

பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
இந்நூல் சிறுவர் சிறுமியர்பொருட்டு எழுதியது.
மகாபாரதம் வடமொழியிற் பதினெட்டுப் பருவமுடையது. தமிழிற் பெருந்தேவனார் கி. பி. தொள்வது நூற்றாண்டிற் பாரதவெண்பா இயற்றினார். அதிற் சிறிது பாகமே நம் கைக்கெட்டியது ; எஞ்சியவெல்லாம் அழிந்தொழிந்தன. அதன்பின் கி.பி. பதினைவது நூற்றாண்டில் வில்லிபுத்தூரர் விருத்தப்பாவால் மகாபாரதம் வகுத்தனர். இவர், பதினெட்டுப் பருவத்தில் முதற்பத்தையே கொண்டார் ; அவற் அள்ளுங் கிளைக்கதைகளை ஒழித்தார். இவரியற்றிய மகாபாரதம் சொற்சுவை பொருட்சுவை கொண்டது. வாசிக்க வாசிக்க மேலும் மேலும் இன்பந்தருவது ; ஆயினும் பத்திய ரூபமுள்ள இந்நூல் தமிழ்ப்பயிற்சி குறைந்த பலருக்குப் பயன்படாததாயிற்று. கி. பி. பதினெண்மது நூற்றாண்டிற் தோன்றிய நல்லாப்பிள்ளையென்பார் வில்லிபுத்தூரரது நுண்ணறிவையும் கருத்தையும் அறியாது, முதற்பத்துப் பருவத்தில் விட்ட கிளைக்கதைகளையும், பின்னெட்டுப் பருவத்தையும் வில்லிபாரதத்தோடு சேர்த்து, ”தமிழ்ப்பார தத்தைப் பூர்த்திசெய்துவிட்டோம் ” என்று மகிழ்ந்தார். மகிழ்ந்துமென்? பயனற்றவையென வில்லிபுத்தூரர் தள்ளி யவற்றைப் பயனுள்ளவையென இவர்கொண்டு எழுதியது வீண்வேலையாயிற்று. அன்றியும் வில்லிபுத்தூராது வாக்குக்கு நல்லாப்பிள்ளைவாக்கு மிகத் தாழ்ந்தது.
பாரதக்கதையை விரித்தும் சுருக்கியும் கத்தியரூபத்திற் செய்தார் பலர். ஆயினும், இந்நூல்கட்கெல்லாம் உள்ள குற்றம் ஒன்று : இயற்கைக்கு மிஞ்சியும் மாறுபட்டுமுள்ள கதைகளை மெய்க்கதைபோல எழுதியது.
அன்றியும், இவற்றுள் சிறுவர்சிறுமியர் கற்கலாகாத கதைகள் ஆங்காங்கு காணலாம்.
இவற்றையெல்லாம் நீக்கி, கதையைச்சுருக்கி எழுதியது இந்நூல். பெரும்பான்மை இயற்சொல்லும் சிறுபான்மை திரிசொல் வடசொல்லும் விரவியிருப்பதற்குக் காரணம், தமிழ்கற்கப் புகுவோர் புதுச்சொற்களையும், சொற்றொடர்களையும் அறிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கமே. இக் கதையுள் வரும் சம்பாஷணையெல்லாம் சமயத்துக்கேற்றபடி கோத்தனவேயன்றி, முதனூல் வழி நூல்களினின்று எடுத் தவையல்ல. ஒரோவிடங்களிற் கதையைத் திரித்தற்குக் காரணம் அறிஞர் தாமே அறிவாராகையால் அவை இவை எனல் அனாவசியம்.
பாரதக்கதையை நாடகமாக நடித்துக்காட்டியதை யான் முதன் முதற் கண்டபோது எனக்கு வயது எட்டு. அதன்பின் அதனை நானும் எனக்கு நேரேமூத்த சோதரனார் சோமசுந்தரனாரும் என் தங்கை சிவபாக்கியவதியும், எந்தையார் யாயாருக்கு முன்பு நடித்துக்காட்டினோம். எந்தையாரும் யாயாரும் என்னையொழிந்த அவர் பிள்ளைகளும் என்னை உலகிலிருத்தி விட்டுப் போய்விட்டனர். அவர்கள் ஞாபகார்த்தம் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கிறேன்.



