
பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்
கபிலர் வருகை
பாரியின் புகழைக் கேள்வியுற்ற புலவர்கள் அவனிடம் வந்து அவனுடைய உபசாரங்களைப் பெற்றுச் சில நாள் அவனிடம் தங்கினர். எத்தனை நாள் தங்கினாலும் சிறிதும் சலிப்பின்றி ஒருநாளைப் போலவே என்றும் மாறாத அன்பு காட்டி விருந்துணவு அளித்துப் பாராட்டினான் பாரி. இனிய தமிழ்ப் பாக்களைப் புலவர் களின் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்தான். இடையிடையே அவன் கூறிய கருத்துக்கள் அவனுடைய நுட்பமான அறிவையும் விரிந்த புலமையையும் வெளிப்படுத்தின. பல நாட்டுப் புலவர்களோடு பழகி அவர்களுடைய கவிதைகளையும் தமிழ்ச் சுவை ததும்பும் உரைகளையும் கேட்பதையே பொழுதுபோக்காகப் பெற்ற அந்த வேளுக்கு விரிந்த புலமை அமைவது வியப்பு ஆகுமா? அறிவுடைய ஒருவனுடன் பழகுவதென்றால் புலவர்களுக்கு விருப்பம் மிகுதி. இடம் தெரிந்து உவக்கும் இயல்புடையவனென்றால் அவர்களுக்கு அவனே தெய்வம். வரிசையறிந்து பரிசில் நல்குபவனாக இருந்து விட்டாலோ, அவன் வாழும் இடமே அவர்களுக்குச் சொர்க்கமாகி விடும். பாரி அறிவிலே சிறந்தவன்; சுவை யுணர்ந்து பாராட்டுவதில் சிறிதும் உலோபம் இல்லா தவன்; வரிசை அறிந்து பொருள் வழங்குவதில் எல்லா வள்ளல்களையும் விடச் சிறந்தவன். இத்தகையவனிடம் புலவர்கள் வந்து மொய்ப்பது இயல்புதானே?
மதுரை மாநகரில் பாண்டியனுடைய ஆதரவில் தமிழ்ச் சங்கம் நடைபெற்று வந்தது. அங்கே புலவர் பலர் இருந்து தமிழாராய்ச்சி செய்து வந்தனர். அவர்களுள் கபிலரும் ஒருவர். பாண்டியனுடைய பெருமதிப்பைப் பெற்றவர் அவர். புலவர்களும் அவ்வாறே அவரை மதித்துப் போற்றினர். அதற்குக் காரணம், கபிலர் இணையற்ற புலமையுடையவர் என்பது மாத்திரம் அன்று. அவருடைய சிறந்த பண்புகளும் அவரைச் சிறந்தவராகச் செய்தன. அவர் பொய் பேசாத புனித இயல்பினர். அவர் ஒருவரைப் பாடினால் பாடப் பெற்றவர் தமிழ் நாட்டின் பெருமதிப்புக்கு உரியவர் ஆவார். ஒழுக்கத்தில் சிறந்து, அன்பில் ஓங்கி, புலமையில் வீறுபெற்று, அருள் நிரம்பி விளங்கிய கபிலர், புலவர் குழுவாகிய நட்சத்திரக் கூட்டத்தில் சந்திரனைப்போல ஒளிர்ந்தார்; பல மலர்களிடையே உயர்ந்து தோன்றும் தாமரை மலரைப்போல விளங்கினார்.
அவர் எளிதில் யாரையும் போய்ப் பார்ப்பதில்லை. அவரை விரும்பி யாரேனும் அவர் இருக்குமிடத்துக்குச் சென்று பார்த்தால் அன்புடன் அளவளாவுவார்; வற்புறுத்தி அழைத்துச் சென்றால் உடன் சென்று சில நாள் தங்கி மீண்டும் மதுரைக்கு வந்துவிடுவார்.
இவ்வாறு தம்முடைய புகழைப் பரப்பி விளங்கிய கபிலரைப் பற்றிய செய்திகளைத் தன்னிடம் வந்த புலவர்கள் வாயிலாகப் பாரி வள்ளல் அறிந்தான். அவரைக் கண்டு வணங்கி அளவளாவி இன்புற வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு உண்டாயிற்று. பாரியினிடம் சென்று வந்த புலவர்கள் அவனுடைய பெருமையைப் பலபடியாக எடுத்துச் சொன்னார்கள். அதைக் கபிலர் கேட்டார். அத்தகைய வள்ளலைக் காணவேண்டும் என்ற ஆவல் அப் புலவர் பிரானுக்கு உண்டாயிற்று.
ஒருநாள் பாரிவேள் தக்க பெரியார் ஒருவரை மதுரைக்கு சென்று கபிலரிடம் அனுப்பினான். தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கும்படி சொல்லி விடுத்தான்.
பாரியின் அவர் கபிலரை அணுகிப் ஆர்வத்தை எடுத்துரைத்தார். ”புலவர் பலரைக் கண்டு அளவளாவி மகிழும் பேறு எங்கள் மன்னருக்குக் கிடைத்திருக்கிறது. புலவர் வாராத நாளை வீணான நாளாக எண்ணுபவர் அவர். எப்போதும் புலவர் கூட்டத்தினிடையே இருந்து அவர்களுடைய தமிழ்ச் சுவை செறிந்த பாடல்களிலும் உரைகளிலும் மூழ்கித் திளைப்பவர். இவ்வளவு இருந்தும் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. வானத்தில் மீன்கள் எல்லாம் சுடர் விட்டு விளங்கினால் என்ன? திங்கள் தோன்றி ஒளி விட்டால்தான் என்ன? வீடுதோறும் பல விளக்குகளை ஏற்றினால் என்ன? கதிரவன் வானில் ஒளிவிடுவதற்கு ஒப்பாகுமா? புலவர்களுக்குள் கதிரவனைப் போல் விளங்கும் தங்களுடைய சந்திப்புக் கிடைக்காததை எண்ணி எங்கள் மன்னர் வாடுகிறார். நாளுக்கு நாள் தங்களைப் பற்றிய செய்திகள் அவர் காதில் மிகுதியாக விழுந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைக் கேட்கக் கேட்க மன்னருடைய ஆவல் தீயைப்போலக் கொழுந்து விட்டுப் படர்கிறது. உலகம் புகழும் மதுரை மாநகரில் இருந்து விளங்கும் தங்களுக்கு எங்கள் ஊர் ஊராகவே தோன்றாது. தமிழை வழிவழியே பாதுகாத்து வரும் முடிவேந்தனாகிய பாண்டிய மன்னனோடு பழகும் தங்களுக்குக் குறுநில மன்னர்கள் பொருளாகத் தோன்ற மாட்டார்கள். ஆயினும் உண்மையான ஆர்வமுடைய ஒருவர் பேரன்போடு அழைக்கிற அழைப்பு இது தம்மையே அர்ப்பணம் செய்யச் சொன்னாலும் அவ்வாறு செய்து தங்களை வரவேற்று உபசரிக்கக் காத்து நிற்கிறார் பாரிவேள். அவர் உள்ளத்தில் உள்ள ஏக்கத்தை யாரும் அளவிட முடியாது. ஒருகால் தாங்கள் வந்து கண்டு உணர்ந்து தங்கள் பாடலால் வெளியிட்டால் வெளியிட லாம்” என்று தூது வந்த பெரியவர் சொன்னார்.
கபிலர் அதைக் கேட்டார். “மாணிக்கம் உருவத்தால் சிறியது; கல் மிகப் பெரியது. அதனால் மாணிக்கத்துக்குக் குறைபாடு உண்டோ? அதன் மதிப்பை உலகமே நன்கு உணரும். பாரிவேளைப் புகழால் முன்பே அறிவேன். அவரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கும் உண்டு” என்று அவர் கூறியதைக் கேட்டபோது, வந்த பெரியவருக்கு உண்டான மகிழ்ச்சியை அளவிட முடியுமா?
கபிலர் பாரிவேளைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் வருவதை ஏவலாளர்கள் முன்பே பாரிக்கு அறிவித்தார்கள். பறம்பு மலையினின்றும் கீழ் இறங்கி வந்து அடிவாரத்து ஊரில் ஓரிடத்தில் கபிலரை வரவேற்க வேண்டியவற்றைச் செய்தான் பாரி; வேறு பல புலவர் களையும் உடன் அழைத்துச் சென்றான்; தன் ஆட்சியில் உள்ள அதிகாரிகளையும் உடன் இருக்கச் செய்தரன். பறம்பு நாட்டில் உள்ள செல்வர்களையும் பெரியோர் களையும் ஆள்விட்டு அழைத்து வரச் செய்தான். பலவகையாகப் புனைந்திருந்த பந்தலில் கபிலருக்கு வரவேற்பு அளித்துப் பாராட்ட ஆயத்தமாக இருந்தான் பாரி வள்ளல். வழிபடு தெய்வம் வரம் அளிக்க வருவதாக இருந்தால் எத்துணை ஆவலோடு எதிர்பார்த்திருப்பார் களோ, அப்படி அந்தக் கூட்டத்தினர் அனைவரும் காத்திருந்தனர்.
அறிவிலும் ஆண்டிலும் அநுபவத்திலும் பழுத்த கபிலர் பறம்பு நாட்டுக்கு வந்தார். வரும்போதே அந்த நாட்டார் களிப்பினால் ஆரவாரம் செய்தனர். துகிலை வீசி எறிந்து தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்; குடம் குடமாக நீரைக் கொணர்ந்து அவர் திருவடிகளைக் கழுவினர்; நிலத்திலே விழுந்து பணிந்தனர். பழுத்த கிழவர் சிலர் அப்புலவர் பெருமானை அணுகி, “தேவரீர் திருவடி பட இந் நாடு பலகோடி காலம் தவம் செய்திருக்க வேண்டும்” என்று நாத் தழுதழுக்கப் பாராட்டினர்.
கபிலர் மெல்ல நடந்து வந்தார். குடிமக்களுடைய அன்பு அவருடைய நடையின் வேகத்தைக் குறைத்தது. கூடிய கூட்டம் அவரை மேற்செல்ல விடாமல் தடுத் தது. வழியைச் சிலர் விலக்க, அவர் மெல்ல மெல்லப் பாரியைக் காணும் பேராவலோடு நடந்தார். அவர் மெல்ல நடந்தாரே யொழிய அவர் உள்ளம் மிகமிக விரைவாகச் சென்றது. தமக்கு நடைபெறும் உபசாரத் தைக் கண்டு அவர் மனம் உருகியது. ‘குடிமக்களே இவ்வளவு அன்பு பாராட்டினால் இவர்களுடைய கோனாகிய பாரி எப்படி இருப்பான்!’ என்று வியந்தார். மாட மாளிகை, கூட கோபுரங்கள் மல்கிய மதுரை மாநகரத்துச் செல்வர்கள் காட்டும் அன்பையும் கூறும் பாராட்டையும் உணர்ந்தவர் அவர். ஆயினும், இந்தச் சிற்றூரில் பறம்பு நாட்டு மக்களில் பெரும்பாலோர் கூடி நின்று தம் அன்பு வெள்ளம்போல் பெருக்கெடுத் தோட வரவேற்கும் வைபவத்தைக் கண்டு அவர் மயங்கினார். உள்ளத்திலிருந்து பொங்கி வழியும் அன்பே உருவம் கொண்டதுபோல இருந்தது அந்தக் கூட்டம்.
மெல்ல மெல்ல நடந்து சென்றார் புலவர் பெருமான். அவரைக் கைலாகு கொடுத்து ஓர் அதிகாரி அழைத்துச் சென்றார். வரவேற்புக்காக அமைத்திருந்த இடம் வந்து விட்டது.
இன்னிசைக் கருவிகள் ஒலித்தன. முரசு முழங்கியது. முழவு ஓசை பரப்பியது. மங்கையர் பாடினர். பாணர் யாழ் வாசித்தனர். விறலியர் கூத்தாடினர். ஒரு பெரிய சக்கரவர்த்தியை வரவேற்பது போலப் பாரி வள்ளல் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.
கபிலர் பந்தலுக்குள் கால் வைத்தார். பல நாள் பிரிந்திருந்த ஆவினைக் கண்ட கன்றைப் போல ஓடிச் சென்று புலவர் பெருமானின் திருவடிகளில் பணியப் புகுந்தான் பாரி. அவன் தம் அடிகளில் விழுவதற்கு முன் அவனைத் தாங்கித் தழுவிக் கொண்டார் கபிலர்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்: பேச்சு எழவில்லை. சிறிது நேரம் இதயமும் இதயமும் பேசிக் கொண்டன. பாரி கண்களில் நீர் சுரந்தது.
நாக் குழற, அன்பு பொங்க ஒவ்வொரு வார்த்தையாக வெளியிட்டான் பாரி: “புலவர் பெருமான் இங்கே எழுந்தருள நான் என்ன தவம் செய்தேன்! இந்த நாடு பண்ணிய தவந்தான் எத்தனை பெரியது! பல காலமாக இருந்த ஆவல் இன்று இறைவன் திருவரு ளால் நிறைவேறியது.”
“பாரி மன்னா, உன்னுடைய புகழை நான் பல காலமாகக் கேட்டு வருகிறேன். தன்னுடைய உயிரைக் காட்டிலும் சிறப்பாகப் புலவரை ஓம்பும் வள்ளல் என்று உன்னைப்பற்றித் தமிழுலகமே பாராட்டுவதை நான் அறிவேன். உன்னைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததனால் எனக்கு உண்டாகியிருக்கும் இன்பத்துக்கு ஒப்பாக எதைச் சொல்லலாம் என்று நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உன் பெருமை வாழ்க!” என்று புலவர்பிரான் பேசியதை யாவரும் கேட்டனர்.
அவரைத் தக்க ஆதனத்தில் இருக்கச் செய்து மாலை அணிவித்துப் பழமும் இளநீரும் பாலும் அளித்தான் பாரிவேள். “சற்று ஓய்வுகொண்டு மலையின் மேல் போகலாமா?” என்று கேட்டான். கபிலர்,”ஏன், இப்போதே செல்லலாமே!” என்று கூறவே, அந்தக் கூட்டத்தினர் யாவரும் பறம்பின்மேல் ஏறலாயினர்.
போகும்போதே கபிலர் அந்த மலையின் அமைப்பைப் பார்த்தார். அதன் வளத்தையும் எழிலையும் கண்களால் மொண்டு மொண்டு உண்டார். நல்ல வளம் மல்கிய மலை அது என்று தெரிந்து கொண்டார். அத்தகைய வளம் பொருந்திய மலையும், அன்பிலே சிறந்து நிற்கும் குடிமக்களும், இடையறாமல் உடனிருத்து தமிழ்ச் சுவையை ஊட்டிப் புகழ் பாடும் புலவர்களும் பாரியின் தவத்தையும் அன்பையும் வள்ளன்மையையும் காட்டும் அடையாளங்களாகத்தோன்றினர். ‘ஒரு சிறிய இடத்தில் இருந்துகொண்டு இத்தனை பேருடைய உள்ளத்தையும் கவரும் இயல்புடைய இப் பாரிக்கு எந்த முடி மன்னனும் ஈடாகமாட்டான்’ என்ற எண்ணம் கபிலருக்கு அப்போது உண்டாயிற்று.
வள்ளல் பாரியுடன் கபிலரும் பிறரும் பறம்பின் மேற்பரப்பை அடைந்தனர். அவனது மாளிகை வாயிலில் கபிலருக்கு வரவேற்பு நிகழ்ந்தது. பாரியின் மனைவியும் மகளிராகிய அங்கவையும் சங்கவையும் புலவர் பெருமானை வணங்கினர். “இந்தக் குடில் இன்று புனிதம் அடைந்தது” என்று மகிழ்ந்து கூறிப் பாரி, வந்தவர்களின் களைப்பை ஆற்றினான்.



