
பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
8. சூதாட்டம்
இந்திரப்பிரத்தத்தில் பாண்டவர் சிறப்போடு வாழ்வதைக் தகாதுகண்டு பொறாமையுற்ற துரியோதனன் அத்தினபுரஞ்சென்று
மிக வருத்தியிருந்தான். அகத்தின் நோயை முகத்திற்கண்ட அவன் மாமன் சகுனி, ” உன் முகம் வாடியிருப்பதென்னை?” என்று துரியோதனனைக் கேட்டான். துரியோதனன் தன் நெஞ்சிலிருந்தது முழுவதையுஞ் சகுனிக்குத் தெரிவித்தான். சகுனியைக் கபடத்துக்கும் வஞ்சகத்துக்கும் உருவென்னலாம். ஆயினும் இவன் துரியோதனன் பால் மெய்யன்பு பூண்டவன். தன் மருமகன் துயரத்தை எவ்வாற்றானாயினும் களையத் துணிந்த சகுனி துரியோதனனுக்குச் சொல்லுவான் : “ உதிட்டிரன் கவறாடுவதில் விரும்புடையன். ஆயினும் கவறிலெட்டுணையேனுஞ் சமர்த்தனல்லன். கவறாடும்படி நாம் அவனை அழைப்பின் உடனே வருவன். பின் அவன் நாடு நகரங்களையெல்லாம் நாம் பறித்துக்கொண்டு அவனையும் தம்பி மாரையும் நசிக்கலாம். இதுவே யான் சொல்லும் புத்தி.”
இவ்வாறு சகுனி சொன்னதைத் துரியோதனன் தந்தைக் கறிவித்தான். அவன் மற்றவரோடு இதைக்குறித்து ஆலோசித்தபோது, விதுரர், “சூது பஞ்சமாபாதகங்களில் ஒன்று, அதை விரும்புவார் நாசமுறுதல் திண்ணம்” என்பதை வற்புறுத்தினார். அவர் கூறிய கூற்றின் உண்மையையறிந்தும் திரிதராட்டிரன், துரியோதனன் மேல் வைத்த காதலால், சூதாடவரும்படி பாண்டவரை அழைக்க விதுரரையே அனுப்பினான். விதுரர் இது தம் எண்ணத்துக்கு மாறுபட்ட காரிய மாயினும், அரசன் சொல்லைத் தட்ட மனமின்றிப் போதற் கியைந்தார். போனவர் திரிதராட்டிரன் அழைப்பைப் பாண் டவருக்குத் தெரிவித்தபின், சூதாடுவதினால் வருந்தீங்கையும்
விஸ்தரித்து விளம்பினார். அப்போது உதிட்டிரன், ” சூதால் விளையும் இத்தீங்கெல்லாம் அறிந்திருந்தும் அரசன் சொல்லை மறுத்தற்கஞ்சி எம்மை அழைக்க நீவிர் வருவீரேல், யாம் மகா ராசாவினது சொல்லைத் தட்டுவதெப்படி? அவர் சொல்லுக் கிணங்கல் வேண்டும்” என்று, தம்பிமாரோடும் திரௌபதி யோடும் அத்தினபுரஞ்சென்றனன். தன்னிடம் வந்த பாண்டவரைத் திரிதராட்டிரன் அன்போடு உபசரித்தான். அடுத்த நாள் சபையிலே துரியோதனனுக்கும் உதிட்டிரனுக்கும் சூதாட்டந் தொடங்கியது. துரியோதனன், “ எனக்குப்பதி லாளாக என் மாமனார் சகுனி ஆடுக ” என்றான். இரு பக்கமும் ஒட்டம்வைத்துச் சூதாடத்தொடங்கினர். சகுனி கள்ளச்சூதாட, உதிட்டிரன் நாடு நகரங்களையுஞ் சேனைகளையுஞ் செல்வப் பொருளையும் ஒவ்வொன்றாகத் தோற்றான். தோற்கத் தோற்க, பொய்ம்மானம் மிகமிக, உதிட்டிரன், இயற்கையறிவும் கல்விகேள்விகளால் வந்த அறிவும் மறைய , தம்பியரையும் ஒவ் வொருவனாகத் தோற்றான்; தோற்றபின் தன்னையுந்தோற்றான். விதுரர் முதலிய பெரியோரெல்லாம் “ஆடியது போதும்; நிறுத்துக கவறு” என்றார். உதிட்டிரனோ கட்குடியன் கள்ளால் மயங்கினும் பின்னுங் கள்ளையே விரும்புதல் போல வெறி கொண்டு, “திரௌபதியிருக்கின்றாள், அவளையும் ஒட்டம் வைத்தாடுவேன் ” என்றான். இவ்வாட்டமுந் தோற்றனன். உதிட்டிரன் தோல்வியடையுந்தோறும் அகம் மிக மகிழ்ந்த துரியோதனன், உதிட்டிரன் ஈற்றில் பாஞ்சாலியை ஒட்டம் வைத்து ஆடிய ஆட்டமும் தோற்றதைக்கண்டு, உவகை யென்னும் மதுக்கடலில் மூழ்கி, மதியிழந்து, ஏவலாளரை நோக்கி, உதிட்டிரன் சூதாடியதும் அதில் அவன் நாடு நகரங்களையுஞ் செல்வத்தையுந் தம்பியர் நால்வரையும் தன்னையும் அவளையும் தோற்றதும் திரௌபதிக்கு எடுத்துக்கூறி, அவளைச் சபைக்கு அழைத்துவரும்படி சொன்னான். ஏவ லாளர் போய் இவையெல்லாவற்றையுந் திரௌபதிக்குச் சொல்லி, அவளைச் சபைக்கு வரும்படி துரியோதனன் அழைத் ததையுஞ் சொன்னார்.
அவள், ” உதிட்டிரர் என்னைத்தோற்ற பின் தம்மைத் தோற்றாரோ? தம்மைத் தோற்றபின் என்னைத் தோற்றாரோ?” என வினவினள்.
அதன் விபரத்தை அறியாத ஏவலாளர் சபைக்கு மீண்டு வந்து அவள் கேட்ட கேள்வியைத் துரியோதனனுக்குச் சொன்னார். “தன்னைத்தோற்றபின்பே அவளைத்தோற்றான் உதிட்டிரன் என்று அவளுக்குச் சொல்லுங்கள்” என அவரை அவள்பால் மறுபடியும் விடுத்தான் துரியோதனன். அவர் சொன்னதைக் கேட்ட திரௌபதி, “ உதிட்டிரர் தம்மைத் தோற்றவுடனே துரியோதனனுக்கு அடியார் ஆனார். அடியான் ஒருவன் சுவாதீனமுள்ள ஒருத்தியை ஒட்டம் வைத்தாட அதிகாரமிலன். ஆகவே நான் ஒருவனுக்கும் அடியாளல்லேன். என்னைச் சபைக்கு வரும்படி கட்டளையிடத் துரியோதனனுக்கு அதிகாரமில்லை. இதை அவனுக்குச் சொல்லுங்கள் ” என்றாள். ஏவலாளர் சென்று அவள் கூறியதைச் சொற் றனர். இதைக்கேட்ட துரியோதனன், கோபாவேசத்தனாய், பொதுமகளுக்கு மனுமுறையேது? சாமர்த்தியப் பேச் செல்லாம் அவளைக்கண்டு மயங்குவார்க்கன்றோ? துச்சாதனா, நீபோய் அவளை அழைத்துவா. வாராளேல் அவளை இழுத்து வா ” என்றான். துச்சாதனன் சென்று முன்னே ஏவலாளர் சொன்னவற்றையெல்லாம் மீண்டுஞ் சொல்லி அழைத்தான். திரௌபதியும் முன்னே ஏவலாளருக்குச் சொன்னதையே மீட்டுஞ் சொற்றனள். ” ஏவலாளரை அணாப்பி அனுப்பி
விட்டது போல என்னையும் அனுப்பலாமென்று நினையாதே. நின்னையெப்படியும் வேத்தவைக்குக் கொண்டு செல்வேன்” என்றான் துச்சாதனன். உடனே திரௌபதி காந்தாரிபா லோடி, “ஒலம், ஓலம், நுமக்கு நானடைக்கலம்; என்னைக் காத் தருள்க ” என்று இரந்தாள். காந்தாரியோ, ” ஏன் அஞ்சுகின் றனை? நினக்கு யார் தீங்கு செய்வார்? மைத்துனன் அழைத்தாற் போவதற்குக் கூச்சமேன்! போ போ ” என்று விடை பகர்ந்தாள். இப்படிக் காந்தாரி பேசுகையிற் துச்சாதனன் அவளைப்பிடிக்க நெருங்கினான். அவன் நெருங்குவதைக் கண்ட திரௌபதி ஓடினாள். ஓடுகையில் அவள் அளகம் குலைந்து அவிழ்ந்து வீழ்ந்தது. பின்னே வந்த துச்சாதனன் அவள் கூந்தலை இறுகப்பற்றி இழுத்துக்கொண்டு இராசசபைக்குச் சென்றான். வேடன்கையில் அகப்பட்ட மான் போலச் செய லிழந்து வாளா சென்றனள் திரௌபதி. துச்சாதனன் வேத்தவை நடுவில் இவளை நிறுத்தினான். ஆங்கு வீற்றிருந்த அவையினரைப் பாஞ்சாலி கண்டு தொழுது, “ஐயன்மீர், அறங்கிடந்த நெஞ்சத்தீர், கலையெலாங் கசடறக் கற்றுணர்ந்தீர், துரியோதனனும் துச்சாதனனுஞ் செய்வது நுமக்குஞ் சம்மதந் தானோ? யான் செய்த பிழையாது? என் கணவனார் தம்மைத் தோற்று ஒருவருக்கு அடியாரான பின்பு சுவாதீனமுடைய என்னைப் பந்தயம்வைத்தாட அவருக்கு அதிகாரமுண்டோ ? இக்கேள்விக்குத் தக்கவிடை சொல்ல வல்லார் ஈண்டிலரோ? உளரேல் அவர் மௌனஞ்சாதித்தற்குக் காரணம்யாதோ? அரசன் சீறுவானென்று அஞ்சியோ?
“நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு”
என்றான்றோ ? அரசனையிடித்துக் கழறவல்ல அமைச்சர் ஈண்டிலரோ ? ” என விண்ணப்பஞ் செய்தனள். வீடுமர்,விதார், துரோணர், கிருபர் ஆகியோர் வாய்திறந்திலர். ஆயினும் பாஞ்சாலிக்குச் செய்யும் அநீதியைக் காணலாற்றாத விகருணன் என்னும் இளையான், ” பெரியீர் பாஞ்சாலி கூறுவது நும்காதில் வீழ்ந்திலதோ? கூந்தல் வீழ்ந்து சோர, இரண்டு கண்ணினின்றும் அருவி போற்பாயும் கண்ணீரை நீவிர் கண்டிலீரோ?
‘அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீசன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை’
என்பதறிந்திலீரோ?” என உடலம் நடுங்க, வாய்பதற, சினமும் காணும் இரக்கமும் மீதூரப் பேசினான். இவன் கூறியும் பெரியார் பேசிலர். கர்ணன் மட்டும், “விகருணா, நிறைகுடம் தளும்பாது. ‘பச்சோலை ஒலியாது. இச்சபையில் பிஞ்சிற் பழுத்த நீதான் பேசத் தலைப்பட்டாய். சீச்சீ! அடங்கியிரு” என்றான்.
இதன்பின் துரியோதனன் துச்சாதனனைப்பார்த்து, “ வேசைக்கு வெட்கமுண்டோ ? வெட்கமில்லாமற் குரைக்கின்றாள் இங்கு. இவளைத் துகிலுரிந்து நிருவாணியாக நிறுத்து. அதற்குமுன் ஒருகணப்பொழுது இவள் என் தொடையில் இருக்க ” என்றான். இவற்றையெல்லாங் கேட்ட பாண்டவருள், வீமன் கதையை நோக்கினான் ; வில்லை நோக்கினான் பார்த்தன் ; உதிட்டிரன் மனம் தீப்பட்ட நெய்போல் உருகியும் அவன் அற்றம் பார்த்தான். திரௌபதி, “ஏட பாதகா, நின்தொடையிலிருக்கச் சொன்னாயோ என்னை? நின் தொடையெலும்பு ஓடிய, தசை சிதற, செம்புனல் கொப்பளிக்கச் சாவாய் நீ ” என்று சீறினாள். துச்சாதனன் அவை நடுவில் அவளை நிறுத்தித் துகிலுரிய ஆரம்பித்தான்.
“ அருகணுகி மடவாலை அஞ்சாமற் துகிலுரிவான்
அடர்ந்தபோதில்
இருகைநறு மலர்குவிய எம்பெருமான் இணையடிக்கே
இதயம் வைத்தாள்.”
“ ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம் புனல் சோர,
அளகஞ் சோர,
வேறான துகில் தகைந்த கைசோர, மெய்சோர,
வேறோர் சொல்லும்
கூறாமல், ‘கோவிந்தா கோவிந்தா’ என்றாற்றி,
குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்தூற, உடல்புளகித் துள்ளமெலாம்
உருகி னாளே.”
“ அருமறைசொல் லியநாமம் ஆயிரமும் உரைத் தழைக்க,
அமரர் போற்றும்
திருமலர்ச்செஞ் சேவடியோன் திருச்செவியில் இவள்
மொழிசென் றிசைத்த காலை,
மருமலர்மென் குழல்மானின் மனம் நடுங்கா வகைமனத்தே
வந்து தோன்றி,
கரியமுகி லனையானும் பிறரெவர்க்குந் தெரியாமல்,
கருணை செய்தான்.”
வேண்டுவார் வேண்டுவனவற்றை அருளுங்கடவுள் ஏழைப் பெண்ணின் நிலையைக்கண்டு அவள் பிரார்த்தனையைக் கேட் டருளினார். துகிலுரியப் புகுந்த துச்சாதனனது இரண்டு கையுந் திடீரெனச் சோர்வுற்றன. அவன் கையை நீட்டவும் முடக்கவும் முடியாது செயலற்றுப் பித்தன் போல நின்றான். தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’
என ஐயமுற்ற விகருணன்மனம் தெய்வமுண்டு, தெய்வ முண்டு’ எனத்தேறிக் களித்தது. திரிதராட்டிரன், “ஐயோ! துச்சாதனனுக்கு விளைந்தது யாது? துரியோதனா, மடையா, சூதாட்டம் வேண்டா என்று நான் அன்று சொல்ல, கேட்டாயில்லை. விடு பாண்டவரையும் பாஞ்சாலியையும். விடாயேற் கெடுவாய்; கெடுவேன் யானும் ; கெடும் இக்குலம் ; கெடும் இந்நாடும்” என்றான். திரௌபதி, “உதிட்டிரரை மட்டும் விட்டாற்போதும். அவர் மறுசூதாடி எங்களை விடுவிப்பர் என்றாள். அதற்குத் துரியோதனன் இணங்கி, உதிட்டிரனை அடிமை நீக்கினான். உதிட்டிரன் சகுனியோடு மறுசூதாடி, பாஞ்சாலியையுந் தம்பிமாரையும் மீட்டனன். எல்லாவற்றையும் மீட்பனோ என்று அஞ்சின துரியோதனன், “போதும், போதும் ; பாண்டவரும் பாஞ்சாலியும் பன்னீராண்டு கானகம் வதிந்து, பின் ஓராண்டு எவருமறியாமல் நாடுறைந்து, பின் ஈண்டு வருவரேல் அவர் இழந்த நாடுநகரங்களையும் செல்வத்தையும் மீட்டுங்கொடுப்பேன். ஓர் ஆண்டு மறைந்து வாழ்கையில் அறியப்படுவரேல், மீட்டும் பன்னிரு வருடம் வனவாசமும் ஒருவருடம் அஞ்ஞாத வாசமும் செய்தல் வேண்டும்” என்றான். அவையிருந்தார் யாவரும், “அங்கனமே ஆகுக” என்றனர். பாஞ்சாலியோ, ” அவ்வண்ணமே செய்வோம். ஆயினும் பதின்மூன்று வருஷம் முடிந்தபின் துரியோதனனது இரத்தத்தையெடுத்து என் கூந்தலிற்பூசி அதை முடிக்கு மட்டும் என் கூந்தல் விரிந்திருக்கும் ” என்றாள். வீமன், “துரியோதனனையும் துச்சாதனனையும் என்கதைக்கு இரை யாக்கேனேல் என் பெயர் வீமனன்று” என்றான். அருச்சுனன், “கர்ணனைக் கொல்லேனேல் என் காண்டீவத்தை முரித்து எறிந்துவிடுவேன்” என்றான். பின் ஐவரும் பாஞ் சாலியும் தவவேடம் பூண்டு காட்டுக்கேகினர்.



