பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

திருமணம்


கபிலர் உயிர் நீத்ததை அறிந்த அங்கவையும் சங்கவையும் துடித்துப் போயினர். தமக்காகக் கபிலர் எங்கெங்கெல்லாம் போனார். எப்படி யெல்லாம் வேதனை யுற்றர் என்பதை அறிந்தவர்கள் அல்லரா?

மணமாகாத கன்னிப் பெண்களாக வாழ்ந்த அவர் களைப் புலவர் உலகம் மரியாதையோடு பாராட்டியது. புலமை மிக்க ஒளவைப் பிராட்டியார் பாரிவேளை நன்கு அறிந்தவர். கபிலர் பெருமையையும் உணர்ந்தவர். அவருக்குக் கபிலர் தீப் பாய்ந்த செய்தியோடு, பாரியின் மகளிர் அந்தணர் வீட்டில் வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. அவ்விடத்துக்குச் சென்று அந்த மகளிரைக் கண்டார்.

ஒளவையாரைக் கண்டதும் அந்த மகளிர் இருவரும் புலம்பி அழுதார்கள். கடல் உடைத்துக் கொண்டது போல, அதுகாறும் தேங்கியிருந்த துயரம் வெள்ளமாகப் பொங்கியது, ”எங்களுக்காகக் கபிலர் எத்தனை தொல்லைகளை அடைந்தார்! எங்களால் தான் மனம் வெறுத்துப்போய் உயிரை மாய்த்துக் கொண்டார். நாங்கள் பூமிக்குப் பாரமாக வாழ்கிறோம். அந்தப் புலவர் பிரான் புண்ணியம் பண்ணியவர். எங்கள் தந்தை யாருடன் சேர்ந்து கொண்டார். நாங்களோ எல்லாவற்றையும் இழந்தோம்; எல்லாரையும் இழந்தோம். நாளைக்கு என்ன நிகழப் போகிறது என்று தெரியாமல், மயங்குகிறோம்” என்று அரற்றினார்கள்.

ஒளவையாருக்கே அவர்களுடைய நிலை பொறுக்க முடியாததாக இருந்தது. பெண்ணுள்ளம் பெண்ணுள்ளத்தை அறியும் அல்லவா? அவர்களின் கண்ணைத் துடைத்தார். “என் கண்மணிகளே! நீங்கள் வருத்தப் பட வேண்டாம். எல்லாம் இறைவனுடைய ஆணையின் படி நடக்கும். நாம் வருந்தி என்ன செய்வது? நான் முன்பே உங்களிடம் வந்து உங்களைப் பார்த்திருக்க வேண்டும். கபிலருடைய பாதுகாப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை! இப்போதாவது வந்தேனே என்று ஆறுதல் அடைகிறேன். இனி நீங்கள் கவலையுற வேண்டாம். சென்றவற்றை மறந்துவிடுங்கள். பாரியையும் கபிலரையும் மீட்டும் என்னால் கொண்டு வர முடியாது. பாரியின் புண்ணியமும் கபிலரின் தவமும் உங்களைக் காப்பாற்றும். உங்களை இல்வாழ்க்கையிலே நிலை நிறுத்திய பின்புதான் வேறு வேலை பார்ப்பதென்று நான் உறுதி பூண்டுவிட்டேன். இறைவன் திருவருள் துணை செய்ய வேண்டும்” என்று தம்முடைய அன்பையெல்லாம் குழைத்துப் பேசினார்.

ஔவையாரின் பெருமையை அங்கவையும் சங்கவையும் நன்கு உணர்ந்தவர்கள். அவர் சொல்லுக்குரிய மதிப்பையும் உணர்வார்கள். ஆகவே, அந்தப் பிராட்டியார் இரக்கமும் அன்பும் கொண்டு கூறிய அந்தச் சொற்கள் அவர்களுடைய துயரத்துக்கு மருந்து போல உதவின. ‘இனி யார் நமக்குத் துணை!’ என்று ஏங்கி யிருந்த அவர்களுக்கு ஒளவையாரின் பேச்சு நம்பிக் கையை உண்டாக்கியது. நிழல் இல்லாத பாலைவனத்தில் தனிமரம் ஒன்று கிடைத்தது போல இருந்தது.

“நீங்கள் என்ன சொன்னாலும் அப்படியே செய்ய ஆயத்தமாக இருக்கிறோம். நீங்கள் கைவிட்டு விட்டால் நாங்களும் கபிலர் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டி யதுதான்” என்று அவர்கள் ஔவையாரிடம் தெரிவித்துக் கொண்டார்கள்.

“இனிமேல் அப்படிப் பேசாதீர்கள். நீங்கள் எல்லா நன்மைகளையும் பெற்று நீடுழி காலம் இன்ப வாழ்வு வாழப் போகிறீர்கள்; மனம் தளராமல் இருங்கள்” என்று சொல்லி, அம் மூதாட்டியார் விடை பெற்றுச் சென்றார். அது முதல் பாரி மகளிருக்குரிய கணவரைத் தேடும் பணியை அவர் மேற்கொண்டார்.

திருக்கோவலூரைத் தலைநகராகப் பெற்ற நாட்டுக்கு மலாடு என்று பெயர்; மலையமான் நாடு என்பதே அப்படி மருவி வழங்கியது. அதை ஆண்டு வந்த குறு நில மன்னர்கள் மலையமான்கள் என்ற பொதுப் பெயரை உடையவர்கள். சிறந்த வள்ளலாக விளங்கிய மலைய மான் திருமுடிக் காரி என்பவன் அந்தக் குலத்தில் உதித்தவனே. அவனும் ஏழு வள்ளல்களில் ஒருவனாக எண்ணப் பெறுபவன். அந்த மலையமான் குலத்தில் அப்போது அரசாண்டிருந்த மன்னனுக்கு இன்னும் மணமாகவில்லை என்று ஒளவையார் அறிந்தார். நல்ல குலமாதலின் பாரி மகளிர் இருவரையும் அம் மன்னனுக்கு மணம் முடித்து வைத்துவிடலாம் என்று ஒளவையாருக்கு ஓர் எண்ணம் எழுந்தது.

அவனிடம் சென்று தம் எண்ணத்தைத் தெரிவித்தார். இறைவன் திருவருள் துணை நின்றமையால் அவருடைய முயற்சிக்கு யாதொரு தடையும் உண் டாகவில்லை. கடைசியில் அவர் எண்ணம் நிறைவேறியது. கோவலூர் மன்னன் பாரி மளிரை மணந்து கொள்ள உடன்பட்டான்.

இந்த மணத்தை நிறைவேற்றும் பொறுப்பு முழுவதையும் ஔவையாரே மேற்கொண்டார். தமக்குத் தெரிந்த செல்வர்களுக்கெல்லாம் திருமண ஓலை போக்கினார். சேர சோழ பாண்டியர்களையும் திருமணத்துக்கு வர வேண்டுமென்று பாடல்களை எழுதியனுப்பினார்.

திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சேர சோழ பாண்டியர்களும் அதற்கு வந்து சிறப்பித்தார்கள். பாரி இறந்த பிறகு அவர்கள் பழைய பகையை மறந்தனர். ஓரளவு இரக்கங்கூடக் கொண்டனர். அங்கவையும் சங்கவையும் மலையமான் குலத்தில் கற்புத் தெய்வங்களாகப் புகுந்தனர். அவர்களுடைய தந்தை யாகிய பாரியும், ஆசிரியராகிய கபிலரும் இல்லை என்ற குறையை யன்றி, அந்தத் திருமணம் ஒரு குறுநில மன்னனுக்குரிய கலியாணமாக இல்லாமல் மிக உயர்ந்த முறையில் நடைபெற்றது. எந்தக் கலியாணத்துக்கும் முடியுடை வேந்தர் மூவரும் ஒருங்கே வந்ததில்லை. ‘பழைய பகையைப் பாராட்டாமல் வரவேண்டும்’ என்று ஒளவையார் எழுதியதை மதித்து அவர்கள் இந்தத் திருமணத்துக்கு வந்து, அப் பெண்களை வாழ்த்திச் சென்றார்கள்.

அங்கவையும் சங்கவையும் பாரியையும் கபிலரையும் நினையாத நாளே இல்லை. புலவர் உலகம் அவ்விரு நல்லோர்களிடையே விளங்கிய அரிய நட்பைப் போற்றிப் பாராட்டியது.

பாரி புலவர்களின் உள்ளத்தில் வாழ்ந்தான். அவன் புகழ் புலவர்களின் பாக்களில் விரிந்தது. இன்றளவும் பாரியைப் புலவர்கள் பாடிக்கொண்டே வருகிறார்கள்; பறம்புமலை வள்ளலாகிய பாரிவேள் புகழுடம்பில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *