பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்

பறம்பு மலை


காற்று இனிமையாக வீசுகிறது. மரங்களில் மலர்கள் விரிந்து மணக்கின்றன. அந்த மணத்தைத் தாங்கிக்கொண்டு, தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு அளிக்கும் வள்ளலைப்போல எங்கும் பரப்புகின்றது காற்று. கிளிகள் கீச்சுக் கீச்சென்று கத்துகின்றன. குயில்கள் கூவுகின்றன.

அடர்ந்த காடுதான் இது. ஆனாலும் மனிதர் நடக்கும்படி இடையிடையே வழிகள் இருக்கின்றன. எங்கே பார்த்தாலும் பலா மரங்கள். கனிந்த பழங்கள் வெடித்து அவற்றிலிருந்து சாறு வழிந்து ஓடுகிறது. அந்தப் பழத்தைக் கண்டு தொட்டுத் தொட்டுப் பார்க் கிறது ஒரு குரங்கு. தொட்ட விரலை நாவில் வைத்துக் கொள்கிறது. ஆ! அது குதிக்கிறதைப் பார்த்தால் அதற்குள்ள மகிழ்ச்சி நன்றாகப் புலனாகிறது. தன் கையால் பலாப்பழத்தின் வெடிப்பைப் பிளந்து கனிந்த சுளைகளை எடுத்துத் தின்கிறது. அப்போது அது கண்ணை மூடிக் கொண்டபடியே பலாப்பழத்தின் சுவையை நுகர்கிறது.

எங்கே பார்த்தாலும் சுனைகள்; பெரியனவும் சிறியனவுமாகப் பல சுனைகள் இருக்கின்றன. கண்ணாடியைப் போலத் தெள்ளத் தெளிந்த நீர் நிறைந்த சுனைகள் அவை. பெரிய சுனைகளில் குவளை மலர்கள் மலர்ந்திருக்கின்றன.

சில இடங்களில் மூங்கில்கள் காடுபோல் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. பல காலமாக வளர்ந்தவை யாதலால் வானுற ஓங்கி நிற்கின்றன. பல மூங்கில்களில் நெல்லைக் காணலாம்.

இயற்கையழகு மிக்க இடம் இது. மலையின் மேல் உள்ள விரிவான பரப்பில் இந்தக் காட்சிகளைக் காண்கின்றோம். மலைச் சாரல்களிலோ கண்ணைக் கவரும் வேறு பல காட்சிகள் உள்ளன. அங்கங்கே காட்டை அழித்துத் தினையை விதைத்து அந்நிலத்து மக்கள் பயிர் பண்ணியிருக்கின்றனர். ஒரு பக்கம் வரகை விதைத்துப் பயிர் செய்கின்றனர். தினைக் கொல்லையினூடே அவரையையும் மொச்சையையும் போட்டுக் கொடிகளை ஓடவிட்டிருக்கின்றனர். சில இடங்களில் எள்ளுச் செடிகள் தளதளவென்று வளர்ந்திருக்கின்றன.

சலசலவென்று ஓடும் அருவிகள் இம் மலைச் சாரலை அழகு செய்கின்றன. மழைக்குப் பஞ்சமே இல்லாத இந்த மலையின் அருவியில் ஒரு கணமாவது நீர் குறை வதில்லை. நெடுந்தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு இவ்வருவிகள் மெல்லிய துகில் அசைவது போலத் தோன்றும்.

இதுதான் பறம்பு மலை; குறிஞ்சி நிலத்துக்குரிய வளப்பம் அனைத்தும் குறைவின்றி நிறைந்து விளங்கும் மலை; தமிழ்ப் புலவர்களின் பாடல்களில் என்றும் மாயாமல் வாழும் பாரி வள்ளலின் மலை.

எளிதில் உணவுப் பொருள்கள் இங்கே கிடைக்குமானாலும் இங்குள்ள மக்கள் சோம்பல் இல்லாமல் பல தொழிலும் செய்வார்கள். தினையை விதைத்துப் பயிர் செய்து பாதுகாப்பது, வரகு எள் முதலியவற்றை விளைப்பது, பலாப்பழங்களைக் கொண்டு வந்து அவற்றிலுள்ள கொட்டைகளை எடுத்து மாவாக்குவது முதலிய செயல்களில் ஈடுபடுவார்கள். மலைக்குக் கீழே உள்ள ஊர்களுக்கு மலையில் விளையும் பண்டங்களாகிய சந்தனம், தேன் முதலியவற்றைக் கொண்டுபோய் விற்றுவிட்டு, நெல், உப்பு முதலிய பண்டங்களை வாங்கி வருவார்கள்.

பறம்பு மலையின் நடுவில் மக்கள் வாழும் ஊர் இருந்தது. அதன் நடுவே இறைவன் திருக்கோயில் ஒன்று உண்டு. பாரிவேள் அவ்விடத்தில் அரண்மனை கட்டி வாழ்ந்து வந்தான்; தனக்கு வேண்டிய அளவுக்கு ஒரு சிறு மாளிகை கட்டிக்கொண்டு அதில் இருந்து வந்தான். அவனுடைய வீரமும் கொடையும் தமிழ் நாடு முழுவதும் அறிந்தவை. ஆதலால் நாள்தோறும் பல இடங்களிலிருந்து அவனைப் பார்க்கப் புலவர் பெருமக்கள் வந்து செல்வார்கள்.

பாண்டி நாட்டில் இன்று பிரான்மலை என்ற பெயரோடு விளங்கும் மலையே பாரி வாழ்ந்திருந்த பறம்பு மலை. சேர நாட்டிலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் பல புலவர்கள், ஆறுகள் கடலை நோக்கி வருவதுபோல வந்துகொண்டே இருப்பார்கள். பாரி முடியுடை மன்னர்களாகிய சேர சோழ பாண்டிய மன்னர்களைப் போன்றவன் அல்லன்; அவன் ஆட்சியின் கீழ்ச் சோழ நாட்டைப் போன்ற பெரிய மண்டலம் அமைந்திருக்கவில்லை. அவன் குறுநில மன்னர்களில் ஒருவன். அக் காலத்தில் தமிழ் நாட்டில் குறுநில மன்னர் பலர் இருந்தனர்; சிறுசிறு நாடுகளைத் தங்க ளுடைய ஆட்சி நிலமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களை வேளிர் என்று சொல்லுவார்கள். அவர்கள் கோட்டை. நாடு, நகரம், மலை முதலியவற்றை உடையவராக இருந்தாலும் பெரிய நிலப்பரப்பை ஆட்சி புரியாமையால் குறுநில மன்னர்களாக இருந்தார்கள். பிற்காலத்தில் சமீன்தார் என்று வழங்கியவர்களைப் போன்றவர்கள் அவர்கள் என்று சொல்லலாம்.

பாரி அத்தகைய வேளிருக்குள் ஒருவன். அவனைப் போல ஆய், காரி முதலியவர்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள். பாரியின் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பெயர் வழங்கியது. முந்நூறு ஊர்களை உடைய அந்த நாட்டிற்கு நடுவே உயர்ந்து ஓங்கி நின்றது பறம்பு மலை. அந்த மலையின்மீதே வாழ்ந்தான் பாரி. மலையின்கீழ் உள்ள ஊர்களுக்கும் வந்து சில முறை தங்குவான். புலவரை எதிர்கொண்டு அழைக்க மலையை விட்டு வருவதும் உண்டு.

தன்னை நாடி வந்த புலவர்களுக்குப் பாரி அளிக்கும் பொருள்களுக்கு எல்லை இல்லை. தேர் கொடுப்பான்; குதிரை கொடுப்பான்; ஊர் கொடுப்பான். பாணர்கள்களுக்குத் துகிலும் பட்டும் அளிப்பதோடு பொன்னால் செய்த பூவையும் அளிப்பான். அக்காலத்தில் இது தமிழ் நாட்டில் இருந்து வந்த வழக்கம். பொற் பூவைப்பெற்று மகிழ்ந்தார்கள் பாணர்கள். பாணர்களோடு வரும் விறலியர்கள் ஆடிப் பாடி இன்புறுத்துவார்கள். அவர் களுக்குப் பொன்னாலான அணிகலன்களை வழங்குவான் பாரி. கூத்தில் வல்ல கூத்தர் வருவர். அவர்களும் பலவகைப் பரிசிலைப் பெற்றுச் செல்வார்கள்.

புலவர், பாணர், விறலியர், கூத்தர் ஆகிய கலைஞர் கள் எப்போதும் ஊர் ஊராகச் சென்றுகொண்டே இருப் பார்கள். எங்கே பழம் கிடைக்கும் என்று தேடிச் செல்லும் பறவைகளைப் போலவும், தேன் உள்ள மலர் களை நாடிப் பறந்து போகும் வண்டுகளைப் போலவும் கலை நயம் தெரிந்து பாராட்டிப் பரிசு அளிக்கும் வள்ளல் கள் எங்கே இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து தேடி நாடிச் செல்லும் இயல்புடையவர்கள் அவர்கள். யாரேனும் ஒரு வள்ளலை அணுகி அவனிடம் பரிசு பெற்றால் அவன் பெருமையைப் பாராட்டுவார்கள். புலவர்கள் இனிய பாடல்களால் புகழ்வார்கள். தம்மை ஒத்த கலைஞர்கள் எதிர்ப்பட்டால் அவர்களிடம் அந்த வள்ளலின் பெருமையை எடுத்துச் சொல்லி, “நீங்களும் அங்கே போங்கள்; உங்களுக்குப் பரிசு கிடைக்கும்” என்று தூண்டுவார்கள்.

வெறும் பரிசைக் கருதி மாத்திரம் அவர்கள் ஒருவரை அணுகுவதில்லை. தம்முடைய கலைத் திறத்தை நன்கு உணர்ந்து சுவைத்து இன்புற்றுப் பரிசில் வழங்குபவரையே அவர்கள் அணுகினார்கள். கலையின் தரத்தை உணரும் வள்ளல்களையே அவர்கள் நாடினார்கள். வரிசை அறியாத பேய்க் கொடையாளர்களிடம் அவர்களுக்கு மதிப்பு உண்டாவதில்லை.

பாரி வரிசை அறிந்து வழங்கும் வள்ளல். புலவர் பெருமக்களின் பொற்பை உணர்ந்து போற்றும் இயல்பும் புலமையும் உடையவன்; பாணர்களின் இசை யில் தன்னை மறந்து நிற்கும் பண்புடையவன்; கூத்தின் வகையையும் குறிப்பையும் நன்குணர்ந்து களிக்கும் கோமான். ஆகையால் அவனிடம் வரும் புலவரும், பாணரும், விறலியரும், கூத்தரும் நாளுக்கு நாள் மிகுதியாயினர். அவ்னுடைய ஈகையையும் வீரத்தையும் பிற நல்ல பண்புகளையும் கூறும் பாடல்கள் பல எழுந்தன. அவன் புகழ் தமிழ் நாடு முழுவதும் பரவி அதற்கு அப்பாலும் செல்லலாயிற்று.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *