பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

3. இடிம்பவனம்

சுருங்கையின் புறம்பே வந்த பாண்டவர் தாம் ஒரு காட்டில் இருக்கக் கண்டனர். இவர் காட்டில் வழிநடந்து செல்கையில் வனவாசியொருவன் எதிர்ப்பட்டுப் பலவாறு தீமை செய்யப் புகுந்தான். வீமன் அவனோடு பொருது அவனைக்கொன்றான். சிலநாழிகை கழிந்தபின் வனமங்கை ஒருத்தி வனவாசி செத்து விழுந்து கிடந்த இடம் வந்து, பிணத்தைத் தழுவி, அழுது புலம்பினாள். அவளது துக்கத்தை ஆற்றச்சென்ற குந்தியைப்பார்த்து அவள் சொல்லுவாள் :

” அம்மே! இவன் என் தமையன். இவன் பெயர் இடிம்பன். என் பெயர் இடிம்பை. எங்களுக்குத் தாய் தந்தையர் இல்லை. எனக்கு உடன் பிறந்தார் வேறு ஒருவரும் இல்லை. இனி என்கதி யாது? நான் அனாதை யானேனே ! ”

இவ்வாறு கூறியழுத இடிம்பை மேல் குந்தி இரக்கமுற்று, “ மகளே! உன் கவலையொழி. உன் அண்ணனைக் கொல்ல நாங்கள் நினைக்கவில்லை. அவனே எங்களுக்குப் பலதீங்கு செய்ய முயன்றான். பின் என்மகன் வீமனைத் தன்னோடு மற்போர் செய்யும்படி அறைகூவினான். இவர் இருவரும் மற்போர் செய்கையில் வீமன் இடிம்பன் கையினின்றும் வேறுவகையாய்த் தப்பமுடியாமல் அவனைக் கொன்றான். ஆயினும் உன் நிலையைக்கண்டு வருந்துகின்றேன். இறந்து போன இடிம்பனை எழுப்பித்தர என்னால் இயலாது. என்னால் இயன்றதைச் செய்வேன். வீமன் உன்னை மணந்து ஆதரிப் பான். உன்னை ஒருநாளுங் கைவிடான். இஃது உனக்குச் சம்மதமா?” எனக் கேட்டனள்.

அதற்கு இவள்,”அன்னே , என் அண்ணன் இறந்து போக, எனக்கு வீமன் கணவனாக, மற்றைய நால்வரும் சகோதரராக,

தாயில்லாத எனக்கு நீவிர் தாயாக வருவதை வேண்டா என்பேனோ? ஆயினும் என்னை மனைவியாகக்கொள்வது வீமனுக்கு விருப்பமோ? அறியேன் ” என்றனள். ‘நீ என்ன சொல்லுகிறாய், வீமா?’ என்று தாய்கேட்க, அவன், “அம்மா! நான் என்ன சொல்வது? அண்ணன் இன்னும் விவாகஞ்செய்யாதிருக்க, நான் விவாகஞ்செய்வது சரியோ?” என்றான்.

உடனே உதிட்டிரன், “வீமா, ‘ தமையன் விவாகஞ் செய்தபின்புதான் தம்பி விவாகஞ்செய்தல் வேண்டும்’ என்ற விதி யாங்குள்ளது? அப்படியொரு விதியிருப்பினும் விதிக் கெல்லாம் விலக்குமுண்டல்லவோ? இடிம்பனைக் கொன்றவன் நீயேயாதலின், நீயே இடிம்பையை விவாகஞ்செய்தல் வேண்டும்” என்றான். “அப்படியே ஆகுக” என்று வீமன் சம்மதித்தான். இடிம்பனுக்குச் செய்யவேண்டிய சரம் கிரியைகள் எல்லாம் இடிம்பை செய்தாள். சில தினங்கட்குப் பின்பு இடிம்பைக்கும் வீமனுக்கும் விவாகம் நடந்தது. இடிம்பையின் வேண்டுகோளுக்கிணங்கிப் பாண்டவர் ஒரு வருஷகாலம் அவள் வீட்டிற் தங்கினர். இதற்கிடையில் இடிம்பை கடோற்கசனைப் பெற்றாள். இன்னுஞ் சிலகாலஞ் சென்றபின் பாண்டவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டனர். வீமன் இடிம்பையைப் பார்த்து, ” நானும் இவர்களோடு செல்லல் வேண்டும். இதனால் உன்னை மறந்தேன் என்றாவது புறக்கணித்தேன் என்றாவது நினையாதே. நீ வேண்டிய நேரம் நான் வருவேன். கடோற்கசனை நீயே வளர்க்க வேண்டும். அவனுக்குத் தக்கபருவம் வரும்போது நான் அவனுக்குக் கற்பிக்கவேண்டியவற்றைக் கற்பிப்பேன். இப் போது எனக்குவிடைகொடு ” என்றான்.

குந்தியும் பாண்டவரும் இடிம்பவனம் நீங்கி, வேத்திரகீயநகரம் நோக்கிச் சென்றனர். செல்கையில் வேதவியாசர் தோன்றி, “மைந்தர்காள், துரியோதனன் வஞ்சனைக்குத் தப்பி நீவிரும் நுந்தாயாரும் இங்குவந்து சேர்ந்தீர். நீவிர் எல்லீரும் எரியுண்டீரென்றே கௌரவர் எண்ணியிருக் கின்றார். நீவிர் இன்னும் உயிரோடு இருத்தலை அறியின் நமக்குப் பலதீங்கு செய்வர். ஆகலின் நீவிர் சிறிதுகாலங் காவுவேடம் பூண்டு, அந்தணர் கோலங்கொண்டு வாழ்மின்” எனப் புத்தி சொல்லி அகன்றனர். வியாசர் கூறியவண்ணமே குந்தியும் பாண்டவரும் பிராமணவேடம் பூண்டு வெவ்வேறு பெயர் தரித்து வேத்திரகீயம் அடைந்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *