பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

11. அஞ்ஞாதவாசம் (தொடர்ச்சி)

கீசகவதம்

விராடன் மனைவி பெயர் சுதேட்டிணை. அவளுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் கீசகன். கீசகன் வடிவும் அழகு முடையன், சரீரபலமுடையன், அவனை ஓராண்சிங்கம் என்னலாம்; ஆயினும் சுகுணனல்லன், மிருககுணமுடையன். இவன், தமக்கையின் வண்ணமகளைக்கண்டு மோகத்தான். அதனால் அவனுக்குக் காமசுரம் நிகழ்ந்தது. தன் தம்பி நோய்வாய்ப்பட்டான் என்றறிந்த அரசி, அவன் பள்ளியறையிற்சென்று பல சிகிச்சைகளைச் செய்தாள். ஒன்றும் பயன் படவில்லை. ஒருநாள் கீசகன், “நான் பசியால் வருந்துகிறேன் ; நான் அருந்தச் சிற்றுணா விரும்புகின்றேன்; என் நாவுக்கி தந்தரும் சிற்றுண்டி சில சமைத்து உன் வண்ணமக ளிடங்கொடுத்து எனக்கு அனுப்பு ” என்றான். “அப்படியே செய்வேன்” என்று சொல்லிப்போன சுதேட்டிணை சிற்றுண்டி சமைத்து வண்ணமகளிடங்கொடுத்து, கீசகனுக்கனுப்பினாள். நெஞ்சிற் களங்கமில்லா வண்ணமகள் சிற்றுண்டியைக் கீசகன்  பள்ளியறைக்குக் கொணர்ந்தாள். தன்னந்தனியளாய் வந்த வண்ணமகளைக் கண்ட கீசகன், இதுவேதருணமென எண்ணி தன் மனக்குறிப்பை அவளுக்கு உணர்த்தினான். அவள், “இஃதென்னை கொடுமை? ‘புலியது பசித்திடிற் புல்லைத் தின்னுமோ?’ நீர் பிரபு, நான் ஏழை மண்ணமகள். அன்றியும் நான் கன்னியல்லேன், விஞ்சையர் ஐவர் என் கணவர் ; நீர் சொல்லும் இக்கேள்வியைக் கேட்பின் நும்மை இன்றே கொன்றுவிடுவர். நுமக்கேற்ற இராசகன்னியர் பலருளர், அவருள் ஒருத்தியை மணந்து சுகித்திருக்க” என்றனள்.

இவள் சொல்லிய இதோபதேசம் கீசகன்காதில் நுழைய வில்லை. அவன் காமவசத்தனாய்ப் பலவாறு பிதற்றினது மன்றி அவளைப்பிடிக்க எழுந்தான். அவன் பிடிக்ககப்படாமல் வண்ணமகள் ஓடினாள். அவளைத் தொடர்ந்து ஓடினான் கீசகன். இருவரும் சுதேட்டிணையின் அந்தப்புரஞ்சேர்ந்தனர். தமக் கையைக் கண்டவுடன் சிறிது வெட்கி ஒருபுறத்தில் நின்றனன் கீசகன். விரதசாரணி அரசியைக் கண்டவுடன் கோவென் றலறி நடந்ததெல்லாஞ் சொன்னாள். சுதேட்டிணை இயல்பிற் சுகுணியாயினும் தம்பிபாலுள்ள அன்பால் விரதசாரணியைப் பார்த்து, “எம்பி தீயனல்லன், எம்பி ஒரு நம்பி; அவன் விளையாட்டிற்குக் கூறியிருக்கலாம், நீ அதை மெய்யென் றெண்ணினை! போ, போ; உன்னையேன் அவனுக்கு?” என்றாள்.

கீசகன் எண்ணத்தினின்று தன்னைக் காக்க அரசியால் இயலாதென்று கண்ட வண்ணமகள் வேத்தவை புகுந்து அனை வேருக்கும் முன்னே இதை அறிவித்தாள். ஆங்கிருந்த கங்க பட்டர், “வண்ணமகளே, அஞ்சற்க ; நின் கணவர் விஞ்சையர் ஐவருஞ் செத்தாரல்லர்; நினக்கு யாதொரு தீமையுமுறாது; வீணே கவலற்க, ஏகுதி” என்றார். பின்பு இவள் பலாயனனை இரகசியத்திற் கண்டு எல்லாம் அறிவித்தாள். அவன் இவளை நோக்கி, ‘நீ கீசகனிடஞ்சென்று அவனெண்ணத்துக்கு இணங்கினவள் போலப் பாவனை செய். ‘ இன்றிரவு நடுயாமத்தில் நகர்ப்புறத்தேயிருக்கும் காளிகோயிலுக்கு நீ வரின், உன் மனோதத்தை நிறைவேற்றுவேன்’ என்று சொல். உன்னைப்போற் பெண்வேடம்பூண்டு நான் அங்கு சென்று அவனைக் கொல்வேன்” என்றான். அவ்வண்ணமே வண்ண மகள் கீசகனுக்குக்கூற, காமாந்தகனாகிய அவன் காளிகோயி லுக்குச்சென்று, வீமன்கையால் மாண்டான். கீசகன் மடிந்ததை அடுத்தநாள் ஊராரறிந்து விராடனுக்கும் சுதேட்டி ணைக்குந் தெரிவித்தார். விரதசாரணி,” என்கணவர் ஐவர் விஞ் சையரில் ஒருவன் செயல்போலும் இஃது” என்றனள். இதனைக் கேட்ட சுதேட்டிணை, ” இப்படிப்பட்ட உன்னை நானெப்படி வைத்திருப்பது? நீ என்னைவிட்டு அகலல் வேண்டும்” என் றனள். விரதசாரணி, ” அம்மே! இதுகாறும் என்னை ஆதரித்தீர்; என் விரதம் முடிய இன்னும் பதின்மூன்று நாள்; அதன்பின் என் கணவர் ஐவரும்வந்து என்னை அழைத்துச் செல்வர். அதுவரையும் என்னையகற்றாது காத்தருள்க ” என் றாள். “அங்ஙனமே ஆகுக” எனப் புகன்றாள் சுதேட்டிணை .

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *