பாண்டவர் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

 1. மரபு; பிறப்பு; இளமை

இந்துதேசத்திற்குப் பழம்பெயர் பரதகண்டம். பரத கண்டம் பரதன் ஆண்ட பெருநாடு எனப் பொருள்படும். இப்பரதன் துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன். ஆகவே இவன் வேறு, தசரதன்மகன் பரதன் வேறு என்பது தெள்ளிது. பரதன் ஒரு பெருஞ்சக்கரவர்த்தி. இந்துதேசம் முழுதும் அவன் ஆணைக்குள் அடங்கினது என்பர். பரதன் வமிசத்திற் பிறந்தவர் பாரதர். பாரதர் கதை பாரதம் என வழங்கும். நான் இங்கு சொல்லப்புகும் பாண்டவர் கதை பாரதச் சுருக்கமே. பரதன்வமிசத்திற் பிறந்தவருள் குரு என்பான் ஒருவன். அவன் ஆண்ட நாடு குருநாடு என்பர். குருவின் சந்தது யார் கௌரவர். ஆகவே கௌரவர் என்னும் பெயர் பாண்டவருக்கும் உரியதேயாயினும் காரணவிடுகுறிப்பெயராய் அது துரியோதனனையுந் தம்பிமாரையுமே குறிக்கும். பாண்டுவின் மைந்தர் ஐவரையும் பாண்டவர் என்பர்.

பரதகண்டத்திலே, குருநாட்டிலே, அத்தினபுரத்திலே, சந்தனு என்னும் அரசன் கங்காதேவி என்னும் பெண்ணை மணந்து தேவதத்தன் என்னும் மகனைப் பெற்றான். பிள்ளை பிறந்த சிலநாளைக்குள் கங்கை இறந்தாள். பல்லாண்டு கழிந்தபின் வேட்டையாடக் கானகஞ்சென்ற வேந்தன் அங்கு உருவமும் அழகும் வாய்ந்த பெண்ணொருத்தியைக் கண்டு அவளை மணக்க விரும்பினான். அப்பெண்ணின் பெயர் பரிமளகந்தி. இவளது தந்தை அரசனைப்பார்த்து, ” என் மகளுக்குப் பிறக்கும் புதல்வனே உமக்குப்பின் உமதரசைக் கைக்கொள்வானென உறுதிமொழி எனக்குத் தருவீரேல் உமக்கு என் மகளை விவாகஞ்செய்து தருவேன்” என்றான். தேவதத்தன் மேல் மாறாத அன்புள்ள சந்தனு அதற்குச் சிறிதும் இணங்கினானில்லை. தான் விரும்பின பெண்ணை மணவாது மன்னன் அத்தினபுரந் திரும்பினன். காட்டில் நிகழ்ந்தனவெல்லாம் தேர்ப்பாகன் சொல்ல அறிந்த தேவதத்தன் அரசனுக்குத் தெரியாமற் காட்டிற்குப் போய், பரிமளகந்தியையும் அவள் தகப்பனையுங் கண்டு, தான் யாரென்று அவர்களுக்கு அறிவித்து, தன்மீதுள்ள பேரன்பினாற் தான் சந்தனு இவர்கள் கேட்ட உறுதிமொழியைக் கொடுக்கவில்லை என்று, பின்னரும் இவ்வாறு கூறுவான் : “ஐயா! என் தந்தையார் கூறப் பின்னிட்ட உறுதிமொழியை நான் இப்பொழுது கூறுகிறேன் : எனக்கு இராச்சியம் வேண்டியதில்லை ; ஆகாசவாணியும் பூமிதேவியும் தேவர்களும் அறியச் சத்தியஞ்செய்து கொடுக்கிறேன் ; நான் இச்சத்தியத்திற் தவறின், உடனே என் தலைமண்டை ஆயிரஞ் சுக்கலாய்ப் பொடிபடக் கடவது ; நீர் சற்றும் ஐயமின்றி நும்மகளை எந்தையாருக்கு மணஞ்செய்து கொடுக்க..”

இவ்வாறு வேண்டிய தேவதத்தனது வாய்மொழியைக் கேட்டு வியந்து, பரிமளகந்தியை அத்தினபுரங் கொண்டு போய்ச் சந்தனு மகாராசனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தான் அவள் தகப்பன். கேட்டவர் அஞ்சும் சபதத்தைச் செய்தமையால் தேவதத்தன் வீடுமன் என்னும் பெயர் பெற்றான். இனிமேல்வரும் பாரதக்கதையில் வீடுமனென்ற பெயரே இவனுக்கு வழங்கும்.

சந்தனுவைப்போன்ற தந்தையையும் தேவதத்தனைப் போன்றமகனையும் இவ்வுலகிற் காண்பது அரியவற்றுள் அரிது.

சந்தனுவுக்கும் பரிமளகந்திக்கும் பிறந்த மகன் விசித்திர வீரியன் தந்தையிறந்த பின் அரசனானான். இவனுக்கு மூவர் மைந்தர் : திரிதராட்டிரன், பாண்டு, விதான். இவர்களுள் மூத்தவன் திரிதராட்டிரன் பிறவிக்குருடன். ஆகவே ஏற்ற காலத்தில் பாண்டு அரசனானான். திரிதராட்டிரன் காந்தாரியை மணந்து, துரியோதனன் துச்சாதனன் விகருணன் என்னும் புதல்வரையும் துச்சடை என்னும் மகளையும் பெற்றான். துரியோதனன் முதலியோரைக் கௌரவர் என்பர். பாண்டு குந்தியையும் மாத்திரையையும் மணந்து, ஐவர் மக்களைப் பெற்றான். உதிட்டிரன், வீமன், அருச்சுனன், நகுலன், சக தேவன் என்பன முறையே ஐவருக்கும் பெயர். இவருக்கு ஐவர் என்றும், பஞ்சவர் என்றும், பஞ்சபாண்டவர் என்றும், பாண்டவர் என்றும் பெயர். ஐவரும் சிறுவராக இருக்கும் பொழுதே பாண்டு இறந்தனன். அதன்பின் திரிதராட்டிரனே குருநாட்டை ஆண்டுவந்தனன்.

பாண்டு இறந்தபின் திரிதராட்டிரன் குந்தியையும் பாண்டவரையும் ஆதரித்து வந்தான். தன் தம்பியின் சிறுவர் ஐவரையும் தன் மைந்தரோடு பலவகைக் கல்வியுங் கற்கும்படி திரிதராட்டிரன் ஒழுங்கு செய்தனன். வீடுமர், துரோணர், இருபர் என்னும் ஆசிரியர் மூவரும் பாண்டவருக்குங் கௌரவருக்கும் பலகலை ஊட்டினர். இவருட் துரோணாசாரியரும், இருபாசாரியரும் சாதியிற் பிராமணராயினும் படைக்கலப் பயிற்சியிற் தேர்ந்தவர். துரோணரே வில், வாள், தண்டம், ஆனையேற்றம், குதிரையேற்றம் முதலிய பயிற்சியெல்லாம் பயிற்றுவித்தனர். ஆசிரியர் மாணவரெல்லாரையும் ஓரமின்றி நடத்திவந்தனராயினும் உதிட்டிரன், வீமன், அருச்சுனன் தாம் கற்ற பாடங்களைக் கண்ணுங் கருத்துமாய்க் கற்றதனாலும், படைக்கலப்பயிற்சியில் மிகு சாதுரியங் காட்டியமையினாலும், ஆசிரியர்பால் வைத்த அன்பினாலும் அவர் உள்ள த்தைத் தம்வயம் சாயச்செய்தனர். இவர் எல்லாருள்ளும் அருச்சுனனே குருவின் நேசத்தைக் கவர்ந்து கொண்டனன். ஒருகால் நீராடும் பொருட்டு ஆற்றிலிறங்கிய துரோணர் காலை முதலையொன்று பற்றினது. இஃது இப்படி

நேரிடுமென்று துரோணர் எதிர்பார்த்திலர். யாதொரு செயலுமற்றுக் கூச்சலிட்ட குருகுஞ்சரத்தை முதலைவாயினின்றுந் தப்புவிக்க அருச்சுனன் விரைந்தோடி வில்லை வளைத்து முதலையின் மீதம் பெய்து மீட்டனன். தன்னுயிரைக் காத்தவனை எனையோரினும் மிகத் துரோணர் நேசிப்பின் அது குற்றமாகுமா? மாணவர் கற்கவேண்டிய கல்வியெல்லாங் கற்றபின் இவரை ஆசிரியர் இராச சபையில் அரங்கேற்றுவித்தனர். அப்பொழுதும் உதிட்டிர வீமார்ச்சுனரே மற்றெல்லாரினும் மேம்பட்டு விளங்கினர். கல்வியை முடித்த மாணவர் துரோணருக்குக் குருதட்சிணை சமர்ப்பிக்கவெண் ணுகையில், துராணர் சீஷரெல்லாரையும் பார்த்துப் பின்வரு மாறு கூறுவார் : ” மாணவர்காள்! உங்களுக்கு நான் படிப்பித்தது பொன்னையிச்சித் தன்று. மகாராசாவின் கருணையினாலே எனக்கும் என் குடும்பத்துக்கும் யாதொரு குறையு மில்லை. ஆயினும் பல்லாண்டு என்னெஞ்சில் வருத்தமொன் றுளது. அதை நீவிர் தீர்ப்பின் அஃதே எனக்குத் தந்த குருதட்சிணையாகும்.”

இதனைக் கேட்ட மாணவர் “குருதேவரே, தங்கள் உள்ளத்தை வருத்துவது இன்னதென்று நாங்கள் தெளியச் சொல்லியருளுக; உடனே அவ்வருத்தத்தைத் தீர்க்க எங்களாலானதைச் செய்வோம் ” என்றார். துரோணர் சொல்லுவார் : ” என் இளமைப்பருவத்தில் என் பள்ளிக் கூடத்தில் என் உடன்கற்றவருளொருவன் பாஞ்சால ராச குமாரன் துருபதன் என்பான். அவனும் நானும், நகமும் தசையும் போல, அருநட்புக் கொண்டோம். என் நண்பன் ஒருநாள் என்னை விளித்து, துரோணா, நாமிருவேமும் பள்ளிக்கூடத்தைவிட்டு நம்நம் ஊர் செல்லினும் நம் நண்பு தணியாதிருத்தல் வேண்டும். நான் இராசனானபின்னும் உன்னை மறவேன். உனக்குக் குறை யாதாயினும் நேரிடின் உடனே நீ அதை எனக்கு அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்யின் அதை அக்கணமே தீர்ப்பேன்’ என்றான். நாங்கள் பள்ளிக்கூடத்திலிருந்து நீங்கி யொருவரை யொருவர் பிரிந்த பின்பும் நான் துருபதனை மறந்தேனில்லை. ஆயினும் அக்காலத்தில் எனக்கொரு குறையுமில்லையாகலின் அவனைக் காணச் சென்றிலேன். இதன் பின் நான் கிருபரின் தங்கையை மணந்தேன். ஏற்றகாலத்தில் எங்களுக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. பிறந்தபிள்ளைக்குப் பால் கொடுக்கத் தாய்க்குப் பாலில்லை. பசுப்பால் கொடுக்கவோ வறிஞன் என் கையிற் காசில்லை. அப்பொழுது, துருபதன் எனக்கு முன்னே சொன்ன சொல் என் நினைவில் வந்தது. நான் பாஞ்சாலஞ் சென்றும், இராசனைக்காண்பது இலகுவில் வாய்க்கவில்லை. பலநாள் காத்திருந்தபின், ஒருநாள் இராசதரிசனங் கிடைத்தது. துருபதன் என்னை முற்றும் மறந்து போனான். நான் பள்ளிக்கூடக்காலத்தில் எங்களிருவருக்கும் நிகழ்ந்த பல விஷயங்களை அவனுக்கு நினைப்பூட்ட முயன்றும் எல்லாம் வீணாயின. ஈற்றில் அவன் என்னை நோக்கி, அவைகிடக்க, நீ இப்பொழுது வந்தகாரியம் யாது?’ என்றான். தாய்ப் பாலில்லாத என் பிள்ளைக்குப் பால் தரும் பசுவொன்று இரந்தேன். அப்பொழுது அவன் என்னை நோக்கி, நீ வந்தவுடனே இப்படிக் கேட்டனையாயின் பசு ஒன்றல்ல, பத்துக் கொடுத்திருப்பேன். அப்படிச் செய்யாமல் நீயும் நானும் ஒரு பாடசாலையிலே ஓராசிரியரிடத்து உடன்கற்றவரென்றும்,

அக்காலத்தில் நீயும் நானும் பருந்தும் நிழலும்போல நண்பு பூண்டவரென்றும் இவ்வாறு வேறுபல பொய்க்கதைகளையும் சொன்னாய். ஏழைப் பார்ப்பான் நீ, இராசராசன் நான் ; நீயும் நானும் எப்படி ஒருபள்ளிக்கூடத்தில் ஓராசிரியரிடங் கற்பது? நீ படுபொய்யன். உனக்கு நானொன்றும் ஈயேன் ; போ போ’ என்று என்னைத் துரத்தினான். அப்பொழுது இராசசபையைவிட்டு நான் வெளியே வருமுன் அவனும் அவன் சபையிருந்தாரெல்லாருங் கேட்ப ஒரு சபதஞ் செய் தேன் : என் சீஷனொருவன் துருபதனை யுத்தக்களத்தில் வென்று அவனைத் தேர்க்காலிற்கட்டி என் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்படி செய்யேனாயின் நான் துரோணனுமல்லன், பிராமணனுமல்லன், நான் கற்ற வித்தையெல்லாம் மறந் தொழிந்து போகக் கடவேன் என்பதே. இப்பொழுது துரு பதனை வென்று தேர்க்காலிற் கட்டி என் முன் கொணர்ந்து நிறுத்துபவனே எனக்கு நான் விரும்புங் குருதட்சிணை கொடுப்பவன்.”

இதைக் கேட்ட பாண்டவருள்ளும் கௌரவருள்ளும் ஒவ்வொருவனும் ‘ நான் இதைச் செய்துமுடிப்பேன்’ என்று புறப்பட்டனன். இவர் பாஞ்சாலஞ்சென்று துருபதனைப் போருக்கறை கூவி அவனோடு போர்க்களத்திற் பொருதன ரேனும் துருபதன் கௌரவரெல்லாரையும் புறங்கொடுத் தோடச் செய்தனன். பாண்டவருள் அருச்சுனன் துருபதனோடு சமர் செய்து அவனை வென்றபின் அவனைப்பிடித்துத் தன் தேர்க்காலிற் கட்டிக்கொணர்ந்து துரோணர்முன் நிறுத்தினான். உளம்கலிந்து தலைகவிழ்ந்து நின்ற துருபதனைத் துரோணர் பார்த்து, ” உன் சபையில் நான் வந்து ஒரு பாலா இரந்தபோது, நீ உன்னைச் சிங்கமென்று நினைத்தாய்; இப்பொழுதோ நீ ஆணுமல்லை, பெண்ணுமல்லை, அலிபோல் என் முன் நிற்கின்றாய், வெட்கமில்லாதவனே, நீ உன் ஊருக்குத் திரும்பிப்போய் உன்னைப்போல் அலிகளை ஆள், என்முன் நில்லாதே, போ ” என்று அவனைத் துரத்தினார். அவன் போனபின் துரோணர் அருச்சுனனைப்பார்த்து, ” சீஷ ரென்றால் எல்லாருஞ் சீஷரா? அருச்சுனனே என் சீஷன் ” என அவனைப்புகழ்ந்தார். அருச்சுனனும் உடனே அவ ரடியில் வீழ்ந்து , ” குரவரென்றால் எல்லாருங் குரவரா? துரோணரே என் குரு. துரோணரைக் குருவாகப்பெற நான் என்ன தவஞ் செய்தேனோ!” என்று குருதோத்திரஞ் செய்தான்.

பாஞ்சாலத்துக்குத் திரும்பிப்போன துருபதன் நாணம் மீதூர, “துரோணனைக் கொல்ல ஒரு மகனையும், அருச்சுனனுக்குக் கொடுக்க ஒரு மகளையுந் தவஞ்செய்து பெறுவேன் ” எனத் துணிந்து பலநாள் தவஞ்செய்து, திட்டத்துய்மன் என்னும் மகனையும் திரௌபதி என்னும் மகளையும் பெற்றான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *