பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

10. அஞ்ஞாதவாசம்

தாம் மறைந்து வாழுங் காலத்திலும் அறுவரும் ஒருவரை விட்டொருவர் நீங்காது உடன் வாழல் வேண்டுமென்றும் அவ் வாறு தாம் வாழ்தற்கேற்றவிடம் விராடநாட்டு மன்னன் கோயிலே என்றும் பாண்டவர் துணிந்தனர். காட்டுக்கு வெளியே விராட நாட்டின் எல்லையிலிருந்த ஐயனார் கோயில் முன் நின்ற ஒரு மரத்தின் வேரருகே பள்ளந்தோண்டி, அதில் தம் படைக்கலங்களை யெல்லாம் புதைத்துவிட்டு ஐவரும் பாஞ்சாலியும் வேற்றுருக் கொண்டு, தனித்தனியே ஒவ்வொரு வரும் விராட நாட்டு மன்னன்பாற் சென்றனர். பிராமண வேடம் பூண்ட உதிட்டிரன் கங்கபட்டன் என்னும் பெயர் கொண்டு, தான் பாண்டவரோடு வனத்திற் பன்னிருயாண்டுகழித்தவனென்றும், அவருக்குத் தருமோபதேசஞ் செய்வதும் ஒழிந்த வேளையில் உதிட்டிரனோடு சதுரங்கமாடுவதும் தன் தொழிலென்றும், இப்போது பாண்டவர் அஞ்ஞாதவாசஞ் செய்யச் சென்றமையால் தான் அங்கு வந்தனனென்றுஞ் சொன்னான். விராடன், ” இவ்வருடம் நீவிர் என் சபையில் லிருக்க” என வேண்டினன். வீமன் சுயம்பாகிவேடம் பூண்டு, பலாயனன் என்னும் பெயரோடு, தான் மடைத்தொழி லில் நளனை ஒத்தவனென்றும், தன்னை ஆதரிப்பாரில்லாமை யால் அங்கு வந்தனனென்றுங் கூறினான். “அரமனைச் சுயம் பாகிகளெல்லாருக்கும் நீ தலைவனாகுக” என்று அவனை ஏற்றுக்கொண்டான் மன்னன். அருச்சுனன், ஒரு பேடி யுருவந்தாங்கி, “என்பெயர் பிருகர்ணளை ; நான் ஆடல்பாடல்களில் வல்லேன். அரமனையிலுள்ள இராசகுமாரிகளுக்கு ஆடலும்பாடலுங் கற்பிக்க வல்லேன் ” என்றான்.

“என் மகள் உத்தரைக்கு ஆடலும் பாடலும் கற்பிக்கக் கடவை” எனப் பேடியை நியமித்தனன் வேந்தன். நகுலன், ”நான் பரிமருத்துவன், அரமனையிலுள்ள குதிரைகளையெல்லாம் நோயின்றிக் காப்பேன் என்றான். என் குதிரைகளையெல்லாம் உன் வசம் ஒப்பித்தேன் ; அவற்றைக் காப்பது உன் கடமையாம்” என்றான் விராடன். சாதேவன், அனிரை புரத்தல் என் தொழில். எனக்கு இவ்வரமனையில் வேலையுண்டோ ?” என்றான். ”என் ஆனிரை யனைத்தையும் கா நீ” என்று பணித்தனன் அரசன். திரௌபதி விரதசாரணி என்னும் பெயரோடுவந்து, நான் வண்ணமகள் ; எனக்கு அந்தப்புரத்தில் வேலை கிடைக்குமோ?” என்று வினவினாள். “அரசிக்கு வண்ணமகளாகுக நீ” என்று அவளையும் ஏற்றுக் கொண்டனன் அரசன். இவ்வாறு அறுவரும் விராடன் அரமனையில் உத்தியோகம் பெற்றனர். இவர் இன்னாரென்று யாரும் அயர்த்திலர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *