
பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்
முற்றுகை
பறம்பு நாட்டு மக்கள் அனைவரும் பாரிவேளுக்காக உயிரையும் அளிக்கச் சித்தமாயிருந்தனர், பாண்டியனும் பிறரும் பாரியின் மேற் படையெடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி அவனுக்கு முன்பே எட்டியது. அவனிடம் அன்புடைய மக்கள் தமிழுலகம் முழுவதுமே இருந் தார்கள். அவர்கள் வாயிலாக இந்தச் செய்தி அவனுக்குத் தெரிய வந்தது. பாரி ஈகையில் சிறந்தவன் என் பதை எந்த அளவுக்கு உலகம் அறிந்துகொண்டதோ, அந்த அளவுக்கு அவன் வீரத்திலும் சிறந்தவன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. வீரப்பெருமக்களின் பரம்பரையிற் பிறந்த அவன் இரத்தத்திலே வீரம் கலந்திருந்தது. அவனுடைய நீண்ட கைகளின் பெருமையை ஈகையினால் உணர்ந்த உலகம், அவனுடைய திண்ணிய தோள்களின் வலிமையை நன்கு உணரவில்லை. இதோ அதை உணரும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. புலவர்கள் அவன் ஈகைத் திறத்தை வெளிப்படுத்தினர். இப்போது முடியுடை மன்னர்கள் அவனது வீரத்தைப் புலப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்கள்.
பாரி வலியப் போரை விரும்புவன் அல்லன்; வந்த போருக்கு அஞ்சுபவனும் அல்லன். அவனிடத்திலும் படைகள் இருந்தன. சிறந்த வீரர்கள் இருந்தார்கள். பறம்பு நாட்டுக் குடிமக்களில் கட்டிளங் காளைகள் பலர் இப்போது பாரியோடு நின்று போர் புரிய முன்வந்தனர்.
பறம்பு நாட்டின் எல்லைக்குள் மன்னர்களின் படை நுழையாமல் தடுப்பது எளிதாகத் தோன்றவில்லை. மூன்று மன்னர்களும் ஒருங்கே கூடிப் படையெடுத்தால் அவர்களுடைய பெரும்படைக்கு எதிரே நிற்கத் தமிழ் நாட்டில் வேறு படையே இல்லை. ஆயினும் பறம்பு மலைமீது படை முழுவதும் ஏறிப் போர் செய்வதென்பது இயலாத செயல். ஆதலால் பறம்பு நாட்டைப் பாதுகாப்பதை விடத் தன் படை முழுவதையும் பறம்பு மலையின்மேல் கூட்டி வைத்துக்கொண்டு அந்த மலையைப் பாதுகாப்பதுதான் தக்க வழியென்று வள்ளல் பாரி தீர்மானித்தான். கபிலரும் அப்படிச் செய்வதே நலம் என்று கூறினார்.
தன் பலத்தையும் மாற்றான் பலத்தையும் அளவிட்டு, எவ்வாறு போர் செய்தால் வெற்றி பெறலாம் என் று சூழ்ந்து புகுதல் மன்னர்களுக்கு நன்மையை உண்டாக்கும். வள்ளல் பாரி நன்றாக ஆராய்ந்தான். அவனுக்கு இருந்த படைப் பலம் முடி மன்னருக்கு எதிரே நின்று வெல்லுவதற்குப் போதும் என்று சொல்ல இயலாது. ஆயினும் அவனுக்கு வாய்த்திருந்த பறம்பு மலை எதற்கும் அஞ்சாத நிலையைத் தந்தது. வெளியிலே நெடுகப் பரந்து கிடக்கும் கடல் நீர்ப்பரப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதனிடையே ஒரு கப்பல் மிதந்து உள்ளிருப்போரைக் கொண்டு செல்வது போல, எத்தனை படைகள் வந்தாலும் பாரியைப் பாதுகாக்கும் வகையிலே பறம்பு மலை இருந்தது.
மலையிலுள்ள அரண்களைச் செப்பஞ் செய்தான் பாரி. அங்கங்கே மறைவாக நின்று அம்பு எய்யும் துளைகள் இருந்தன. அவற்றை ஏப்புழைகள் என்று சொல்வார்கள். அவற்றையும் செப்பனிட்டான். பகைவர் வந்து முற்றுகையிட்டால் படை வீரர்களுக்கு உணவுப் பொருள் வேண்டுமென்று நெல் முதலியவற்றைக் கொண்டு வந்து மலையின்மேல் சேமித்தான்.
தோள் தினவு கொண்ட வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள். போர் என்றால் அவர்களுக்கு மகிழ்ச்சி. “இத்தனை காலம் வீணே யிருந்த எங்கள் தோள் வலிமை இப்போதுதான் பயன்படப் போகிறது. எங்கள் பெருந்தலைவரிடம் எங்களுக்குள்ள அன்பைக் காட்டும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது” என்று ஊக்கம் பெற்றார்கள் அவர்கள்.
மூவேந்தர் சேனைகளும் பறம்பு நாட்டின் எல்லையை அடைந்தன. பேருக்கு ஒரு சிறு படை அங்கே நின்று வேந்தர் படையை எதிர்த்தது. சில நாழிகைகளில் அந்த எல்லைப் படை சேர சோழ பாண்டியர்களுக்கு வழி விட்டுவிட்டது. அம் மன்னர்களுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. ‘இவர்களுடைய எதிர்ப்பு எம்மாத்திரம்? இனி நாம் போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலே பாரி நம்மைச் சரணடைவான்’ என்றே அவர்கள் எண்ணினார்கள். பறம்பு நாட்டின் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தார்கள். அவர்களை யாரும் தடுக்கவில்லை; வரவேற்கவும் இல்லை. படையுடன் பாரி பறம்பு மலையின் மேல் இருக்கிறான் என்று தெரிய வந்தது. படைகள் அம்மலையை நோக்கிச் சென்றன. அதன் அடிவாரத்தை அடைந்தபோதுதான் முடி மன்னர்களுக்கு உண்மை புலனாயிற்று. பாரியைப் போர் செய்யாமலே வென்று விடலாம் என்று எண்ணியது பேதைமை என்று விளங்கியது.
மலையின்மேல் படை அவ்வளவும் ஏறுவது இயலாது. ஏறுகிற வழிகள் சில இருந்தன. அவற்றில் எல்லாப் படையும் ஏறி மலையின் உச்சியை அடைய முடியாது. மலையடிவாரத்தை அடைந்தவுடன் மேலிருந்து அம்பு மாரி பெய்யத் தொடங்கியது. கற்களும் பாறைகளும் உருண்டு வந்தன. இயற்கையான அரணாகப் பாரிக்கு அந்த மலை நிற்பதைக் கண்டு மன்னர் மூவரும் மயங்கினார்கள்.
அவர்களுடைய படை பெரும் படைதான். ஆனாலும் அந்தப் படையின் பலத்தைச் சிறியதாக்கிக்கொண்டு வானளாவ நிமிர்ந்து நின்றது பறம்புமலை. சில வீரர்கள் மலையின்மேல் ஏறினார்கள். சிறிது தூரம் ஏறுவதற்குள் அவர்கள் பிணமாகி உருண்டார்கள். கீழிருந்து அம்புகளை எய்தார்கள். அவை பறம்புமலைச் சாரலிலே மறைந்தன. எத்தனை படை இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது.
வில்லும் வேலும் வாளும் கொண்ட வீரர்கள் மீனினங்களைப் போல் மலையடிவாரத்தில் வட்ட மிட்டார்கள். மலையின் மேலுள்ள கோட்டையை அண்ணாந்து பார்த்தார்கள். அம்புகளை எய்தார்கள். எள்ளளவும் பயன் உண்டாகவில்லை.
இந்த நிலையில், என்ன செய்வது என்ற யோசனை பகை மன்னர்களுக்கு உண்டாயிற்று. மூவரும் ஒருங்கு கூடி ஆலோசனை செய்தனர். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “நம்முடைய படைகளை இந்த மலையைச் சுற்றி நிற்க வைத்துவிடுவோம். சில நாட்கள் இந்த முற்றுகை நடைபெறுமானால் கீழிருந்து எந்தப் பண்டமும் மேலே செல்லமுடியாது. மேலே உள்ளவர்களுக்குக் கீழே இருந்துதானே உணவுப் பண்டங்கள் போக வேண்டும்? இப்போதைக்குச் சில நாட்களுக்கு வேண்டியவற்றையே அவர்கள் சேமித்து வைத்திருப்பார்கள். நாம் தொடர்ந்து இங்கே முற்றுகை யிட்டால் உணவு இல்லாமல் வாடும் நிலை அவர்களுக்கு ஏற்படும். அப்போது வழிக்கு வருவார்கள். சண்டை செய்யாமலே வெற்றி பெறலாம் என்று முதலில் நாம் எண்ணிய எண்ணம் இந்த வகையில் கைகூடி விடும். மேலே உள்ளவர்களோடு போர் செய்து வெற்றி பெறா விட்டாலும், அவர்களைப் பட்டினி போட்டு வெல்வோம்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
முடி மன்னர் மூவருடைய படைகளும் பறம்பு மலையைச் சுற்றி முற்றுகையிட்டுச் சில நாட்கள் ஆயின. அங்கங்கே படை வீடுகளை அமைத்துக்கொண்டார்கள் படைத் தலைவர்கள். ஒரு நாள் பறம்புமலையின் மேலிருந்து ஓர் ஓலை வந்தது; அம்பிற் கோத்து அந்த ஓலையைக் கீழே இருந்த பகைவர்களுக்கு அனுப்பினான் பாரி. அது படை வீரர்களினிடையே விழுந்தது. அதை உடனே எடுத்துக் கொண்டு மன்னர்களிடம் சென்றார்கள் வீரர்கள்.
ஓலை வந்து விழுந்தது என்ற செய்தியைக் கேட்ட உடனே மன்னர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். தாம் எதிர்பார்த்தபடியே பாரி சரணடைவதற்காக அதை விடுத்திருக்கிறான் என்று எண்ணினார்கள். ”இனிமேல் சமாதானம் செய்துகொள்வதையன்றி வேறு வழியில்லை என்பதைப் பாரி உணர்ந்திருப்பான்” என்று சோழன் சொன்னான்.”இவ்வளவு நாள் காத்திருந்ததே பெரிது” என்றான் சேரன். பாண்டியன் ஓலைச் சுருளை விரித்துப் படித்தான். மனத்துக்குள் படித்துக்கொண்டான். அதை வாங்கும்போது. இருந்த வேகம் இப்போது அவனிடம் இல்லை. அவன் முகத்தில் மலர்ச்சி உண்டாகவில்லை. முன்பே இருந்த ஒளி மங்கியது. “என்ன எழுதியிருக்கிறான்?” என்று மற்றவர்கள் படபடப்பாகக் கேட்டார்கள். பாண்டியன் ஓலைச் சுருளைச் சோழன் கையிலே கொடுத்தான். அவனும் அதில் உள்ளதைப் படித்தான். அவனும் ஒன்றும் பேசவில்லை. சேரனிடம்
அதை வாங்கி கொடுத்தான். சேரன் ஓலையைப் பார்த்தான். அவனும் வாய் திறவாமல் இருந்தான். அவர்களைச் சுற்றி நின்ற படைத் தலைவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அம்மூவருக்கும் வாய்ப்பூட்டுப் போட்ட செய்தி எதுவாக இருக்கும் என்று அவர்கள் மயங்கினார்கள்.
பாண்டியன் மறுபடியும் ஓலையை வாங்கிப் பார்த்தான்; கூர்ந்து கவனித்தான்.
“இது கபிலர் எழுதிய பாட்டுத்தான்” என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து நழுவின. சூழ நின்ற வீரர்களுக்கு இப்போதும் உண்மை விளங்கவில்லை. ”பாட்டா?” என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.
பாண்டியன் ஓலையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அந்த ஓலையில் கபிலர் எழுதிய பாடல் இருந்தது. அந்தப் பாட்டிலே பாண்டியனது மனம் ஆழ்ந்து போயிற்று. தமிழ் வளர்க்கும் குலத்தில் பிறந்தவன் அல்லனா அவன்? இதுவரையிலும் அவன் பாரியையே நினைத்துக்கொண்டிருந்தான். இப்போது கபிலருடைய நினைவை உண்டாக்கியது அந்தப் பாடல். கபிலரைத் துணைவராகப் பெற்ற பாரியின் பாக்கியத்தை அவன் இப்போது எண்ணிப் பார்த்தான். பறம்பு மலையின் பெருமையைக் கபிலர் பாடியிருந்தார். ‘மதுரைக்குக் கிடைக்காத பேறு இது!’ என்று எண்ணும்போது பாண்டியனுக்குச் சற்றே வருத்தம் உண்டாயிற்று. அந்தக் கவியின் சுவையிலே மனத்தைப் பறிகொடுத்தான்.
சிறிது நேரம் இப்படி இருந்தான்; படை வீரர்கள் அருகில் நிற்பதைக் கண்டு பழைய நிலையைப் பெற்றான். ஓலையை அருகில் நின்ற படைத் தலைவனிடம் கொடுத்தான். அவன் அதைப் படித்துப் பார்த்தான்.
கபிலர் அதில் ஒரு பாடலை எழுதி அனுப்பியிருந்தார். பாரியை எளிதில் வெல்ல முடியும் என்ற எண்ணம் நிறைவேறாது என்பதை அதன் வாயிலாகப் புலப்படுத்தியிருந்தார். பறம்பு மலையை எவ்வளவு நாள் சூழ்ந்து முற்றுகையிட்டாலும் தங்களுக்கு உணவுப் பஞ்சம் நேராது என்பதைக் காரணங்களுடன் தெரிவித்திருந்தார். “ஐயோ பாவம்! இந்தப் பறம்பு மலையை நினைக்கும் போதே இரக்கம் உண்டாகிறது. இந்த முடியுடை மன்னர் மூவரும் தன் அடிவாரத்தில் வந்து நிற்க, அவர்களுக்குச் சிறிதும் இடங்கொடுக்காமல் இப்படி இருக்கிறதே! இது இரக்கப்பட வேண்டியது அல்லவா?” என்று பரிகாசத் தொனியோடு பாட்டைத் தொடங்கி இருந்தார்.
“இப்படியே முற்றுகையிட்டிருந்தால் மேலே உணவுப் பண்டம் வாராமல் நாங்கள் யாவரும் பட்டினியால் வாடுவோம் என்று நீங்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள்: இங்கே நாங்கள் எந்த விதமான முயற்சியும் பண்ணாமலே நான்கு வகை உணவுப் பண்டங்கள் கிடைக்கின்றன. முதலாவதாக, சிறிய இலையையுடைய மூங்கில்கள் இங்கே நிறைய இருக்கின்றன. அவற்றிலே நெல் விளைகிறது. ஆகையால் கீழிருந்துதான் வர வேண்டும் என்பது இல்லை. இரண்டாவது: இங்குள்ள பலா மரங்களில் மிகவும் இனிய சுளைகளையுடைய பழங்கள் கனிந்து பழுத்து உதிர்கின்றன. இந்த இரண்டு மட்டும் அல்ல. படர்ந்து அங்கங்கே ஓடிக் கிடக்கும் வள்ளிக் கொடிகளில் பெரிய பெரிய கிழங்குகள் இருக்கின்றன. அவற்றைச் சுட்டு உண்ணலாம். எங்கே பார்த்தாலும் தேனடைகள் இருக்கின்றன. அவற்றில் தேன் நன்றாக முதிர்ந்து நீல நிறம் பெற்று அருவியாக விழுந்து கொண்டிருக்கிறது. இவற்றை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் இனிய உணவு உண்டு வாழலாமே!
”இத்தனையும் விளைவதற்கு இடம் எங்கே என்று யோசிக்க வேண்டாம். பாரியின் மலை, வானத்தைப் போல விரிந்தது. வானத்தில் மீன்கள் இருப்பதுபோல இந்த மலையில் சுனைகள் இருக்கின்றன.
“இத்தகைய இடத்தில் நீங்கள் பல யானைகளைக் கொண்ட படையோடு வந்திருக்கிறீர்கள். மரத்துக்கு ஒன்றாகக் கட்டும் அளவுக்கு உங்கள் யானைகளைக் கொண்டு வந்தாலும், காணும் இடங்களில் எல்லாம் உங்கள் தேரை நிறுத்தியிருந்தாலும் பாரி உங்களுக்கு வசப்பட மாட்டான். அவன் குன்றத்தை உங்கள் முயற்சியினால் கைக்கொள்ள இயலாது. வாளோச்சிப் போர் செய்தாலும் அவன் தரமாட்டான். அதை அடையும் விதம் ஒன்று எனக்குத் தெரியும். தேரையும் களிற்றையும் விட்டுவிட்டு, வில்லையும் வாளையும் எறிந்துவிட்டு, வாரி முறுக்கிய நரம்புக் கட்டையுடைய சிறிய யாழை எடுத்துக் கொள்ளுங்கள்; நன்றாகச் சுருதி சேர்த்துக் கொண்டு வாருங்கள். மணம் பொருந்திய கூந்தலையுடைய உங்கள் விறலியரைப் போல உங்களைத் தொடர்ந்து வர, நீங்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வந்தால், பாரி உங்கள் ஆடல் பாடலைக் கண்டு மகிழ்ந்து, பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே தந்துவிடுவான். இவ்வளவு எளிய வழியில் பெறும் வகை இருக்கும்போது, எதற்காக இப்படியெல்லாம் அல்லற்பட வேண்டும்?” என்ற கருத்துப் புலப்படும் படியாகப் பாட்டு அமைந் திருந்தது.
“நீங்கள் வீரத்தால் பாரியை வெல்ல முடியாது. கலைப் பண்பு உங்களிடம் இருந்தால் அவனை அணுகலாம்” என்ற கருத்தைப் பாட்டு, குறிப்பாக வெளியிட்டது. எத்தனை நாள் முற்றுகையிட்டாலும் உணவில்லாமல் தவிக்கும் நிலை பறம்பு மலையின்மேல் இருப்பவர்களுக்கு வராது என்ற செய்தியையும் அது தெரிவித்தது.
மூன்று மன்னர்களும் இனி என்ன செய்வது என்று ஆராய்ந்தார்கள். அவர்கள் தங்கள் நகரத்தை விட்டு எத்தனை காலம் பறம்பு மலையின் அடிவாரத்தைக் காத்து நிற்பது? ”மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு எவ்வளவு காலத்துக்கு இருக்க முடியும்? தேனும் பலாப் பழமும் வள்ளிக் கிழங்கும் இருந்தால் போதுமா? காரமும் புளிப்புமுடைய உணவை உண்டு பழகியவர்களுக்கு இவற்றை உண்டால் ஊக்கம் உண்டாகுமா? சில காலம் வீம்புக்கு இவற்றை உண்டு இருக்கலாம். அப்படி உண்டாலும் உடலுக்கு உரம் வருமா? வில்லைப் பிடிக்கும் வீறு வளருமா? இன்னும் சில மாதங்களில் பாரி தானே வழிக்கு வந்துவிடுவான்” என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் அதுவரையில் முடி மன்னர் மூவரும் அங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லையென்று நினைத்தார் கள். படைத் தலைவர்களை அங்கே படையுடன் தங்கும்படி விட்டுவிட்டு அம்மூவரும் தம் தம் இடங்களுக்குச் சென்றனர்.



