இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

காக்கைச் சிறகினிலே!

கண்ணபிரானைப் பெரியாழ்வார் முதல் எத்தனையோ பக்தர்களும் கவிஞர்களும் மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள். அவனுடைய திருமேனிப் பேரெழிலையும் திருவிளையாடல்களையும் மதுரங் கனிந்த கவிகளாலே அன்பு கனிந்து பாராட்டி யிருக்கிறார்கள். பக்தர்களுக்கும் கவிஞர்களுக்கும் மேக படலத்தைக் கண்டால் கண்ணனது திருமேனி நினைவுக்கு வருகின்றது. கடலிலும், நீல மணியிலும், காயாம்பூ மலரிலும் நந்தகுமாரனுடைய எழில் வண்ணம் இருப்பதைக் கண்டு ஆனந்திக்கிறார்கள்.

பாரதியாரும் நந்த குமாரனைப் பாடி யிருக்கிறார் கண்ணனைக் குழந்தையாக வைத்துப் பாடினார் பெரியாழ்வார். பாரதியார் அதோடு நிற்கவில்லை; தாயாக வைத்துப் பாடினார். பாரதியாருக்குக் கண்ணன் குருவாக இருப்பதோடு சீடனாகவும் வருகிறான். அவனை அரசனென்றும் தந்தையென்றும் பாடினார் பாரதியார். அது புதுமையல்ல. தோழனாகவும் சேவகனாகவும் வைத்துப் பாடியதுதான் புதுமை. கண்ணனைக் காதலனாக வைத்துப் பாடின கவிஞர் பலர். பாரதியார் கண்ணனைக் காதலனாக்கிப் பல காட்சிகளைப் புனைந்து பாடியிருக்கிறார்; அது பெரிய புதுமை அல்ல. கண்ணனையே பெண்ணாக்கி, கண்ணம்மா என்று திருநாமம் சூட்டி அந்த “வாலைக் குமரியை மருவக் காதல் கொண்டு” மிக அற்புதமான பாடல்களைப் பாடி யிருக்கிறார். இது புதுமையிலும் புதுமை.

வர்ணனைகளிலும் உபமானங்களிலும் பாரதியார் புகுத்திய புதுமைகள் பல. கண்ணனது திருமேனியழகை அவர் அநுபவிக்கும் முறையிலே புதுமை இருக்கிறது.

கடலும் மேகமும் காயாம்பூவும் மயிற் கழுத்தும் பார்க் கும்போது நம் கண்ணுக்குக்கூட அழகாகவே தோற்றுகின்றன. கண்ணன் மயில் கழுத்தைப் போன்ற வண்ணத்தா னென்று சொல்லும்போது, பளபளக்கும் அந்த நீல வண்ணம் எல்லா வகையிலும் கண்ணன் எழிலுக்குப் பொருத்தந்தான் என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பாரதியார் கூறும் உவமை ஒன்று சிறிது குழப்பத்தை உண்டாக்குகிறது.

காக்கைச் சிறகினிலே நந்தலாலாஉன்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

என்ற அடிகளிலே கண்ணபிரான் நீலவண்ண மேனிக்குக் காக்கையின் சிறகிலுள்ள கருநிறத்தை ஒப்புக் கூறுகிறார் பாரதியார். புதுமைதான்; பொருத்தமாக இருக்கிறதா? ஏதோ உணர்ச்சியில் பாடிவிட்டார் போலும் என்று முதலில் நினைக்கத் தோன்றுகிறது. “போயும் போயும் காக்கைதானா இவருக்குக் கிடைத்தது?” என்று சொல்லும் நண்பர்களும் இருக்கலாம்.

கவிஞர் பரம்பரையிலே முன்காலத்தில் யாராவது காக்கையைச் சிறப்பித்திருக்கிறார்களா என்று பார்க்கலாம். பலர் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். காக்கை கரைந்தால் யாரேனும் விருந்தினர் வருவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. தன் காதலன் வருவானா என்று ஏங்கி நிற்கும் காதலி, காக்கை கரைந்தது கேட்டு, வந்துவிடுவான் என்று ஆறுதல் பெறுகிறாள். அப்படியே அவன் வருகிறான். அவளுடைய ஆனந்தத்தைச் சொல்ல வேண்டுமா? தன் காதலன் வரவைத் தன்னுடைய ஒலியால் அறிவித்த காக்கையினிடம் அவளுக்கு நன்றியறிவு பொங்குகிறது. “நல்ல சம்பா அரசியால் சமைத்த சாதத்தில் பசு நெய்யை நிறையக் கலந்து பொற்கிண்ணத்தில் வைத்துக் காக்கைக்கு விருந்து செய்யவேண்டும். அது கூடப் போதாது” என்று அவள் பாராட்டுகின்றாள். இதைக் கவியாகச் செய்தவர் நச்செள்ளையார் என்ற பெண் புலவர். இந்தப் பாட்டு நன்றாக இருந்ததனால் அவருக்குக்“காக்கை பாடினியார்” என்னும் பெயரே அமைந்துவிட்டது. காக்கையைப் பாடிய பெண்மணியார் என்பது அப்பெயரின் பொருள்.

அந்தப் பாட்டில் காக்கை கரைந்தது நல்ல நிமித்தமாக இன்பம் விளைந்ததைத்தான் ‘காக்கை பாடினியார்’ சொல்லுகிறார். இந்த நிமித்தத்தைப் பற்றி வேறு புலவர்களும் பாடியிருக்கிறார்கள்.

காக்கை வலமாகப் போனால் நல்ல சகுனம் என்பார்கள். இதையும் புலவர்கள் குறித்ததுண்டு. இன்னும், காலையிலே எழுவதையும், மறைவாகக் காதல் செய்வதையும், மாலையிலே குளித்து மனை புகுவதையும், தன் இனத்தோடு உண்ணுவதையும், உறவாடுவதையும் காக்கையினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு பாட்டுச் சொல்கிறது. தமிழ் இலக்கியங்களில் ‘காகம் உறவு கலந்துண்ணும் ஒற்றுமை வாழ்வை’ உயர்வாகப் பாராட்டிப் பேசும் இடங்கள் பல.

இவ்வளவும் காக்கையின் தொழிலைப் பாராட்டுவன. அதன் நிறத்தைக் கண்டு களித்தவர்களோ, கண்ணன் வண்ணத்துக்கு உவமை கூறியவர்களோ இல்லை. பாரதியார் கண்ணுக்கோ காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கரிய நிறம் தோன்றுகிறது.

இறைவன் படைத்த இயற்கை முழுவதும் எழில் மயம் மகோன்னதமான மலைகளிலே பேரழகு ததும்பு கின்றதென்றால், சின்னஞ்சிறு கூழாங்கல்லிலும் அழகு உண்டு. சூரியனை நோக்கி மலரும் செந்தாமரை மலரிலே அழகு மலர்கின்றதென்று கவிஞன் சொல்லும்போது அது முக்காலும் உண்மையென்று ஆமோதிக்கிறோம். ஆனால் அதே சூரியனை நோக்கி மலரும் நெருஞ்சி மலரிலும் எழிலுண்டு என்பதைக் கவிஞன் சொல்லத்தான் நாம் அறிகிறோம். காயாம்பூவின் நீல வண்ணம் கண்ணனுக்கு உவமையாவது பொருத்தம் என்று தோற்றும்

நம் உணர்வில் காக்கையின் சிறகு நிறம் மதிப்பை உண்டாக்குவதில்லை. காரணம் என்ன? கவிஞன் கண்ணுக்கு- பாரதியின் கண்ணுக்கு – மாத்திரம் அது கவர்ச்சியுடையதாக இருக்கும் ரகசியம் என்ன?

நாம் காக்கையைப் பார்க்கும்போது வேண்டாத ஒன்றை நினைக்கிறோம். வேண்டிய ஒன்றை மறந்துவிடுகிறோம். விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையிலிருந்து பார்க்கும் பார்வை நமக்கு இல்லாமற் போய்விட்டது. ஞானிக்கும் கவிஞனுக்கும் அந்தப் பார்வை இருக்கிறது. சமதரிசனம் ஞானிக்கு மாத்திரம் உரிய சொத்தல்ல: கவிஞனுக்கும் அந்தப் பார்வை உண்டு. காக்கையைக் காணும் போது நமக்கு ஓரளவு அருவருப்பு உண்டாகிறது: அதன் உருவத்தை மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது வேறு நினைவுகளால் அருவருப்புத் தோன்றாவிட்டாலும் கூர்ந்து பார்த்தால் நமக்குக் கவர்ச்சியே ஏற்படுவதில்லை. அதன் சிறகைத் தனியே பார்க்கப் பொறுமை ஏது? பார்த்தாலும் அதன் கருமையில் நம் உள்ளம் செல்ல நியாயமே இல்லை.

காக்கையை நினைக்கும்போது அருவருப்பு வரக் காரணம், அது தோட்டி வேலை செய்கிறதென்ற ஞாபகம் நம் உள்ளத்தின் அடித்தளத்திலே இருப்பதுதான். போதாக்குறைக்கு அதை மூதேவியின் துவஜமென்றும், சனி பகவானது வாகனமென்றும் சொல்லியிருக்கிறார்கள். “சே! என்ன பறவை இது? அழகிய மயிலும், இன்னிசைக் குயிலும், வானின் உயரத்தை அளக்கும் பருந்தும், ஒய்யாரமாக நடக்கும் புறாவும் அழகுப் பிழம்புகளாக உலவும் பறவைக் கூட்டத்திலே இந்தக் காக்கை ஏன் பிறந்தது?” என்று சொல்லாமற் சொல்கிறோம். நம் முடைய அன்பைக் காட்டக் குழந்தைகளையும் காதலி மார்களையும் மயிலே என்கிறோம்: குயிலே என்கிறோம்; மாடப்புறாவே என்று அழைக்கிறோம். காகமேஎன்று சொல்வதில்லை. சொல்வதா! சொல்லித் தப்ப முடியுமா, என்ன?

காக்கையினிடம் நமக்கு மதிப்பு வரவேண்டுமானால் தோட்டி வேலையிலும் மதிப்பு ஏற்படவேண்டும். உண்மை யுணர்வு உடையவர்களுக்குத் தோட்டியும் தொண்டை மானும் கடவுளின் குழந்தைகள். சுத்தத்தையே விரும்பும் மனித சமூகத்துக்கு அசுத்தத்தைப் போக்கும் தொண்டர்கள் வேண்டும். அவர்களே சுத்தத்தின் பாதுகாவலர்கள். வைத்தியன் சுகத்தைப் பாதுகாக்க வந்தவன். அது நமக்குத் தெரிவதில்லை. அவன் மருந்து கொடுக்க வந்தவனென்று எண்ணுகிறோம். தோட்டி வேலை அசுத்தத்தைப் போக்கிச் சுத்தத்தைப் பாதுகாக்கும் தொண்டு. இதைக் காந்தி யுகத்தில் பிறந்தவர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“குழந்தையின் அசுத்தத்தை அரு வருப்பில்லாமல் நீக்கிப் பாதுகாக்கும் தாயைப் போல, தோட்டிகள் சமுதாயத்தின் அசுத்தத்தைப் போக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகையால் குடும்பத்தில் தாய்க்கு உள்ள ஸ்தானம் சமுதாயத்தில் தோட்டிகளாகிய பங்கிகளுக்கு இருக்கவேண்டும். நான் ஒரு பங்கி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு ஆனந்தம் உண்டாகிறது என்று காந்தியடிகள் கூறியதை நாம் கேட்டிருக்கிறோம். இயற்கையிலேயே தோட்டியாக அமைந்த காக்கையைப் போற்ற இந்த உபதேசம் வழி காட்டுகிறதே! தோட்டி செய்யும் தொண்டிலே உயர்வு காணும் மகாத்மாவும், காக்கையினிடம் காதல் கொள்ளும் கவிஞனும் ஒரே உள்ளம் படைத்தவர்கள். இருவர் உள்ளங்களிலும் உண்மை ஒளி உதயமாகியிருக்கிறது.

காக்கையின் தொழிலை அருவருக்காமல் போற்றும் நெறி இது. அடுத்தபடியாக, அதன் குரலை மதிக்க அதிக முயற்சி செய்ய வேண்டியதில்லை. பிள்ளையை எதிர்பார்க்கும் எத்தனையோ தாய்மார்களுக்கு அதன் ஒலி இன்னமுதாகப் பயன்படுகிறது. இதை நாம் நினைப்பதில்லை. நினைத்தால் காக்கையின் ஒலியிலும் இனிமை காணலாம்.

அதன் கருமை? காக்கைச் சிறகின் கரு நிறத்திலே கவர்ச்சியை எப்படிக் கற்பனை செய்கிறது? – உண்மையிலே நாம் கற்பனை செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதிலே கவர்ச்சி இயல்பாகவே இருக்கிறது. அதைக் காணக் கண் நமக்கு இல்லை. காக்கையைப் பார்க்கையில் நமக்கு அசுத்தமே நினைவுக்கு வருகின்றது. இந்த நினைப்பை மறந்து விட வேண்டும். காக்கையைப் பார்க்கும் போது காக்கையையே பார்க்கவேண்டும். காக்கைச் சிறகிலே கடலின் நிறத்தைக் கொணரக் கூடாது. காக்கைச் சிறகின் கரு நிறத்தில் காயாம்பூவின் நிறம் இல்லையே என்று பார்க்கக் கூடாது. காக்கைச் சிறகுக் கருமையிலே காயாம்பூ இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காயாம் பூவின் கரு நிறத்திலே காக்கைச் சிறகும் இல்லை என்பது. காயாம் பூவைக் காணும் கண் குளிர்கிற தென்றால் காக்கைச் சிறகைக் காணும் கண்ணும் குளிர வகையுண்டு. எந்தக் கை வானப் பரப்பிலே விதானமாகப் போர்த்துப் பந்தரிடும் மேகத்தில் கருவண்ணத்தைப் பெய்ததோ, எந்தக் கரம் கடற்பரப்பிலே நீல நிறத்தை நிரப்பியதோ. எந்த எழிற்கரம் காயாம் பூவின் எழிலிலே கரு நிறத்தைத் தீட்டியதோ, எந்தத் தெய்வத் திருக்கை மயிற்கழுத்திலே ஒளிதிகழும் நீலத்தை இழைத்ததோ. அதே கை, அதே தெய்வத் திருகரம், காக்கையின் சிறகிலே கருநிறத்தைப் பூசிக் கோலம் செய்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிட்டோம். எழிலே பிழம்பாகிய அகண்டத்தில் காக்கை இல்லாவிட்டால் அகண்டமென்ற லக்ஷணம் இல்லை. கருமை என்ற சமஷ்டியிலே காக்கையின் கரு நிறம் இல்லாவிட்டால் இயற்கைத் தேவியின் கரு வண்ணம் ஒரு பக்கம் சொட்டையாக நிற்கும். கண்ணன் கருங் கடற்பரப்பிலே தோன்றுகிறான் என் பது உண்மையானால், அந்தக் கண்களுக்கு அதே கண்ணன் காக்கையின் கரு நிறத்திலும் தோன்ற வேண்டும். அப்படிக் காணும் பார்வைதான்

பார்வைதான் கவிஞனுடைய சமதரிசனம். பாரதியார் இந்தக் கண் படைத்தவர். குழந்தையைப் பார்த்து,

எத்தித் திரியுமந்தக் காக்காய் அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா

என்று சொல்லி மனித சமுதாயத்தின் முளையிலே அமுது பெய்கிறார்.

காக்கை குருவிஎங்கள் சாதிநீள்
கடலும் மலையும்எங்கள் கூட்டம்

என்று உலகப் பரப்பு அனைத்தும் கேட்க ஜயபேரிகை கொட்டுகிறார். அவருக்குத்தான் காக்கையின் பெருமை தெரியும்: அதன் கருமையிலே கண்ணன் காட்சி அளிப்பான்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரியநிறம் தோன் றுதையே நந்தலாலா!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !