பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

கபிலர் பாட்டு


பாரிவேளின் அவைக்களத்தில் எப்போதும் புலவர் பலர் நிறைந்திருப்பார்கள். அந்தப் புலவர் கூட்டத்திற்குத் தலைவராகக் கபிலர் விளங்குவார். பாரியும் உடன் இருப்பான். தமிழின் மாட்சியையெல்லாம் விரித்துப் பேசுவார்கள். அவரவர்கள் தம்முடைய இனிய கவிகளை எடுத்துச் சொல்லுவார்கள். பாரிவேளின் புகழைப் பாட்டில் அமைத்துப் பாடுவார்கள்.

கபிலர் பாரியின் புகழைப் பலவகையில் பாடி மகிழ்ந்தார். ஒரு பாட்டு இரண்டு பாட்டுப் பாடின அளவில் அவருக்கு மனநிறைவு உண்டாகவில்லை. பாரியின் அரிய குணங்களில் ஈடுபட்டுக் கிடந்தவராதலின் அவன் புகழைப் பாடப் பாட அது விரிந்து கொண்டே போயிற்று. மேலும் மேலும் பாடிக்கொண்டே இருந்தார். புலவர் தலைவராகிய அந்தச் சான்றோருடைய பாடல்களைப் பெற்ற பாரி புலவர்கள் உள்ளத்தில் உயர்ந்து நின்றான். மன்னர்களும் அவனுக்குக் கிடைத்த பெரும் பேற்றை எண்ணி வியந்தனர். பாண்டிய மன்னன், ‘நமக்குக் கிடைக்காத பெருமையெல்லாம் இவனுக்குக் கிடைக்கிறது’ என்று எண்ணினான்; அந்த எண்ணத்தில் அழுக்காறு தலை நீட்டியது.

‘விரிந்த சோழ மண்டலத்தைப் பெற்று ஆளும் நம்மைவிடக் கபிலருடைய பாடல்களைப் பெற்று வாழும் பாரியின் பாக்கியமே பாக்கியம்!’ என்று சோழன் வியந்தான்.

கபிலர் நம்மையும் பாடமாட்டாரா?’ என்று சேர அரசன் ஏங்கினான்.

கபிலர் புதிய புதிய முறையில் பாரியின் புகழை அமைத்துப் பாடல்களைப் பாடினார். பாணர்களுடன் வந்து பாடி ஆடும் மகளுக்கு விறலி என்று பெயர். பாணனுடைய மனைவி அவள். அவளைப் பார்த்து, “நீ இன்ன செல்வரிடம் சென்று பாடினால் உனக்குப் பரிசில் தருவான்” என்று பாடுவது ஒருமுறை. அதை விறலியாற்றுப்படை என்று சொல்லுவார்கள். கபிலர் பாரியின் புகழைச் சொல்லும் விறலியாற்றுப்படை ஒன்றைப் பாடினார்.

உலகில் உள்ள செல்வர்கள் எப்போதுமே தம்மை அணுகும் இரவலர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. சில காலம் கொடுப்பார்கள்; சில காலம் கொடுக்காமல் இருந்து விடுவார்கள். பாரி அத்தகையவன் அல்லன். அவன் எப்போதும் கொடுப்பவன். எந்தச் சமயத்தில் போனாலும் இல்லையென்னாது ஈயும் வள்ளல்.

இந்தச் செய்தியைக் கபிலர் தம் பாட்டிலே சொல்ல வருகிறார். இதை அப்படியே சொல்லவில்லை. குறிப்பாகச் சொல்கிறார். கவிதையில் ஒரு பொருள் குறிப்பாக அமைந்திருந்தால் அதன் சுவை மிகுதியாக இருக்கும். விறலியே! நீ பாரிவேளிடம் சென்று பாடினால் அவன் உனக்கு நல்ல பொன்னாபரணங்களைத் தருவான். அவற்றை நீ அணிந்து மகிழலாம்” என்று சொல்கிறார். இப்படிச் சொல்வதில் சுவை தோன்றாது. “மற்ற இடங்களில் செல்வர்கள் கூடவும் குறையவும் தருவார்கள்; தராமலும் இருப்பார்கள். பாரி எப்போதும் தருவான்” என்ற கருத்தையும் பொருத்த வேண்டும். “சுனைகளில் சில காலம் நீர் இருக்கும். சில காலம் குறையும். மழை பெய்தால்தான் அவற்றில் நீர் நிரம்பியிருப்பதைப் பார்க்கலாம். ஆனால் பாரியின் பறம்பு மலையில் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் அருவி எப்போதும் நீரோட்டம் அறாது வீழ்ந்துகொண்டே இருக்கும் ” என்பதை இணைத்துப் பாடினார். “செல்வர்கள் கொடுத் தாலும் கொடுக்காவிட்டாலும் பாரி கொடுப்பான்” என்பதையே அவனுடைய மலையில் உள்ள அருவியை வருணிப்பவரைப் போலக் குறிப்பாகச் சொல்லிப் பாடினார் புலவர்.

