இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

ஒளித் திருநாள்

உடையும் உணவும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை. உடை மானம் காப்பது ; உணவு உயிரைக் காப்பது. இரண்டும் அவசியமாக இருந்தாலும் உயிரைக் காக்கும் உணவு சில நாட்கள் இல்லாமலே காலம் கழிக்கலாம். உடை இல்லாமல் அரை நிமிஷ மும் வெளியில் உலவ முடியாது. மானம் போவதை விட உயிர் போவது பெரிதல்ல.

மனிதனுக்கு மானம் சிறந்த பூஷணம். பழைய காலத்தில் சிறந்த அரசர்களுக்கு மானாபரணன் என்ற பட்டப் பெயர் வழங்கியதுண்டு. எவ்வளவு அலங்காரங்கள் இருந்தாலும் ஆடை இல்லாவிட்டால் அவ்வளவு அலங்காரமும் வீணாகிவிடும். “அணியெல்லாம் ஆடையின் பின் ” என்று ஒரு புலவர் கூறுகிறார்.

தமிழ் நாட்டில் உடை, உணவு என்னும் இரண்டிலும் தம் கைவன்மையைக் காட்டும் மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் உடைக்காக நூற்றலும், உணவுக்காகச் சமைத்தலும் மகளிர் களுடைய தலைமையான கடமைகளாக இருந்தன. கணவனை இழந்த பெண்கள் தம் மனம் சாந்தி உறுவதற்கும், பொழுது போவதற்கும் நூல் நூற்றலைத் துணையாகக் கொண்டிருந்தார்கள். ஒரு புலவர் வெள்ளிய மேகத்தை வருணிக்கிறார். அதற்கு உபமானம் சொல்ல வரும்போது, “கணவனை இழந்த மகளிர் நூற்கும் பொருட்டுப் பன்னிய பஞ்சைப் போன்றது” என்று அமைக்கிறார்.

“ஆளில்பெண்டிர் தாளிற் செய்த நுணங்குநுண் பனுவல் போல” என்பது அவர் பாடல். நூற்கும் பழக்கத்தை உடைய பெண்களைப் ‘பருத்திப் பெண்டிர்’ என்று சொல்லுவார்கள். மிக மெல்லிய நூலை நூற்கும் ஆற்றல் மங்கையருக்கு இருந்தது.

புத்தகத்துக்கு நூல் என்னும் பெயர் வந்ததற்குக் காரணம், அது மடமங்கை ஒருத்தி நூற்கும் நூலைப் போல அழகும் உரமும் பயனும் உடையதாக இருப்பதனால்தான். நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளால் கைவல் மகடூஉத் தனது செய்கை மாண்பினால் ஓரிழைப் படுத்தலாம் உலகத்து நூல் நூற்றல் என்பது’ என்று இறையனா ரகப்பொருள் என்னும் இலக்கண நூலின் உரை ஆசிரியர் எழுதுகிறார். பெரும்பாலும் பெண்டிரே நூல் நூற்றுவந்தனர் என்று பழைய நூல்களில் உள்ள பகுதிகளால் தெரிய வருகின்றது.

நூற்ற நூலை நெய்வதற்குத் தொழிலாளர்கள் தனியே உண்டு. பிற்காலத்தில் செங்குந்தர், சாலியர் என்று வழங்கும் சாதியினர் இத்தொழிலைச் செய்து வருதலை நாம் அறிவோம். பழங்காலத்தில் அறுவையர், காருகர் என்ற பெயர்களால் நெய்தல் தொழிலைச் செய்பவரை வழங்கினர். பெரிய நகரங்களில் நெசவுத் தொழிலாளர் வீதிகள் தனியே இருந்தன.

காவிரிப்பூம்பட்டினம் சோழர்களுடைய ராஜ தானி. அங்கே பழங்காலத்தில் வியாபாரம் மிகச் சிறந்த நிலையில் இருந்தது. வெளிநாட்டு ஜனங்கள் பலர் வந்து தமிழ்நாட்டுப் பண்டங்களைக் கொண்டும், தம் நாட்டும் பண்டங்களைக் கொடுத்தும் சென்றனர்.

காருகர் என்னும் தொழிலாளர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர். நூலால் ஆடையை நெய்வோர் ஒரு வகை; அவற்றை விற்பனை செய்யவேண் டிய இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பவர் ஒரு வகை.

பட்டாலும், மயிராலும், பருத்தியாலும் ஆடைகளைச் செய்தனர். எலி மயிரால் கூட மெல்லிய கம்பளங்களைச் செய்தார்களாம்.

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்

மதுரையில் இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகளை அவர்கள் நெய்தார்கள். அதனால்தான் “கட்டு நுண்வினைக் காருகர்” என்று அவர் களைச் சிறப்பித்திருக்கின்றார் ஆசிரியர்.

பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. அந்த நகரத்தில் சிறியோரும் பெரியோருமாகிய நெய்தல் தொழிலைச் செய்பவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் கடைகளில் ஆடைகளை விரிப்பார்கள். அவை அலைகள் நெளிந்து கொடுப்பதைப் போல அழகாகப் படியும். அளவினால் சிறிய ஆடைகளும் பெரிய ஆடைகளுமாக நிறைத்து வைத்திருப்பார்கள்.

தெண்திரை அவிர் அறல் கடுப்ப ஒண்பக்
குறியவும் நெடியவும் மடிதரூஉ விரித்துச்
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினும் கால்உற நிற்றர

என்று மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூலில் அவர்கள் சிறப்பைக் காணலாம். தெளிந்த அலைகளில் விளங்குகின்ற மடிப்பைப்போல ஒள்ளிய பலவாகிய சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்பை உடைய ஆடைகளைக் கொண்டுவந்து விரித்துச் சிறியோரும் பெரியோருமாகிய நெய்தல் தொழிலைச் செய்வார் திரண்டு, நான்காய் வேறுபட்ட தெருவுகள்தோறும் ஒருவர் காலோடு ஒருவர் கால் நெருங்க நிற்றலைச் செய்ய’ என்பது இதன் பொருள்.

மதுரையில் உள்ள ஜவுளிக்கடைகளைச் சிலப்பதிகார ஆசிரியரும் வருணிக்கின்றார். நூலாலே பண்ணின ஆடைகள், மயிரால் அமைந்த கம்பளங்கள், மிகவும் மெல்லிய பட்டு நூலால் அமைந்த ஆடைகள் முதலியன அந்தக் கடைகளில் நூற்றுக்கணக்காக அடுக்கிக் கிடக்கின்றன. ஆடைகளுக்கு வாசனை ஊட்டுவது அக்கால வழக்கம். அந்த ஆடைகள் கமகம என்று மணக்கின்றன. “எத்தனை ரகங்கள் இருக் கின்றன?” என்று ஆராயப் புகுந்தால் சுலபமாகப் பார்த்து முடித்துவிட இயலாது.

நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்

என்பது சிலப்பதிகாரப் பகுதி.

காஞ்சீபுரத்து அறுவை வீதியை மணிமேகலை ஆசிரியர் வருணிக்கிறார். அங்குள்ள ஆடைகளின் வேலைப்பாடு அற்புதமானது. இழையோடு இழை இணைந்திருப்பதைப் பார்க்க முடியாதபடி அவ்வளவு நுண்ணிய கைத்தொழிலால் அமைந்தவை அவை. பார்வை இழையூடே நுழைய இயலாதாம். அத்தகைய ஆடைகளைச் செய்வார் வீதி காஞ்சீபுரத்தில் தனியே இருந்தது.

கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை
வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகு.

ஆடைவகைகளும், அவற்றிலே செய்யப்பெற்ற கைத்தொழில் வகைகளும் பல.

இந்த நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் சமுதாயத்தில் நல்ல பதவியில் இருந்தனர். பொது மறையாகிய திருக்குறளைச் செய்த திருவள்ளுவர் நெய்தல் தொழிலைச் செய்து வந்தார். மக்கள் செய்யும் தொழில்கள் பலவற்றுள்ளும் ‘நெய்தல் தொழிலுக்கு நிகரில்லை’ என்று அவர் நினைத்தாராம்.

ஜவுளி வியாபாரம் செய்துவந்த புலவர் ஒருவர் இயற்றிய பாடல்கள் சங்க காலத்து நூல்களில் இருக்கின்றன. மதுரையில் வாழ்ந்தவர் அவர்; இளவேட் டனார் என்பது அவர் பெயர்; ஆடை வியாபாரம் செய்தமையால் அவரை அறுவை வாணிகன் இளவேட்ட னார் என்று வழங்கிவந்தனர்.

நூற்றலும் நெய்தலும் ஆடை விற்றலுமாகிய தொழில்கள் மதிப்பிற்கும் புலவர் பாராட்டுக்கும் உரியவை என்பதைத் தமிழ் நூல்களால் அறியலாம்.

புதிய ஆடை அணிவதும், புதிய ஊண் நுகர்வதும் உவகைக்கு உரிய செய்திகள். வயல்களில் விளைந்து வந்த தானியத்தை முதல் முதலில் உணவாக்கி உண்ணும்போது மக்களுக்கு அளவற்ற இன்பம் உண்டாகும். “புதிதுண்ணல்” என்று அதனைச் சொல்வார்கள். அப்படியே புதிய உடைகளை அணிதலை யும் சந்தோஷமான காரியமாகக் கருதுவர். இந்த இரண்டையும் தமிழர் இரண்டு பண்டிகைகளாகக் கொண்டாடுகின்றனர். புதிது உடுத்தலைத் தீபாவளி யன்றும், புதிது உண்ணலைப் பொங்கலன்றும் மேற்கொள்வது நம் வழக்கம்.

பிறந்த நாளன்று புத்தம் புதிய வெள்ளாடை அணிவது பழைய காலத்து வழக்கம். அதை வெள்ளணி நாளென்று சொல்லுவார்கள்.

நறு நீராடிப் புதியது உடுத்து விளக்கு ஏற்றி வழிபட்டு விருந்து உண்ணுவதுதான் இந்நாட்டுக் குரிய பழக்கம். வெடி சுட்டுக் காசைக் கரியாக்கும் வழக்கம் பிற்காலத்தில் வந்தது. நம்முடைய மானத்தைக் காப்பாற்றும் வழி நமக்குத் தெரியும் என்ற உறுதியை நெஞ்சில் நிறுத்திப் புதிய ஆடை அணிந்து மகிழ்வதே தீபாவளியின் கருத்தாக வேண்டும். உடைச் சிறப்பை விளக்கும் ஒளித் திருநாள் இது உணவுச் சிறப்பை விளக்கும் உவகைத் திருநாள் பொங்கல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !