
பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
9. வனவாசம்
குந்தியை விதுரர் வீட்டிலிருத்திவிட்டு, சுபத்திரையையும் அபிமன்னுவையும் கண்ணனிடம் அனுப்பிவிட்டு, ஐவருந் திரௌபதியும் வனஞ்சென்றார்கள். அங்குள்ள முனிவர் பலர் இவரைத் தேற்றத் தேறி, அமைதியோடு காலங்கழித்து வந்தனர். பின்வரும் யுத்தத்தில் கௌரவரை வெல்லும் பொருட்டு வரம்பெற அருச்சுனன் தவஞ் செய்தற்குச் சென்றான், எனையோர் வனத்திலுள்ள பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று அவற்றுட்படிந்து, பல விரதம் அனுட்டித்துக் கடவுளைப் பணிந்தனர்.
பாண்டவர் காமியவனத்தில் உறையுங் காலத்தில் நாள் சிந்துதேசத்தரசன் சயத்திரதன், வேட்டையாடக் காட்டுக்குச் சென்றவன், அங்கு திரௌபதி தனித்திருப்பதைக் கண்டு மோகங்கொண்டு அவளை வலாற்காரத்தோடு தூக்கிச் சென்றனன். சிறிது நேரஞ்சென்றபின் பாண்டவர் திரும்பி வந்து தம் ஆச்சிரமம் திரௌபதியின்றி வெறுமையுற்றுக் கிடக்கக்கண்டு, ஆயுதபாணிகளாய் அவளைத் தேடிச்சென்றனர். பாண்டவரைக்கண்ட சயத்திரதன் அவரோடு பொருது தோற்று, திரௌபதியை விட்டுவிட்டு ஓடினன். உதிட்டிரன் திரௌபதியை அழைத்துக்கொண்டு ஆச்சிரமத்துக்கு மீண்டனன். வீமன் சயத்திரதனுக்குப்பின்னே ஓடி, அவனைப் பிடித்து அடித்து நிலத்திற்தள்ளி உதைத்துப் புரட்டினன். பின் தான் செய்த பிழையைப் பொறுக்குமாறு சயத்திரதன் வேண்ட, வீமன் அவன் செய்த குற்றத்தை மன்னித்து, உயிர் தப்பி ஓடிப்போ ” என்று விட்டுவிட்டனன்.
அருச்சுனனுக்குச் சுபத்திரைபாற் பிறந்த அபிமன்னு தன் மாமன் பலராமன் மகள் சசிரேகையை மணக்கவிரும்பியும்
பலராமன் அவளை அவனுக்குக் கொடுக்க மறுத்தனன். எப்படியும் அவளைத் தானே மணக்க வேண்டும் என்று துணிந்த அபிமன்னு, வீமன் மகன் கடோற்கசன் உதவியால், அவளைப் பலராமன் அரமனையினின்று தூக்கிச்சென்று, தன் தாய் சுபத்திரையிடத்தில் அடைக்கலமாக வைத்தனன். அதன்பின் சசிரேகையும் அபிமன்னுவை மணக்க விரும்பினதைக்கண்ட சுபத்திரை கண்ணனை அழைத்து, அவன் முன் அபிமன்னுவுக்குஞ் சசிரேகைக்கும் விவாகஞ்செய்து மகிழ்ந்தனள். இது நிகழ்ந்தது பாண்டவர் வனவாசஞ்செய்த காலத்தில்.
பன்னிருயாண்டு காட்டிலுறைந்தபின் ஓர்யாண்டு நாட் டில் எங்கேனுங் கரந்துறையும்படி பாண்டவரும் திரௌபதியும் சூழ்ச்சி செய்தனர்.



