பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

மண முயற்சி


பறம்பு நாட்டை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குப் பாரி மகளிரை அழைத்துச் சென்றார் கபிலர். அவருக்கு இப்போது ஒரே ஒரு கடமைதான் முன் நின்றது. அந்த இரண்டு பெண்களையும் தக்க கணவருக்கு மணம் செய்து கொடுத்துவிட்டால் அப்பால் இவ்வுலகில் வாழ வேண்டிய அவசியம் அவருக்கு இராது. பாரி இல்லாத உலகத்தில் வாழ அவர் விரும்பவில்லை, ஆகவே, யாருக்கு அப்பெண்களை மணம் செய்து கொடுப்பது என்ற ஆராய்ச்சியே அவருக்குப் பெரிதாயிற்று.

விச்சி என்ற மலைக்குத் தலைவனாக இருந்த விச்சிக் கோன் என்னும் சிற்றரசனைப் பற்றிக் கேள்வியுற்றார். விச்சி மலை நல்ல வளமுடையது என்பதை அவர் முன்பே அறிவார். ஆதலின் அவனை அணுக எண்ணினார்.

பாரியின் மகளிரை அழைத்துக் கொண்டு அந்த விச்சி மலைக்குச் சென்றார். பலமுறை வேண்டிய பின்னர் வருவதற்குரிய பெரும் புலவராகிய கபிலரே தன்னை நாடி வந்ததை அறிந்து விச்சிக்கோன் வியந்தான்; அன்புடன் வரவேற்றான். பாரி வேளை வஞ்சனையால் யாரோ கொன்றனர் என்ற செய்தியை அவன் அறிந்திருந்தான். கபிலரைக் கண்டு வணங்கி, இருக்கச் செய்தான். அவருடன் வந்திருந்த பெண்களைப் பார்த்தான். அப்போது தாம் வந்த காரியத்தைக் கபிலரே சொல்லத் தொடங்கினார். பெரும் புலவராதலின் தம் கருத்தைப் பாட்டாகவே சொல்லலானார். அந்தப் பாட்டில் விச்சிக் கோவின் மலைவளத்தை முதலில் எடுத்துரைத்தார்.

“நின் மலையில் குளிர்ந்த சாரலில் பலா மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன. பச்சைப் பசேலென்று தழைத்த இலைகளும், கண்டால் நாவில் நீர் ஊறச் செய்யும் கனிகளும் அவற்றில் நிறைந்துள்ளன. பலாப் பழத்தை அங்குள்ள ஆண் குரங்கு பறித்து உண்டு அதன் சுவையை உணர்கிறது. உடனே தன் மனைவியாகிய மந்திக்கும் கொண்டுபோய் அதனை அளித்து உண்ணச் செய்து மகிழ்கிறது. அப்பால் மலையின் உச்சிக்குப் போய் அங்கே உள்ள மூங்கிலில் அவ்விரண்டும் துயில்கின்றன. இத்தகைய காட்சிக்கு இடமான மலையை உடையவனே!”

பிறகு அவனுடைய வேலையும் யானையையும் அணி கலனையும் பாராட்டினார்.

“பகைவருடைய உடலின் நிணத்தைத் தின்று களித்த, நெருப்புப் போலப் பளபளக்கும் இலையையுடைய நொடிய வேலையும், போர்க்களத்தைத் தன் ஆற்றலால் தன்னுடைய தாக்கிக் கொண்டு சீறும், எதற்கும் அஞ்சாத கடுமையையுடைய யானையையும். ஒளிவிடும் மணிகளைப் பதித்துச் செய்த வளைந்த அணி கலன்களையும் பெற்ற விச்சிக்கோவே!”

பின்பு, பாரி மகளிரை இன்னாரென்று கூறினார்.

“இவர்கள் யார் தெரியுமா? எப்போதும் ஒப்பனை செய்து வைத்தாற்போல மலர்களைப் பெற்று விளங்கும் முல்லைக் கொடியானது, புலவர்களைப் போல நாவில் தழும்பு உண்டாகும்படி பாடவில்லை; ஆயினும் அதன் தளர்ந்த நிலையை நோக்கி, ஒலிக்கும் மணியையுடைய தன் தேரை அது கொழுகொம்பாகக் கொள்ளட்டும் என்று கொடுத்தவன், பரவிய புகழையுடையவனாகிய பாரி. அவனுடைய மகளிர் இவர்கள்.”

பிறகு தாம் வந்த காரியத்தைத் தெரிவித்துப் பாட்டை முடித்தார். “சினத்தால் செய்யும் போரில் அடங்காத பகை மன்னரை அடக்கும் ஆற்றலையும் என்றும் குறையாத விளைவையுடைய நாட்டையும் உடையவனே! நான் இப்போது பரிசிலனாக வந்திருக் கிறேன். ஆதலின் கேட்டதை நீ கொடுக்க வேண்டும். நீயோ யார் யாரை எப்படி வணங்கச் செய்ய வேண்டுமோ அப்படி அடக்கும் வாள் வீரன்; ஆதலின். இப்பெண் களுக்கு ஏற்ற கணவன். உனக்கு நான் இவரை மணம் செய்து கொடுக்க எண்ணுகிறேன். நீ கொள்வாயாக!”

கபிலர் இதைக் கூறியவுடன் விச்சிக்கோன், ”அப்படியே ஆகட்டும்” என்று சொல்லவில்லை. அவர் செய்யச் சொன்ன காரியத்தைச் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. சற்றே யோசித்தான்.

“என்ன யோசிக்கிறாய்?” என்று கேட்டார் கபிலர். மூவேந்தரும் பாரி மகளிரை விரும்பிப் போர் செய்ததை அவன் அறிந்தவன். அவரைத் தான் மணந்து கொண்டால் அந்த மன்னர்களின் பகை தனக்கு நேருமோ என்று அவன் அஞ்சினான். அதனால் தன் வாயிலைத் தேடி வந்தும் திருமகளைப் போன்ற அந்த அழகிகளை மணக்கும் துணிவு அவனுக்கு உண்டாகவில்லை.

தன் கருத்தை அவன் குறிப்பாகக் கபிலருக்குத் தெரிவித்தான். அன்பு செய்து மணம் புரியவேண்டிய அந்தக் கன்னியரை வற்புறுத்தி ஒருவனுக்கு அளிக்கக் கபிலருக்கு மனம் இல்லை. மேலே ஒன்றும் பேசாமல் அவர் பாரி மகளிரை அழைத்துக்கொண்டு விச்சிக்கோனிடம் விடை பெற்றுப் புறப்பட்டுவிட்டார்.

மூவேந்தர்கள் பாரியினிடம் தூது விட்டு மணக்க விரும்பிய பெண்கள் அவர்கள். அறிவிலும் பண்பிலும் மிகமிகச் சிறந்தவர்கள். அவர்களை முடி மன்னர்களுக்குக் கொடுக்க மாட்டேன் என்று மறுத்தான் பாரி. இப்போதோ, கபிலர் தாமாக ஒருவனை நாடிச் சென்று, ”இவர்களை மணந்து கொள்” என்று சொன்னார். அவன் மாட்டேன் என்கிறான். விதியின் விளையாட்டை என்ன வென்று சொல்வது! தமிழுலகம் போற்றும் கபிலர் விருப்பத்தை அறிந்தும் மறுக்கத் துணிந்தான் விச்சிக்கோன். இதைவிட அப்புலவர் பெருமானுக்கு வருத்தத்தைத் தருவது வேறு என்ன வேண்டும்?

‘உலகம் பொல்லாதது. இதில் இனி நாம் மானத்துடன் வாழ முடியாது’ என்ற எண்ணமே அவர் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

மறுபடியும் யாரை நாடுவது?-இதுவே கபிலருடைய கவலையாகிவிட்டது. பெண்ணைப் பெற்ற தந்தைக்குக் கூட இல்லாத கடமையுணர்ச்சியும் ஏக்கமும் அவரிடம் குடிகொண்டன. ஹொய்சள வம்சத்தில் பிறந்தவனும், வேள் எவ்வி என்ற வள்ளலின் வழி வந்தவனுமாகிய இருங்கோ வேள் என்ற குறுநில மன்னன் மணமாகாதவன் என்று தெரியவந்தது. அவனை நோக்கிப் புறப்பட்டார். குறுநில மன்னர்களுக்கே அவர்களை மணம் புரிந்து கொடுக்கவேண்டும் என்பது அவர் எண்ணம். பாரியின் மகளிராகிய அவர்களை, அவன் தகுதிக்கு ஓரளவு ஏற்றவனைத்தானே தெரிந்தெடுக்க வேண்டும்?

இருங்கோவேள், அரையம் என்னும் மலையை நடுவிலே கொண்ட நாட்டையுடையவன். பாரி மகளிரையும் அழைத்துக் கொண்டு கபிலர் அவன் இருக்கும் நகரத்தை அடைந்தார். “இவர்கள் தன்னுடைய நாட்டு ஊர்களையெல்லாம் புலவருக்கும் பாணருக்கும் அளித்துத் தேரை முல்லைக்கு அளித்த பாரிவேளின் மகளிர். யான் இவர்களின் தந்தைக்குத் தோழன். இவர்களை என் மகளிராகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அந்தணப் புலவனாகிய யான் இவர்களுக்குரிய மணாளளைத் தேடி வந்திருக்கிறேன். துவார சமுத்திரத்தை ஆண்ட மன்னர் வழி வந்தவன் நீ. வேளிர்களுக்குள் சிறந்த வேள். யான் இவர்களை மணம் புரிந்து தருகிறேன். இவர்களை நீ உன் மனைவியராக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவனிடம் சொன்னார்.

அவன் அதைப் பணிவாகக் கேட்கவில்லை. “எங்கோ பிறந்து வளர்ந்த பெண்களை ஒரு தொடர்பும் இல்லாத நீர் கொணர்ந்து தர நான் மணம் செய்து கொள்வதா வது!” என்று இழிவுக் குறிப்புத் தோன்றப் பேசினான்.

விச்சிக்கோன் அந்தப் பெண்களை மணக்க மறுத்த போதே கபிலருக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று அவன் தக்க காரணத்தைக் கூறினான். இங்கே இருங்கோ வேளோ எடுப்பாகப் பேசினான். ‘இவனைக் குறை கூறிப் பயன் இல்லை. நாம் வலிய வந்தது பிழை!’ என்று தம்மைத் தாமே அப்புலவர் பெருமான் நொந்து கொண்டார். பாரியைப் பிரிந்து இடிந்துபோன அவர் நெஞ்சம் இப்போது சிதறியது; சினமும் மூண்டது. “புலவர்களைப் புறக்கணிப்பதனால் என்ன கேடு உண்டாகும் என்பதை நீ உணரவில்லை. உன்னுடைய குலத்தில் முன்பு ஒருவன் கழாத்தலையார் என்ற புலவரை இகழ்ந்தான். அதனால் அவன் மங்கி மாய்ந்தான்.

அவனுடைய அரையம் என்ற நகரும் அழிந்தது. உங்கள் குலத்தில் அப்படி ஒருவன் இருந்ததை நினைக்காமல், எவ்வி என்பவன் பிறந்த குலமாயிற்றே என்று எண்ணி வந்தேன். நான் தெரியாமல் வந்துவிட்டேன், நான் சொன்னவற்றைப் பொறுத்துக்கொள். இதோ புறப்படுகிறேன். உன் வேல் வெல்லட்டும்!” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *