இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

பாட்டியும் பாரதியும்

தமிழ்நாட்டு மக்களுக்கு, பள்ளிக்கூடத்தில் சில வகுப்புக்களாவது படித்தவர்களுக்கு, ‘ஆத்திசூடி’ தெரியாமல் இருக்க நியாயம் இல்லை. ஔவைப்பாட்டி குழந்தைகளுக்கென்றே ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்ற நீதி நூல்களைச் சின்னஞ் சிறு வாக்கியங்களால் இயற்றி யிருக்கிறாள். அந்த இரண்டு நூல்களும் குழந் தைக்கு அ, ஆ என்ற எழுத்து வரிசையைக்கூட ஞாபக மூட்டுகின்றன.

பாட்டி ஆத்திசூடியில் கடவுள் வணக்கம் சொல்லி விட்டு உபதேசத்தை ஆரம்பிக்கிறாள்.

அறம்செய விரும்பு
ஆறுவது சினம்.

இந்த ஆரம்பம் பழைய காலத்துக்கு ஏற்றதாக இருந்தது. பாடினவள் பெரிய ஞானியாகிய பாட்டி; அவள், “தர்மம் செய்ய விரும்பு”, “கோபம் கொள்ளாதே அப்பா” என்று சொல்வது இயல்புதான். அதைப் பாரதியார் பார்த்தார். அவர் தர்மத்தை வெறுப்பவரல்ல; சாந்தத்தைப் பகைப்பவரும் அல்ல. “தமிழ்நாட்டில் சோற்றுக்கே தாளம் போடும் மனிதர்கள் நிரம்பிய இந்தக் காலத்தில் தர்மம் செய் என்று சொல்லவேண்டியது அவசியந்தானா? எத்தனை தர்ம சத்திரங்கள் சோம்பேறிச் சாவடிகளாய், வஞ்சகர்களின் வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் பண்ணைகளாய் இருக்கின்றன! ஆறுவது சினம் என்று சொல்லிச் சொல்லித் தமிழ்ச் சாதியே தன் பண்டை வீரத்தை மறந்து குனிந்து குனிந்து கோழையாய்ப் போய்விட்டதே! கைகட்டிச் சேவகம் செய்வதையே வாழ்க்கையின் உச்ச சிகரம் என்று எண்ணிப் பொன் விலங்கு பூட்டிக்கொள்ளும் நிலை வந்ததே! எதைக் கண்டாலும் பயந்து நடுநடுங்கி மணிக்கு ஆயிரந்தடவை செத்துச் செத்துப் பிறக்கிறான் தமிழன். அவனுக்குச் சண்டை போடவும், வெறிமூளவும், மான உணர்ச்சி மலியவும் அல்லவா உபதேசம் செய்யவேண்டும்?” என்று அவர் யோசித்தார். உலகத்தைத் தம்முடைய பாட்டுத் திறத்தாலே பாலிக்க வந்தவர் அவர். வெறும் இலக்கிய இன்பத்துக்காக மட்டும் அவர் கவிதை செய்யவில்லை. முதுகு கோணிய சமுதாயத்தை நிமிரவைத்து, அவர் பேடித்தனத்தை எடுத்துக் காட்டிக் காறி உமிழ்ந்து வெறிமூட்ட வந்தவர் அவர். எனவே, அவர் ஒரு புதிய ஆத்திசூடியை இயற்றத் தொடங்கினார். குழந்தைகளின் நெஞ்சிலே, அந்தக் காலத்துக் கோழைப் புழுக் கூட்டில் நெளிந்து கிடக்கும் சின்னஞ் சிறு குழந்தைகளின் பிஞ்சு மனத்திலே தர்மத்தையும் சாந்தத்தையும் புகட்டி அதை வெம்பிப் போகும்படி செய்வது மகா பாவம் என்று நினைத்தாரோ என்னவோ! அச்சத்தை உதறித் தள்ளும்படி உபதேசிப்பதுதான் உயர்ந்த உபதேசமென்ற எண்ணத்தோடு ஆரம்பிக்கிறார். மளமள வென்று வருகின்றன, கனலைக் கக்கும் வாக்கியங்கள்.

அச்சந் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.

பழமையை அடியோடு மறந்துவிடமாட்டார் பாரதியார். அடுத்தபடி,

ஈகை திறன்

என்று பாடுகிறார்.

பாட்டி சொன்ன வாக்குகளுக்கு நேர்மாறாகச் சில இடங்களில் அவர் பாடியிருக்கிறார்.

பாட்டி ‘மீதூண் விரும்பேல்’ என்று சொன்னாள். அது உணவு மலிந்த காலம். ஒரு மனிதன் உண்பது நாழி என்று அந்தப் பாட்டியே அளவெடுத்திருக்கிறாள். இப்பொழுதோ ரேஷன் அதிகாரி ஒன்றேகால் ஆழாக்கு என்று அள வெடுத்திருக்கிறான். அதிலும் மிச்சம் வைக்கும் பிராணிகளே அதிகம். ஆகையால் பாரதியார் பாட்டியின் வாக்கை மாற்றினார்.

ஊண்மிக விரும்பு

என்று நேர்மாறான சட்டம் போட்டார்: “செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்” என்று பாட்டி கொன்றை வேந்தனில் சொல்லியிருக்கிறாள். பாரதியோ, “இதென்னடா பைத்தியக்காரத்தனம்! சம்பாதிக்கிற மனிதன் ஒருவன் அவனைச் சுற்றிச் சீலைப் பேனைப் போல நூறு பேர். சம்பாதிக்கிறவன் நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைக்கிறான். இவர்கள் முயற்சியையே மறந்து சுத்தச் சோம்பேறித் திருக்கூட்டத்தாராக மாறி விடுகிறார்கள்! இப்படி இருந்தால் சமுதாயம் உருப்படுமா?” என்று எண்ணினார். இந்தக் காலத்திற்கு ஏற்றபடி,

கிளை பல தாங்கேல்

என்று புதிய ஆத்திசூடியில் விதித்தார்.

சத்துவ குணம் பயிலவேண்டுமென்பது பழங்கால உபதேசம். பாரதியார் உபதேசமோ,

ராஜஸம் பயில்
நையப் புடை
ரௌத்திரம் பழகு

என்று வருகிறது.

‘கூரம்பு ஆயினும் வீரம் பேசேல்’ என்று பாட்டி சொன்னாள். பாரதியாகிய பேரர் என்ன சொல்கிறார்?

வெடிப்புறப் பேசு

என்கிறார். ஆம்! வெடிப்புறப் பேசும்படி அவர் மற்றவர் களுக்கு மாத்திரம் உபதேசம் செய்யவில்லை. அவர் பேச்சு, கவிதை, நடை எல்லாம் வெடிப்பாகத்தான் இருக்கும்.

அடிமைத் தன்மையைப் போக்கி வாழ்வோம் என்று சொல்கிறார் பாரதியார். அவர் வாக்கில் வெடிப்பாக வருகிறது கருத்து:

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி.

ஒரு விஷயத்தை இகழும்போது அந்த இகழ்ச்சி வார்த்தையின் வேகத்தால் அழுத்தமாகப் படும்படி பாரதியார் பாடுகிறார்; வெடிப்புறப் பேசுகிறார். பெண்களை இழிவு செய்யும் வழக்கத்தைப் போக்குவோம் என்பதை அவர் சொல்லும் முறையே வேறு.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!

‘கொளுத்துவோம்’ என்ற சொல்லில் அவர் கோபம் கொளுந்துகிறது.

தனியொருவனுக்கு உணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

என்ற அடியில் வார்த்தைகளும் ஓசையும் ரௌத்திரம் பழகுகின்றன என்பதைக் காதுகளே சொல்லுமே. “கொளுத்து, பொசுக்கு, மிதி, காறிஉமிழ்” என்ற வார்த்தைகள் உள்ளக் கொதிப்பினால் வருபவை. இவற்றைப் பாரதியார் உணர்ச்சியோடு சொல்லுகிறாரென்பதைவிட வார்த்தைகளாலே ‘நையப் புடைத்துவிடு’கிறாரென்றே சொல்லலாம்.

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

என்ற பாட்டிலும்,

போலிச் சுவடியை யெல்லாம் இன்று
பொசுக்கிவிட் டாலெவர்க்கும்
நன்மையுண் டென்பான்

என்ற கண்ணன் பாட்டிலும் ஆத்திரம் என்ற அரூபமான உணர்ச்சிக்கு வார்த்தைகளாலே உருவத்தை வகுத்து விட்டாரே!

தெய்வக் குழந்தையாகிய கண்ணன் பாரதியாரின் தோழன். அவன்,

கள்ளத்தைக் கொண்டொரு
வார்த்தைசொன் னாலங்குக்
காறி உமிழ்ந்திடுவான்.

வஞ்சகத்தின் மேல் அத்தனை க்ஷாத்திரம்!

பாதகம் செய்பவரைக் கண்டால், நம்முடைய பலவீனத்தால் பயந்துவிடலாமா? மானிடக் குழந்தைக் குப் பாரதியார் செய்யும் உபதேசம் இதுதான்:

பாதகம் செய்பவரைக் கண்டால்நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

பின் இரண்டடிகளும் குழந்தையைச் சிங்கக் குட்டி யாக்கும் வீரச் சொற்கள் அல்லவா?

கெட்டதைக் கண்டால் காறி உமிழ்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். கோழைகளுக்கு அந்தத் தைரியம் வராது. ஆகையால் புதுமைக் கவிச் சிங்கம் இப்படியெல்லாம் கர்ஜிக்கிறது. அதன் தொனியிலேயே வீரம் பொங்குகிறது. பயம் பயந்து ஓடி ஒளித்துக்கொள்கிறது. ஆம்! “பயமென்னும் பேய்தன்னை அடித்தோம்” என்று பாடும்போது அது ஓடாமல் என்ன செய்யும்? வார்த்தைகள் கனல் கக்கும் மாய மந்திரத்தைப் பாரதியார் செய்திருக்கிறார். .

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !