பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

12. அஞ்ஞாதவாசம் (தொடர்ச்சி)

ஆனிரைகவர்தலும் மீட்டலும்

பாண்டவரது, அஞ்ஞாதவாசம் தொடங்கிய காலம் முதல் அவர் எங்கு கரந்துறைகின்றனர் என்றதையறியும்படி ஒற்றர் பலரைப் பலவிடங்களுக்கும் அனுப்பின துரியோதனன், ஒற்றர் கூறியவுரையெலாங்கேட்டு, “பாண்டவர் விராடனது நாட்டில் மறைந்து வாழ்கின்றனர் போலும்” என ஐயுற்று, நான் என் படையிற் சிலரையனுப்பி விராடனது ஆனிரையைக் கவர்ந்துவரச் செய்வேனேல், பாண்டவர் விராட தேசத்திலிருப்பின் அரசனுக்கு உதவி செய்ய வருவர் ; அப் பொழுது அவரை வெளிப்படுத்தி, பின்னும் பதின்மூன்று வருடம் பாண்டவப் பதர் வாசனையின்றி வாழலாம்” என யோசித்தான். யோசித்தவண்ணமே படையிற் சிலரை யனுப்பி விராடனது ஆனிரை கவர்ந்தான். கவர்ந்த ஆனி ரையைச் சாதேவன் சென்று மீட்டு வந்தனன். பாண்டவர் விராடநாட்டிலுள்ளாரென்னும் ஐயம் துரியோதனன் மனத்திற் பலத்தது. அவன் விராட நாட்டின் மேற் சதுரங்க சேனையோடு வந்தான். படையெடுத்து வந்தவனைத் துரத்தும்படி விராடன் தன்மகன் உத்தரனை அனுப்பினான். அப்பொழுது கங்கபட்டர், “பிருகர்ணளையென்னும் பேடி, இரதசாரத்தியம் செய்வதில் வல்லாள். உத்தான் தேரை அவள் செலுத்துவளேல், பகைவரை உத்தரன் துரத்துவது திண்ணம். அப்படியே செய்க ” என்று ஆலோசளை கூறினார். அதைக்கேட்ட அரசன் பிருகர்ணளையை அழைத்து, “தேர்செலுத்த நீ எப்போது கற்றாய்?” என ; அவள், “எனக்கு ஒரு காலத்தில் அருச்சுனன் தேர்செலுத்தக் கற்பித்தனன் ”

என்றாள். ” இப்போது என் மகன் உத்தானுக்குத் தேர் செலுத்தச் சம்மதிப்பாயோ ?” என விராடன் கேட்க, ” மகா ராசா சித்தம் என் பாக்கியம்’ என்றனள் பிருகர்ணளை. அவள் தேரோட்ட , உத்தரன் போர்முகத்தை நாடினன். உத்தரன் இதற்குமுன் போர்க்களங் கண்டிலன், போராட்டமும் ஒரு விளையாட்டென எண்ணியிருந்தவன், இன்று அணிவகுத்திருந்த படைகளைக் கண்டவுடன் நெஞ்சம் பதற உடலெல்லாம் நடுங்கினன். “பிருகர்ணளை, தேரைத் திருப்பி அரமனைக்கோட்டு ” என்றான் உத்தரன். ” அரசிளங்குமாரா, மனம் பதறாதே; உன் முன்நிற்பது மகாசேனையன்று, சிறு படை ; கணப்பொழுதில் இதனைத் துரத்துவோம், அஞ்சாதே; நான் தேரைத் திருப்புவதில்லை ” என்றாள் பிருகர்ணளை. இச் சொல் காதில் விழுந்தவுடனே தேரினின்று குதித்து ஓடினான் விராடன் மகன். பிருகர்ணளையுங் குதித்து, உத்தரனைப் பிடித்துத் தேர்த்தட்டில் ஒரு தூணோடு கட்டிவிட்டு, கையில் வில்லும் அம்புமெடுத்து, தானே தேரையுமோட்டிக்கொண்டு, “வம்மின், வீரரே, வம்மின்” என்றாள். “பேடியோடு போர் செய்ய எனக்கு வெட்கமில்லையோ?” என்றான் கர்ணன். உடனே பிருகர்ணளை, தூணியினின்று அம்புகளையெடுத்து வில்லிற் தொடுத்துச் சரமாரி பெய்தாள். சேனையெல்லாம் உடைந்து பின்காட்டி ஓடினது. அப்பொழுது துரியோதனன், “கண்டேன், கண்டேன் ; இவன் பேடியல்லன், அருச் சுனன். அருச்சுனனையன்றித் தேருஞ்செலுத்திச் சமர்புரி வார் வேறியாருமிலர். போதும், போதும்; என்னெண்ணம் நிறைவேறினது! பாண்டவர் பின்னும் பதின்மூன்றியாண்டு வனவாசமும் அஞ்ஞாதவாசமுஞ் செய்தல் வேண்டும்” என்றான். உடனே வீடுமர், “பொறு பொறு, உன் சொல் வீண் சொல்; பதின்மூன்றாம் வருடம் முடிந்து நாள் இரண்டு

கழிந்தன. ஒருவருடம் முழுதும் யாருமறியாமற் பாண்டவர் வாழ்ந்தார் ” என்றார். உடனே அருச்சுனன் வில்லைத் தேரில் எறிந்துவிட்டு, வீடுமரையுந் துரோணரையுந் தலைவணங்கிக் கைதொழுது நின்றான். வீடுமர், ” அருச்சுனா, அஞ்சற்க ; மெய்யே வெல்லும், பொய் வெல்லாது” என்று ஆசிகூறினார்.

இஃதிவ்வாறிருக்க, விராடனது அரமனையிற் கங்கப்பட்ட ரோடு சதுரங்கமாடிக்கொண்டிருந்த அரசன், “நன்னிமித் தங்கள் காண்கிறேன் ; உத்தான் மாற்றாரைப் புறங்காட்டி வென்று வருவன்” என்றான். கங்கபட்டர், ‘நிமித்தம் நன் னிமித்தமே, வெல்வி நம்பக்கத்ததே ; ஆயினும் வெற்றிக்குக் காரணர் உத்தாரல்லர், பேடியே” என்றனர். அரசன் , “யாது சொன்னீர், பட்டரே? என் மகனுக்கு வெற்றியில்லையாம் பேடியொருத்திக்கு வெற்றியாம்! இப்படி எனக்குச் சொல்ல உமது நாத் துணிந்தது என் சோற்றைத் தின்றதினாலன்றோ!” எனச் சீறினான். அருகில் நின்ற பலாயனன், தமையனை இவ்வாறு ஏசிய அரசனைப் புடைக்க மரத்தில் ஒருகொம்பை வெட்டினான். அவனெண்ணத்தை அறிந்த கங்கபட்டர், ”மடையா, பச்சைவிறகு சமையலுக்காகுமோ?” எனத் தடுத்தனர். இவ்வாறு நிகழ்கையில், உத்தரன் ஏறிச்சென்ற தேர் மீண்டது. உத்தரனும் பேடியும் இராசசமுகம் வந்தனர். விராடன், “மகனே, சிறுவனாயினும் பெருஞ்சேனையை வென்றுவந்தாய், உன்னைப் பெறுதற்கு என்ன தவஞ்செய்தேனோ?” என்றான். உடனே உத்தரன், ” எந்தாய், வென்றவன், யானல்லன், அருச்சுனனே ” என்ன; விராடன், ”அருச்சுனனை எங்கே கண் டாய், மகனே? அவன் எப்படி இங்குவந்தான்?” என அரசன் உசாவ; உத்தரன், “இவன் பேடியல்லன், இவனே அருச்சுனன் ; பேடி வேடம் பூண்டு ஒருவருடம் இங்குகழித்தான்” என்றான். அருச்சுனன், வேந்தர்வேந்தே! கடந்தவருடம் நீர் என்னை மட்டுமன்று, என் உடன்பிறந்தார் நால்வரையும் திரௌபதியையும் ஆதரித்தீர். அண்ணா உதிட்டிரா, அண்ணா வீமா, தம்பி நகுலா, தம்பி சாதேவா, பாஞ்சாலி! நீவிரெல் லீரும் நும் வேடங்களைக் களைந்து, சுயரூபத்தோடு நும்மைக் காட்டுமின்” என்று, தானும் தன் வேடத்தைக்களைந்து பார்த்தனாகத் தோற்றினான். ஐவரையுந் திரௌபதியையுங் கண்ட விராடன் “ஐம்பத்தாறு தேசங்களில் என்தேசமன்றோ தவஞ்செய்தது! ஐம்பத்தறுவர் அரசர்களில் யானன்றோ தவஞ்செய்தேன் ! சுதேட்டிணாதேவி, உன் இல்வாழ்க்கையே வாழ்க்கை ! உத்தரை, அருச்சுனனிடம் ஆடல்பாடல் கற்ற இராசகன்னியர் உன்னையன்றிப் பிறருளரோ?” என்றபின், தருமபுத்திரனை வணங்கி, தம்பியர் நால்வரையுந் தழுவி, திரௌபதியையுந் தொழுதான் ; “நீவிர் பாண்டவரென்றும் பாஞ்சாலியென்றும் அறியாது நானும் என் மனைவியும் என் பிள்ளைகளும் செய்த பிழைகளையெல்லாம் எங்களுக்கு மன்னித்தல் வேண்டும்” என இரங்கினான். உதிட்டிரன், “ஐய, ஓராண்டு எங்களுக்கு அன்னவஸ்திரங்கொடுத்து, யாதொரு குறையும் நேராமல் எங்களை நீவிரெல்லீரும் ஆதரித்தீர். நுமக்கு யாம் செய்யும் கைம்மாறுண்டோ ?” என்றான். விராடன், ” என் மகள் உத்தரை அருச்சுனனுக்கேயுரியள். அவளை அவனுக்கே விவாகஞ்செய்து கொடுக்க எண்ணினேன்” என்றான். அருச்சுனன், “ஐய, நான் உத்தரையை என்மகள் போலவே எண்ணி அவளுக்கு ஆடல்பாடல் பயிற்றுவித்தேன். என்மகளை நான் மணப்பதெப்படி? உத்தரை என்மகன் அபி மன்னுவுக்கே உரியள் ” என்றான். “அப்படியே யாகுக” என்றாள் சுதேட்டிணை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *