பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

வெற்றி


முடிமன்னர் மூவருடைய படைகளும் பறம்பு மலையின் அடிவாரத்திலேயே இருந்தன. போர் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல், உண்பதும் உறங்குவதுமே வேலையாகப் படை வீரர்கள் இருந்தார்கள். அந்த வாழ்வு சிறையிலே இருப்பது போன்ற வேதனையை அவர்களுக்கு அளித்தது. “மலையின்மேல் உள்ளவர்களை வெளியில் வராமல் செய்துவிட்டோம் என்று நாம் மகிழ்ச்சி அடைந்தோம். இப்போது நாமும் அவர்களைப்போலவே இருக்கிறோம். வில் இருந்தும் அம்பு எய்யாமல், வாள் இருந்தும் வீசாமல் சோம்பேறிகளாகிவிட்டோம். நாம் நினைத்தபடி வேறு இடங் களுக்குப் போக முடியவில்லை, இந்த மலையைக் காத்துக் கொண்டு, கட்டிப் போட்ட மாடுகளைப்போல இங்கே கிடக்க வேண்டியிருக்கிறது” என்று அவர்கள் பொருமினார்கள்.

பறம்பு மலையின்மேல் உள்ளவர்கள் அங்கே கிடைத்த உணவுப் பொருள்களைக் கொண்டு காலந் தள்ளினார்கள். குறிஞ்சி நிலத்தின் பண்பை நன்கு அறிந்த கபிலர் மலைமேல் விளையும் பொருள்களில் எவை எவை நல்லுணவாகப் பயன்படும் என்று தேர்ந்து அவற்றைச் சேமிக்கச் செய்தார். உணவுப் பொருள்களைத் தொகுத்து இறைவன் திருக்கோயிலிலும் பாரியின் அரண்மனையிலும் சேமித்து வைத்து, அவ்வப்போது மக்களுக்கு வழங்கச் செய்தார். எப்போதும் நெல்லஞ்சோற்றை உண்ட மக்களுக்கு எதைத் தின்றாலும் சோறு தின்றது போன்ற திருப்தி உண்டாகவில்லை. பலாப்பழம் அவர்களுக்கு இப்போது சுவையற்றதாகி விட்டது. தேன் தெவிட்டியது. வள்ளிக் கிழங்கு அவர்கள் உள்ளத்தைக் கவரவில்லை.

இந்த நிலையைக் கபிலர் நன்கு உணர்ந்தார். ஒரு நாள் பாரியுடன் தனித்திருந்து பேசிக் கொண்டிருக்கையில், “நம்முடைய வீரர்களுக்கு நெல்லஞ்சோற்றில் நாட்டம் அதிகமாக இருக்கிறதுபோல் தோன்றுகிறது” என்றார்.

“இருக்கலாம்; இருப்பது இயல்புதான். ஆனால் போர்க்களத்தில் சோற்றையா நினைத்துக்கொண் டிருப்பது?” என்று பாரி கேட்டான்.

”போர்க்களமா? நாம் நம்முடைய இடத்தில்தானே இருக்கிறோம்? நீ உன் அரண்மனையில்தானே வாழ்கிறாய்? நாள்தோறும் போரா நடக்கிறது? ஒரு வேலையும் இல்லாமல் வாளா இருக்கும் வழக்கம் நம் குடிமக்களுக்கு இல்லை. ஆனால், இப்போது இந்த முற்றுகையினால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது.”

“அஃது உண்மைதான். சும்மா இருப்பதனால் சோற்றின்மேல் ஆசை உண்டாகிறது என்று சொல்ல வருகிறீர்களா?’;

“இல்லை, இல்லை. பல காலம் தாம் உண்டு பழகிய உணவில் மக்களுக்கு விருப்பம் உண்டாவது இயற்கை. இங்குள்ளவர்களுக்கு அரிசிச் சோற்றில் ஆசை உண்டானது நியாயந்தான். அந்த ஆசையை நிறை வேற்றுவது நம் கடமை.”

கபிலர் இவ்வாறு கூறியதைக் கேட்டுப் பாரி சற்றே மயங்கினான். நீங்கள் சொல்லுவது….’ என்று தொடங்கி அவன் மேலே சொல்வதற்குள் கபிலரே தொடர்ந்து பேசலானார்.

”அவர்களுக்கு அரிசிச் சோற்றைச் சமைத்து அளிப்பது நம் கடமை. இப்போது எப்படி அரிசி கிடைக்கும் என்ற ஐயம் உனக்கு எழக்கூடும். கிடைக்கும்படி செய்யலாம் என்று நம்புகிறேன்.”

