பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

கபிலர் நட்பு


பாரியின் இயல்புகளைக் கபிலர் நன்கு உணர்ந்து கொண்டார். பறம்பு மலையில் இருந்த பாரீசன் திருக் கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்தார். பறம்பு மலைப் பரப்பை ஓரளவு கண்டு மகிழ்ந்தார். இயற்கை யெழிலைக் கண்டு மகிழ்வது புலவர் இயல்பு. மற்றவர்களுக்கும் அந்த எழில் புலப்பட்டாலும் புலவர்கள் கண்டு மகிழும் முறையே வேறு. நாம் அவற்றின் வெளி அழகையே ஊன்றிப் பார்ப்பதில்லை. கவிஞர்களோ இயற்கை யெழிலை நன்கு கண்டு நுகர்ந்து அதனூடே ஆழ்ந்து தம்மை மறந்து நிற்பார்கள். பூவும் புனலும், மானும் மரையும், காடும் பொழிலும் அவர்களோடு பேசும்; பேசாமல் பேசும். அவற்றின் பேச்சை உணர்ந்துகொள்ளும் நுட்பமான இயல்பு கவிஞர்களுக்குத்தான் உண்டு. கணத்துக்குக் கணம் புதுமை பெற்றுப் பொலிவதாகக் கவிஞர்களுக்கு இயற்கை காட்சி அளிக்கும். மரத்தின் ஒவ்வோர் இலையும் கவிஞர்களின் கவிதையை மெளன மொழியிலே எழுதும் ஏடாக விளங்கும். ஒவ்வொரு பூவும் அவர்களுடைய கற்பனைக்கு மணம் ஊட்டும். வண்ணம் தீட்டும். கல்லும் முள்ளுங் கூடக் கவிஞர்களின் பார்வையில் அழகு பெறும்.

ஆகவே, கபிலர் பறம்பு மலையின் பகுதிகளைக் கண்ட போது அங்குள்ள காட்சிகளில் சொக்கிப் போனார். பொய்கைக் கரையில் பல நாழிகை நின்று அதன் அலை களையும் ஆழத்தையும் நீரின் தெளிவையும் கண்டார்.

துள்ளிக் குதிக்கும் மீன்களைக் கண்டார். பூத்திருக்கும் மலர்களைக் கண்டு முகம் மலர்ந்தார். சின்னஞ் சிறு சுனைகளைப் பார்த்து மகிழ்ந்தார். அவர் மதுரையில் வையையாற்று வெள்ளத்தைப் பார்த்து மகிழ்ந்தவர்; அதில் காணாத தெளிவை இந்தச் சுனைகளில் கண்டார். பெரிய குளங்களைக் கண்டவர்; அவற்றிற் காணாத இயற்கையமைப்பை இவற்றில் கண்டார். பல பூம் பொழில்களைப் பார்த்து மகிழ்ந்தவர்; அங்கே காணாத சிறப்பைப் பறம்பு மலைக் காடுகளில் கண்டார்.

அரண் மனையில் வளரும் மானையும் மயிலையும் அவர் கண்டு களித்ததுண்டு; இங்கே தம் மனம் போனபடி துள்ளி விளையாடும் மானையும், தோகை விரித்து ஆடும் மயிலையும் கண்டு சுதந்தர வாழ்வினால் அவற்றிற்கு இயல்பாக அமைந்திருக்கும் வளப்பத்தையும் ஆனந்தத்தையும் உணர்ந்து மனம் களித்தார். எங்கே பார்த்தாலும் அவர் புதுமைக் கோலத்தைக் கண்டார்; இயல்பாக வளரும் வளர்ச்சியைக் கண்டார்.

வேங்கை மரமும் சந்தன மரமும் அவர் உள்ளத்திலே மகிழ்ச்சியை உண்டாக்கின. பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கும் பலா மரங்களைக் கண்டபோது அவருக்கு இன்பம் ஊறியது. மூங்கிலின் உயரத்தைக் கண்ணால் அளந்தார். சுனைகளின் ஆழத்தைக் கருத்தால் அளந்தார்.

எல்லாவற்றையும் தனக்கு உரியவையாகப் பெற்ற பாரியின் குணங்களில் கபிலர் மூழ்கித் திளைத்து மகிழ்ந்து உருகினார்.

இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். மதுரைக்குச் செல்லவேண்டுமென்று விடை பெற்றபோது பாரி விம்மினான். உயிரையே பிரித்துவிடும் கொடுமையை அப் பிரிவு உண்டாக்குமோ என்று அஞ்சினான்.

“பாண்டிய மன்னனுடைய அரசவை இங்கே இல்லை. நல்லிசைச் சான்றோர் தமிழாராயும் சங்கமும் இல்லை. மாட மதுரை இங்கே இல்லை. இதனை நான் நன்கு உணர்கிறேன். இவ்வளவு சிறந்த நிலைக்களத்தில்தான் கபிலர் என்னும் ஒப்பிலா மாணிக்கத்தை வைத்துப் போற்ற வேண்டும் என்பதையும் நான் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால்.. ஆனால் பாரியால் பேச முடியவில்லை.

“நீ என்ன சொல்லுகிறாய்?’ என்று கபிலர் அன்பு ததும்பக் கேட்டார்.

“என்னுடைய அன்புக்கும் ஆசைக்கும் குறைவில்லை. ஆயினும் அவற்றைக் கொண்டு நான் ஈடுசெய்ய முயல்வது பேதைமை. அவ்வளவு பெரிய இடத்தில் ஒளிரும் தங்களை இந்தச் சிறிய குன்றில் வைத்திருக்க வேண்டும் என்று ஏழையாகிய நான் ஆசைப்படுவது பேதைமையிலும் பேதைமை. ஆனால் ஏதோ ஒன்று என் உள்ளத்தில் கிளுகிளுக்கிறது. தேவரீருடைய கருணை இருக்குமானால் இங்குள்ள குறைகளை யெல்லாம் நிரப்பிக்கொள்ளும் வாய்ப்பு நேரலாம் என்ற எண்ணம், ஏனோ எனக்கு அடிக்கடி தோன்றுகிறது.”

“பார்ப்போம். இறைவன் அருளின்படி எல்லாம் நடக்கும்’ என்று சொல்லி விடை பெற்றார் கபிலர்.

“அடிக்கடி வரவேண்டும்” என்று யாவரும் வேண்டிக் கொண்டனர். “அப்படியே செய்வேன்” என்று சொல்லி மதுரைக்குப் புறப்பட்டார் புலவர்.

அங்கே போனதுமுதல் அவருக்கு ஒன்றுமே சுவைக்கவில்லை. பறம்பு மலையும் பாரியும் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டதை அவர் உணரலானார். விரைவில் மறுபடியும், பறம்பு மலைக்குப் போனார். இப்படிச் சிலமுறை போய் வந்தார். ஒவ்வொரு முறையும் கபிலருக்கும் பாரிக்கும் இடையே தோன்றிய அன்பு முறுகியது; இறுகியது; வன்மை பெற்றது; அது நட்பாக மாறியது. இறுதியில் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ இயலாது என்ற நிலை உண்டாயிற்று. இருவரும் ஒருங்கே கூடி வாழ்வதுதான் இருவருக்கும் இன்பம் பயக்கும் என்ற முடிவுக்கு வந்தனர் நண்பர் இருவரும்.

வள்ளல் பாரி குறுநில மன்னன். அவன் தன் நாட்டை விட்டு மதுரைக்குச் சென்று வாழ்வது இயலாத செயல். ஆகவே, கபிலரே பறம்பு மலைக்கு வந்து வாழ முடிவு செய்தார். இந்த முடிவு மதுரையில் வாழ்வாருக்குத் துன்பத்தைத் தந்தாலும் பறம்பு நாட்டினர் அமுதத்தைப் பெற்ற வானவரைப் போலக் களிக் கூத்தாடினர். பாரி தன் வாழ்வின் பயனைப் பெற்றவன் ஆனான்.

பாரியும் கபிலரும் ஒன்றுபட்டனர். பாரியின் ஆசிரிய ராகவும் அமைச்சராகவும் நண்பராகவும் அவைக்களப் புலவராகவும் விளங்கலானார் கபிலர்.

பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

முல்லைக்குத் தேர்


வளம் செறிந்த பறம்பு நாட்டில் அடர்ந்த காடுகளும் இருந்தன. காடும் காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை என்று பெயர் பெறும். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணையாகும். பாரியினுடைய பறம்பு நாட்டில் குறிஞ்சி நிலமும் இருந்தது; முல்லை நிலமும் இருந்தது. பறம்பு மலையிலும் அதைச் சார்ந்த இடங்களிலும் குறிஞ்சி வளத்தைக் கண்டு மகிழலாம். வேறு இடங்களில் காடுகள் செறிந்த முல்லை வளத்தைக் காணலாம்.

வள்ளல் பாரி அவ்வப்போது தன் நாட்டு மக்களைக் கண்டு அளவளாவிவிட்டு வருவான். பறம்பு மலைப் பகுதிகளுக்குச் சென்று மலை வளம் கண்டு மகிழ்ந்து வருவான். அப்படியே காட்டு வளமும் கண்டு வருவது உண்டு. குறிஞ்சி நிலத்தில் வேங்கை மரமும் தேக்க மரமும் சந்தன மரமும் பலா மரமும் ஓங்கி வளர்ந்தன. குறிஞ்சி மலரும் காந்தள் மலரும் மலர்ந்தன. மானும் மரையும் கரடியும் சிறுத்தையும் பாய்ந்து ஓடின. அருவியும் சுனையும் நீரை உதவின. அவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்தான் பாரி. தினைக் கொல்லையிலும் வரகுக் கொல்லையிலும் குறிஞ்சிநில மக்கள் உணவு விளைத் தனர்; அங்கே சென்று அவர்களுடைய முயற்சியைப் பாராட்டினான். குறவரும் குறத்தியரும் தொண்டகப் பறையை முழக்கி முருகனை வழிபட்டுக் குறிஞ்சிப் பண்ணைப் பாடிக் கூத்தாடினார்கள்; அவர்களுடைய பக்தியைக் கண்டு வியந்தான்.

இப்படியே முல்லை நிலத்துக்குச் சென்று அங்குள்ள காட்சிகளையும் அவன் கண்டான். அங்கே கொன்றை மரமும் குருந்த மரமும் வளர்ந்திருந்தன. முல்லை மலரும் தளவமும் மலர்ந்து மணந்தன. காட்டாறு ஓடியது. பசுமாடுகள் நிரை நிரையாக மேய்ந்தன; அவற்றைக் கண்டு களித்தான். ஆயரும் ஆய்ச்சியரும் முல்லைப் பண்ணைப் பாடிக் கண்ணனை வழிபட்டு ஆடினார்கள்; அவர்களுடைய ஆட்டத்தைக் கண்டு களித்தான்.

தம்முடைய மன்னன் வரும்போதெல்லாம் அந்நாட்டு மக்கள் அவனைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தனர். தம் நிலத்தில் விளைந்த பொருள்களைக் கையுறையாகக் கொணர்ந்து அளித்தனர். பாரி குடிமக்களுடைய நன்மை தீமைகளை அவ்வப்போது அறிந்து, செய்ய வேண்டியவற்றைச் செய்தான்; காட்சிக்கு எளியவனாகப் பழகினான்; தாயைக் குழந்தைகள் அணுகுவது போலக் குடிமக்கள் வள்ளல் பாரியை அணுகித் தம் குறைகளைத் தெரிவித்தார்கள்.

ஒரு நாள் காடு அடர்ந்த ஓரிடத்திற்குச் சென்றான் பாரி. யாரையும் அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் தனியே சென்றான். தேரை ஓட்டும் பாகன் மாத்திரம் உடன் இருந்தான். காட்டு நிலத்திலும் வழிகள் இருந்தன. ஆதலின் அவ் வழியே தேரைச் செலுத்தச் செய்தான். அவ்வாறு போய்விட்டு மீள்கையில் ஓர் அரிய நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சி மக்கள் உள்ளத்தில் பதிந்து, புலவர்கள் பாடலிற் புகுந்து,

பாரியை மற்ற வள்ளல்களினின்றும் வேறுபிரித்துக் காட்டும் செயல் ஆகிவிட்டது.

தேர் திரும்பும்போது பிற்பகல் நேரம். கதிரவன் மேல் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். பறம்பு மலையின் அடிவாரத்தை நோக்கித் தேர் போய்க் கொண்டிருந்தது. முல்லை நிலத்தின் வழியே போகும்போது பாரி, “தேரை நிறுத்து” என்று கூவினான். இருமருங்கும் உள்ள காட்சிகளை மெல்லப் பார்த்துக்கொண்டு சென்றமையால் தேர் மெல்லத்தான் சென்றது. திடீரென்று தேரை நிறுத்தும்படி பாரி சொல்லவே, தேரோட்டி நிறுத்தினான். வள்ளல் பாரி தேரிலிருந்து கீழே இறங்கினான்.

அருகில் ஒரு முல்லைக்கொடி வளர்ந்திருந்தது. இளங்கொடி அது; நிறைய அரும்பு கட்டியிருந்தது.மாலை நேரம் வந்தால் குப்பென்று மலர்ந்துவிடும். பருவம் வந்த மடமங்கை போல அது தளதளவென்று வளர்ந் திருந்தது. ஆனால் அருகில் பற்றுக்கோடு ஒன்றும் இல்லாமல் அது காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தளர் நடை பழகும் குழந்தை தட்டுத் தடுமாறி வந்து கீழே விழும் நிலையில் இருப்பதுபோல அந்தக் கொடி தளர்ந்து நின்றது. குருடன் ஒருவன் கால் தளர்ந்து எதையேனும் பற்றிக்கொள்வதற்காக நாற்புறமும் கையால் வெறும் வெளியைத் துழாவுவதுபோல அந்தக் கொடி அசைந்தது. நடு வழியில் துணையின்றி நிற்கும் கன்னிப் பெண்ணைப் போல அது அலைப்புண்டு நின்றது. மெல்லிய காற்றில் அது திரும்பித் திரும்பி அசைந்தது; வளைந்து நிமிர்ந்தது. அப்போது, வழியில் போவோரை, எனக்குத் துணைபுரிய வாருங்கள் என்று அழைப்பது போல இருந்தது.

அஃது ஒசிந்து தளர்ந்து கொழு கொம்பின்றி அசைவதைப் பாரி கண்டான். மக்கள் வருந்துவதைக் கண்டு மனம் குழைந்து உடனே உதவி புரியும் இயல் புடையவன் அவன். அது பெரிதன்று; விலங்கினங்கள் துன்புற்றாலும் காணச் சகிக்காதவன். வீட்டில் உணவு சமைத்தவுடன் நம் நாட்டு மங்கையர் காக்கைக்குச் சோறு போடுவார்கள். காகங்கள் கூட்டமாக வந்து, ”கா!கா!” என்று கத்திக்கொண்டு அந்தச் சோற்றை உண்ணும். பாரியின் பறம்பு மலையில் வேறு ஓர் அரிய காட்சியைக் காணலாம். தினையரிசியையும் வேறு தானியங்களையும் இறைவனுடைய திருக்கோயிலின்முன் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் வாரி இறைக்கச் செய்தான் பாரி. அவனும் இறைப்பான். அப்போது கிளிகளும் குருவிகளும் கூட்டம் கூட்டமாக வந்து அந்தத் தானியங்களைத் தின்னும். இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மனிதர்களைக் கண்டு அஞ்சாமல் அங்கே கிளிகள் கூட்டமாக வந்து பழகும்; குருவிகள் கொத்தித் திரியும்.

இவ்வாறு எல்லா உயிர்களிடத்திலும் அருளோடு பழகும் இயல்புடையவன் பாரி. அவன் கண்ணில் பற்றுக்கோடின்றிப் பதைபதைத்து நிற்கும் முல்லைக் கொடி பட்டது. ஒரறிவுயிராயினும் அஃது இறைவன் படைப்பிலுள்ள உயிர்க்கூட்டங்களில் ஒன்றுதானே? பச்சை மரங்களைக் காரணம் இன்றி வெட்டாதவர் தமிழர். நோய்க்கு மருந்தாக ஏதேனும் பச்சிலையைப் பறிக்க வேண்டுமானாலும் அதற்கு மனம் வருந்தி இறைவனை எண்ணிப் பறிப்பது மரபு. தாவிப் படக் கொழு கொம்பு இல்லாத கொடிக்குக் கோல் ஊன்றிப் படர விடுவதை அறச் செயலாக எண்ணும் மனப் பான்மை யுடையவர்கள் தமிழ்நாட்டுச் சான்றோர்கள்.

முல்லைக் கொடியின் வளர்ச்சி கண்டு மகிழ்ந்த பாரி அதன் தளர்ச்சி கண்டு மனம் நெகிழ்ந்தான். அதனைப் படர விட அருகில் மரம் இல்லை. இருந்தால் அதுவே பற்றிக்கொள்ளாதா? தன்னை அணுகும் இரவலர்க்குக் கையில் உள்ளது எதுவாயினும் வழங்கிவிடும் வள்ளல் பாரி, தன் முன் நிற்பவருடைய வறுமையை நினைப்பானேயன்றித் தான் கொடுக்கும் பொருளின் அருமையைக் கருதமாட்டான். தேர் இருந்தால் தேரைக் கொடுப்பான்; குதிரை இருந்தால் குதிரையைக் கொடுப்பான்; யானையையும் கொடுப்பான். ஒன்றும் இல்லையானால் தோள்வளையைக் கழற்றிக் கொடுப்பான். இன்னதைக் கொடுப்பான், இன்னதைக் கொடுக்கமாட்டான் என்ற வரையறையே இல்லை. இதைத்தான் கொடை மடம் என்று சொல்வார்கள்.

“கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே” என்று பாடுவார்கள் பெரியவர்கள். துணை செய்வாரின்றி வாடும் மக்களின் துயரத்தைச் சுட்டுவதற்குச் சிறந்த உபமானமாகப் பற்றுக் கோடில்லாத கொடியைச் சொல்வது பழமொழியாகி விட்டது, தமிழ்நாட்டில். பாதுகாப்பின்றித் தவிப்பவரைக் கண்டு நெகிழும் உள்ளம், அப்படித் தவிப் போருக்கெல்லாம் உவமையாக இருக்கும் கொம்பில்லாக் கொடியைக் கண்டு நெகிழாமல் இருக்குமா?

முல்லைக் கொடியைக் கண்ட கணத்திலே பாரி மனம் உருகினான். அது மென்காற்றில் அலைந்து தவித்த காட்சி அவன் உள்ளத்தை அலமரச் செய்தது. அதற்கு வேண்டியது கொழுகொம்பு; ஒரு பற்றுக் கோடு. யாரேனும் உழவனாக இருந்தால் எங்காவது போய் ஒரு மூங்கிலைத் தேடிக் கொண்டு வந்து அங்கே நடுவான். வருந்துகிறவர்களைக் கண்டபோதே அருள் சுரந்து அந்தக் கணத்தில் கிடைத்ததை வீசும் பாரியால் அப்படிச் செய்ய இயலாதே!

அவன் உடனே தேர்ப்பாகனை அழைத்தான். குதிரைகளை அவிழ்த்துவிடச் சொன்னான். மெல்லத் தன் தேரையே முல்லைக் கொடியின் அருகில் இழுத்து நிறுத்தச் செய்தான். கொடியை மெல்ல அதன்மேல் எடுத்துவிட்டான். அப்போது அவனுக்கு உண்டான இன்பத்தை அளந்தறியும் ஆற்றல் யாருக்கு உ ண்டு? ஆழ்கடலில் மூழ்கி உயிர் போகும் தறுவாயில் இருந்த ஒரு குழந்தையை எடுத்துக் கரையில் விட்டது போன்ற உவகை அவனுக்கு உண்டாயிற்று என்று சொல்லலாமா? பலநாள் பசித்திருந்த ஏழைக்கு இலை நிறையச் சோறு போட்டதைப் போன்றிருந்தது என்று கூறலாமா? தனக்கு ஏற்ற மணாளன் கிடைக்காமல் நின்ற கன்னி ஒருத்திக்கு ஓர் ஆடவனை மணம் செய் வித்தது போன்றது என்று இயம்பலாமா? அத்தகைய செய்கைகளை உலகம் கண்டிருக்கும். ஆனால் ஒரு கொடி தளர்வது கண்டு அதைத் தாங்கத் தன் தேரை நிறுத்திய பாரியின் செயலையும், அதற்குக் காரணமாக இருந்த அவனது உயர்ந்த அருள் உள்ளத்தையும் உவமையைக் கூறித் தெரிந்துகொள்ள முடியாது. அவற்றிற்கு அவையே ஒப்பு.

நாம் செல்லும் தேராயிற்றே என்று பாரி நினைக்கவில்லை. அவன் நினைவு முழுவதும் அந்தக் கொடி நின்ற நிலையிலே, அதன் தளர்ச்சியிலே ஒன்றிப் போய் விட்டது. அப்போது அவன் தேரில் வராமல் நடந்து வந்திருந்தால், தானே கொழுகொம்பாக நின்றிருப்பான்! என்ன அருமையான பண்பு!

சிறிது நேரம் பாரி முல்லைக் கொடியைப் பார்த்தான். அது தன் அரும்புகளைக் காட்டிப் புன்முறுவல் பூத்தது. உடன் நின்ற தேரோட்டி பாரியின் செயலைக் கண்டு வியப்பு அடைந்தான். அந்த வள்ளலுடைய அருட் செயல்கள் பலவற்றைக் கண்டவன் அவன். ஆயினும் அந்த அருள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு, மிகமிக நுட்பமான நிலைக்குச் செல்லும் என்பதை அவன். நினைத்தும் பார்க்கவில்லை.

பாரி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். முல்லை பற்றுக்கோடு பெற்றுப் படர்ந்த அழகைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான்.

பறம்பின் அடிவாரம் வந்தான் பாரி. அங்கே இருந்த குடிமக்களிடம் தேர்ப்பாகன் தான் கண்ட அதிசயத்தைச் சொன்னான். அவர்கள் வியந்தார்கள். வள்ளல் பாரியின் மன நெகிழ்ச்சியைப் பாராட்டினார்கள். சிலர் வேண்டிய பொருள்களுடன் அவ்விடத்துக்குச் சென்று ஒரு பந்தலையே போட்டு முல்லைக் கொடியைப் படரவிட்டுத் தேருக்கு விடுதலை அளித்தார்கள்.

காட்டு வழியில் பந்தலிலே படரும் முல்லைக் கொடி அஃது ஒன்றுதான். மற்றக் கொடிகளுக்கு இல்லாத பெருமை அதற்கு உண்டாயிற்று. அந்தப் பந்தல் பாரியின் தேரை நினைப்பூட்டிக் கொண்டிருந்தது. அந்த வள்ளலின் உள்ளத்தை நெகிழ்வித்த முல்லைக் கொடியை மக்கள் வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள்.

“முல்லைக்குத் தேரை வழங்கினான் பாரி” என்ற செய்தி பறம்பு நாடு முழுவதும் பரவியது; புலவர்கள் உள்ளத்தே வியப்பையும் களிப்பையும் படரச் செய்தது. அவர்கள் பாடிய பாடல்களில் முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளலென்று பாரியின் புகழ் படர்ந்தது.

பாரி வேறு பல வகையில் தன் கொடைத் திறத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியின் தளர்ச்சிக்கு மனம் இரங்கித் தன் தேரை அளித்த வள்ளன்மையையே அதுமுதல் புலவர்களும் பிறரும் பெரிதாக நினைந்து பாராட்டினர். பாரி என்று பெயர் சுட்டாமலே ‘முல்லைக்குத் தேர் ஈந்தவன்’ என்று சொன்ன அளவிலே அவனைத் தமிழுலகம் உணர்ந்து கொண்டது;இன்றும் அவன் முல்லைக்குத் தேர் வழங்கிய திறத்தைப் பாராட்டுகிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *