பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

4. வேத்திரகீயம்

பிராமணவேடங்கொண்டு வேத்திரகீயம்புகுந்த குந்தியும் ஐவரும் ஆங்கு ஒரு பார்ப்பனவி தவையின் வீட்டிற் சென்று அவளோடுறைந்தனர். இவ்வாறு சிலபகல் சென்றபின் ஓரிரவு மாலைப் பொழுதிற் பார்ப்பனி மிக வாட்டமுற்றிருந்ததைக் கண்ட குந்தி, ” அம்மே! நும்முகம் வாடியிருத்தற்குக் காரணம் யாது? நான் அதை அறியலாமோ?” என உசாவி னாள். அதற்கவள், ” எவருந் தீர்த்தற்கரிய இடுக்கணுற்று வருந்துகின்றேன். தலைவிதிதடுக்கற்பாற்றோ? அதை நும் ‘மிடஞ் சொல்வதாற் பயனென்?” என்றாள்.

அதற்குக் குந்தி,

“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்”’


என்ற சொல் பொய்யாமொழியன்றோ? மார்க்கண்டர் தம் விதியையும் மேற்கொண்டார் என்பர். நும்மை வருத்துவது யாதென எனக்கு அறிவிப்பீரேல், ‘துரும்பும் பல்லுக்குத்த உதவும் என்ற முதுமொழிப்படி யானும் ஒருகால் நும் இடர் களையினுங்களையலாம். வாய்திறந்து சொன்மின் ” என வேண்டினள். பார்ப்பனி , ” என் இடர் நீக்க நும்மாலாகா தெனினும் நீர் வேண்டியவாறே சொல்கின்றேன்.

“இப்பட்டணத்துக்குப் புறம்பே ஒரு கொடியன், பகன் என்னும் பெயரினன், உறைகின்றனன். அவன் பிறப்பில் மனிதனேனும் குணத்திற் புலிபோல்வான். இவன் மகனூன் தின்னி. ஒவ்வொருநாளும் இப்பதியிற் புகுந்து ஆடவர் அரிவையர், சிறுவர் சிறுமியர் பலரை இரக்கமின்றிக் கொன்று இன்றுவந்தான். அவனை வெல்வார் ஒருவருமிங்கிலர். அவன் கொடுஞ்செயலைத் தாங்கமுடியாத நகரத்தார் ஒருங்கே திரண்டு அவன்பாற்சென்று அவனடியில் வீழ்ந்து, ‘ஐய! எமக்கருள் புரிதி; எம்மேற் சிறிது இரங்கு ; இனியொருநாளும் எங்கள் நகர்க்குள் நீ வரவேண்டா. நாடோறும் நினக்குப் பல்வகை நைவேத்தியம் நிவேதிப்பதோடு, மகப்பலியிடுவேம். ஒவ்வொரு பகலிலும் உச்சிப்பொழுதில் நகருக்கு வெளியேயுள்ள மலையடிவாரத்தில் நீ வரின், ஆங்கு சமைத்தசோறும் கறி வகைகளுங் கொண்டுவந்து நிற்கும் புருஷனொருவனைக் காண்பாய். அவனைக்கொன்று தின்று அன்னபானாதிகளையும் உண்டு செல். இவ்வாறு பிரதி தினமுஞ் செய்யத் தவறினே மேல் நீ உன்னிஷ்டப்படி செய்யலாம்” என்று வேண்டினர். பகன் அதற்கிசைந்து ஊரவர் அனுப்பும் உணவையும் மனிதனையுந் தின்று வருகின்றான். ஊரில் காளைப்பருவமுள்ள வாலிபர் அனைவரும் கூட, அவரில் எவன் றலைக்குத் திருவுளச் சீட்டு விழுகின்றதோ அவன் அடுத்தநாள் அன்னபானாதி களைக்கொண்டு பகனிடஞ்சென்று அவனுக்கு அவற்றை யெல்லாம் ஊட்டித் தானும் இரையாதல் வேண்டும். இன்று பகல் சீட்டு என்மகன் மேல் விழுந்தது. நாளைக்கு அவன் பகனுக்கு இரையாதல் திண்ணம். அவனைத்தவிர எனக்கு வேறுபிள்ளைகள் இல்லை. நான் கைம்பெண். எனக்கு வேறு துணையுமில்லை. இஃதே என் வருத்தம். நீர் வருந்திக் கேட்டமையின் உமக்கிதைச் சொன்னேன். நீர் என் செய்வீர்? வேறு யாரென் செய்வர்?” என்று புலம்பினாள். இவற்றை யெல்லாங்கேட்ட குந்தி யாதொன்றும் பேசாது, அரை நாழிகை யோசித்தபின் முகமலர்ந்து இவ்வண்ணங் கூறுவாள் :

” அம்மே! என்னை இக்காலத்தில் இங்கு கொண்டுவந்தது இறைவனருள். உமக்கு உதவி செய்வதே அவன் சித்தம். அவனருளால் நானே உம்மிடர் களைவேன் ” என்றாள் . இதைக்கேட்ட பார்ப்பனி குந்தியை ஏற இறங்கப்பார்த்து,

அம்மா! நும் புத்தி நிலையிற் கலங்கியது போலும்! யார் எப்படி என்னிடர் களையக்கூடும்?” என்றனள். அதைச் கேட்ட குந்தி, “எனக்குப் பூரண சித்தசுவாதீனமுண்டு, என் புத்திகலங்கவில்லை. கேண்மின், நீயிர் கைம்பெண் ; நானுங் கைம்பெண். உமக்கு மகன் ஒருவன். அவனையன்றி வேறு பிள்ளைகள் உமக்கில்லை. எனக்கோ ஐவர் மக்கள் உளர். அவருள் ஒருவன் சென்று இறந்து படினும், நால்வர் மக்கள் மிஞ்சியிருப்பர். ஆகவே நாளைக்குப் பகனிடஞ்செல்பவன் நும் மகனல்லன், என் மக்களிலொருவன்” என்றாள். பார்ப்பனி, “உனக்குப் பித்து என்றேன் ; நீ பிச்சியல்லையாயின் நீ மிகக் கொடியை. ஏழை விதவையென்னை இந்நிலையிற் பரிகாசஞ்செய்வது உனக்கு அழகோ? சீச்சி! நீயொரு பெண்ணல்லையோ? பகிடியை விடு” என்று சீறினாள். ” அம்ம, ஏனிவ்வாறு கலங்குகின்றீர்? உமது நிலையில் உம்மைப் பரிகாசஞ்செய்ய யாருக்கு மனம் வரும்? நான் பிச்சியுமல்லேன், கொடியேனுமல்லேன். யான் சொல்லியது சத்தியம் சத்தியம், முக்காலுஞ் சத்தியம் ” என்றாள் குந்தி. பிராமண விதவை, “ அம்மா, கழிபேரிரக்கத்தினால் நீ இவ்வாறு கூறுகின்றனை ; ஆயினும் நாளை உன் புதல்வன் மடிந்த பின் அத்துயரந் தாங்குவாயோ? கையில் விரல் ஐந்துள வேனும் அவற்றில் ஒன்றைத் தறிக்கச் சம்மதிப்பரோ? மக்கள் ஐவரிருப்பினும் அவருளொருவனை இழக்கத் தாயொருத்தி சம்மதிப்பாளோ? அறிந்தேன், அறிந்தேன். உன் பிள்ளைகள் ஐவரில் முதல் மூவரும் நீ பெற்ற பிள்ளைகள். உன் சாயலை அவர்களிற் காணலாம். இரட்டையர் நின் பிள்ளைகளல்லர். அவர்களில் ஒருவனைக் கொல்லக் கருதினை போலும்! துரோகி! தாயில்லாப்பிள்ளையைக் கொல்லலாமோ? நீ மனுஷப்பிறப்பினளோ?” என்று வைதாள். குந்தி,

“அம்ம, நீர் கூறியது மெய்யே; இரட்டையர் என் பிள்ளைகளல்லர், என் சக்களத்தி பிள்ளைகள். ஆயினும் அவர்களிலொருவனையன்று, என் வயிற்றிற் பிறந்த பிள்ளை ஒருவனையே நான் நாளைக்கு அனுப்புவேன். நீர் பேசினது எல்லாம் போதும். நான் நினைத்ததைச் செய்து முடிப்பேன். பொழுது விடிந்தவுடனே அன்னபானாதிகளை எல்லாம் ஆயத்தம் பண்ணித் தாரும். என் மக்களில் ஒருவன் அவற்றை எடுத்துக்கொண்டு போவான்” என்றாள். இதைக்கேட்ட பார்ப்பனி சிறிதுநேரம் பேசாதிருந்து, அடியற்ற மரம் போல வீழ்ந்து குந்தியின் கால்களைப்பிடித்து, ” என்னைக் காக்கவந்த தெய்வம் நீ; உன்னை அறியாது நான் பேசின கொடுஞ்சொல் எல்லாவற்றையும் நீ எனக்கு மன்னிக்கவேண்டும். இப்படிப் பட்ட செயல் முன் ஒருபோதுமில்லை, இனி நடப்பதுமில்லை. நாவலந்தீவுள்ள நாளெல்லாம் நின்பெயர் நின்று நிலவுக! ஏழை யெனக்கு நீ பாராட்டுங் கருணைக்குக் கைம்மாறு செய்ய நினைப்பினும் நான் துரோகியாவேன். கடவுள் நினக்கருள் புரிக ” என்று அழுதாள். அடுத்தநாள் உச்சிப்பொழுதில் உணவு கொண்டு மலைச்சாரலுக்குச் சென்ற வீமன், தான் கொண்டு போன அன்னபானாதிகளைத் தானே உண்பதைக் கண்ட பகன் கோபத்தோடு ஓடிவந்து, “யாரேடா நீ?” என்றான். “யாரேடா நீ?” என்றான் வீமன். உடனே இருவருக்கும் மற்போர் தொடங்கியது. நெடுநேரம் ஒருவனுக்கொருவன் இடையாமற் போர்செய்தபின், ஈற்றில் வீமன் பகனைக்கொன்று சயசிங்க நாதத்தோடு வேத்திரகீயத்துக்கு மீண்டான். கடந்த வரலாற்றை அறிந்த ஊரார், மலைச்சாரலுக்குச்சென்று வீழ்ந்து கிடந்த பகனது பிணத்தைக்கண்டு, அதைத் தகனஞ்செய்தனர். பின் நகரத்தார் வீமனை வாழ்த்தினர். சிலநாட்சென்ற பின் குந்தியும் மக்களும் வேத்திரகீயம் விடுத்துப் பாஞ்சாலம் அடுத்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *