

இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்
முகவுரை
தமிழ் இலக்கியங்களிலே புகுந்து இன்பம் நுகரும் போது எத்தனையோ கருத்துக்கள் தோன்றுகின்றன. ஒரே புலவர் பல இடங்களில் சொல்லியிருக்கும் செய்திகளை ஒப்பு நோக்குவதில் ஒருவகைச் சுவை உண்டாகிறது. ஒரே கருத்தைப் பல புலவர்கள் வெவ்வேறு நூல்களிற் சொல்லியிருப்பதைக் கவனிக்கும் போது ஒருவகை இன்பம் எழுகிறது. சிலசில சமயங்களில் காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கவிஞர் கூறும் கருத்துக்கள் பின்னும் இன்பத்தை எழச் செய்கின்றன. ஒப்பு நோக்குவதில் உள்ள இன்பம் இப்படிப் பலவகைப்படுகிறது. தமிழ் நூல்களைப் படிக்கப் படிக்கத் தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்கள் தமிழருடைய உன்னதமான கொள்கைகளை வெளிப்படுத்துவதும், சில கொள்கைகளை எவ்வளவு கால மானாலும் மீட்டும் மீட்டும் வற்புறுத்துவதும், சிலவற்றை மாற்றிச் சொல்வதும் படித்து இன்புறற்கு உரியன. ஒரே கருத்தைச் சொல்ல வந்தாலும் வெவ்வேறு கவிஞர் வெவ் வேறு நிலைக்களத்தில் வைத்து வெவ்வேறு வகையில் கவிதையிற் புலப்படுத்தி யிருக்கின்றனர். கருத்தின் உயர்வை அறிந்து இன்புறுவது ஒருபால் இருப்ப, அதை வெளியிடும் தோரணையில் கவிஞனது திறமை வெளிப் படுவதை அறிகையில் கவியின் அழகு பலமடங்கு சிறந்து நிற்பதை உணரலாம்.
சங்க காலப் புலவர்கள் முதல் இத்தகைய இன்பங் களைத் தமிழ் நாட்டில் தமிழ்ப் புலவர்கள் கவிதையுருவத்தில் குவித்து வைத்திருக்கிறார்கள். வள்ளுவரும், கம்பரும், பிறரும் தமிழின்பத்தை உருவாக்கிக் குறளாகவும் ராமாயணமாகவும் பிற நூல்களாகவும் வழங்கினர். அவர்களுடைய பரம்பரையில் வந்த பாரதியாரும் இந்தக் காலத்தில் உண்டான புதிய உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்துத் தமிழ்க் கவிதைப் பூஞ்சோலையிலே புதிய மணமலர்களை மலரச் செய்திருக்கிறார்.
இந்த இன்பத் தமிழ்நெறியிலே சென்ற உள்ளத்தில் எழுந்த சிந்தனைகளில் சில சில பொறிகளே இந்தத் தொகுப்பு நூலில் இருக்கின்றன. அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இவை. எந்தக் கருத்தையும் ஆராய்ச்சி முறை யில் ஆராய்ந்து முடிவு கண்டு தொகுத்துரைத்துவிட்ட தாக நான் கருதவில்லை. இன்ப உணர்ச்சி நெகிழ்ந்து வந்த சிறிய விளைவுகள் இவை என்றுதான் கொள்ள வேண்டும். ஒருகால் சிலருக்குச் சில கட்டுரைகள் இன்ப உணர்ச்சியின் விளைவாகத் தோற்றாமல் மாறாகத் தோற்றலாம். என் அநுபவம் இது, அவர்கள் அநுபவம் அது என்று நினைக்க எனக்கு உரிமை உண்டல்லவா?
இவற்றை அவ்வப்போது வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர்கள்பாலும், இப்போது இவ்வுருவத்தில் வெளியிடும் அல்லயன்ஸ் கம்பெனியார் பாலும் நன்றி பாராட்டுகிறேன்.
கி. வா. ஜகந்நாதன்.



