
பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
5. திரௌபதி திருமணம்
அருச்சுனன் மற்றை நால்வரோடும் தாயோடும் அரக்கு மாளிகையில் எரிந்துப்பட்டான் என்று கேள்வியுற்ற துருபதன், “ஐயோ! நான் என் செய்வேன்? என் மகளை அருச்சுனனுக்குக் கொடுக்கும் பொருட்டே தவஞ்செய்து பெற்றேனே!” எனக் கலங்கி, ‘எல்லாம் இறைவன் செயல்’ எனத்தேறி, திரௌபதிக்குச் சுயம்வரம் என்று இராசசபைகளுக்கெல்லாம் ஓலைபோக்கினான். மணவோலையைக்கண்ட மன்னரெல்லாம் பாஞ்சாலனது சபையை நாடினர். இவ்விஷயத்தைப் பாண்டவருங்கேட்டுத் தாமும் பாஞ்சாலனது நகரஞ் சேர்ந்தனர். அன்னையை ஒரு சத்திரத்திலிருத்தி, தாம் ஐவரும் பிராமண வேடத்தோடு சுயம்வரமண்டபத்துட் புகுந்து ஒருபுறம் ஒதுங்கி, நடப்பதைக் காணும்படி வாளாவிருந்தனர். வேந்த ரெல்லாங் குழுமிய அவையில் துருபதனும் திட்டத்துய்மனும் புகுந்தனர். துருபதன் தன் ஆசனத்தில் இருந்தபின் திட்டத் துய்மன் எழுந்து நின்று சபையை நோக்கி, பின்வருமாறு கூறுவான் : “முடி மன்னரே, இராசகுமாரரே, பிரபுக்களே, கேண்மின். என் தங்கை திரெளபதியை எந்தையார், பார்த்தனுக்கு மணஞ்செய்து கொடுக்க எண்ணியிருந்தார். ‘நா மொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது.’ அருச்சுனன் இறந்துபட்டான். ஆகவே இச்சுயம்வரத்துக்கு நும்மை அழைத்தோம். இச்சபா மண்டபத்தின் முன்றிலில் ஒரு மச்சயந்திரம் கட்டித் தூங்கக் காண்பீர். அவ்வியந்திரத்துக் கப்பால் ஐம்பது விற்கணை தூரத்தில் முதுகுகாட்டி நின்று, அதனை அம்பால் எய்து வீழ்த்துபவன் எவனோ அவனுக்கே பாஞ்சாலி மாலை சூட்டுவாள் ” என்றான். இதனைக் கேட்டபின் ஒருவர் ஒருவராய் முடிமன்னரும் அரசிளங் குமாரும் முன்றிலிற் சென்றனர். மச்சயந்திரத்தையும் ஐம்பது விற்கணை தூரத்தையும் பாராமல் முதுகுகாட்டி எய்தல் வேண்டும் என்பதைக் கேட்ட பலர் “இது வீண்வேலை, இதிற் பிர வேசித்தல் வெட்கத்துக்கிடமாம்” என்று வாளா போயினர். அம்பெய்யத் துணிந்தவர் சிலரே. அவர்களுட் துரியோதனன்
அம்பு மச்சயந்திரத்துக்கு ஒரு முழத்துக்கு அப்பால் வீழ்ந்தது; கர்ணன் எய்த அம்பு மச்சயந்திரத்திற் பட்டதேனும், அதைத் தரையில் வீழ்த்தத் தவறியது; மற்றையோர் அம்பெல்லாம் வீணே சென்றன. சபையில் வந்திருந்த அரசருள் ஒருவரும் யந்திரத்தை வீழ்த்தினாரில்லை. அப்பொழுது உதிட்டிரன் எழுந்துநின்று திட்டத்துய்மனை நோக்கி, ” அரசரேயன்றி அந்தணரும் இச்சுயம்வரத்திற் பங்குபெறலாமோ?” என உசாவினன். திட்டத்துய்மன், “இச்சுயம் வரம் இராசகுமாரருக்கென்றே தொடங்கியது. இங்குவந்த இராசருள் எவரும் மச்சயந்திரத்தை வீழ்த்திலர். ஆகவே அந்தணருள் எவனேனும் மச்சயந்திரத்தை முறைப்படி அம்பாலெய்து வீழ்த்த வல்லனேல் அவனைப் பாஞ்சாலி மாலை சூட்டுதற்குத் தடையில்லை” என்றான். உடனே உதிட்டிரன் அருச்சுனன் மேற் கடைக்கண் சாத்த, அவனெழுந்து காண்டீவத்தை இடதுகையிற் பிடித்துக் குறித்தவிடஞ் சென்று நின்று யந்திரத்துக்கு முதுகுகாட்டி அதை ஓர் அம்பாலெய்து வீழ்த்தினன். உடனே திரௌபதி பிராமண னுக்கு மாலை சூட்டினள். இதனைக்கண்ட அரசரெல்லாம் வெட்கிப் பொறாமையடைந்து, ” அரசரில் ஒருவருஞ் செய்ய முடியாததை ஒருபிராமணப்பதர் செய்து முடித்தானெனின்
இதைவிட வேறு அவமானம் உண்டோ ? இவ்வேதியன் பாஞ்சாலியை மணக்க நாம் விடுவதில்லை ” எனத் துணிந்து, மறையவனை நோக்கி,
“ஏட பார்ப்பான், நீ திரௌபதியை மணக்க யாம் விடோம். இவளை விட்டுவிட்டு வெளியே செல்” என உரப்பினர். துருபதனுந் திட்டத்துய்மனும், “நீவிர்செய்வது அடாதது. அடாதது செய்வார் படாதது படுவார்.’ நுமக் கென் இங்கு வேலை ? பேசாதகன்மின்” என்றார். அதற்குக் கர்ணன், “பாஞ்சாலா! நீ அருந்தவஞ்செய்து பெற்ற கொழுந்தினை இப்போது மதியிழந்து ஒரு பிராமணப் பதருக்குக் கொடுக்கத் துணிவையேல் யாம் பார்த்துக்கொண் டிருத்தல் நெறியன்று. இப்பிராமணன் திரெளபதியை மணக்க யாம் விடோம் ” என்றான். அப்போது அருச்சுனன், “இது நும் கருத்தாயின் வம்மின். மச்சயந்திரத்தை வீழ்த் தினவில் என் கையிலுள்ளது” என்றான். இதையிவன் சொல்லிமுடிக்குமுன் உதிட்டிரன் மற்றை மூவரோடும் அருச்சுனனை வளைந்து நின்று, “நாங்களும் நால்வேம் உளேம் ; வம்மின் போருக்கு” என்றான். திட்டத்துய்மன், “என்னையும் என்படையையும் வென்றபின் அன்றோ நும்மோடிவர் போர் புரிவது. நீவிர் அஞ்சற்க” என்றான். அதற்கு உதிட்டிரன், “ஐய, இங்கு வந்துள்ள மன்னர் படைகொடு வந்தாரில்லை. படையிலா வேந்தரை வந்தவிடத்து நீ படைகொடு பொருதல் நேரிதன்று. நின் துணை எமக்கு வேண்டா. இவர் ஆண்மையுடையரேல் எம் ஐவேமையும் பொருதுவெல்க” என்றபின், வந்த மன்னரை நோக்கி, “வம்மின் போருக்கு” என்றான். ஐவர் ஒருபக்கமும் ஐம்பதின்மர் ஒருபக்கமும் நிற்கப் போர் தொடங்கிற்று. ஈற்றில் நாற்பத்தொன்பதின் மரும் புறங் காட்டியோடக் கர்ணன் தனித்து நின்று, யான் ஒருவன்,
நீவிர் ஐவிர் ; வாரும், பொருவாம்” என்றனன். உடனே உதிட்டிரன், “யாம் ஐவேம், நீ ஒருவன். நின்னோடு யாம் ஐவேமும் பொருதல் நேரிதன்று, திரெளபதியின் மாலை பெற்றவனே நின்னோடு போர்புரிவன் ” என்னவே, நால்வரும் பின்வாங்கினர். அருச்சுனனுங் கர்ணனும் விற்போர் செய்ததிற் கர்ணன் தோற்றான். ஆங்கு இருந்த அரசர் கூட்டம், “அறிந்தேம், அறிந்தேம். இவ்வைவரும் வேதியால்லர், பாண்டவர். மச்சயந்திரத்தை வீழ்த்தியவன் அருச்சுனன்” என்று முழங்கியது. உடனே உதிட்டிரன் கைகூப்பி நின்று, “ நீவிர் சொல்லியது உண்மையே. யாம் வேதியர் அல்லேம், பாண்டவரே; மச்சயந்திரத்தை அம்பால் எய்துவீழ்த்தி யவன் அருச்சுனனே ” என்று வெளிப்படுத்தினான். உடனே
துருபதன் உவகை பூத்து இறுமாப்புற்று அருச்சுனனை ஆலிங் கனஞ்செய்து, ” என் தவம் பொய்த்திலது. நினக்கென்றே இவளைப் பெற்றேன். நீயே இங்கு இவளைக் கொண்டாய். என் கருத்து நிறைவேறியது ” என்றான். கர்ணனும், ” உய்ந்தேன், உய்ந்தேன், பிராமணனொருவனுக்குக் கர்ணன் தோற்றான் என்ற வசைமொழி எனக்கு இல்லை” என்று மகிழ்ந்தான். துரியோதனனும் துச்சாதனனும், “ஐயோ! பாண்டவர் பட்டொழிந்தார் என்று பூரித்திருந்தோமே! நாம் செய்த உபாயமெல்லாம் அபலமாய்ப் போயினவே; இவரையொழிக்க வகையில்லையோ ?” என்று பெருமூச்செறிந்தனர்.
துருபதன் அருச்சுனனையும் பாஞ்சாலியையும் ஆசீர் வதித்து அனுப்பினன். பாண்டவர் ஐவரும், திரௌபதியோடு சத்திரத்தை அடைந்து வாயிலில் நின்று, “அன்னே! ஒரு கனி கொண்டுவந்தேம், கடைதிறமின்!” என்றார். உள்ளே இருந்த குந்தி, ” கொணர்ந்த கனியை நீவிர் ஐவீருமுண்மின்” என்று கதவைத்திறந்தனள்.
ஆங்கு தன் மக்களோடு நின்ற பெண்ணொருத்தியைக்கண்டு, ” ஆ கெட்டேன்! யாது சொன்னேன்?” என்று ஏங்கினள். அருச்சுனன் அவளைப் பார்த்து, “ அன்னாய்! ஏங்கற்க, நீவிர் சொன்னபடியே செய்வேம். தாய் சொற் துறந்தொரு வாசக மில்லை.’ பாஞ்சாலி எம் ஐவேமுக்கும் மனைவியாவள் ” என்றான்.
அப்போது நாரதமுனிவர் ஆங்குவந்து, பின்வருமாறு கூறுவார் : “பிள்ளைகாள்! நீவிரைவிரும் ஒருயிர்போல இது காறும் வாழ்ந்தீர். ஆகவே நீவிர் ஐவிரல்லீர். ஐவிரும் ஒருவரே. ஆகவே பாஞ்சாலி ஐவருக்கன்று, ஒருவருக்கே வாழ்க்கைப்படுகின்றாள். ஆயினும் இவ்வோருயிருக்கு ஐந்துடலிருப்பதால் இவை ஒன்றுக்கொன்று பிழை செய்யாது ஒவ்வோராண்டு ஒவ்வோருடல் இவளை அனுபவிக்க. இவள் இவ் வாண்டு அருச்சுனனோடு வாழ்க. அடுத்தவருஷம் இவள் நகுலனுக்குரியள். பின் சாதேவனுக்கு; அதன்பின் உதிட்டிரனுக்கு ; அதற்கடுத்தவருஷம் வீமனுக்கு. இவ்வாறே நீவிர் அழுக்காறின்றி வாழ்க,”
பின் ஆசிகூறிச் சென்றனர் நாரதர்.