ஒருநாள் புலவர் பலர் கூடியிருந்த சபையில் பாரியைப் பற்றிய பேச்சு வந்தது. வெளிநாட்டிலிருந்து சில புலவர்கள் வந்திருந்தார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் அநுபவத்தை எடுத்துச் சொன்னார்கள் கலைஞரும் கவிஞரும் தம்முடைய ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்ற செய்தியைச் சொன்னார்கள். “பாரிவேள் புலவர்களையும் அறிவுடையோர்களையும் நல்லவர்களையும் ஆதரிக்கும் பெருவள்ளல். இவனைப்போல் வரிசை அறியும் வள்ளலை நாங்கள் எங்கும் கண்டதில்லை” என்று சிலர் கூறினார்கள். “தன்னிடம் வருகிறவர்களை நல்லவர்கள் என்றே, கலையில் வல்லவர்கள் என்றோ ஆராய்ந்து கொடுக்கும் இயல்பு பாரியினிடம் இல்லை. வறுமையில் உழல்பவர்கள் யார் ஆனாலும் அவர்களுக்கு வழங்குவது பாரியின் வழக்கமாகிவிட்டது” என்று கபிலர் கூறினார். அதற்கு உவமையாகச் சிவபெருமானை எடுத்துரைத்தார்.

“நல்ல நிறமும் மணமும் உள்ள மலராகத் தேர்ந்து பறித்துத் தெய்வங்களுக்குப் பூசை செய்வார்கள் அன்பர்கள். சிவபெருமானோ மணமுள்ள மலரானாலும் மணமற்றதானாலும் ஏற்றுக்கொள்கிறான். எருக்கம் பூவேயானாலும் எனக்கு வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றருள்கிறான். பாரியும் அத்தகையவனே. கலையறிவு இல்லாதவரானாலும், தாம் கற்ற கலையில் போதிய திறமை படையாதவரானாலும் அவனை அணுகினால் ஏதாவது பெற்றே செல்வார்கள். பாரியின் வள்ளன்மை அத்தகையது” என்று தம் கருத்தை விளக்கினார் அப் புலவர் பெருமான். அதையே பாவாகவும் பாடினார்.

பின் ஒரு நாள் புலவர்கள் கூடிப் பேசிக்கொண் டிருந்தார்கள். கபிலரும் இருந்தார். எல்லாரும் திருப்பித் திருப்பிப் பாரியின் புகழையே எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். பாரி முல்லைக்குத் தேர் ஈந்ததை ஒருவர் பாராட்டினார். அவன் இனிமையாகப் பேசுவதை ஒருவர் பாராட்டினார். தன்பால் வந்தவர்களுக்கு வரை யறையின்றி வழங்குவதை வேறு ஒரு புலவர் புகழ்ந்தார்.

“பாரியைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்களே. வேறு ஒருவரும் உங்களுக்கு அகப்படவில்லையா?” என்று இடைமறித்துக் கேட்டார் கபிலர். அப்படிக் கேட்கும்போது அவருடைய முகத்தில் புன்முறுவல் ஒளிவிட்டது.

“எப்படிப் பேசினாலும் பாரியினிடந்தான் வந்து முடிகிறது” என்று ஒரு புலவர் சொன்னார்.

“பாரி, பாரி என்று எப்பொழுதும் ஒருவனையே புகழ்கிறீர்களே. அதை மாற்றி வேறு யாரைப்பற்றி யாவது சொல்லுங்கள்” என்று மறுபடியும் கபிலர் சொன்னார்.

“பாரியைச் சொல்லிவிட்டு வேறு ஒருவரைச் சொல்லுவதாவது!” என்று ஒருவர் கூறினார்.

”நன்றாக யோசித்துப் பாருங்கள். எத்தனையோ வள்ளல்களைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றவர்கள் நீங்கள். பாரிக்கு ஒப்பாக வேறு யாராவது ஒருவரை எண்ணிப் பார்த்துச் சொல்லுங்கள். ஒருவர் கூடவா கிடைக்கமாட்டார்?”

கபிலர் இப்படிக் கேட்டதும் புலவர்கள் சிறிது நேரம் யோசிப்பவர்களைப் போல மௌனமாக இருந்தார்கள். பிறகு, “பாரியை விட்டால் வேறு யாரும் இல்லையே!” என்றார்கள்.

“அப்படியா? நான் வேறு ஒருவரைச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டார் கபிலர்.

“நீங்களா சொல்லப் போகிறீர்கள்?’ என்று புலவர்கள் வியப்போடு கேட்டார்கள்: கபிலர் பாரியினிடம் எவ்வளவு அன்பும் பெருமதிப்பும் வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இப்படிக் கேட்டார்கள்.

”ஆம். நான்தான் சொல்லப் போகிறேன். எப்போது பார்த்தாலும் பாரி பாரி என்று பலவகையாகப் புகழ்ந்து ஒருவனையே புகழ்கிறார்கள் செந்நாப் புலவர்கள். பாரி ஒருவன் தானா உலகைக் காப்பாற்றுகிறான்? மாரியும் இருக்கிறதே; அதை மறந்துவிட்டார்களே!”

புலவர்கள் கபிலருடைய சொல் திறனை நினைத்து மகிழ்ந்தார்கள். “எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். உலகத்தில் உள்ள வள்ளல் யாரையோ சொல்லப்போகிறீர்கள் என்றல்லவா எண்ணினோம்? பாரியின் புகழை நாங்கள் எல்லாம் சொல்வதைவிட நீங்கள் எவ்வளவோ அழகாகச் சொல்லிவிட்டீர்களே!” என்று பாராட்டினார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *