
பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்
முதல் இடம்
கபிலரை அவைக்களப் புலவராகவும் தோழராகவும் பெற்றது முதல் பறம்புமலை வள்ளலாகிய பாரிக்கு முடியுடை மன்னருக்கு இல்லாத மதிப்பு உண்டாகி விட்டது. முல்லைக்குத் தேர் வழங்கிய அருமைச் செயலுக்குப் பின்பு அது பின்னும் உயர்ந்தது. கொடை வள்ளல்களைப் பற்றிப் பேசும் இடங்களிலெல்லாம் பாரியின் பெயரே முன் வந்தது. தமிழ்நாட்டு வள்ளல்களின் பெயர்களை எடுத்துச் சொல்லும்போது புலவர்கள் பாரியையே முதலில் வைத்துச் சொன்னார்கள். இந்த வழக்கம் அக்கால முதல் இன்றளவும் இருந்து வருகிறது.
“யார் யாரையோ பாடாமல் சிவபெருமானைப் பாடுங்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் தரமாட்டார்கள். இப்பெருமான் இம்மையில் சோறும் கூறையும் தருவான்; மறுமையில் சிவலோக பதவி வழங்குவான்”
என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு பதிகம் பாடியிருக்கிறார். திருப்புகலூர் என்னும் தலத்தில் பாடியது அது. அங்கே புலவர்களை நோக்கி,
கொடுக்கிலா தானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பாரிலை
என்று பாடுகிறார். வள்ளல்களை உவமையாக எடுத்துச் சொல்லப் புகும்போது பாரியின் நினைவுதான் அவருக்கு வருகிறது. மனிதர்களைப் பாட வேண்டாம் என்று சொல்லும் அந்தப் பதிகத்திலே மறைமுகமாகச் சுந்தர மூர்த்தி நாயனார் பாரியைப் புகழ்கிறார்!
பெருஞ்சித்திரனார் என்ற சங்க காலப் புலவர் குமணன் என்ற அரசனைப் புகழ்கிறார். “ஏழு வள்ளல்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள். அவர்கள் இப்போது இல்லை. அவர்கள் காலத்திற்குப் பிறகு நீதான் இருக்கிறாய். ஆதலால் உன்னைத் தேடி வந்தேன்” என்று சொல்கிறார். அங்கே ஏழு வள்ளல்களின் பெயர்களும் வருகின்றன. அவர்கள் பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்பவர்கள். அந்த வரிசையில் முதலில் பாரியைத்தான் வைக்கிறார். இப்படியே வேறு பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
பிங்கல நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் எழு பெரு வள்ளல்களையும் தொகுத்துச் சொல்லும் பாடல்கள் உள்ளன. அவ்விடங்களிலும் பாரியே முதலில் வருகிறான்.
வள்ளல் பாரியைத் தமிழுலகம் மறவாமல் பாராட்டும் முறை இதுவானால் அவனுடைய பெருமையை என்னென்று விரித்துரைப்பது!



