப்பன் மூல மாகவந்த சக்தியால் கலனிக்கின்றன. வாய் பேசுவதும், கண் பார்ப்பதும், காது கேட்பதும், மூக்கு நுகர்வதும், நாக்கு ருசிப்பதும், தொண்டை விழுங்குவதும், தீனிப்பை ஜீரணிப் பதும், மற்றும் பல தேக உறுப்புகள் வேலைகள் செய்து வருவதும், தாய் தந்தையர் மூலமாக வந்த சக்தி (Energy) யால் அன்றி, வேறோர் கடவுளால் அல்ல. இது தான் பிரத்தியட்சக் காட்சி. இதை யாரும் மறுக்க முடியாது.
நோய் வந்தாலும், அந்நோய்களுக்குக் காரணம், தேகத்திலுள்ள கிருமிகளோ அல்லது, வெளியில் இருக்கும் கிருமிகளோ தான் காரணமே அல்லாமல் நமது மெய், வாய், கண் முதலிய அவயவங்களுக்குப் புலப்படாத கடவுள் காரணம் அல்ல. என் வீட்டில் கிருஸ்துவ மார்க்கத்தைக் கற்பிக்கும் இரண்டு படங்கள் உள. அதில் இரண்டு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கிப்போகும் சமயத்தில், இரண்டு கந்தர் வாள் அதனைத் தடுத்துக் காப்பாற்றும் காட்சியைக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் அநேக குழந்தைகள் கிணற்றிலும், குளத்திலும், வெள்ளத்திலும் மூழ்கிச் சாகின்றதை, கந்தர்வ ரூபங் கொண்ட கடவுளர், காப்பாற் றாத காரணம் என்னோ ? குற்றம் இன்னதென்றும் தெரியாத அச்சிறு குழந்தைகளைக் காருண்யக் கடவுளர் கைவிட்ட தென்னை? தனக்கு வேண்டியவர்கள் ஒருவர் அபாயத்தினின்று மீட்கப்பட்டால், அது கடவுளருளானால், அபாயத்தினின்று மீட்கப்படாத ஆயிரக் கணக்கானவர்களுக்குக் கடவுள் அருள் எங்கு போயிற்று? ஒரு மோட்டார் வண்டி விரைவாக ஓடும் அபாயத்தினின்று தப்பித்த ஒருவன், கடவுளருளால் தப்பித்துக் கொண்டேன் என்கின்றான். ஆனால் வருட மொன்றுக்கு 6000 பேர் மோட்டார் வண்டி ஆபத்தில் அகப் பட்டு மாளும் நிகழ்ச்சியை அந்தக் கடவுள் ஏன் தடுக்கவில்லை? ஒரு அபாய சம்பவத்தில் பலர் மாண்டது அபாயத்தாலாம்! ஆனால், ஒருவன் தப்பித்துக் கொண்டது கடவுளாலாம்!! இது என்ன யுக்தியோ! அல்லது குயுக்தியோ! அதனை அறிஞர்களே அறிதல் வேண்டும். தான் கோரிய விஷயங்கள் ஒன்று கூடிவந்தால் அது தெய்வத்தால் என்று எண்ணுகிறார் கள். ஆனால், கோரிய 99 விஷயங்கள் கைகூடாமைக்கு யார் காரணமோ அதனைக் கவனிப்பதில்லை. கப்பல் முழுகும் போது அதிலிருந்த சிலகொலையாளிகள் தப்பித்துக் கொண் டால், அவர்களையும் தெய்வம் தான் காப்பாற்றியதோ! பக்தர் கள் நியாயப்படி, அதுவும் கடவுள் அருளாய் இருந்தாலும் இருக்கலாம்! எப்படியெனில், திருடப்போன எலிக்கு மோட் சம் கொடுத்த ஈசன், கொலையாளிகளை என் தப்பித்து வைத் திருக்கக்கூடாது! கடவுள் என்ன வேலை செய்கின்றார் என்ற கேள்விக்குப் பக்தர்கள் திருப்திகரமான விடை கொடுப்பதாகத் தெரியவில்லை. அவர் செய்ததாகச் சொல் லும் வேலைகள், பக்தர்களுக்குள்ளேயே உடன் பாடில்லாமலிருக்கின்றன. இதை யாரும் நம்புவதற்கு இடமில்லை. உலகத்தை சிருஷ்டித்த மாதிரியும், மனிதனை சிருஷ்டித்த மாதிரியும், ஒரு மதஸ்தன் சொல்லுவது போல மற்றோர் மதஸ்தன் சொல்லுவதில்லை. செய்ததாகச் சொல்லும் காரி யங்கள் யாவும் விளையாட்டுக் கதையாக இருக்கக் கண் டோம். கழைக் கூத்தாடிகளும், கடவுள் செய்ததாகச் சொல்லும் செயல்களைவிட ஆச்சர்யகரமான விளையாட்டுகளைச் செய்கின்றார்கள். ஒரு கண்ணிமைப் பொழுதில் மாங்காய் வித்திலிருந்து, செடியும், கிளைகளும், பூவும், காயும், பழமும் உண்டாக்கிக் காட்டுகின்றார்கள்! இதைவிட ” ஒரு நாளில் இவ்வுலகைச் சிருஷ்டித்தார் கடவுள் ” என்று சொல்வ தால் கடவுளுக்கு என்ன சிறப்பு ? இந்த விசாரணையில் கடவுளுக்கு எந்த வேலையும் இருப்பதாகவாவது, அல்லது அவர் செய்ததாகவாவது விளங்கவில்லை.



