
பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்
கபிலர் மறைவு
கபிலருக்கு உலகத்தைக் காணக் காண வெறுப்பு உண்டாயிற்று. இரண்டு இடங்களில் முயன்றும் பாரி மகளிரை மணம் புரிந்து கொள்ள யாரும் முன்வரவில்லை. ‘இப்படியே ஒவ்வொருவரிடமாகப் போய்க் கொண்டே இருப்பதா? அதைக் காட்டிலும் மானக்கேடான செயல் வேறு இல்லை. நம்முடைய மதிப்புக் குறைந்து விட்டதா? அல்லது இந்தப் பெண்களின் அழகுதான் குறைந்து போயிற்றா? பாரி இருந்தால் இவர்களுக்கு எத்தகைய சிறந்த கணவர்கள் வாய்ப்பார்கள்! விலை போகாத பண்டத்தை வீடுதோறும் கொண்டுபோய், “நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சுவதுபோல அன்றே ஆகிவிட்டது, என்ன பிழைப்பு? இனி இப்படிச் செய்யக் கூடாது. இவர்கள் தலைவிதியின்படி எல்லாம் நடைபெறும். எல்லா வற்றையும் கூட்டுவிக்கும் இறைவன் திருவருள் சுரந்தாலன்றி,எத்தனை முயன்றாலும் நாம் எண்ணியது நிறை வேறாது என்பதை எவ்வளவு தெளிவாகக் காண்கிறேன்! இனி இந்தப் பாரத்தை இறக்கிவிட வேண்டியதுதான்’ என்று கபிலர் சிந்திக்கலானார்.
‘இவர்களுக்கு மணம் புரிந்து பார்க்க இயலா விட்டாலும் எங்காவது தக்காரிடத்தில் அடைக்கலமாக ஒப்பித்துவிட்டு நாம் இந்த உலக வாழ்க்கையை நீக்க வேண்டும்’ என்று எண்ணினார்.
அப்போது அவர் திருக்கோவலூரை அடுத்த ஓர் ஊரில் வந்து தங்கினார். அங்குள்ள அந்தணர்களின் உபசாரத்தைப் பெற்றுச் சில நாட்கள் இருந்தார்.
பாரி மகளிரைக் காணும்போதெல்லாம் கபிலர் மனம் உளைந்தது. மிக்க வருத்தம் இன்றி எளிதிலே அவர்களுடைய திருமணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணம், பறம்பு மலையை விட்டு வந்தபோது அவருக்கு இருந்தது. இந்த அநுபவங்களுக்குப் பிறகு அந்த எண்ணம் பொடிப் பொடியாகி அழிந்தது. மனம் புண்ணாகி விட்டது. ஒருகால் அவர் உலகத்தை வைதார்; மற்றொருகால் தம்முடைய ஊழ்வினையை நொந்து கொண்டார்; பின்னும் ஒருகால் பாரி மகளிரின் விதியைக் குறை கூறினார். பருவம் வந்த அந்த இரண்டு பெண்களையும் யாரிடம் விடுவது என்று அவர் கவலையுற்றார்.
அவர் தங்கியிருந்த இடத்தில் வாழ்ந்த அந்தணர் மிகவும் அன்போடு அவர்களை உபசரித்தார். சிறந்த ஒழுக்கமும் அன்பும் உடையவர் அவர். முதுமைப் பருவத்தினர். ‘இவரிடமே அடைக்கலமாக விட்டுவிட்டுச் செல்லலாம்’ என்று தோன்றியது கபிலருக்கு. “பெருமானே! இந்த இளம் பெண்களைத் தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன். யாத்திரை செய்யவேண்டும் என்ற விருப்பம் நெடு நாட்களாக எனக்கு உண்டு. நான் யாத்திரையிலிருந்து மீள்வேன் என்ற உறுதி இல்லை. இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பைத் தங்களிடமே விடுகிறேன். இவர்களுக்கு ஏற்ற கணவன்மார் கிடைப்பார்களானால் தாங்களே இவர்களுக்குத் தந்தையாக இருந்து திருமணம் செய்து கொடுங்கள். உயர்குலத்திற் பிறந்த இந்தப் பெண்கள் விதியின் கொடுமையால் இப்படி வர நேர்ந்து விட்டது.
எனக்கு ஏதேனும் கிடைக்குமானால் கொண்டு வந்து தருகிறேன்; திருமணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையானால் கடவுள் விட்ட வழி ஆகட்டும்” என்று மிக்க பணிவுடன் கபிலர் அந்த அந்தணரிடம் வேண்டினார்.
அவர் அதற்கு இணங்கினார். கபிலருடைய பெருமையை அவர் நன்கு உணர்ந்தவர். ‘நமக்கு இருக்கும் பொல்லாத வேளையில் இதுவாவது நல்லதாக முடிந்ததே!’ என்று ஆறுதல் பெற்றார் புலவர்பிரான். பாரி மகளிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைக் கூறி விட்டு அவர் புறப்பட்டார்.
‘பாரிக்குப் பின் உலகில் நல்லவர்களே இல்லை போல் இருக்கிறது!’ என்று எண்ணியிருந்த அவருக்குச் சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஈகையிற் சிறந்தவனாக இருக்கிறான் என்று யாரோ சொன்னது காதில் விழுந்தது. ‘அப்படியானால் அவனைப் பார்த்து விட்டு வருவோம்’ என்று சேர நாட்டுக்குச் சென்றார். வஞ்சிமா நகரத்தை அடைந்தார்.
அப்போது அங்கே அரசாண்டிருந்த செல்வக் கடுங்கோ வாழியா தன் உண்மையிலே பரிசிலரைத் தாங்கும் பண்புடையவனாக இருந்தான். பறம்பு மலையை முற்றுகையிட்டவன் சேரர் குலத்தில் வேறொரு கிளையில் தோன்றிய மன்னன். வாழியாதனோ அவனைப் போலன்றி நேர்மையும் ஈகையும் உடையவனாக விளங்கினான்.
கபிலர் தன்னை நாடி வந்திருப்பது தெரிந்து அவன் அவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்றான்; பல வகையாக உபசரித்தான். அப்போது கபிலர், “நான் இங்கே எதையும் இரந்து கேட்கும் பொருட்டு வரவில்லை.
எதையும் மிகைப்படுத்திக் கூற மாட்டேன். பாரியை இழந்த பிறகு அவனைப் போல யாரும் இல்லை என்று எண்ணியிருந்தேன். நீ சிறந்த கொடை வள்ளலாக விளங்குகிறாய் என்று கேள்வியுற்றேன். அப்படியானால் உன்னைப் பார்த்துச் செல்லலாம் என்று வந்தேன்” என்றார்.
“எந்தக் கருத்தோடு வந்தாலும், நீங்கள் என்னையும் பொருட்படுத்தி வந்தது கிடைத்தற்கரிய பேறென்றே கருதுகிறேன்” என்று சேரமான் அன்பு ததும்பக் கூறினான்.
கபிலர் வஞ்சிமா நகரில் சில காலம் தங்கியிருந்தார்; சேரமானுடைய சிறந்த பண்புகளைக் கண்டு மகிழ்ந்தார்; அவன்மீது பத்துப் பாடல்களைப் பாடினார். பின்பு, அம் மன்னனிடம் விடை பெற்ற போது அவன் பொன்னும் பொருளும் தந்ததோடு பல ஊர்கள் அடங்கிய ஒரு நாட்டையே அளித்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட கபிலர் நேரே பாரி மகளிர் வாழும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்.
தாம் பெற்ற பொன்னையும் பிறவற்றையும் அவர் களைப் பாதுகாத்த அந்தணரிடம் ஈந்து. ‘இறைவன் திருவருளைத் துணைக்கொண்டு இவர்களுக்குத் தக்க இடத்தில் மணம் முடித்து வைத்து விடுங்கள். நான் போய் வருகிறேன். இனி என்னைக் காண முடியாது” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டார் கபிலர்.
உலக வாழ்வு அவருக்கு வெறுத்துப் போயிற்று. பாரியோடு மறு உலகத்தில் சேர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணம் வலியுற்றது. இனிமேல் நம்மால் உலகத் தில் ஆகவேண்டிய செயல் ஒன்றும் இல்லை. விரதம் இருந்து உயிரை விடுவதே தக்க செயல்’ என்று எண்ணினார்.
பாரியை நினைத்தபோதெல்லாம் அவருக்குத் துயரம் உண்டாயிற்று. “நீ என்னோடு மனம் ஒன்றிய நண்பன் என்று நினைத்தேன். ஆனால் அந்த நட்புக்கு ஏற்றபடி நீ நடந்து கொள்ளவில்லை. நீ என்னைப் பாதுகாத்த காலமெல்லாம் உன் மனத்துக்குள் என்னைப்பற்றிய வெறுப்பு இருந்திருக்க வேண்டும். உன்னுடைய பெருமைக்கு ஏற்றவனாக நான் இருக்கவில்லை போலும்! அதனால்தான் நீ என்னை இங்கே விட்டுவிட்டுப் போய் விட்டாய். உன்னோடு கூட்டிப் போகாமல்,இங்கேயே கிட என்று நீ மறைந்தாய். நான் உனக்கு ஏற்ற நண்பன் அல்லனாயினும் நல்வினையானது சில காலமேனும் உன்னோடு ஒருங்கு வாழும்படி செய்தது. எனக்குத் தகுதியில்லாமல் இருந்தாலும் உன்னோடு இம்மையிலே என்னைக் கூட்டிவைத்த அந்த நல்லூழ் இப்போதும் என்னை உன்னோடு சேரும்படி செய்யட்டும். நான் இனி உன்னைப் பிரிந்து வாழமாட்டேன்!” என்று அவர் சொல்லிக் கொண்டார். உணர்ச்சியோடு வந்த அந்த வார்த்தைகள் கவியாகவே அமைந்தன.
அந்தப் பாட்டுத்தான் அந்த நல்லிசைச் சான்றோரின் இறுதிப் பாட்டாயிற்று. பாரியை எண்ணிய படியே அப் புலவர் பெருமான் தீ மூட்டி அதில் பாய்ந்து உயிர் நீத்தார். அங்கு உள்ளவர் இந்தச் செய்தியை அறிந்து தடுத்தும், கபிலர் தம் கருத்தின்படியே தம் உடம்பைத் தீக் கடவுளுக்கு உணவாக்கிப் பாரியோடு கலந்துகொண்டார்.
அவ்விருவருடைய நட்பின் பெருமையைத் தமிழுலகத்துச் சான்றோர் வியந்து பாராட்டினர். கபிலர் தீக்குளித்த இடத்தில் ஒரு கல்லை நாட்டி அவ்விடத்தில் உள்ள மக்கள் வழிபட்டார்கள். அந்தக் கல்லுக்குக் கபிலக் கல் என்ற பெயர் வழங்கியது.