அது “எப்படிக் கிடைக்கும்?” என்று ஆவலுடன் கேட்டான் பாரி.

“இன்னும் சில நாட்களில் நம்முடைய வீரர்களுக்கு அரிசிச் சோற்றை வழங்க முடியும். பாரீசனுக்கும் நெல்லஞ் சோற்றை நிவேதனம் செய்யலாம்.”

கபிலர் உறுதியோடு பேசினார். பேசியபடியே செய்தார்.

கிளிகளுக்கும் குருவிகளுக்கும் ஒவ்வொரு நாளும் தினை முதலியவற்றை வீசுதல் பறம்பு மலையில் வழக்கம் என்பதை முன்பே கண்டோம். அந்தத் தானியங்களைக் கொத்தித் தின்ன வரும் பறவைகள் அங்குள்ள மக்களைக் கண்டு அஞ்சாமல் பழகின. அவற்றோடு கபிலர் பின்னும் நெருங்கிப் பழகினார். பறந்து சென்று அடிவாரத்தில் உள்ள வயல்களை அடைந்து, அங்கிருந்து நெற்கதிர் களைப் பறித்து வரும்படியாகப் பழக்கப்படுத்தினார். நூற்றுக்கணக்கான கிளிகளும் குருவிகளும் இந்த வேலை யில் ஈடுபட்டன. ஒவ்வொரு நாளும் நெற்கதிர்கள் வந்து குவிந்தன. அவற்றைக் கொண்டு அரிசிச் சோறு சமைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு வீரர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள்.

தம்முடைய மதித் திறத்தால் இந்த அதிசயமான செயலைச் செய்த கபிலரைப் பாரி வணங்கிப் பாராட்டினான். வீரர்கள் வியந்து வியந்து புகழ்ந்தார்கள். தமக்கு விருப்பமான சோறு கிடைத்த பிறகு அவர்களுக்கு. ஒரு குறையும் இல்லை.

ஒரு நாள் பறம்பு மலையின் மேலிருந்து ஒரு சிறிய பொதி அம்பொன்றிலே கோக்கப்பெற்றுக் கீழே வந்து விழுந்தது. பகைவர்களின் படைவீரர்களிடையே அது விழுந்தவுடன் சிலர் அதை எடுத்துப் படைத் தலைவர்களிடம் கொண்டு போய்க் கொடுத்தனர். அது சோற்றுருண்டையாக இருந்தது. ”மேலே இந்தச் சோறு எப்படிச் சென்றது? அவர்களுக்கு நெல் ஏது?” என்ற கேள்விகளை அவர்கள் தமக்குள் கேட்டுக் கொண்டார்கள். “சிவபெருமான் பிரசாதம்; நல்ல சம்பா அரிசிச் சாதம்” என்று எழுதிய நறுக்கோலையும் அந்தப் பொதியோடு இருந்தது.

அதைக் கண்டபோது அவர்களுக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. அடுத்தபடி மற்றோர் அம்பிலே கோத்துச் சில நெற்கதிர்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்கப் படையில் உள்ளவர் களுக்கு ஒரே பிரமிப்பாகப் போய்விட்டது. ‘மலையின் மேல் வெறும் மூங்கில் நெல்லும் பலாப்பழமும் மட்டும் இருக்கின்றன என்றல்லவா நினைத்தோம்? நெல்கூட இருக்கிறதே! சேமித்து வைத்த நெல்லானால் இத்தனை நாளைக்குப் பின்னும் இருக்குமா? மலையின்மேல் நெல் விளையுமா?’ என்று அவர்கள் எண்ணி எண்ணிப் பார்த்தார்கள். “பாரிக்கு மக்களுடைய துணையைக் காட்டிலும் கடவுளின் துணை நிரம்ப இருக்கிறது. இல்லையானால், ஒரு சிற்றரசன் முடிமன்னர்களுடைய படைகள் தன் மலையை இவ்வளவு காலம் முற்றுகையிட்டிருக்க, அசையாமல் நலியாமல் விருந்து சாப்பிட்டுக் கொண்டு மேலே இருக்க முடியுமா? அவனுக்கு எப்படி இத்தகைய நிலை உண்டாயிற்று? இது பெரிய அதிசயம்! அற்புதம்!” என்று வியந்தார்கள்.

பறம்பின்மேல் உள்ளவர்களுக்கு உணவுப் பஞ்சம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை என்ற செய்தியை அங்குள்ள படைத் தலைவர்கள் சேர சோழ பாண்டியர் தெரிவித்தார்கள்.

‘இங்கே நம்முடைய கற்பனைக்கு எட்டாத அற்புதம் நிகழ்கிறது!” என்று தூதுவர்கள் வாயிலாக ஓலை போக்கினார்கள். அதைக் கண்டவுடன் அந்த மன்னர்களே வந்துவிட்டார்கள். வந்து செய்தியை உணர்ந்தபோது அவர்களும் வியப்பதையன்றி வேறு என்ன செய்ய முடியும்?

அவர்கள் வந்திருந்தபோது மீண்டும் ஓர் ஓலை வந்து விழுந்தது. வழக்கம்போல அதில் ஒரு பாட்டு இருந்தது. இந்த முறை பெரிய பாடலாக இல்லை; சிறியதாகவே இருந்தது.

“இந்தப் பெரிய பறம்பு மலையைக் கண்டால் இரக்கந்தான் உண்டாகிறது! இது எத்தனை பேரை வேலை வாங்குகிறது! வேலின் பலத்தைக் கொண்டு இதை வெல்லுதல் மன்னர்களால் முடியாத காரியம்; கையிலே பறையை எடுத்து அடித்துப் பாடிக்கொண்டு வரும் பெண்ணாக இருந்தால் இதை எளிதிலே பெற்றுக் கொள்ளலாம்” என்ற செய்தியை அப்பாடல் சொல்லியது.

அளிதோ தானே பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே.

நீங்கள் ஆண்களாக இருந்து என்ன பயன்? கையில் வேலும் வில்லும் எடுத்துப் போர் செய்து காட்டிய வீரம் என்ன? ஆண் உருவம் தாங்குவதற்கே தகுதியில்லாதவர்கள் நீங்கள்’ ‘என்று குறிப்பாக இடித்துக் காட்டுவது போல இருந்தது பாட்டு.

அதைப் பார்த்தபோது மன்னர்களுக்கு மான உணர்ச்சி மிக்கது. ஆனாலும் என் செய்வது? பொறியில் அகப்பட்ட எலி போல வெல்லவும் முடியாமல், விட்டுச் செல்லவும் முடியாமல் திண்டாடினர்.

மறுபடியும் ஒரு பாட்டு வந்தது “பெரிய படைகளையுடைய மூன்று மன்னர்களும் கூடிப் போராடினாலும் இந்தப் பறம்பு மலை கைப்பற்றுவதற்கு அரிது. பறம்பு நாட்டில் முந்நூறு ஊர்கள் இருக்கின்றன. அந்த முந்நூறு ஊர்களையும் பரிசிலர்கள் பெற்றார்கள். இப்போது பாரியும் நானும் இருக்கிறோம். எங்களுக்குப் புகலிடமாகப் பறம்பு மலையும் இருக்கிறது. நீங்கள் பாடிக்கொண்டு வந்தால் எங்களையும் பெறலாம்; பறம்பையும் பெறலாம்” என்று அந்தப் பாட்டு மீண்டும் குறிப்பாக அவர்களை இகழ்ந்தது.

அதைக் கண்ட மன்னர்களுக்கு, ‘இனி இங்கே இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட்டு வந்து கொண்டே இருக்கும். வில்லம்பு வந்தாலும் தாங்கலாம்; இந்தச் சொல்லம்பு நம்மால் தாங்க வொண்ணாதது. ஒவ்வொரு கவிதையும் பாரியின் சிறப்பைக் காட்டுவதோடு நம்மை இழித்தும் கூறுகிறது. இப்பாடல்கள் தமிழுலகத்தில் பிற்காலத்திலும் வழங்கி, நமக்கு மாளாப் பழியை உண்டாக்கும். ஆதலின், இப்போதே நாம் நம்முடைய முயற்சியைக் கைவிட்டுச் செல்வது நலம்’ என்ற எண்ணமே தோன்றியது. “இவனை வேறு வகையில் வெல்வதற்குரிய சூழ்ச்சியைச் செய்வோம். இப்போதைக்குப் பறம்பு மலையை விட்டு அகலுவோம்” என்று தீர்மானம் செய்தார்கள்.

இரவோடு இரவாக மூவர் படைகளும் அவ்விடத்தை விட்டு அகன்றன. மறுநாள் கதிரவன் எழுந்தான்; தன்னைச் சுற்றியிருந்த பகைப்படையாகிய மாசு தீர்ந்து பறம்பு மலை தன் வளம் குன்றாமல் நிமிர்ந்து நின்றது. பறம்பு மலையின் சிறப்பும் கபிலருடைய பாடல்களும் துணை செய்ய, பாரிவேள் மூவேந்தர் படைகளையும் சலிப்புற்று ஓடச் செய்து வெற்றி பெற்றான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *