இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

கட்டில்லாக் கவிதை

இயற்கைத் தேவியின் செல்வங்களெல்லாம் ஒருங்கு குவிந்த இடமோ அது? பூமகளின் வளம் புடைத்துத் தோன்றும் அடையாளமோ? வறப்பினும் வளந்தரும் வண்மையையுடைய மலையிலே கிடைக்காத பொருள் என்ன இருக்கிறது? ‘பஹு குடும்பியாயிருப்பார் ஒரு மலைச்சாரலைப் பற்றியிருக்குமாப் போலே’ என்று வைஷ்ணவ வியாக்கியானக்காரர்கள் எழுதுவது போல, பெரிய பெரிய குடும்பங்களை யெல்லாம் தாங்கிச் செழிக்க வைக்கும் மலைகள் தமிழ் நாட்டுக்கு அணி செய்கின்றன. தமிழன் அவற்றின் பெருமையைத் தெரிந்து கொண்டவன். நாட்டுக்கு அழகு மலை: நாட்டுக்கு அரணும் மலை என்று தமிழர் அரசியல் நூல் கூறுகின்றது. அது மட்டும் அல்ல: தமிழன் தன்னுடைய இலக்கண நூலிலேயே மலைகளுக்குத்தான் முதல் இடம் கொடுத்திருக்கிறான் அங்கேதான் அவனுடைய காதல் நாடகம் தொடங்குகிறது. அங்கேதான் தமிழ்த் தெய்வத்துக்குக் காணியாட்சி இருக்கிறது. குறிஞ்சி என்ற அழகிய பெயராலே மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் குறிப்பிடும் வழக்கமுள்ள தமிழன், தன் இலக்கியத்திலே சிறந்த அகப் பொருளின் முதல் திணையாகக் குறிஞ்சியைத்தான் வைத்திருக்கிறான்.

குறிஞ்சி நிலம் இயற்கையழகு குலுங்கும் இடம். இன்பம் பொங்கிப் பூரிக்கும் இடம். கவிஞர் வருணனைக்கு மிகவும் ஏற்ற இடம். குறவரும் குறத்தியரும் முருகனை வழிபட்டுக் குரவைக் கூத்தாடி மலையருவியில் குதித்துத் தினைக் கொல்லையில் காதல் புரிந்தும் மலைச் சாரலில் இன்புற்றும் வாழும் அரங்கம் அது. இயற்கைத் தேவியின் முதற்பிள்ளைகள் வாழும் இடம் அது என்று கூடச் சொல்லலாம். இன்றும் காடுகள் அடர்ந்த மலைகளிலே வாழும் சாதியினர், நம்மைப் போன்ற நாகரிகம் இல்லாதவர்களென்று நாம் சொன்னாலும், உள்ளத் தூய்மையும் அதிக ஆசையின்மையும் உடையவர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை சின்னஞ்சிறு குருவி யினுடைய வாழ்க்கையைப் போன்றது. வாழ்க்கைக்குரிய தேவைகளோ மிகக் குறைவு. அவைகளும் எளிதிலே கிடைத்து விடுகின்றன. ஆகவே அவர்களுடைய வாழ்க்கையிலே சிரமம் இல்லை. சோற்றுக்காக அடிமை வாழ்வு வாழவேண்டியதில்லை. ஒரு வருஷத்துக்கு வேண்டுமென்று முன்கூட்டி முயற்சி செய்து உணவுப் பண்டங்களைச் சேமித்து வைப்பதும், அவற்றைப் பிறர் கண்ணிலே படாதபடி பாதுகாப்பதும், ஐயோ குறைந்து போயிற்றே என்று அழுங்குவதும் ஆகிய சங்கடங்கள் அவர்களுக்கு இல்லை.

அவர்களுடைய உல்லாச வாழ்க்கையிலே கணந் தோறும் இன்பம் கொப்புளித்துக் குமிழியிடுகின்றது. மகளிரும் ஆடவரும் கலந்து பழகித் துள்ளித் திரிந்து இயற்கையோடு இயற்கையாகப் பழகுகிறார்கள். வானவர்களும் கண்டு பொறாமைப்படும் இன்ப வாழ்க்கையில் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

தினையும் தேனும் கனியும் கிழங்கும் தசையும் அவருடைய உணவுகள். தினைதான் அவர்கள் விளைக்கும் பயிர். விளைந்த தினையைக் குத்திச் சமைத்து உண்பார்கள். பெண்கள் வெறும் பாறையிலே தினையைப் போட்டு யானைத் தந்தத்தை உலக்கையாகக் கொண்டு குத்துவார்களாம். தினை நெல்லோடு மூங்கில் நெல்லையும் குத்துவதுண்டு.

நாலு பெண்களாகச் சேர்ந்து குத்தும் போது அவர் கள் இனிய பாடல்களைப் பாடுவார்கள். அதற்கு வள்ளைப் பாட்டு என்று பெயர். அந்தப் பாட்டு நெடுந்தூரம் கேட்குமாம். வீட்டிலே உள்ள கோழி அந்தப் பாட்டைக் கேட்டு அப்படியே தூங்கிப் போய் விடுமாம்.

கோழியும் கேட்டு உறங்குமென்றால் அதில் எத்தனை இன்பம் இருக்கவேண்டும்! அவ்வளவு கவர்ச்சியுள்ள அந்த உலக்கைப் பாடல் யார் இயற்றியது? அது எந்த மாதிரிப் பாட்டு?

மலைதோறும் வாய்மொழியாக வந்த பாட்டு அது. அதை இலக்கணம் அறிந்த புலவன் யாரும் இயற்றவில்லை. நாடோடியாக வழங்கும் அந்தப் பாட்டிலே இனிமை இருக்கிறது; தாளம் இருக்கிறது; ஜீவன் இருக்கிறது. ஆனால்,நாம் வாசிக்கிற புலவர்களின் பாடல்களில் காணும் அலங்காரங்கள் இல்லை; ஆழமான பொருட் சிறப்பு இல்லை: செய்யுள் இலக்கணம் இல்லை; சங்கீதக் கட்டுப்பாடு இல்லை.

அந்தப் பாட்டைப் பாடும் மகளிர் எப்படி இருக்கிறார்கள்? நம்மைப்போல அடிமுதல் நுனிவரையில் ஆடைகளைப் புண்ணுக்குச் சுற்றுவதுபோலச் சுற்றிப் பூட்டுப் பூட்டுவது போலப் பல ஆபரணங்களை அணிகிறார்களா? நினைத்த பொழுதெல்லாம் சர்க்கரைக்கும் நெய்க்கும் மாவுக்கும் செலவு வைத்துச் சிற்றுண்டிகளைத் தின்று வியாதியை வருவித்துக் கொள்கிறார்களா? எடுத்ததற்கெல்லாம் பிறர் உதவியை வேண்டி நிமிஷத்துக்கு ஒரு தடவை ஒருவருக்கு அடிமையாகி நிற்கிறார்களா?

நம்முடைய வாழ்விலேதான் எத்தனை சிறை! எத்தனை கட்டு! உடம்புச் சிறைக்குள் உயிர் இருந்து தத்தளிக்கிறதே அதற்கு மேல் அந்த உடம்புக்கு மட்டற்ற உடைச் சிறையிடுகிறோம். உடம்பின் சுகத்துக்கு மருந்துச் சிறையிடுகிறோம். வீடென்றும் அறையென்றும் பெயருள்ள சிறைகளிலே புகுந்து கொண்டு காற்றையும் கதிரொளி யையும் தீண்டாச் சாதியாக்கி விடுகிறோம். பேச்சுக்குக் கட்டு, செயலுக்குக் கட்டு, நினைப்புக்குக்கூடக் கட்டு.

மலையிலே காற்றோடு கருத்தை அலையவிட்டு, அருவியோடு உடலை மிதக்கவிட்டு, மலரோடு கண்ணை மணக்க விட்டு, இன்பத்தோடு வாழ்க்கையைப் பிணையவிட்டு இயற்கைக் குழந்தைகளாக வாழும் குறவர் குறத்தியர் வாழ்க்கையில் இந்தச் சிறைகள் ஏது? கட்டில்லாத வாழ்வு அவர்கள் இன்ப வாழ்வு! அவர்கள் செயல்கள் கட்டில்லாத செயல்கள்; பிறருடைய அதிகாரத்துக்கு அடங்கி அடிமைப்பட்டார் செய்யும் செயல்கள் அல்ல. அவர்கள் வார்த்தைகள் கட்டில்லாமல் உள்ளத்துள் பொங்கியெழும் களிப்பை வெளியிடும் கட்டில்லா உரை. அவர்கள் பாட்டுக்களோ கட்டில்லாக் கவிதை !

அவர்கள் வாழ்க்கையிலே இன்பம் இருக்கிறதென்பதை யாராவது மறுக்க முடியுமா? அப்படியானால், அவர்கள் பாடும் பாடலிலே, அந்தப் பாடலின் சாகித்தியமாகிய கவிதையிலே இன்பம் இல்லையென்று சொல்வது மாத்திரம் எப்படி நியாயமாகும்? விடுதலை மணக்கும் பாடல் அது. இயற்கையோடு கலந்து காற்றே சுருதியாகவும், உலக்கையாற் குத்தும் போது உண்டாகும் ஒலியே தாள மாகவும் வருவதல்லவா? எத்தனை அழகான, இனிமையான, பாட்டாக இருக்க வேண்டும் அது!

“தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்” என்று ஒரு சங்கப் புலவர் அந்தப் பாட்டைப் பாராட்டுகிறார். ‘தினையைக் குத்தும் மலையிலுள்ள பெண்கள் இசையோடு வரும் வள்ளைப் பாட்டு’ என்பது அதன் அர்த்தம்.

அவர்கள் பாடிய பாடல்களைப் புலவர்கள் கேட்டிருக்கிறார்கள். கேட்டு மகிழ்ந்து அவற்றைப் பற்றித் தங்கள் நூல்களிலேயே சொல்லியிருக்கிறார்கள். அந்த மாதிரி தாங்களே பாடியும் இருக்கிறார்கள். ஆனால் புலவர்கள் அப்படிப் பாடிய பாடல்களில் அவர்கள் புலமை மணக் கிறது; செயற்கை யழகுடையவை அவை என்றுதான் சொல்ல வேண்டும். ஓர் உதாரணம் பார்க்கலாம்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உலக்கைப் பாட்டுக்களை மகளிர் பாடுவதாக அமைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று வருமாறு:

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்
ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்
பாவைமார் ஆலிக்கும் பாடலே பாடல்!

(அவைப்பார்-குத்துவார். புகார்-காவிரிப்பூம்பட்டி ஆழி – ஆக்ஞா சக்கரம். செம்பியன் – சோழன். வம்பு – மணம். பாழி -பருமை. ஆலிக்கும் – ஆரவாரிக்கும்.)

காவிரிப்பூம்பட்டினத்து மகளிர் பாடிக்கொண்டு குத்து கிறார்களாம். மலர்கள் நிறைந்த காஞ்சி மரத்தின் நிழலில் புகார் நகரத்துப் பெண்கள் கூடுகிறார்கள். இனிய கரும்பை உலக்கையாகக் கொண்டு செழுமையான முத்துக்களை அரிசியைப்போல இட்டுக் குத்துகிறார்கள். குத்தும்போது அவர்கள் பாடும் பாட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் அரசாட்சி புரியும் சோழ அரசனது புகழைச் சொல்கிறதாம். ஆக்ஞா சக்கரத்தையும் திண்ணிய தேரையும் உடைய சோழனுடைய நறுமணம் பரவிய மாலையை அணிந்த விசாலமான பருத்த மலை போன்ற தோளைப் புகழ்கிறார்களே, அந்தப் பாடல்தான் சிறந்த பாடலாம்; அந்தப் பாவைமார் ஆரவாரிக்கும் பாடலே பாடலாம்.

பாட்டு அழகாக இருக்கிறது. கரும்பும் முத்தும் நாட்டின் வளப்பத்தைக் காட்டுகின்றன. சோழன் புகழைப் புலவர் ஞாபகப்படுத்துவதும் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்தப் பாட்டில் உரல் இல்லை, உலக்கை இல்லை; நெல் கூட இல்லை. எல்லாம் நாடகத்திலே வேஷம் போட்டுக் கொள்கிற மாதிரி உலக்கையின் ஸ்தானத்திலும் நெல்லின் ஸ்தானத்திலும் பாவனையாகச் சில பொருள்களை வைத்திருக்கிறார்கள். அடடா! மூலமே வேஷந்தானே! அதை மறந்துவிட்டோமே. இங்கே மகளிரே இல்லை. அவர்களும் கற்பனை உருவங்களே! இளங்கோவடிகளே மகளிரையும் பாவனை செய்து இந்தப் பாட்டையும் கற்பனையாகப் பாடியிருக்கிறார். இதைச் செயற்கைப் பாட்டு என்று சொன்னால் நீங்கள் கோபித்துக் கொள்ள நியாயம் உண்டா? இந்தப் பாட்டில் கற்பனை நயம் இருக்கிறது. ஆனாலும் உண்மையான உலக்கைப் பாட்டுக்கு இது உதாரணம் ஆகாது என்பதைத்தான் நான் சொல்கிறேன்.

புலவர்கள் பாராட்டினார்கள், அது மாதிரியே கற்பித்துப் பாடினார்கள் என்று தெரிய வருகிறதே யொழிய, யாராவது அந்தப் பாடல்களையே தொகுத்து எழுதி வைத்தார்கள் என்று தெரியவில்லை. கட்டில்லாக் கவிதை எழுத்துக் கட்டிலே கூட அடங்காமல் போய்விடுகிறது!

ஆனாலும் நாம் அப்படிச் செய்யக்கூடாது. சங்க காலத்துப் புலவர்கள் கேட்ட அந்த வளப்பமான பாடல்கள் இந்தக் காலத்திலே கிடைக்காவிட்டால் குற்றமில்லை. இந்தக் காலத்திலும் கட்டில்லாத கவிதை நாடோடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. மலையின் மேல் தினையைக் குத்தும் மடமகளிர் பாடல் நமக்குக் கிடைக்கவில்லையே என்று, நம்முடைய கிராமத்திலே நெல்லுக் குத்தும் பெண்மணியின் பாட்டையும் மறந்துவிட வேண்டாம். சுண்ணாம்பு குத்தும் பெண்கள் தங்கள் வேலையில் உண்டாகும் சிரமத்தை மறப்பதற்காகப் பாடுகிறார்களே, அந்தப் பாடல்களிலே இருக்கும் இன்பத்தை நுகரப் பழகிக் கொள்வோம். பழங்காலத்து வள்ளைப்பாட்டின் புதிய உருவம் இது. ஆகையால் இதையும் புறக்கணித்துவிடக் கூடாது. இதோ ஒரு பெண்பிள்ளையின் இக்காலத்து வள்ளைப்பாட்டை, சுண்ணாம்பு இடிக்கும் பாட்டை, கேளுங்கள்:

அஞ்சு பிராயத்திலே ஏலேலமடி ஏலம் அறியாத நாளையிலேஏலேலமடி ஏலம் கொஞ்சம் பிராயத்திலே ஏலேலமடி ஏலம் கூடினோமே ரெண்டுபேரும் ஏலேலமடி ஏலம் ஆகாத காலம் வந்து ஏலேலமடி ஏலம் ஆளுக்கொரு தேசம்போனோம் ஏலேலமடி ஏலம்.

இதிலே கவிதை இல்லையா? காதல் இல்லையா? சோகம் இல்லையா? வாழ்க்கையை உள்ளவாறே சொல்லும் இயற்கைச் சுவை இல்லையா?

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் தமிழ்நாட்டில் நாடோடியாக உலவுகின்றன. இந்த உலக்கைப் பாட்டுக்கு இனமான நாடோடிப் பாடல்களுக்குத் தான் கணக்கு வழக்குண்டா? ஏற்றக்காரன் பாடும் பாட்டு, பூசாரி தெய்வத்தை அழைக்கும் பாட்டு, தாய்மார்கள் குழந்தையைத் தூங்கவைக்கும் தாலாட்டுப் பாட்டு, மாடு மேய்க்கும் இடையன் கன்றோடு கன்றாய்த் துள்ளிக் குதித்துப் பாடும் பாட்டு -எல்லாவற்றையும் வரிசையாகச் சொல்லி முடியுமா? எல்லாம் கட்டில்லாக் கவிதைகள். அவற்றைத் தொகுத்து அவற்றிலுள்ள ரசத்தை நுகரும் முயற்சி தமிழர்களிடத்திலே தலையெடுக்க வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !