
பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
2. அரக்குமாளிகை
ஆசிரியர்பாற் கற்கவேண்டிய அனைத்துங் கற்றபின் பாண்டவர் கௌரவரோடு அத்தினபுரத்தில் வதிந்துவந்தனர். கௌரவருள் விகருணன் ஒழிந்த ஏனையோர் பாண்டவரிடத்திற் பொறாமையும், அது காரணமாகப் பகையுங்கொண்டனர். பாண்டவர் கௌரவருக்கு யாதொரு தீங்கும் இழைத்திலராயினும், கல்வியிலும், படைக்கலப் பயிற்சியிலும் தங்களிலும் பாண்டவர் மேம்பட்டமையும், அது காரணமாக ஆசிரியருடைய அன்பைக் கவர்ந்து கொண்டமையும், ஈற்றில் தாம் துருபதனின் முன் இடைந்தோட, பாண்டவருட் பார்த்தனே. அவனைவென்று கொணர்ந்து துரோணர்முன் நிறுத்தினமையு மாகிய இவையே கௌரவரது பொறாமைக்கும் பகைக்குங் காரணம். இவையன்றியும், நாட்டிலும் நகரத்திலுமுள்ளார் பல்கால் பாண்டவரைப் புகழ்ந்து கூறுஞ்சொல்லும் துரியோதன துச்சாதனாதியர்க்கு நடுச்செவியில் நாராசங்காய்ச்சி யூற்றியது போல் வருத்தியது. இவற்றையெல்லாந் தாங்க வியலாது துரியோதனனுந் தம்பிமாரும் பாண்டவரைத் தொலைக்க ஒரு சூழ்ச்சி செய்தனர். அஃதாவது, தங்களுக்குத் தெரிந்த சிற்பியொருவனைக்கொண்டு ஓர் அரக்குமாளிகை கட்டுவித்து, அதில் பாண்டவரை இருத்தி, மாளிகையைத் தீக்கிரையூட்டின், அதனோடு பாண்டவரும் செத்தொழிவர் என்பதே. தாமெண்ணியவண்ணம் சிற்பியையழைத்து அரக்கு மாளிகை கட்ட ஏவினர். சிற்பி கௌரவரின் எண்ணத்தை யறிந்தவனாகையால் அவர்கள் கற்பித்தவண்ணமே அரக்கு
மாளிகையைக் கட்டினும், பாண்டவர்மீதுள்ள இரக்கத்தினாலே அவர் தப்பிப்பிழைக்கும்படி மாளிகைக்குக் கீழே தொடங்கி நெடுந்தூரஞ் செல்லும் சுருங்கையொன்றைச் சமைத்தான். சிற்பி ஒருநாள் வீமனிடம், கௌரவர் சூழ்ச்சி இன்னதென அறிவித்து, இவர் தப்பிப்பிழைக்கும் பொருட்டுத் தான் நிருமித்த சுருங்கையையுங் காட்டி, ” இக்கொடியோர் சூழ்ச்சி பயன்படாதொழிக! நும்மை இறைவன் காக்க!” என்று இரகசியத்தை வெளிப்படுத்தினான். இதனை அறிந்த வீமன் இவ்விரகசியத்தை ஒருவருக்குங் கூறிற்றிலன்.
மாளிகை கட்டி முடிந்தபின் துரியோதனன் உதிட்டிரனைக் கூய், “அண்ணா ! நீவிர் ஐவிரும் தாயாரும் இனிது மகிழ்ந்துறைதற்கு ஒரு மாளிகை கட்டியுள்ளேன். அவ்வில்லத்துட் குடிபுகுந்து எங்களையும் நகரத்தார் யாவரையும் மகிழ்விக்கும் படி வேண்டுகின்றேன் ” என்றான். சூதொன்றுமறியாத
உதிட்டிரன் கௌரவரின் அன்பைமெச்சி ஒரு மங்கள தினத்தில் சுபமுகூர்த்தத்தில் அன்னையோடுந் தம்பிமாரோடுங் கிருகப்பிரவேசஞ் செய்தனன். அதன்பின் சின்னாள் சென்றன. ஒவ்வோரிரவிலும் மற்றவரெல்லாங் கண்ணயர்ந்து தூங்க, வீமன் விழித்திருந்து காத்தனன். ஒரு நாள் வீமன் பின்வருமாறு யோசித்தான் : “எத்தனை இரவு உறக்கமின்றி விழித்திருப்பேன்? இவ்விரகசியத்தை வேறு ஒருவருக்குஞ் சொல்லேனென்று சிற்பிக்கு ஆணையிட்டேன். பலஇரவு விழித்தபின் ஓரிரா நான் தூங்குவேனேல் எங்கதி எப்படி முடியும்? சீச்சீ! இஃதெல்லாம் வீண். இதனின் நல்ல யோசனை ஒன்று தோன்றுகிறது. கௌரவர் இவ்வீட்டுக்குத் தீவைக்கும் வரையும் நான் ஏன் காத்திருப்பான்? இரவில் இவரெல்லாம் நித்திரைசெய்கையில் இவரை நானே தூக்கிக் கொண்டுபோய்ச் சுருங்கையின் புறவாயிலில் வைத்துவிட்டு மாளிகைக்கு எரிவைத்து நானும் தப்பி ஓடுவேன். மாளிகை எரிந்து சாம்பராய்க் கிடப்பதைக் காணுங் கௌரவர் யாமுன் செத்தொழிந்தோமென நினைப்பர். இஃதே செய்தக்கவினை.”
தான் எண்ணியதை எண்ணியபடி செய்து முடித்தான் வீமன். அரக்குமாளிகை எரிந்து சாம்பரானதைக்கண்ட கௌரவரும் ஊரார் அனைவரும் பாண்டவர் பட்டொழிந்தார் என்றே எண்ணினர். வீமன் குந்திக்கும் தன் உடன் பிறந்தாருக்கும் தான் செய்ததைக்கூறி அதற்குக் காரணத்தையும் விளக்கினான். குந்தியும் உதிட்டிரனும் வீமனைப் பலவாறு புகழ்ந்தனர்.



