
பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்
மணம் மறுத்தல்
பாரிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள்; அழகிலும் அறிவிலும் சிறந்தவர்களாக இலங்கினார்கள். எப்போதும் புலவர்களினிடையே இருந்து பொழுது போக்கும் தந்தையைப் பெற்றதனால் அவர்களுக்கு அப்புலவர்களுடைய புலமை நலத்தை உணர்ந்து இன்புறும் வாய்ப்பு இளம் பருவத்திலே உண்டாயிற்று. கபிலர் பாரியோடு வாழத் தொடங்கிய பின்பு அவ்விருவரும் அவரிடம் தமிழ்ப்பயிற்சி பெற்று வந்தனர். அந்தப் பெரும் புலவரைத் தமிழாசிரியராகப் பெறும் பேறு கிடைத்தபோது அவர்களுக்கு உண்டான தமிழறி வைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா? தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு உணர்ந்தார்கள்.
கவிதையின்பத்தை அநுபவிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது; அது பின்னும் மிகுதியாயிற்று. அவர்களே நல்ல கவிதையை இயற்றும் திறமையையும் அடைந்தார்கள்.
அடக்கமும் அன்பும் அறிவும் அவர்களிடம் நிரம்பியிருந்தன. பாரியினிடம் வந்த புலவர்கள் அவ்விருவருடைய அறிவுத் திறத்தையும் கண்டு பாராட்டினர். நல்ல ஆசிரியர் ஒருவர் அவர்களுக்குக் கிடைத்தது போல வேறு யாருக்கும் கிடைக்க மாட்டார் என்று சொல்லிப் புகழ்ந்தனர். அவ்வப்போது புலவர்கள் அவையில் அவ்விரு பெண்களும் இருந்து தமிழ் நயம் தேர்ந்து இன்புற்றார்கள்.
பாரியின் மகளிர் அழகிலும் அன்பிலும் சிறந்து விளங்கும் செய்தி அவனுடைய புகழோடு தமிழ் நாட்டிற் பரவியது. புலவர்கள் தாம் அறிந்த சிறப்புக்களைத் தம் வாயே முரசாக, நாவே குறுந்தடியாகக் கொண்டு அறைந்து பரப்பும் இயல்புடையவர்கள். அவர்கள் பாரிக்கு எத்தனை சிறப்பு உண்டோ அத்தனையையும் எடுத்துப் பாராட்டித் தமிழுலகில் பரப்பினர். அந்த வகையில் பாரி மகளிரின் பெருமையும் பரவியது.
தமிழ் நாட்டில் இருந்த குறுநில மன்னர்களின் காதில் அங்கவை சங்கவை என்னும் அப்பெண்களின் அறிவாற்றலையும் அழகையும் பற்றிய செய்திகள் விழுந்தன. மணமாகாமல் இருந்த வேளிர் சிலர் அவர்களை மணந்து கொள்ளலாம் என்று விரும்பினர். பின்பு தம்முடைய நிலையையும், பாரியினுடைய நிலையையும் எண்ணித் தமக்குக் கிட்டாப் பொருள் என்று கைவிட்டனர்.
ஆனால் பாரிவேளுக்கு இரு மகளிர் மணம் செய்யும் பருவத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி பாண்டியனுக்குத் தெரிந்தபோது, அவர்களை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டது. முடியுடை மன்னர்கள் குறுநில மன்னர்களின் பெண்களை மணந்துகொள்வது தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்தது. புகழினால் பெரியவனாகிய பாரியின் மகளை மணப்பதால் தனக்கும் புகழ் மிகுதியாகும் என்று பாண்டிய மன்னன் நினைத்தான். ஆனால் அவன் முன்பே மணம் புரிந்துகொண்டவன். பட்டத்தரசி ஒருத்தி இருந்தாள். ஆனாலும் மகளிர் பலரை மணந்து கொள்வது மன்னர்களுக்கு வழக்கம் அதனால் பாரி மகளிர் இருவரையும் தன்னுடைய அந்தப்புர அணங்கினரோடு சேர்த்துவிடலாம் என்ற விருப்பம் கொண்டான் பாண்டியன்.
அவனுக்குப் பாரி மகளிரிடம் அன்பு உண்டாகவில்லை. அவர்களை அவன் பார்த்துப் பழகியதில்லையே! ஆயினும் அவர்களுடைய புகழ் அவனுடைய உள்ளத்தில் ஆர்வத்தை உண்டாக்கியது. அதுமட்டும் அன்று. பாரியின் புகழ் மேன்மேலும் ஓங்கி வளர்ந்து வருவதை உணர்ந்தவன் அவன். அதனால் அவன் உள்ளத்தில் பொறாமைகூட முளைத்திருந்தது. இப்போது அவனுடைய உறவு கிடைத்தால் புகழில் பங்கு பெறலாம் என்று எண்ணினான். கிடைத்தால் பாரி மகளிரை மணப்பது, இல்லையானால் அவனோடு போரிடுவது என்று திட்டமிட்டான்.
பாரிக்கு ஒலை போக்கினான். அவன் மகளிர் இருவரையும் தனக்கு மணம் புரிவிக்க வேண்டும் என்ற செய்தியை அவ்வோலையில் எழுதியிருந்தான். பாரி அதைப் படித்தான். கபிலரிடம் காட்டினான். தன் மகளிருக்கும் காட்டினான். “பெறுதற்கரிய பேறு இது” என்று வேறு மகளிர் நினைப்பார்கள். பாரி மகளிர் அப்படி நினைக்கவில்லை. “பாண்டியனுடைய அந்தப்புரத்தில் உள்ள மந்தையோடு மந்தையாக வாழும்படி செய்வதற்கு என் அருமைக் கண்மணிகளை நான் வளர்க்க வில்லை” என்று பாரிவேள் கூறினான். கபிலர் அவன் கருத்தை ஆதரித்தார். பெண்கள் இருவரும் தம் தந்தையார் கருத்தைத் தெரிந்துகொண்டு களிப்பில் மூழ்கினர்.
பாண்டியனிடமிருந்து வந்த தூதுவன் மீண்டு சென்றான். தன் பெண்களை மணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டான் பாரி என்ற செய்தியைப் பாண்டியன் அறிவித்தான். பாரி மகளிர் கிடைத்திருந்தால் அவனுக்கு உண்டாகும் மகிழ்ச்சியிலும் இரண்டு மடங்கு மகிழ்ச்சி இப்போது உண்டாயிற்று. மகளிரை அளிக்க மறுத்ததையே காரணமாகக் கொண்டு பாரியோடு போர் செய்யலாம் என்ற எண்ணந்தான் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியை ஊட்டியது. இனிப் பாரியை வளரவிடக் கூடாது என்ற தீய எண்ணம் அவன் நெஞ்சில் குடி கொண்டது.
பாண்டியன் பெண் கேட்டதும் பாரி மறுத்ததுமாகிய செய்தி இரகசியமாக இருக்கவில்லை. அது எங்கும் பரவியது. சேர சோழ மன்னர்களுடைய செவிகளுக்கும் எட்டியது. ‘உலகம் புகழும் முடி மன்னனாகிய பாண்டியன் மகளிரைக் கேட்டானென்றால் பெரும் பேறு என்று கருதி உடனே மணம் புரிய முன் வராமல் மறுத்தானே; அவனுக்கு உண்டாகியிருக்கும் செருக்கை இது காட்டுகிறது. தனக்கு மிஞ்சினவர் யாரும் இல்லை என்ற செருக்கு அவன் தலையில் ஏறியிருக்கிறது. அவன் தன் நிலையை மறந்துவிட்டான்” என்று சோழன் சொன் னான். அவனுக்கும் பொறாமை இருந்தது. சேரனும் இப்படியே பாரியை இகழ்ந்தான். முடி மன்னர் மூவருக்குமே பாரியின் புகழ் பரவி வருவதில் அழுக்காறு இருந்தது. அவர்கள் ஒன்றுபடுவது மிகவும் அரிது. ஆயினும் பாரியை ஓங்க வொட்டாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரம் அவர்கள் ஒன்றுபட்டார் கள். எப்படியாவது அவனோடு போர் செய்து அவன் நாட்டைப் பறிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் அவர்களுக்கு உண்டாகிவிட்டது. காரணம் இன்றிப் போர் செய்வது இயலாது. ஆகையால் ஒரு காரணத்தை ஆராய்ந்தார்கள். பாண்டியன் செய்ததையே தாமும் செய்யலாம் என்று சேரனும் சோழனும் தீர்மானித்தார் கள். பாரியின் பெண்களை மணம் செய்துகொள்ள விரும்பித் தனித்தனியே ஓலை போக்கினார்கள்.
பறம்பு நாடு பாண்டி நாட்டில் இருந்தது. அணிமையில் இருந்த பாண்டியனுக்கே பெண் கொடுக்க விரும்பாத பாரி மற்ற மன்னர்களுக்கா கொடுக்க முன் வருவான்? வந்த தூதுவர்களிடம் அம் மன்னர்களின் முயற்சியை இகழ்ந்து பேசி அனுப்பினான் பாரி. அதனால் அவர்களுக்கு அவனிடம் சினம் மூண்டது. சேர சோழ பாண்டியர் மூவரும் பாரியை எதிர்த்துப் போர் செய்வது என்ற முடிவுக்கு வந்தனர். “இந்தச் சிறிய வேளை அடக்க ஒருவருடைய படையின் ஒரு பகுதியே போதும். ஆனாலும் தமிழ் மன்னர் மூவருடைய பகையையும் அவன் பெற்றிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? மூவருமே சேர்ந்து படையுடன் சென்று பறம்பு மலையை முற்றுகையிட்டு அவன் மிடுக்கைத் தொலைப்போம்” என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்; போர் புரிய ஆயத்தம் செய்தார்கள்.



