பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

6. இந்திரப்பிரத்தம்

அரக்குமாளிகை எரியுண்டபோது அதிற் குந்தியும் ஐவரும் மடியவில்லையென்றும் அவரெல்லாரும் உயிரோடிருக்கின்றா சென்றும் பாண்டவர் திரௌபதியை மணந்து மகிழ்வோடு காலங்கழிக்கின்றன சென்றும் கேள்விப்பட்ட திரிதராட்டிரன், “இப்போது இவருக்கு என்ன செய்யலாம்?” என்றாலோசித் தான். “வஞ்சகம் ஏதேனுஞ்செய்து இவர்களைக் கொல்லல் வேண்டும்” என்றான் துரியோதனன். நேரிற் போர் செய்து இவரை மடிவிக்கவேண்டும்” என்றான் கர்ணன். வீடுமர், விதுரர், துரோணர் முதலிய பெரியோர், “இராச்சியத்தை இரண்டாகப் பிரித்து அதில் ஒருபிரிவைப் பாண்டவருக்குக் கொடுப்பதே தகுதி” என்றார். இவர் சொல்லையே திரித ராட்டிரன் அங்கிகரித்தான். தம்பியின் மனைவியையும் பிள்ளைகளையும் திரௌபதியையும் திரிதராட்டிரன் அத்தினபுரத்துக்கு அழைத்து, அவரை அன்போடு உபசரித்தான். சில நாட் சென்றபின் நாட்டை இருகூறாக்கி, ஒருகூறு பாண்டவருக்குக் கொடுத்தான் திரிதராட்டிரன். அதற்குப் பெயர் காண்டவப்பிரத்தம். இது மறுகூற்றினும் நிலவளத்திலும் நீர்வளத்திலும் தாழ்ந்தது. ஆயினும் அதனைப் பாண்டவர் திருத்தியோடு ஏற்றனர். ஏற்றபின் அருச்சுனன் கண்ணன் உதவியால் அங்கிருந்த காண்டவவனத்தை அழித்துத் திருத்தி நாடாக்கினன்.

குந்தியின் தமையன் வசுதேவன் மகன் கண்ணன், யது குலத்தான். வசுதேவனுக்கு அவன் மனைவியர் இருவருள் உரோகிணிபாற் பலராமனும், தேவகிபாற் கண்ணனும் சுபத்திரையும் பிறந்தனர். வசுதேவன் இறந்தபின் இவர் தம் பழம்பதி மதுரையைவிட்டுத் துவாரகைக்குச்சென்று அங்கு வாழ்ந்தனர். பலராமன் அரசனானான்.

அவன் தம்பி கண்ணன் அவனுக்கு மந்திரி. கண்ணன் உருக்குமிணி, சத்தியபாமை, இராதை முதலிய பலபெண்களை மணந்தான். இவன் இளமைப்பருவந்தொடங்கிப் பாண்டவர்பால் நேயம் பூண்டவன், அவருள்ளும் அருச்சுனனுக்கு உற்ற தோழன். இவன் உதவியாற்றான் அருச்சுனன் காட்டை அழித்து நாடாக்கியது.

தமக்குக் கிடைத்த நாட்டுக்குத் தலையூராக இந்திரப் பிரத்தம் என்னும் அழகிய பட்டணம் சமைத்தனர். இப்பதி மாடமாளிகை கூடகோபுரங்களாற் பொலிவுற்றது ; ஒவ்வொரு பக்கத்திலும் செய்குன்றுகளும் சிங்காரவனங்களும் தடாகங்களும் அழகூட்டின. பட்டணங் கட்டிமுடிந்தபின் உதிட்டிரன் இராசசூயயாகஞ் செய்தான். யாகத் தொடங்குமுன் உதிட்டிரன் கௌரவரை அழைத்தான். அழைப்புக்கிணங்கித் துரியோதனன் துச்சாதனன் முதலியோர் வந்தனர். நாட்டின் அழகையும் நகரத்தின் சிறப்பையும் அரமனையின் பொலிவையும் பாண்டவர் வாழ்வையும் கண்ட துரியோதனனது நெஞ்சம் பொறாமையென்னுந் தீபற்றி எரிந்தது. “தங்க வீடொன்று மின்றிப் பிராமண யாசக வேடங் கொண்டு திரிந்த மக்கட் பதடிகளுக்கு வாய்த்த சீருஞ்சிறப்பும் என்னை? ஊனக்கண் ணோடு உளக்கண்ணுமிழந்த எந்தையின் அறியாமையாலன்றோ இவர்கள் நாடுபெற்றதும் நகரங்கண்டதும்! இவை போதா வென்றோ இராசசூயமும்? இவர் இவை எல்லாவற்றையு மிழந்து வனவேடர் போலக் காட்டிலுறையச் செய்யேனேல் என் பெயர் சுயொதனன் அன்று” எனப்புழுங்கின் நெஞ்சத் தோடு துரியோதனன் அத்தினபுரத்துக்குத் திரும்பினன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *