பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

துயர் வெள்ளம்


கபிலரும் பாரியும் ஈருடலும் ஓருயிருமாக வாழ்ந்தவர்கள். பாரியின் பிரிவினால் கபிலரும் உயிர் நீத்திருப்பார். ஆனாலும் அவர் தம் கடமையை எண்ணி, போகின்ற உயிரைத் தாங்கி நின்றார். பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்னும் இருவரையும் அநாதைகளாக விட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை. அவர்களைத் தக்க இடத்தில் சேர்த்துவிட்டே தமக்கு முடிவைத் தேடவேண்டும் என்று தீர்மானித்தார். அவர்.

ஒரு நாட்டுக்குரிய அரசன் மறைந்தால் உடனே பகையரசர்கள் அந்த நாட்டைப் பற்றிக்கொள்வார்கள். பறம்பு நாட்டுக்குத் தலைவனாகிய பாரி இறந்து போகவே அருகில் உள்ள பகை மன்னர் அந்த நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர். “இனி இங்கே இருந்தால் பாரியின் மகளிருக்கும் தீங்கு உண்டாகும்” என்று அஞ்சிக் கடவுள் அருளையும் தம் புலமையையும் நம்பிக் கபிலர் அவர்களுடன் புறப்பட்டுவிட்டார்.

ஒருநாள் இரவு நல்ல நிலா வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த இளம் பெண்களை அழைத்துக் கொண்டு பறம்பு மலையை விட்டுப் புறப்பட்டுப் போகலானார். அத்தனை காலம் தமக்கு இடம் அளித்த அம் மலையைப் பிரிய மனமின்றி மிக்க வருத்தத்தோடே நடந்தார். அந்த இளம் பெண்கள், வள வாழ்க்கையில் இன்புற்றவர்கள்; தமக்கு நேர்ந்த கதியை உணர்ந்து மறுகினார்கள். கபிலர் பற்றுக் கோடாக இருந்ததனால், “இனி நாம் என் செய்வோம்!” என்ற கவலை மிகுதியாக அவர்களுக்கு உண்டாகவில்லை.

அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நிலா, பால் போல் வீசியது. மக்கள் கதை பேசியும் விளையாடியும் மகிழ்வதற்குரிய நிலா அது. ஆனால் அவர்களுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. பகைவர்களுக்கு அஞ்சி ஓடும்போது அது வழி காட்டும் கை விளக்காக உதவியது; அவ்வளவுதான். பாரி மகளிர் நிலாவைக் கண்டனர். திரும்பிப் பார்த்தனர். பறம்பு மலை நின்றது. அவர்களுக்கு அப்போது பழைய காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது.

அன்றும் இப்படித்தான் நிலா வீசியது. தம்முடைய தந்தையாகிய பாரியோடு அரண்மனை நிலா முற்றத்தில் அவ்விரண்டு பெண்களும் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்து பார்த்தபோது பறம்பு மலையின் அருவிகளும் காடுகளும் தெரிந்தன. அந்த நிலவில் அவற்றிற்குத் தனியழகு உண்டாகியிருந்தது. “என்ன அழகான நிலா!” என்று பாரி சொன்னான். “என்ன அழகான குன்று!” என்று அங்கவை சொன்னாள். “நிலாவும் குன்றும் அழகானவையே! ஆனால் எல்லாவற்றையும் விடச் சிறந்தவர் எங்கள் தந்தையார்!’ என்று கொஞ்சும் மொழியில் கிளி போலப் பேசினாள் சங்கவை. அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தான் பாரி.

இந்தக் காட்சியை அந்தப் பெண்கள் நினைத்துப் பார்த்தார்கள். அது நிகழ்ந்து சரியாக ஒரு மாதந்தான் ஆயிற்று. அவர்கள் நெஞ்சு வெடித்து விடுவது போலாகிவிட்டது. அன்று இருந்த நிலை என்ன! இன்று இருக்கும் நிலை என்ன! அவர்கள் உள்ளத்தே துயரம் பொங்கியது; பெருமூச்சு விட்டார்கள்; கண்களில் நீர் தேங்கியது. சிறிது நேரம் கழித்து அந்தக் கண்ணீர் கவிதையாக வழிந்தது.

அன்று, ஒரு மாதத்துக்கு முன்பு, வெண்ணிலா வீசியபோது, எங்கள் தந்தையார் இருந்தார். எங்கள் குன்றை யாரும் கைப்பற்றவில்லை. இந்த மாதம் இதோ வெண்ணிலா வீசுகிறது. பகையரசர் எம் குன்றத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். எம் தந்தையும் இப்போது இல்லை’ என்று அந்தச் சோக கீதம் புறப்பட்டது.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

இந்தப் பாட்டைக் கேட்டார் கபிலர். அந்தப் பெண் களின் இள நெஞ்சிலுள்ள துயரப் பிழம்பை உருவாக்கிக் காட்டியது அது. அவர் தம் துயரத்தை அடக்கிக் கொண்டிருந்தார்; இந்தப் பாட்டைக் கேட்ட பிறகு அவரால் அடக்க முடியவில்லை. அது தடை போட்டும் நில்லாமல் பீறிக்கொண்டு புறப்பட்டது. அருமைத் தந்தையைப் பிரிந்து உள்ளம் மாழ்கும் அந்த இளம் பெண்களின் துயரத்தை அவர் எண்ணி எண்ணித் தமக்குள்ளே பொருமினார்.

அவர் தம்முடைய துயரத்தை யாரிடம் சொல்லிக் கொள்வார்? அந்தப் பறம்பு மலையைப் பார்த்தே சொன்னார். “பறம்பு மலையே! உன்னைக் கண்டு எனக்குத் துயரம் பொங்குகிறது. பாரி இருந்த காலத்தில் எவ்வளவு சிறப்பெல்லாம் உன்னிடம் நிகழ்ந்தன! எப்போது பார்த்தாலும் விருந்துணவை உண்டோம். பல வகை யான உணவுகளை எப்போதும் சமைத்துக்கொண்டே இருந்தார்கள். நீ எங்களுக்கு விருப்பமுள்ள உறையுளாக இருந்தாய். இப்போது நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம். பாரி பிரிந்துவிட்டான். கண்ணீரும் கம்பலையுமாக, உன்னைப் புகழ்ந்து, இந்த இளம் பெண் களுக்கு ஆதரவான மணாளரைத் தேடிக்கொண்டு போகிறோம்” என்ற கருத்தை வைத்து ஒரு பாடல் பாடினார். அதைத் தம் வருத்தத்தையெல்லாம் கொட்டிப் பாடினார்.

சிறிது தூரம் சென்ற பிறகு மறுபடியும் நின்று திரும்பிப் பார்த்தார். பறம்பு மலையின் அருவியைப் பார்த்தார். “பாரி இருந்தபோது இந்த அருவிமட்டுமா இருக்கும் ? ஒரு பக்கம் அருவி ஓடும்; மற்றொரு பக்கம் பாணருடைய பாத்திரத்தில் நிறைய வார்த்த தெளிந்த கள் வழிந்து ஓடும். இப்போது-? பகை மன்னர் களுக்குப் பொல்லாதவனானான் பாரி; ஆனால் எங்களுக்கு எத்தனை இனியவன்! அவன் குன்று இன்று இருக்கும் நிலை என்ன!” என்று இரங்கினார்.

மீண்டும் அம்மூவரும் நடக்கலானார்கள். பல நாள் மூவேந்தர் படையும் முற்றுகையிட்டபோது உழவர் உழாத நான்கு வகை உணவுகளைத் தந்த பறம்பு மலையைப் பிரிந்து செல்ல முடியாமல் தயங்கித் தயங்கி நின்றார்கள். மறுபடியும் கபிலர் திரும்பிப் பார்த்தார். இப்போது அவர்கள் நெடுந் தூரம் வந்துவிட்டார்கள். மலை கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துகொண்டு வந்தது. இன்னும் சிறிது தூரம் போகிற வரைக்கும் அது கண்ணுக்குத் தெரியும். அப்பால் அது மறைந்தே போய்விடும். கபிலர் இதை நினைந்தார். ‘இந்தக் குன்றம் நம் கண்ணிலிருந்து மறைந்து போகும். ஆனால் இதை மறந்து போக முடியாது’ என்று வருந்தினார். “இங்கு நின்று பார்த்தால் தெரிகிறது; இன்னும் சிறிது தூரம் சென்று பார்த்தாலும் தெரியும். அப்புறம்_?” அவர் கலங்கினார்.

ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்;
சிறுவரை சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற!

என்று பாட்டு வந்தது. குன்றம் புறக்கண்ணுக்கு மறைந்தாலும் அகக் கண்ணில் அவர்கள் கண்ட பழைய காட்சிகள் மறையுமா? பறம்பு மலையில் எங்கே பார்த்தாலும் தேனடைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு வந்து பிழிந்து கோதைப் போட்டு விடுவார்கள். நிறையக் கரும்புக் கட்டை யானைக்குக் கவளமாகக் கொடுக்கையில் அஃது அதன் சாற்றையெல்லாம் உறிஞ்சிவிட்டுச் சக்கையைப் போட்டால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கும் அந்தக் கோதுக் குவியல். அதிலிருந்து தேன் கசிந்துகொண்டிருக்கும். பாரியின் அரண்மனை முற்றத் தில் இந்தக் காட்சியைக் கண்ட கபிலர், பாரி தன்பால் வந்தவர்களுக்குத் தேனை வழங்குவதையும் கண்டிருக்கிறார். முல்லைக் கொடிக்கே தேரை வழங்கினவன் மற்றவர்களுக்கு வழங்குவது என்ன வியப்பு? இந்தப் பழைய காட்சிகள் அவருடைய அகத்தே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின. ‘இத்தகைய இனிய காட்சிகளைப் பெற்றிருந்த குன்றன்றோ இது?’

என்று எண்ணி நெடுமூச்செறிந்தார்.

ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற!
களிறுமென்று இட்ட கவளம் போல நறவுப்பிழிந்து அட்ட கோதுடைச் சிதறல்வார்அசும்பு ஒழுகும் மூன்றில் தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே.

இப்படி அவர் புலம்பிக்கொண்டே சென்றார். பறம்பு மலை கண்ணுக்கு மறைந்தது. அவர்களுடைய துயர் கண்டு பொறாதவன்போலச் சந்திரனும் மறைந்தான். இனி இவர்களுக்கு விரிந்த உலகத்தைக் காட்ட வேண்டுமென்று தோன்றியவனைப் போலக் கதிரவன் உதயமானான். பறம்பு நாட்டின் கடைசி எல்லையை அவர்கள் அணுகிக் கொண்டிருந்தார்கள்.

‘பறம்பு மலை மறைந்தது. இனிப் பறம்பு நாட்டையும் விட்டுப் போய்விடுவோம்’ என்று நினைத்தபோதே அந்த நினைவு கபிலர் உள்ளத்தை வாள் போட்டு அறுத்தது. அப்போது அவர்கள் நடந்து சென்ற இடம் வளம் சுருங்கிய இடமாக இருந்தது. ஈச்ச மரங்களையன்றி வேறு நிழல் மரங்கள் இல்லாத இடம் அது. சிறிது தூரத்தில் உப்பு வண்டிகளை ஓட்டிக்கொண்டு சென்றார்கள் உப்பு வாணிகர். வண்டிகள் ஒன்றன்பின் ஒன்று நீண்ட சாரியாகச் சென்று கொண்டிருந்தன.

ஈச்ச மரத்தின் அடியில் ஒரு சிறிய மேடு இருந்தது. ஈந்திலைகள் உதிர்ந்திருந்த மேடு அது. அங்கவையும் சங்கவையும் அந்த மேட்டின்மேல் ஏறித் தூரத்தில் சென்ற உப்பு வண்டிகளைப் பார்த்தார்கள். “அடே அப்பா! எத்தனை வண்டிகள்!” என்று வியந்தார்கள்.

அவர்கள் முன்பு பாராத காட்சி இது; வறண்ட பாலை நிலத்தில் நிகழ்வது. அவர்கள் அந்த வண்டிகளை, “ஒன்று, இரண்டு” என்று எண்ணத் தொடங்கினார்கள்.

அவர்களுடைய வாழ்க்கை பாரியை இழந்தமையால் வறண்ட பாலை ஆகிவிட்டது. இப்போது நிற்கும் இடமும் பாலை நிலம். இந்த நிலையிலும் இளம் பருவத்தினர் ஆகையால் அவர்கள் தம் துன்பத்தை மறந்து விநோதமாக உப்பு வண்டிகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

இதைக் கண்டபோது கபிலருக்குத் துயரம் பொங்கி வந்தது. ‘ஐயோ! இப்படித்தானே அன்றும் எண்ணினார்கள்!’ என்ற று எண்ணி மனம் சாம்பினார். முடி மன்னர்கள் பறம்பு மலையை முற்றுகை யிட்டிருந்தபோது ஒரு நாள் அம்மலையில் இருந்தபடியே கீழே தெரிந்த குதிரைகளை அந்த இரண்டு பெண்களும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அது இப்போது கபிலரின் நினைவுக்கு வந்தது. “அன்று தங்களுக்குரிய பறம்பு மலையில் நின்று சிறிதும் அச்சமின்றிப் போர்ப் படையில் இருந்த குதிரைகளை எண்ணினவர்கள், இன்று ஈச்ச மரத்தின் இலைகள் குவிந்த இடத்தில் ஏறி உப்பு வண்டிகளை எண்ணும்படி ஆயிற்றே!” என்று நைந்தார்.

பாலை நிலத்தை அவர்கள் கடந்தார்கள். முல்லை நிலம் வந்தது. அங்கே அரும்புகள் நிறைந்த முல்லைக் கொடியைக் கண்டார் கபிலர். பாரி முல்லைக்குத் தேர் வழங்கியதை அது நினைப்பூட்டியது. நல்ல வளம் நிறைந்த பறம்பு நாட்டிலே காடுகள் அடர்ந்த முல்லை நிலம் அதிகம். மழை உரிய காலத்தில் பெய்தமையால் எங்கும் வளம் குறையாமல் இருந்தது. “எத்தகைய உற்பாதம் தோன்றினாலும் வயலில் பயிர் நிரம்பி வளரும்; செடிகளில் நிறையப் பூ மலரும்; வீடுகளில் கன்று போட்ட பசு வயிறு நிறையப் புல்லைத் தின்று மகிழும். பாரியின் செங்கோலாட்சியில் சான்றோர் பலர் வாழ்ந்தார்கள். மழையில்லாப் பஞ்சம் என்பதே இங்கு இல்லை. முல்லை நிலத்தில் எங்கே பார்த்தாலும் முல்லைக்கொடி அரும்புவிட்டு அழகாகப் படரும். இத்தகைய நாடு அன்றோ இது? இதை விட்டுப் போகும்படி விதி செய்து விட்டதே!’ என்று உருகினார். அந்த உணர்ச்சி கவியாக வெளியாயிற்று.

பாரி இறந்துவிட்டமையால் பகை மன்னர்கள் அந்த நாட்டைக் கைப்பற்றிக் கொள்வார்கள். தம் மனம் போனபடி அதன் அழகைக் குலைத்து விடுவார்கள். பகைவர் நாட்டு வயலையும் நீர் நிலைகளையும் ஊரையும் அழிப்பது அக்காலத்தில் மன்னர்களுக்கு வழக்கமாக இருந்தது. “பாரியின் செங்கோல் திறத்தினால் மழை திறம்பாத நாடு இது; இனி என்னாகுமோ!” என்பதை எண்ணும்போது கபிலரது வயிறு குழம்பியது.

அங்கே ஒரு சிறிய ஏரி இருந்தது. சிறிய குண்டுக் கற்களையும் பெரிய பெரிய பாறைகளையும் கொண்டு வந்து கரைகளை உறுதியாகக் கட்டியிருந்தார்கள். வளைவான கரையின்மேல் அம் மூவரும் நடந்து சென்றார்கள். தெளிந்த நீருடன் விளங்கிய அதைப் பார்த்தபோது கபிலர் உள்ளம் கலங்கியது. “பகை மன்னர் இதை உடைத்துவிடுவார்களே!” என்று வருந்தினார்.

இப்படியே பறம்பு நாட்டின் பழம்பெருமையை நினைந்தும், அஃது இனி அழிந்து போகுமே என்று வருந்தியும் கபிலர் நடந்து சென்றார். தாயும் தந்தையும் அற்ற அங்கவை, சங்கவை என்னும் இரண்டு பெண் கொடிகளுக்குப் பற்றுக் கோடாக யாரையேனும் கண்டு அவரிடம் ஒப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அவர்களை அழைத்துக்கொண்டு அவர் சென்றார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *