
பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
13. கண்ணன் தூது
பன்னிருயாண்டு வனவாசமும் ஓரியாண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்தபின், பாண்டவர் தம் நண்பர்களை அழைத்து, “இனிச் செய்வதியாது?” எனச் சூழ்ச்சி செய்தனர். கூடிவந்தவர் எல்லாம், “கூடுமானால் போரில்லாமலே கௌரவரோடு உறவு பாராட்டி, பாண்டவர் தாம் இழந்த நாடு நகரங்களை மீட்டும் பெற்றுக்கொள்ளல் வேண்டும்” எனப் புத்தி சொல்லி, “முதலில் கண்ணனைக் கௌரவரிடமனுப்பி, உங்கள் நாடு நகரங்களை உங்களுக்குத் தரல்வேண்டும் என்று கேட்டலே கடமை” என்றார். கண்ணனும் தூதுபோதற்கு இயைந்தனன். வந்தவர் எல்லாம் போனபின், கண்ணன் பாண்டவரையுந் திரௌபதியையும் அழைத்து, ”நீங்கள் விரும்பியவாறு துரியோதனனிடந் தூது செல்ல இணங்கினேன், நான் போய் யாது சொல்லல் வேண்டும் கூறுமின் ” என்றான்.
உதிட்டிரன், “கண்ணா ! நீ துரியோதனனிடம் போய், அவன் கூறியவாறே நாங்கள் பதின்மூன்று வருஷமும் கழித்து விட்டோம் எனவும், முன் அவன் எங்களுக்குக் கூறியபடியே எங்கள் இராச்சியத்தை எங்களுக்குத் திருப்பிக்கொடுத்தல் வேண்டும் எனவும் அவனுக்குச்சொல்” என்றான். கண்ணன், ” அப்படியே சொல்வேன். என் சொல்லுக்கு அவன் இணங்கானேல்-”
”எங்கள் ஐவேமுக்கும் ஐந்து ஊர் கேள் “
“ஐந்து ஊருந் தாரானேல்”
“ ஐந்து வீடு கேள்”
“அவையுந் தாரானேல்-?”
”எங்களைப் போரில் எதிர்க்க ஆயத்தனாகும்படி அறிவி.”
இவ்வாறு உதிட்டிரன் சொன்னபின், கண்ணன் வீமன் முகத்தைப்பார்த்து, ” வீமா! உன் கருத்தென்னை?” என வினவினான்.
வீமன், “இந்த வெட்கங்கெட்ட மனுஷனோடு பிறக்க நான் முன்னே என்ன பாவஞ்செய்தேனோ!” என்று ; உதிட்டிரன் முகத்தைப்பார்த்து,
“அரவுயர்த்தோன் கொடுமையிலும் முரசுயர்த்தோய்,
நின தருளுக் கஞ்சினேனே.
“இவ்வாறு ஐந்து ஊராயினும் ஐந்து வீடாயினும் இரக்கும் போது துரியோதனன் அவற்றை ஈவனேல், நானும் அருச்சுனனும் திரௌபதியும் வேத்தவையிற் செய்தசபதமெல்லாம் எவ்வாறு போம்? ஆண்மையில்லாதவான்றோ இரந்துவாழல் வேண்டும்?
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில், பரந்து
கெடுக உலகியற்றி யான்”
என்பது ஆன்றோர் வாக்கு” என்றான்.
இதன்பின் கண்ணன் பார்த்தனை நோக்கி, “நின் கருத் தென்னை, அருச்சுனா?” என ; அவன்,
“பொன்னாருந் திகிரியினான் போனாலும், பொறைவேந்தன்
புகன்ற வெல்லாம்
சொன்னாலும் அவன் கேளான்; விதிவலியாற் கெடுமதிகண்
தோன்றா தன்றே!
எந்நாளும் உவர்நிலத்தில் நெல்விளைவித் திடினும்விளை
வெய்தி டாது.
பன்னாகந் தனக்கமிர்தங் கொடுத்தாலும் விடமொழியப்
பயன் கொ டாதே !” என்றான்.
இதன்பின் நகுலனைக் கண்ணன் கேட்க,
“நாவலம்பூ தலக்தாசர் நாடிராந்தோம் எனஎம்மை
நகையா வண்ணம்
காவலன் றன் படைவலியும் எமது தடம் புயவலியும்
காண லாமே”
என்றான் நகுலன்.
இதன்பின் கண்ணன் சாதேவனைக் கேட்க, அவன்,
“திருவுளத்துக் கருத்தெதுவோ அது எனக்குங்கருத்து” என்றான்.
கண்ணன் சாதேவனைத் தனியிடம் அழைத்துச்சென்று,
“போர்செய்யாமல் நம் எண்ணம் எப்படிக் கைகூடும்?” எனக் கேட்க, சாதேவன், “கண்ணா , நீ நினைப்பின், போர்வாராமற் காக்க உன்னால் முடியும் ” என்றான்.
”அஃதெப்படி?”
”பாராளக் கர்ணன், இகற் பார்த்தனைமுன் கொன்று,
காரார் குழல்களைந்து, காலிற் தளை பூட்டி அணங்கின்
நேராகக் கைப்பிடித்து நின்னையும்யான் கட்டுவனேல்,
வாராமற் காக்கலாம் மாபா ரதம்” என்றான்
கண்ணன், சாதேவா! நீ முன்னே சொல்லியவை எல்லா வற்றையும் செய்து முடிப்பினும், என்னைக் கட்ட வல்லாயோ?” என ; சாதேவன், ” உன்னைக் கட்டுவதற்கு வேண்டிய அறிவு எனக்கில்லை ; உன்னைக்கட்ட எனக்குத் தேகபலமும் இல்லை. ஆயினும், நீ அன்பர்க்கெளியை, அன்பினால் உன்னைக் கட்டு வேன். என் அன்பை மீற வல்லாயோ நீ?” என்று, அவன் பாதத்தில் வீழ்ந்து, இருகரங்களாலும் அவன் அடியிணை
யைப் பற்றிக்கொண்டு, ”கண்ணா! பாரதப்போர் நடக்கும். இரண்டுபக்கத்துச் சேனைகளிலும் பல்லாயிரவர் சாவர். எங்கள் ஐவேமையும் சாவாமற் காப்பது உன்கடன்” என வேண்டினான். கண்ணன் மனமுருகி , ” சாதேவா! விடு என் காலை, நீ சொல்வது மெய். யுத்தம் வந்தே தீரும்; இரு மருங்கினும் பல்லாயிரவர் இறந்துபடுவர்; நீவிர் ஐவிரும் சாகாமல் வெற்றியடைவீர்; உமக்கு வேண்டுஞ் சகாயம் நான் செய்வேன் ; என்னை நம்புக. வா, போவோம் சபைக்கு. ஆயினும் இங்கு நாம் பேசியதொன்றும் பிறரொருவரும் அறியலாகாது’ என்று, சாதேவனை அழைத்துக்கொண்டு பாண்டவர்பாற் கண்ணன் மீண்டனன்.
பின் அவன் திரௌபதியை நோக்கி, ‘ஐவருந் தனித் தனியே தத்தங் கருத்தை எனக்கு அறிவித்தனர்; நின்கருத் தென்னை, தங்காய்?” என்றான்.
திரௌபதி,
கற்றைக் குழல்பிடித்து, கண்ணிலான் பெற்றெடுத்தோன் பற்றித் துகிலுரிய, பாண்டவரும் பார்த்திருந்தார். இப்பொழுதும் ஊர் இரந்து வாழ உன்னுகின்றார். அகதிக்கு ஆகாசமே துணை’ என ; கண்ணன், ”பாஞ்சாலி, நீ அஞ்சற்க; உன்னை இறைவன் மறவான். இவர் ஐவரும் மறந்தாலும் அபிமன்னு உன்னை மறவான். உன் சபதத்தை நிறை வேற்ற அவன் இருக்கும்போது நீ அஞ்சுவதேன்? இப்பொழுதே துரியோதனனிடம் போகின்றேன். அங்கு நடப்ப தெல்லாம் நான் உனக்கு வந்து சொல்லுவேன் ; அழாதே” எனத் தேற்றி, பாண்டவரை விட்டு அத்தினபுரம் நோக்கிப் போனான்.
கண்ணன் அங்கு வருவதைக் கேள்வியுற்ற பலர், அவனை எதிர்கொள்ளச் சென்றனர். அவர்களுள் விதுரர் வீட்டுக்கு விருந்தினனாய்க் சென்றான் கண்ணன். அங்குநின்று இராச
சபைக்குக் கண்ணன் போயினன். பாண்டவர் தூதனாய் அவன் வருதலைக் கேள்வியுற்ற துரியோதனன், தன் சபையாரை நோக்கி, இடையர் வீட்டில் வளர்ந்து மாடுமேய்த்த கண்ணன், இன்று பாண்டவருக்குத் தூதனாய் நம்சபைக்கு வருகிறான் எனக் கேள்வி, அவன் இங்கு வருவனேல், நீவிர் எவரும் அவனுக்கு எவ்வகைமரியாதையும் செய்யவேண்டா. எழுந்து நிற்கவும் வேண்டா ” என ஆணையிட்டனன். அதைக் கேட்டவருள் . முதியார் ஒருவரும் அதை மதித்திலர். சபைக்குக் கண்ணன் வந்தவுடன் வீடுமர், துரோணர் முதலிய பெரியார் அவனைத் தக்கவாறு உபசரித்தனர். பின் கண்ணன் ஓர் ஆசனத்திருந்து, துரியோதனனை விளித்து இவ்வாறு கூறுவான் : ” பாண்டவர் பன்னிருயாண்டு வனவாசமும் ஒரியாண்டு அஞ்ஞாதவாசமும் முடித்து மீண்டனர். முன் நீ சொன்னபடி அவர் நாடுநகரங்களை அவருக்கு மீட்டுங் கொடுத்தல் நின்கடன். இவ்வாறு நீ செய்யத் தவறுவை யேல், துரியோதனன் சொன்ன சொற் தவறினான்’ என உலகம் ஏசும். அப்படி உலகம் ஏச இடங்கொடாது நீயே அவர் நாடுநகரங்களை அவருக்கு மீட்டுங்கொடுப்பதுமன்றி, அவரிடம் மெய்யன்பு பாராட்டி ஒழுகுவையேல், பாதவமிசத் திற்பிறந்த பாண்டவரும் கௌரவரும் யாதொரு வேற்றுமையு மின்றி வாழ்வதைக் காணும் உலகம் மகிழும். சுயோதனா, இதற்கு என்னவிடை கூறுகின்றாய்?”
இப்படிக் கண்ணன் உரைத்த இதோபதேசம் துரியோ தனன்காதில் நாராசம் போல நுழைந்தது. உடனே அவன், “ நீவெறுக்கில் என்? இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என்?
“போய்க கைக்கில்என்? உரைத்த உண்மைமொழி
பொய்த்ததென் றமார் புகலில் என்?
வேய்ம லர்த்தொடை யல்ஐவர் என்னுடன்
மிகைத்து வெஞ்சமர் விளைக்கில் என் ?
ஈயி ருக்குமி டம்எ னினும் இப்பு
வியில்யான் அவர்க்கர சினிக்கொடேன் “
எனக் கதறினான். கண்ணன், “சுயோதனா, என் வாயினின்று ஐவர் வெஞ்சமர் விளைப்பர் என்பது வரவில்லை. போர் செய்ய எண்ணுகின்றாய் நீ. சமாதானத்தோடுவாழ எண்ணுகின்றார் ஐவர். அவர் ஆள அவர் நாட்டினைத்தா உனக்கு விருப்ப மில்லையேல், ‘ஐந்து ஊராயினுந் தருக’ என்றார் பாண்டவர் ” என்றான். துரியோதனன், ” ஐந்து ஊர் அல்ல, ஒரு குக்கிராமமும் தருவதில்லை ” என்றான். “ஐந்து ஊர் தாராயேல் ஐந்து இல்லங்களேனுந் தா” என்றான் கண்ணன். ”ஒரு குடிலும் நான் அவருக்குக் கொடுப்பதில்லை” என்றான் துரியோதனன்.
இதைக்கேட்ட விதுரர், “இதுகாறும் பழுதில்லாத குருகுலத்துக்கு இன்று வசைவந்ததே ! சுயோதனா, பதறாதே; நுந்தையார் அந்தகராகப் பிறந்ததினால், பாண்டுவுக்கே அரசு சென்றது. பாண்டு இறந்தபின் உதிட்டிரனுக்கே அரசு செல்லுதல் நெறி. அப்படியிருந்தும், பாண்டவர் நாடு முழுதுங் கேட்டாரில்லை. அதிற் பாதியையே கேட்டனர்; அதுவுந் தாராயேல் ஐந்து ஊர் கேட்டனர். அவற்றையும் தாராயேல் ஐந்து இல்லம் வேண்டினர். நீயோ ஒரு குடிலும் தருவதில்லை என்கின்றாய்! ஐயோ, இம்மொழி கேட்கவோ யான் இருந்தேன் உலகில்? கண்ணன் விண்ணப்பத்தை மறாதே, ஐந்து வீடாயினுந் தருக” என்றான். இதைக்கேட்ட துரியோதனன், “இதற்குமுன் குருகுலத்துக்கு
வசைவந்தது இல்லையாம்; என்னாற்தான் இன்று வசைவந்த தாம்! விதுரர் தாசிக்குப்பிறந்தமகன் என்பது வசையில்லை போலும்! இவ்வூரில் அடியெடுத்துவைத்த இடையனை வேறொருவரும் அழையா திருக்க நீ உன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தது, தாசிமகன் புத்தியல்லவோ? இன்று சபையில் யாரும் பேசாது வாளாவிருக்க, தாசிமகனார் என் சொல்லை மீறிப் பேசத்தலைப்பட்டார்!” என்றான்.
இப்புன்சொல் தஞ்செவியில் விழவே, உள்ளஞ்சினக்க, கண்சிவக்க, உடலம்பதற, நாக்குழற, விதுரர், ” என்ன சொன்னாய்? மானிடப்பதரே, இச்சொல் சொன்ன நாவை உடனே என்வாளாற் துணித்திருப்பேன் ! குருகுலத்தில் முதியோன் ஒருவன் சிறுவன் ஒருவனை நாவை வெட்டினான் என்னும் பழிச் சொல்வரும் என்று அஞ்சினேன். நீ சொன்ன சொல் வேறு எவருஞ் சொல்லியிருப்பரேல், அவரை என் வில்லுக்கு இரையாக்கியிருப்பேன். இவ்வில்லை இன்னும் வைத்திருப்பேனேல் ஒருவேளை உன் பொருட்டு உன் மாற் றாரைக்கொல்ல என்மனந் துணியும். ஆகலின் இதை இப்பொழுதே முரித்து எறிகிறேன்” என்று, வில்லை ஒடித்து விட்டு, சபையினின்று நீங்கி, தம்மனையை நோக்கிச் சென்றனர். அவர் சென்றபின், கண்ணன், ‘ சுயோதனா , வெஞ்சமர் வேண்டினாய். அதனைப் பாண்டவர் நினக்குத் தருவர் ; யுத்தத்துக்கு ஆயத்தஞ்செய் ” என்றபின் அவையைவிட்டுப் புறப் பட்டனன்.
கண்ணன் விதுரர் வீட்டுக்குத் திரும்பிவந்து, அங்கு கடந்த பதின்மூன்றுவருடம் உறைந்து வந்த குந்தியைத் தனியே அழைத்துச்சென்று, ” மாமீ, நுமக்கு ஓர் இரகசியன் சொல்லல் வேண்டும். யான் இதை எப்படி அறிந்தேனென்று
என்னைக் கேட்க வேண்டா. நீர் பாண்டுவை மணக்குமுன் நுந் தையார் அரமனையில் இருக்கும் பொழுது ஓர் ஆண்மகவைப் பெற்று, வசைமொழிக்கு அஞ்சி, மகவை ஒரு பேழையில் வைத்து, கங்கையில் இட்டதை மறந்திருக்கமாட்டீர். அதன் பின் அப்பிள்ளையின் கதி யாதாயிற்று என்பது நுமக்குத் தெரியாது. யான் சொல்ல, இன்று கேளும் : ஆற்றில் மிதந்து வந்த பேழையைத் திரிதராட்டிரன் தேர்ப்பாகன் ஒருவன் எடுத்துத் திறந்து, உயிருடனிருந்த பிள்ளையைக்கண்டு, தன் மனைவி இராதையிடங் கொண்டுபோய்க்கொடுக்க, அவள் அப் பிள்ளையை வளர்த்து வந்தனள். அப்பிள்ளை உரியகாலத்தில் கௌரவருக்குத் தோழனானான். அவனைத் துரியோதனன் அங்க நாட்டுக்கு அரசனாக்கினான். அவனே கர்ணன். கர்ணன் நும் மகன் ; இதை நீர் அறிந்திலீர்; கர்ணனுக்கும் தன் தாய் தந்தையர் யாரென்பது தெரியாது. கர்ணன் துரியோதனனுக்கு உற்ற தோழன். கௌரவருக்கும் பாண்டவருக்கும் போர் சிலநாளிற் தொடங்கும். கர்ணன் துரியோதனன் பக்கம் போர்செய்வனேல், அருச்சுனன் சாவது திண்ணம். ஆகவே, நீவிர் இன்றே கர்ணன்பாற்சென்று நீவிர் அவனுக்குத் தாயார் என்பதும் அவன் நமக்கு மைந்தன் என்பதும் அறிவித்து, அவன் கௌரவர்களை விட்டு ஒழிவனேல் பாண்டவர் வெற்றியடையும் போது அவனுக்கே முடிசூட்டுவது எனத் தெரிவியும். அதற்கு அவன் உடன்படானேல், போரில் அருச்சுனனை எதிர்த்துப் பொருகையில் அருச்சுனன் மீது ஒருமுறைக்கு மேல் அம்பு எய்யாதிருக்க ஒருவரம் வேண்டுமின். வெட்கத்துக்கு அஞ்சி, கர்ணனுக்கு இதைச் சொல்லீரேல் அருச்சுனன் சாவது ஒருதலை ” என்றான்.
குந்தி தான் பெற்ற மக்களுள் அருச்சுனன் மீதே அளவிலா அன்புடையள், பிள்ளைகள் எல்லாருள்ளும் அருச்சுனன் கனிட்டன் என்பதினாற்போலும்.
தன் சேட்டகுமாரன் இன்னும் உயிரோடு இருக்கின்றான் என்றும், அவன் கர்ணனே என்றும் கேள்வியுற்ற தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அம்மகிழ்ச்சியை ஆனந்த சாகரம் எனின் அது மிகையாகாது. ஆயினும் தன் தலைப் புதல்வன் கர்ணன், தன் குட்டன் அருச்சுனனுக்குத் தீராப் பகைவனென்றும், அவனே இவனைக்கொல்லக் கங்கணங்கட்டி இருக்கிறான் என்றும் நினைக்கும்போது சாகரத்தை வடவாமு காக்கினி உறிஞ்சியது போல ஏங்கினாள் குந்தி. “ஐயையோ! என்போற் பாவியும் உண்டோ? – தன்வினை தன்னைச்சுடும்’ என்றது போல என் பிள்ளையை ஆற்றில் எறிந்துவிட்டபாவம் இப்பொழுது என் குடலைத் தின்கின்றதே! அருச்சுனன் என் உயிர். அவன் செத்தால் என் உயிர் நிற்குமோ? அன்றியும் என் மகன் கர்ணன் குருநாட்டை ஆள்வதைக் காணும்பாக்கியம் என் கண்ணுக்குக் கிடையாதோ? எப்படி யாயினும் ஆகுக. இன்றே கர்ணனிடஞ் செல்வேன்” என எண்ணி, மன வேகத்தோடு கர்ணனை அடைந்தாள் அவன் தாய்.
கர்ணன், தன்னிடம்வந்த குந்தியை ஆசனத்திருத்தி, தக்க மரியாதையோடு உபசரித்து, “நீவிர் என்னிடம் வந்தது யாது கருதியோ?” என வினவினன். அவனுக்குக் குந்தி கூறுவாள் :
” கர்ணா கேள், நான் இதுகாறும் யாருக்குஞ்சொல்லாத இரகசியம் ஒன்றுண்டு. அதை இன்று உனக்குச்சொல்ல வந்தேன். இதுவரையிலும் நான் உனக்குஞ் சொல்ல எண்ண வில்லை. இதை நீ அறியாதிருப்பது தகுதியன்று என எண்ணியே இப்பொழுது சொல்லத் துணிந்தேன். ஆயினும் அதைச் சொல்லுமுன் உன்னிடம் ஒரு வாக்குத்தத்தம் கேட்கிறேன். நான் இன்று உன்னிடம் வந்ததும், இங்குநானும் நீயும் செய்யும் சம்பாஷணையும் கௌரவரில் ஒருவ ரேனும் பாண்டவரில் ஒருவரேனும் அறியலாகாது. இது வெளிப்படுமேல் பெருந்தீங்கு உண்டாகும்.”
இவ்வாறு குந்தி கூறக்கேட்ட கர்ணன், “இவ்விஷ யத்தை எவருக்கும் அறிவியேன். அச்சமின்றிப் பேசுக ” என, குந்தி சொல்லுவாள் :
“நான் பாண்டுவை விவாகஞ்செய்வதற்குமுன்னே என் தாய்தந்தையர் அரமனையில் கன்னியாய் வாழ்ந்தகாலத்தில், எந்தையைக் காண அயல்நாட்டு இராசகுமாரனொருவன், அழகில் இளஞாயிறுபோல்வான், வந்தனன். அவனும் நானும் ஒரு பூங்காவிற் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் ஒருவரை யொருவர் கண்டதும் எங்களையறியாமலே அன்புவலைக்குட் பட்டோம். உடனே இராசகுமாரன் என்னைக் காந்தருவ விவாகஞ்செய்தனன். அதன்பின், தான் என்னை மணந்ததை தன் நாட்டிற்குச் சென்றவுடன் தன் தாய் தந்தையருக்கறிவித்து, என்னை அழைத்துச்செல்வதாக வாக்களித்தான். அந்தோ! இதைக்கூறி அவன் பத்தடியெடுத்து வைக்குமுன் ஒரு நாகம் அவனைத் தீண்டிற்று. உடனே விஷம் தலைக்கேறி என் கண்முன்னரே அவன் விழுந்து செத்தான். நானும் என் தோழிமாரும் அவனை யாருமறியாமல் அடக்கஞ்செய்து விட்டு வாளாவிருந்தோம். அதன்பின், ஐயிரண்டு திங்கள் கழிந்து எனக்கு ஓராண்மகவு பிறந்தது. உலக அபவாதத்துக்கு அஞ்சி, அம்மகவை ஒரு பேழையுள் வைத்து, கங்கை யாற்றில் விடுத்தேன். அம்மகவே நீ” என்று கண்ணீர் விட்டாள். கர்ணன் சிறிது நேரம் எண்ணத்துள் ஆழ்ந் திருந்து, பின் அவளை நோக்கி, ”நீவிர் கூறுவது உண்மையென்பதை யான் எவ்வாறு அறிவேன்?” என்றனன்.
அதற்கு அவள், ” ஒருபெண், வசையென உலகம் நினைக்கும் விஷயம் ஒன்றைத் தன்மேற் சுமத்தி மற்றவர்களுக்குத் தானே அதை எடுத்துச்சொல்வாளோ? நான் பாண்டுவை மணப்பதற்கு முன் வேறொருவனை மணந்ததும் அதனாற் பிள்ளை பெற்றதும் என் தாய் தந்தையரும் அறியார். அப்படியிருக்க, ஓர் இராசபத்தினியாகிய யான், எனக்கு வசைதரும் ஒரு கதையைக்கட்டி, அதை ஓர் இராசனுக்கு வந்து சொல்லு வேனோ? என் அகத்தின் உண்மையை என்முகமேகாட்டும். இன்னும் வேறு சான்று கேட்பையேல் இதோ இந்தக் கண்ணாடியுட்பார் உன் முகத்துக்கும் என் முகத்துக்கும் இருக்கும் ஒற்றுமையை.”
இதைக்கேட்ட கர்ணன், ” அன்னாய், நுஞ்சொல் மெய்யென்பதில் எனக்கு ஐயம் சிறிதுமின்று. இதுவரையிலும் எனக்குத் தெரிவியாத இவ்வுண்மையை இன்று தெரிவித் தற்குக் காலம்வந்தது என்றீர், அஃது என்னை?” என்றான்.
உடனே குந்தி ஓடிப்போய், மகனை மார்போடு இறுகத் தழுவி, இருகர்ணத்திலும் முத்தமிட்டு, ” கர்ணா, இன்னுஞ் சிலநாளிற் கௌரவருக்கும் பாண்டவருக்கும் போர்தொடங்கும். நீ கௌரவருக்குத் துணை நிற்பையேல், இருதலைக் கொள்ளியினிடையே நின்ற எறும்பு போல என்மனந் துடிக்கும். உன்னை இழப்பேனோ? ஐவரில் ஒருவனையாவது இழப் பேனோ? இழக்க என்மனந் துணியவில்லையே. நீ கௌரவரை விட்டுப் பாண்டவர் பக்கஞ் சேர்வையேல் அவரெல்லாம் உன்னடியிணைக் கீழிருந்து குற்றேவல் செய்ய, நீயே குருநாட்டை
ஆளுவை. இவ்வரம் ஒன்று கேட்கவே உன்னிடம் வந்தேன்” என்றாள்.
” அன்னாய், நன்று சொன்னீர் ! என்னையிழக்க நுமக்கு மனமில்லையோ? பேழையில் வைத்து, கங்கையாற்றில் என்னை விட நும்மனந் துணிந்ததன்றோ? அன்றே என்னை இழந்தீ ரன்றோ? நான் நீவிர்பெற்ற மகனென்பது மெய்யேயாயினும் இப்பொழுது என் உடலத்துட் பாயுங் குருதியில் ஒவ்வொரு துளியும் சுயோதன னுடைய தன்றோ ? என் தசையில் ஒவ் வோரங்குலமும் அவனளித்த உணவன்றோ ? என் தோலை அறுத்துச் செருப்புத்தைத்துச் சுயோதனனுக்கு கான் கொடுத்தாலும் அது கைம் மாறாகுமோ? ‘உண்ட வீட்டுக்கு இரண்டகஞ்செய்தான் கர்ணன்’ என்ற வசைமொழி எனக்கு வருவது நுமக்கழகோ? இம்மட்டோ ? தேர்ப்பாகன் மகன் என்று யாவரும் என்னைப் புறக்கணித்தகாலை என்னை அங்க தேசத்துக்காசனாக்கி, தன் தம்பியர் எவரினும் என்னை மிக நேசித்தவன் சுயோதனனன்றோ? அம்மா, இக்கதைகேண்மின் : ஒருநாள் சுயோதனனைத்தேடி எங்குங் காணாமல், ஒருவேளை அந்தப்புரத்தில் இருக்கின்றான் போலும் என எண்ணி அங்கு சென்றேன் ; அங்கும் அவனில்லை ; அவன் மனைவி என்னை விளித்து, அண்ணா , சதுரங்கமாடுவோம், வா’ என்றாள்; நான் இசைந்து, இருவேமும் சதுரங்கமாடினேம் ; வெகு நேரஞ்சென்றபின் ஆட்டத்தில் எனக்கே வெற்றிவருந் தருணத்தில் சுயோதனன் வாயில்வழியே உள்ளே நுழைந்தனன் ; வாயிலுக்குப் புறங்காட்டியிருந்த நான் அவன்வந்ததைக் காண வில்லை. ; தன் கணவன் வந்ததைக் கண்டவுடனே எழுந்தாள் அவன் மனைவி. ஆட்டத்திற் தோல்வியடையுமுன் எழுந்து ஓடக் கருதினாளென நான் நினைத்து, ‘ஏன் எழுகின்றாய்? ஆட்டத்தை முடித்தபின் போ, இரு’ என்று அவள் சேலையின் முன்றானையைப் பிடித்து இழுத்தேன் ; அதிற் கோத்திருந்த மணிகள் பல விழுந்து சிதறின ;
இதற்குள் சுயோதனன் வந்துவிட்டனன் ; அந்தப்புரத்தில் வேறொருவருமில்லாத காலத்தில் அவன் மனைவியோடு சதுரங்கமாடின துமன்றி, அவள் சேலையின் முன்றானையைப் பற்றியிழுத்த என்னை எவ்வாறு ஒறுப்பானோ என்று நான் அஞ்சினபொழுது, அவன் என்னருகே நின்று, ‘கர்ணா, சிந்தின மணிகளை நான் பொறுக்கித்தர நீ கோப்பாயோ, நான் கோக்க நீ பொறுக்கு வாயோ?’ என்று அன்போடு கேட்டான் ; இத்தகைய என் நண்பன் பொருட்டு என் உயிரையும் ஈவன்; இத்துணிபினின்று என்னை மாற்ற எவராலுமாகாது, இது சத்தியம்.”
“ மகனே, தேவசங்கற்பம் இஃதாயின், யானோ இதனை மாற்றுவேன் ? உன் எண்ணப்படி செய்க. ஆயினும் ஒன்று வேண்டுவேன் : போரில் நீயும் அருச்சுனனும் எதிர்த்துப் பொருவீரேல், அருச்சுனன் மீது ஒருமுறைக்குமேல் அம்பெய்யற்க. உன் தாய் இதை வேண்டினேன்.”
” அங்ஙனமேயாகுக. பார்த்தன் மேல் ஒருமுறைக்கு மேல் அம்பெய்யேன். அன்னாய், நானும் நும்மிடம் ஒருவரங் கேட்கின்றேன் : நான் நும்மகன் என்பதைப் பாண்டவர் அறி யாதிருத்தல் வேண்டும். போரில் நான் மாள்வது திண்ணம்; போர்க்களத்தில் என் பிணத்தின்மீது விழுந்து நீர் அழல் வேண்டும்; நான் நமக்கு மகனென்பதும் நீர் எனக்குத் தாயென்பதும் அன்றைக்கு இருபக்கமும் அறிக ; அதுகாறும் இவ்விஷயம் யாரும் அறியற்க.”
” அங்ஙனமே யாகுக.” இதைச் சொன்னபின் குந்தி எழுந்து, தன் மகனை ஆவில் கனஞ்செய்து, உச்சிமோந்து, இருகன்னத்திலும் முத்த மிட்டாள். உடனே கர்ணன் அவளடியில் வீழ்ந்து, “உய்ந்தேன்,
உயந்தேன். இதுகாறும் தேர்ப்பாகன் மகன் யான்’ என எண்ணியிருந்தேன். இன்று என் தாய் தந்தையர் யாரென்பது அறிந்தேன். என் தாய் என்னைத் தழுவவும் உச்சிமோப்பவும் முத்தமிடவும் பாக்கியம் பெற்றேன். இன்று இதுபோதும். நான் யார்மகன் என்பதை நான் செத்தபின் உலகம் அறியும் ” என அரற்றினான். ‘கன்றைப்பிரியுந் தலையீற்றாவைப்போல’ அரிதிற் பிரிந்தாள் குந்தி கர்ணனை.
பின் மீண்டுவந்து, தனக்கும் கர்ணனுக்கும் நடந்த சம்பாஷணை முழுதும் குந்தி கண்ணனுக்குச் சொன்னாள். ”நன்று செய்தனை” எனக் கண்ணன் அவளை வியந்தனன்.
அதன்பின் தான் வந்தகாரியம் முடிந்தது என உவகை யோடு பாண்டவர்பாற் சென்றான் கண்ணன்.



