பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

7. தீர்த்தயாத்திரை

இராசசூயம் முடிந்து சிலபகல் கழிந்தபின் அருச்சுனன் புண்ணிய தீர்த்தங்களெல்லாம் ஆடிவர விருப்புற்று, தாயது விடையும் உதிட்டிரன் விடையும் பெற்று, தன்னந்தனியனாய்ப் புறப்பட்டான். கங்கை, இயமுனை, சிந்து, பிரமபுத்திரன், நருமதை, கோதாவரி, காவேரி, வைகை, தாமிரவருணி முதலிய நதிகளிலெல்லாம் தீர்த்தமாடினான். பாண்டி நாட்டிலே சித்திராங்கபாண்டியன் மகள் சித்திராங்கதையைக்கண்டு காமுற்று, அவளை அவள் தந்தை தனக்குக் கொடுக்க மணந்து, ஓரி யாண்டு மதுரையிற் தங்கியபின் சித்திராங்கதையையும் அவளுக்குப் பிறந்த மகனையும் விட்டு, தென்குமரி சென்று, கடலிரண்டு கலக்குஞ் சங்கமத்திலே நீராடியபின் வடதிசை திரும்பினன் பார்த்தன். அங்கே மேலைக் கடலோரத்திலுள்ள துவாரகையை நோக்கிச் சென்றான். ஆங்கு, கண்ணனுக் கிளையாள் சுபத்திரையின் உருவையும் வனப்பையும் முன்பலமுறை கண்ணன் சொல்லக் கேட்டுளான். இப்பொழுது அவளை மணக்க விரும்பித் துவாரகை நோக்கி வந்தான் ; துவாரகைக்கு வெளியே ஒரு வனத்திலே தங்கி, தான் வந்திருப்பதைக் கண்ணனுக்கு அறிவித்தான். கண்ணன் வனத்துக்குச் சென்று அருச்சுனனைக்கண்டு, அவன் வந்தநோக்த்தை அறிந்தபின், அவனுக்குக்கூறுவான் :

” அருச்சுனா, கேள். நல்லகாலத்தில் வந்தாய். துரியோ தனன்பால் மிக அன்புள்ளான் என் அண்ணன். அவனுக்கே என் தங்கையை விவாகஞ்செய்து கொடுப்பது. பலராமன் எண்ணம். அஃது என் தங்கைக்கு விருப்பமில்லை. உன்னையே மணக்க விரும்பியுள்ளாள் சுபத்திரை. அவளெண்ணமும் உன் மனோரதமும் நிறைவேறச்செய்வது என்கடமை. ஆயினும், யார் என்ன சொன்னாலும் பலராமன் கேளான். தான் நினைத் ததையே முடிக்க நாடுவான். ஆகையால் தந்திரஞ்செய்தே நங்காரியத்தை முடிக்கவேண்டும். நான் சொல்லும் புத்தி கேள். நீ ஒரு சந்நியாசி வேடம் பூண்டு இவ்வாலமரத்தின் கீழ் யோகஞ் செய்பவனைப் போல் கண்மூடியிரு. நான் பலராமனை இங்கே கூட்டிவருவேன். துறவிகளை உபசரிப்பதில் ஊக்க முள்ளவன் பலராமன். உன்னை அரமனைக்கு வரும்படி அழைப்பான். மனமில்லாதவன் போல் மறுத்து, பின் அவன் வேண்டியபடியே உடன்படு. உனக்குப் பணிவிடை செய்யும் படி சுபத்திரையை உன்பால் அனுப்புவன். நீயாரென்பதைச் சுபத்திரைக்கும் முதலில் அறிவியாதே. இன்னும் எழுநாட் கடந்தபின் இந்நகரத்துக்குப் புறம்பே ஒரு திருவிழா நடக்கும். அதற்குப் பலராமன் போவன். ஊரார் அனைவருஞ் செல்வர். அப்பொழுது நீ யாரென்பதும் நீ வந்தநோக்கம் இஃதென் பதும் சுபத்திரைக்குத் தெரிவி. சுபத்திரை உன் எண்ணத்தை மறாள். நானும் அப்பொழுது வந்து உங்களுக்கு உதவி செய்வேன்.

பலராமன் இல்லா தகாலத்தில் நீ அவளை ஒரு தேர்மேலேற்றிக்கொண்டு செல்லல் வேண்டும். பின் நீவிர்ருவிரும் காந்தருவ விவாகஞ் செய்துகொள்ளலாம்.

நான் இப்பொழுது சொல்லுஞ் சொற்படி நடக்க இம்மி தவறுவையேல், பலராமன் துரியோதனனுக்குச் சுபத்தி ரையைக் கொடுப்பது சாத்தியம்.”

இதைக்கேட்ட அருச்சுனன், ” கண்ணா! நீ முன்னே பல முறை சொன்ன காரியங்கள் என் மனத்துக்கு விருப்பமில்லை யேனும் உன்னைப் பிரியப்படுத்த நீ சொன்னபடியே செய்துளேன். அப்படிப்பட்ட நான் இப்பொழுது என் காதலி சுபத்திரையை மணப்பதற்கு நீ கூறும் புத்திமொழியை அலட்சியஞ் செய்வேனோ?” என்றான்.

பின் கண்ணன் பலராமனை முனிவரிடம் கொண்டுவர, முனிவர் அரமனை செல்ல, ஆங்கு முனிவருக்குச் சுபத்திரை பணிவிடைசெய்ய, திருவிழாவுக்குப் பலராமனும் நகரத்தாரும் புறம்போக, அருச்சுன சந்நியாசி சுபத்திரைக்குத் தன்னை வெளிப்படுத்த, அவளும் இணங்க, கண்ணன் இருவரையுங் கூட்டித் தேரிலனுப்ப, துவாரகைக்குப் புறம்பே வனத்திலே சுபத்திரையும் அருச்சுனனும் காந்தருவவிவாகஞ் செய்து கொண்டு இந்திரப்பிரத்தத்தையடைந்தனர். அருச்சுனனுக்குஞ் சுபத்திரைக்கும் அபிமன்னு என்னும் இளஞ்சிங்கம் பிறந்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *