பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

14. போர்

கண்ணன், தான் துரியோதனனிடஞ் சென்றதும், அவன் சபையில் நிகழ்ந்ததும், பாண்டவருக்கு அவர் கேட்டதொன்றுந் தருவதில்லையென அவன் மறுத்ததும், தான் அவனைப் போருக்கு ஆயத்தனாகுக என்றதும், திரும்பிவந்ததும் பாண் டவருக்குச் சொன்னான்.

இதன்பின் கௌரவரும் பாண்டவரும் போருக்கு ஆயத்தஞ்செய்தார்கள்.

பரதகண்டத்தில் ஐம்பத்தாறு தேசங்களின் அரசரிற் பெரும்பான்மையோர் இரண்டுபக்கத்தில் ஒருபக்கம் உதவி செய்யச் சேர்ந்தனர். பலராமன், தான் ஒருபக்கத்திலுஞ் சேர்வதில்லை என்று, தீர்த்தயாத்திரை செய்யப் புறப்பட்டான். கண்ணன், “நான் படை கையிற்தாங்கித் துரியோதனன் சேனையைத் தாக்குவதில்லை; ஆயினும் பாண்டவர் பக்கஞ் சேர்ந்து அருச்சுனனுக்குத் தேர்செலுத்துவேன் ” எனத் துணிந்தான். அதனாற் கண்ணனுக்குப் பார்த்தசாரதி எனும் பெயர் வந்தது. பாஞ்சாலனும் விராடனும் பாண்டவர் பக்கஞ் சேர்ந்தனர். சிந்து தேசத்தரசன் சயத்திரதனும் மத்திர பூபதி சல்லியனும் கௌரவர்பக்கஞ் சேர்ந்தனர். வீடுமர், துரோணர், கிருபர், அசுவத்தாமன் என்பார் பாண்டவர்பால் மிக நேயம் பூண்டவரேனும், திரிதராட்டிரன் அன்னத்தைத் தின்றவ ராகையால் கௌரவர்பக்கமே சாரல் வேண்டும் என்னுங் கொள்கையால், துரியோதனனையே சேர்ந்தனர். போர் செய்ய மனமில்லாது விதுரர் வில்லை முரித்தெறிந்ததை முன்னமே கண்டோம்.

போர் குருக்ஷேத்திரத்திற் பதினெட்டுநாள் நடந்தது. பாண்டவர் தம் சேனைக்குத் திட்டத்துய்மனை அதிபதி யாக்கினர். கௌரவர் தம் சேனைக்கு வீடுமரை அதிபதி யாக்கினர். வீடுமர் பதின்மது நாட்போரில் அருச்சுனனை எதிர்த்து அவன் மீதும் கண்ணன் மீதும் சரமாரி பொழியவே, கண்ணன் தன்கையிற் படையெடுப்பதில்லை என்ற சொல்லை மறந்து சக்கராயுதத்தை எடுத்து வீடுமர்மீது எறியப்புக, பார்த்தன் அவனைத் தடுத்து, ” கண்ணா, யாது செய்யப்புகுக் தாய்? உன் சக்கரத்தை எறிந்து வீடுமரை விழுத்துவையேல் ‘கண்ணன் பொய்யன், சொன்ன சொற் தவறினான்’ எனும் வசைக்கு ஆளாவாய் அன்றோ? வீடுமரை யான் விழுத்துவேன், நீ தேரோட்டுக” என்றான். கண்ணன் சிறிது சினம் ஆறி, “நன்று, நீ சொன்னபடி யான் செய்வேன், நீ வீடுமர்மேற் சரமாரிபொழி ” என்றான். பார்த்தன் விடுத்த கணைகள் வீடுமர் உடலையெல்லாந் தைக்க, ஆற்றாது தேரினின்றும் வீழ்ந்தனர் வீடுமர். அருச்சுனன் வீடுமர்பால் மிக அன்புடையன். அவர் தேரினின்று தரையில் வீழ்ந்தவுடனே,

அந்தோ! என் மூதாதையைக் கொல்லும் பழிக்கு ஆளா னேனே ” என இரங்கி, தன் தேரினின்று குதித்து, விழுந்து கிடந்த வீடுமரைத் தூக்கி, அவர் தலையைத் தன்மடியிற் கிடத்தி, “மூதாதாய், சிறியேன் செய்தபிழையைப் பொறுத் தருள்க ” என வேண்டினன். அவர் கண் திறந்து அவனைப் பார்த்து, ” அருச்சுனா, கவலேல். நீ பிழை செய்திலை ; நின் வீரத்தை மெச்சினேன் , பிழைசெய்தவன் யான் – என் உடம்பினின்று இரத்தங் காலுவதால் விடாயுற்றேன், நான் பருகச் சிறிது நீர்கொணர்ந்து தாராயோ?” என, அருச்சுனன் உடனே சென்று ஒரு பாத்திரத்திற் தண்ணீர் கொணர்ந்து அவருக்குப் பருக்கினான். அதன்பின் கௌரவர் வந்து அவரைப் பாசறைக்குக் கொண்டேகினர். இதனோடு பதின்மது நாட்போர் முடிந்தது.

அதன்பின் கௌரவர்சேனைக்குத் துரோணாசாரியரை அதிபதியாக்கினர். பதின்மூவது நாட்போரில் அருச்சுனன் மகன் அபிமன்னு, சிங்கக்குருளையனையான், கொன்றைமாலை கழுத்திலணிந்து போர்க்களம்புகுந்து, மிக்க உக்கிரத்தோடு – பொருதான். அவன் ஆண்மையைக் கண்டவரில் இருதிறத்தினரும் அவனைப் பலவாறு புகழ்ந்தனர். ”விதையொன்று போடச் சுரையொன்று முளைக்குமோ?’ இவன் அருச்சுனன் மகன் அல்லனோ ?” என வியந்தார் துரோணர். ஆயினும் துரியோதனனும் சயத்திரதனும் கோபாவேசங்கொண்டு, “பிஞ்சிற்பழுத்தவனை விடலாகாது ” எனச் சீறினர். துரியோதனன் அபிமன்னுவின் தேர்ப்பாகனையுங் குதிரைகளையுங் கொன்றதுமன்றி, தேர்க்காலையும் பின்னப்படுத்தினன். உடனே அபிமன்னு தேரினின்று குதித்து, ” நும்மில் வீர னொருவனுளனேல் வருக, தரைமேல்நின்று போர்புரிவோம்” என்றான். இவன் இவ்வாறு சொல்லுமுன் சயத்திரதன் யுத்த தருமத்தைமீறி வஞ்சனை செய்து வீரகேசரியை வெட்டி வீழ்த்தினான். அபிமன்னு இறந்துபட்டான் என்றதைக் கேட்ட இருசேனையிலும் இரங்காதவர் சிலரே. கர்ணன் இதைக்கேட்டபோது இரங்கினதை வில்லிபுத்தூரர் பின்வரு மாறு வருணிக்கின்றார் :

 “தாராசன் மகன், துச்சா தனன்மகன், சல்
லியன்மகன், வேற் சகுனி யென்னும்
பேரரசன் மகன் முதலாம் எத்தனைபேர்
பட்டாலும் பெரிய தன்றே;
பாராசா ளுதற்கிருந்த பார்த்தன்மா
மகன் ஒருத்தன் பட்டா னாகில்
ஆரரசுக் கினிஉரியார்? அந்தோ !” என்
றுரைத்தான்மற் றங்கர் கோமான்.

இதனையறிந்த அருச்சுனன் புத்திரசோகந் தாங்கவியலாது தீயில் விழுந்து தற்கொலை செய்யத் துணிந்தனன். அங்கு நின்ற பெரியோர் அவனைத் தடுத்து, ” அருச்சுனா, என்ன செய்யத் துணிந்தாய்? இதுவோ வீரம்? உன் மைந்தனை வஞ்சனையாற் கொன்ற மக்கட்பதடியைக் கொன்று பழி தீராமல், நீ தற்கொலை செய்யப் புகுந்தது மடமை, மடமை” என்றனர். உடனே அருச்சுனன், “யான் இன்று தீயில் விழேன். என் மகனைக்கொன்ற பாதகனை நாளைப் பொழுது படுமுன் கொல்வேன். கொல்லத் தவறுவேனேல், நான் தீயில் விழுந்து மாள்வேன். இவ்விரண்டிலொன்று நாளை நடக்கும் ” என வஞ்சினம் பூண்டான்.

பதினால்வது நாட்போரில் அருச்சுனன், குட்டியைப் பறிகொடுத்த கரடி போல வேறொருவரோடும் பொர எண் ணாமல் சயத்திரதனையே தேடித்திரிந்தான். இவன் எண்ணத்தையறிந்த துரியோதனன் சயத்திரதனைக் காக்கும்படி நான்மருங்கிலும் படைவீரர்சூழ நிறுத்தினான். பகல் முழுதுந் தேடியும் அருச்சுனன் சயத்திரதனைக் கண்டிலன். ‘இன்று நான் சயத்திர தனைக் கொல்லவில்லை யான் சாவதே துணிபு” என்று வன்சூள் உரைக்த அருச்சுனனுக்குக் கண்ணன், ” இதோ, அங்குமிற்கின்றான் சயத்திரதன் ; இப்பொழுது,  மாலைப்பொழுது பொழுது பனைப்பொழுது, கொல் அவனை ” என்று பணிக்க; அருச்சுனன், “இறுவரை காணிற் கிழக்காந் தலை” என்ற படியே கீழே விழுத்தினான் சயத்திரதன் தலையை. உடனே பாண்டவர் சேனை ஆர்த்தது. உதிட்டிரன், “கண்ணா, உன்னால் இன்று உய்ந்தோம்! பார்த்தனையிழந்து நாங்கள் வாழ்வேமோ?” என மகிழ்ந்துரைத்தான்.

பதினைவது நாளில் திட்டத்துய்மன் துரோணர் இருக்குமிடம் நாடி அவரைக் கொல்வான் பொருதனன். துரோணர் வயதில் மூத்தாரேனும் ஆண்மையில் மூத்தாரல்லர். கிழச் சிங்கமாயினும் சிங்கம் சிங்கமன்றோ ? அவரை வெல்வது திட்டத்துய்மனுக்கு அரிதாயிற்று. அவன் கைசோர்கின்ற காலை, அலியொருவன் துரோணரோடு போர்செய்ய வந்தான். அவனைக் கண்டவுடன் துரோணர், ” அலியோடு பொருதல் எனக்கு வீரமன்று” என்று வில்லைக் கீழே எறிந்தார். அப் பொழுதே திட்டத்துய்மன் ஓர் அம்பெய்ய , துரோணர் வீழ்ந்து இறந்தார். “நிராயுதபாணியைக் கொன்றது திட்டத் துய்மனுக்கு அழகோ ? ” எனின், துரோணர் ஆயுதத்தை எறிந்தபின் திட்டத்துய்மன் அம்பு தொடுக்கவில்லை, தொடுத்த அம்பு இலக்கில் விழுமுன் துரோணர் ஆயுதத்தை எறிந்து விட்டனர் என்க.

பதினறுவது நாள் துரியோதனன் கர்ணனைச் சேனாபதி யாகும்படி வேண்டினன். கர்ணன், ” சல்லியன் எனக்குத் தேர்செலுத்துவனேல் யான் சேனாபதியாவதற்குத் தடையில்லை” என்றான். துரியோதனன் சல்லியனிடஞ் சென்று, “மத்திரபூபதி, நின்னை ஒருவரம் வேண்டுகின்றேன், எனக்கு அதை அருளுதியோ?” என்றான். “வணங்காமுடி மன்ன, நீ கேட்கும்வரம் யாது?” என்றான் சல்லியன்.. அதற்குத் துரியோதனன், ” கர்ணன் என்படைக்குத் தலைவனாக அவனை வேண்டினேன். நீ தனக்குத் தேரூரின் தான் சேனாபதியாகச் சம்மதிப்பானாம் ” எனப் புகன்றான். மத்திரன், “நின்னை யன்றி வேறெவரேனும் இப்படி என் முன்வந்து வாய்கூசாது சொல்லியிருப்பரேல், அவர் நாவைத் தறித்திருப்பேன். மன் னர் மன்னா, யான் ஒரு முடியுடைவேந்தனுக்குப்பிறந்த முடி யுடைவேந்தன்; யானோ தேர்ப்பாகன் மகனுக்குத் தேர் செலுத்துபவன்? இதனைவிட்டு வேறெதையேனுங் கேள்’, என்றான். துரியோதனன்,”மன்னர் திலகமே, நின் பிறப்பையும் நின்பெருமையையும் யான் கணப்பொழுதேனும் மறந்தே னல்லேன் ; நீ என்பக்கஞ் சேர்ந்து போர்புரியவந்தது முற்பிறப்பில் யான் செய்த புண்ணியமேயென நினைத்தேன். கர்ணனுக்குத் தேர்செலுத்தும்படி உன்னை யான் கேட்டதனால் நீ கர்ணனிற் தாழ்ந்தாய் என நினைத்திலேன். ‘பார்த்தனுக்குக் கண்ணன் தேர் செலுத்துவதைக் கண்டாயல்லையோ? கண் ணன் பார்த்தனுக்குத் தாழ்ந்தவனோ? பாண்டவர் மீதுள்ள அன்பாற் சாரதியாகச் சம்மதித்தான் கண்ணன். நீ என்மீ தன்புள்ளாய்; அவ்வன்பை முன்னிட்டு இவ்விண்ணப்பஞ் செய்தேன். எப்படியாயினும் நீ கர்ணனுக்குச் சாரதியாதல் வேண்டும்’ எனக் கைகுவித்து நின்றான். ”மன்னர்மன்ன, நீ என்னைக் கும்பிடலாமோ? உன் சொல்லைக் கடக்க இயலாமல் இன்று கர்ணனுக்குச் சாரதியாகச் சம்மதித்தேன் என்றான் சல்லியன்.

இரண்டு நாள் கர்ணன் படைத்தலைவனாய்ப் போரை நடத்தினான். பதினெழுவது நாட் பிற்பகல் பார்த்தன் கர்ணனைப் பொருமாறு எதிர்வந்தான். எதிர்நின்ற அருச்சுனனைக் கர்ணன் கண்டபோது, ‘இவன் எம்பி, யாயாருக்கு ஆருயிர் ; இவனைக் காக்கும் பொருட்டன்றோ அவர் என்னிடம் வந்தது ” என்னும் எண்ணம் அவன் நெஞ்சைக் கலக்கியது. “என்னை இதுகாறும் ஆதரித்தவன் துரியோதனன்; இன்றைக்கு எனக்குள்ள புகழெல்லாம் அவனால் வந்தது, அவனுக்குத் துரோகஞ்செய்வேனோ? செய்யேன் அவன்மே லுள்ள அன்பினால் என் தம்பியைக்கொல்ல அம்பெடுத்தேன்; ஆயினும் இக்கணை அருச்சுனனைக் கொல்லத் தவறின் இனி வேறம்பு எடேன் ” எனநினைத்து, அம்பை வில்லிற்றொடுத்து எய்யப்புகும் போது, கர்ணனது கையிரண்டும் நடுங்கின; கர்ணன் எய்த அம்பு இலக்குத்தவறிக் கீழே வீழ்ந்தது. அருச்சுனன் கர்ணன் கையால் மாளாது தப்பினன். கர்ணன் தன் தமையனென்று அருச்சுனன் அறியான். சத்துருவைக் கொல்ல அருச்சுனன் ஒருநாளும் பின்வாங்கினவனல்லன் ; இன்று கர்ணன் மார்பைத்தைக்க எய்தான் ஓரம்பு. அஃது அவன் நெஞ்சைத்துளைக்க, தேரினின்றும் விழுந்திறந்தான் கர்ணன். ‘கர்ணன் இறந்தான் ‘ என்றதைக்கேட்ட குந்தி, போர்க்களத்துட் புகுந்து, செத்துக்கிடந்த தன்மகன் தலையை மடியில் வைத்து,

” என்றேஎன் தாதையுழைக் கன்னி மாடத்
திரவியனான் திருவருளால் ஈன்றேன், ஈன்ற
அன்றேபொற் பெட்டகத்தில் கங்கை யாற்றில்
ஆமுறையால் உனைவிடுத்தேன் அருளி லாதேன்;
வென்றேமண் கவர் தருமன் மதலைக் காவி
மித்திரனா னது கேட்டுன் வீரங் கேட்டு
நன்றேஎன் தவப்பயன் என் றுன்னி வாழ்ந்தேன்;
நாகமும் அரசாள நடக்கின் றாயோ?

“……………………… பாரஞ்சும் ஒருகுடைக்கீழ் நீயே யாளும்
பதம் அடைந்தும் விதிவலியாற் பயன்பெ றாமல்,
காரஞ்சு கரதலத்தாய், அந்தோ! அந்தோ! கடவுளர்தம்
மாயையினாற் கழிவுற் றாயே!”

என ‘தலையீற்றுக் கன்றையிழந்த கபிலைபோல’த் தேம்பித் தேம்பி யழுதாள்.

இதனைப் பாண்டவர் கண்டு அதிசயித்து, கண்ணனைக் கூவி, “இஃதென்னை புதுமை?” என உசாவ; அவன், “கர்ணன் நுந்தாயாருக்குச் சேட்டகுமாரன், நும் எல்லீக ருக்கும் அண்ணன் ; இது தான் குந்திதேவி போர்க்களம் புகுந்து அழுவதற்குக் காரணம் ” என்றான். இதனைக்கேட்ட உதிட்டிரனும் வீமனும் செயலற்று மரம்போல் நின்றனர். தானே தன் அம்பால் தன் தமையனைக் கொன்றதை யறிந்த அருச்சுனன் துயர்க்கடலிலாழ்ந்து,

உயிராய் நின்ற
காற்றிருந்த இடந்தேடிக் கணை பலவும் உடல் குளிப்ப,
கர்ணா, இன்று
கூற்றிருந்த பதிதேடி, குடியிருக்க நடந்தனையோ?
கொற்ற வேந்தாய்,
வீற்றிருந்திக் கைவேமும் அடிவருடப் புவியாள
விதியி லாதாய்!

”ஊன் தொடுத்த வயவாளி எத்தனையா யிரந்தொடுத்தேன்?
ஒப்பி லாய் நீ
தான் தொடுத்த கடுங்கணைக்குத் தப்பினே னெனமகிழ்ந்தேன்!
சஞ்சி ரீகம்
தேன் தொடுத்த மலர் நாதன் தனையொப்பான் சேயே, நின் மகள்
திருமார் பத்தில்
யான் தொடுத்த நெடும்பகழி எனைக்கெடுப்ப தறிந்திலேன்,
என்செய் தேனே!”

எனப் புலம்பினன். கண்ணன் அவனைத்தேற்றியும் அவன் சிறிதுந் தேறிலன்.

துரியோதனன் கர்ணன் உடலையடுத்து நின்று,

“அணையார் தம் படைக்கடலின் அருநிலைக்குக் கரையேற
லான கோலப்
புணையாய்,எத் திறங்களினும் பகிராமல் உற்றதெலாம்
புகலத் தக்க
துணையாய், என் னுயிர்க்குயிராந் தோழனுமா கியஉன்னைத்
தோற்றே னாகில்,
இணையாரும் இலாவரசே, யாரைக்கொண் டாசாள
இருக்கின் றேனே!”

என அலமந்தான்.

கர்ணன் பல சுகுணங்கள் நிறைந்தவன். இப்பல சுகு ணங்களுள் கொடை அவனது விசேஷகுணம். இதனால், “கொடைக்குக் கர்ணன்” என்னும் பழமொழிவந்தது. ” இருகாத்து வள்ளல்” என்பதும் கர்ணனுக்குப் பெயர். இத்துணைச் சுகுணங்களெல்லாம் வாய்ந்தவன் துரியோதனன் தனக்குச் செய்த நன்றியை மறவாது, துரியோதனனது பிழை களைக் காணுஞ் சத்தியையிழந்தான். “அன்புக்குக் கண் ணில்லை” என்பது ஓர் ஆங்கில முதுமொழி.

பதினெண்மது நாட்காலையில் துரியோதனன் சல்லியனைப் படைத்தலைவனாக்கினான். அவன் அன்று காலை மகாபராக்கிர மத்தோடு பொருது, பாண்டவர்சேனையிற் பல நூற்றுவரை வீழ்த்தினான். அதன்பின் வீமனுக்கும் சல்லியனுக்கும் கடும் போர் விளைந்தது. இதில் ஒருவரையொருவர் வெல்லல் அரிதாயிற்று. இதனைக்கண்ட உதிட்டிரன், ”வீமா, விடு விடு ; சல்லியனோடு நான் பொருவேன், நான் அவனைக் கொல்வேன், அன்றேல் அவனாற் கொலை புண்பேன். இரட்டையரே, நீவிர் இருவீரும் என் தேர்க்கால்களைக் காமின்” என்று, சல்லியனோடு சமர்செய்யத்தொடங்கி, நெடுநேரம் இருவரும் பொருதபின் உதிட்டிரன் சல்லியனைக்கொன்று வீழ்த்தினான். அப்பொழுது பகல் பதினைந்து நாழிகைகடந்தது. உடனே கௌரவர்சேனைக்கு அசுவத்தாமன் தலைவனானான். அன்று நடந்த போரில் வீமன்கையால் துச்சாதனன் மாண்டான். இரத்தவெறிகொண்ட வீமன் துரியோதனனைத் தேடியலைந் தான். துரியோதனனோ வீமனை எதிர்த்தற்கஞ்சி ஒரு குளத்தில் முழுகி, அருகேநின்ற மண்டபமொன்றுட் கரந்து நின்றான். வீமன் பலவிடங்களிற்தேடி அவனைக் காணாது, ஈற்றில் மண்டபத்தில் அவன் மறைந்து நிற்பதைக்கண்டு, ” துரியோதனா, போரேறே, வீமனோடு பொர அஞ்சினாயோ? வெட்கங்கெட்டவனே, வா வெளியே ; துச்சாதனனைக் கொன்ற யான் உன்னையுங்கொன்றபின் தான் என் சினம் ஆறும் ” என அறைகூவினான். துரியோதனன் மண்டபத்தினின்று வெளியேவந்து கதையெடுத்து வீமனை எதிர்த்தான். துரியோதனன் உடல்வலியுடையன், ஆயுதப்பயிற்சியில் மிகத் தேர்ந்தவன், எவ்வகையிலும் வீமனுக்கிணையானவன். வீம னுக்குந் துரியோதனனுக்கும் நடந்தகதைப் போருக்கு உவமை சொல்லப்புகின், வீமனுக்குந் துரியோதனனுக்கும் நடந்த கதைப்போரையே சொல்லல் வேண்டும். இரண சூரர் இருவரும் ஒருவனை யொருவன் வெல்லாது பலகர்ணல் மலைத்தனர். மலைகையில் வீமன் தலையை மோதும்படி துரியோ தனன் தரைக்குமேல் இரண்டடி எழுந்தகணமே, வீமன் மோதினகதை துரியோதனன் தொடையிற் பட்டது. உடனே கீழேவிழுந்தான் துரியோதனன். விழுந்தவனை நெஞ்சில் மிதித்து, அவனுடலைக் காலாற் புரட்டிப் புரட்டியுதைத்தான் வீமன். துரியோதனனை அரைக்குக்கீழேயடித்ததும் விழுந்து கிடந்த வீரனை வெட்கமின்றி வீமன் உதைத்ததும், தீர்த்த யாத்திரையினின்று அப்போதுதான் மீண்டுவரும் பலராமன் கண்டு, கோபாவேசங்கொண்டு, துரியோதனன்கையிலிருந்து வீழ்ந்துகிடந்த தண்டைத் தன்கையிலெடுத்து, “வெட்கங் கெட்ட வீமா, இப்படிப் பொரவோ துரோணர் உனக்குக் கற்பித்தார்? ஒருவனை அரைக்குக் கீழே அடிக்க யாரிடங் கற்றாய்? உன்னை யான் விடுவேனல்லேன், வா என்னோடு கதாயுத்தஞ் செய்ய ‘ என அழைத்தான். கண்ணன் உடனே அவனைத் தடுத்து, ” அண்ணா , ‘ஒருவர் பக்கமும் பொருவதில்லை’ என் றன்றோ தீர்த்தயாத்திரை செய்யப்போயினை? பல புண்ணிய நதிகளிற் தீர்த்தமாடிவந்த நீ போராடப்புகுதல் தக்கதன்று ; விடுக, சினந்தணிக ” என்றான். ” இம்மக்கட்பதடி வணங்கா முடிமன்னனைப் போர்நெறியைமீறி அவமானஞ்செய்யக் கண்டும் வாளாவிருப்பதோ தகுதி? வீமனை இன்றே கொல்வேன் ” என்றான் பலராமன். ”அண்ணா , வீமன் சுயோதனனைத் தொடையில் அடிக்க எண்ணவில்லை. சுயோதனன் மேலே எழுந்ததால் வீமன்கதை சுயோதனன் தொடையிற்பட்டது. அன்றியும் இவ்விருவருள் நல்லன்யார், தீயன் யார்? உலகில் முற்றும் நல்லாருமில்லை. முற்றுந் தீயாருமில்லை ; நன்மை தீமையிரண்டுங் கலந்து நிற்பதையே யாரிடத்துங் காணலாம். இதனாலன்றோ ,

 ‘குணம்நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்
மிகைநாடி, மிக்க கொளல்’

என்றார் ஆன்றோர் ? ”

இவ்வாறு கண்ணன் பலராமனோடு உரையாடிக்கொண் டிருக்கையில் அசுவத்தாமன் ஓடிவந்து, ” வீம, துரியோதனன்

மாண்டதினால் உங்கள் பக்கத்துக்கு வெற்றியென்று நினைத் தாயோ? அசுவத்தாமனை வென்றபின்னன்றோ நுமக்கு வெற்றி? எடுகதையை ” என்று வீமனை எதிர்த்தான். வீமன் சிறிதுநேரம் அசுவத்தாமனோடு போர்புரிந்து அவன் சிர மிசைத் தண்டுகொண்டு மோதினான். அசுவத்தாமன் சிரமீதுள்ள சூடாமணியை வீமன் கதையால் மோத அது தரையில் வீழ்ந்தது. வீழ்ந்தமணியை வீமன் எடுத்து அசுவத்தாமன் கையிற்கொடுத்து, ” தாமா, உன்னைக் கொல்ல எனக்கு மன மில்லை ; நீ என் ஆசான்மகன் ; உனக்கும் எனக்கும் பகை யில்லை, போ” என்றனன். சிரோரத்தினம் வீழ்ந்ததைத் தான் வீழ்ந்ததாக ஏற்றுக்கொண்டு, வீமனைத்தழுவி, அசுவத் தாமன் அகன்றான்.

“துரியோதனன் மாண்டான். இதனோடு யுத்தத்தை நிறுத்துவோம். இருபக்கத்துச் சேனைக்கும் இதனையறிவி. போர் முடிந்ததென்றும், உதிட்டிரனையே குருநாட்டுக்கெல்லாம் அரசனாக்கி முடிசூட்டல்வேண்டுமென்றும், திரிதராட் டிரனுக்குச் சொல்லியனுப்பு” எனக் கண்ணன் பலராமனுக்குச் சொல்ல, அவன் அங்ஙனமே செய்தனன்.

ஏற்ற சுபதினத்தில் சுபமுகூர்த்தத்தில் உதிட்டிரனுக்கும் பாஞ்சாலிக்கும் முடிசூட்டினர். உதிட்டிரன், அறிந்தழைக்க, அருள் பெருக, எவருங்களிக்க, பல்லாண்டு அத்தினபுரத்தில் அரியணை மீதிருந்து செங்கோல் செலுத்தினான்.

முற்றிற்று

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *