இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

‘பகைவனுக்கு அருள்வாய்’

பாரதியாரின் கவித்துவத்தைப் பற்றியும் தேசபக்தியைப் பற்றியும் நாம் எவ்வளவோ பேசிக்கொண்டு வருகிறோம். அவருடைய ஆத்ம குணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். கவிஞர்களுடைய உள்ளம் அவர்கள் பாடிய கவிதையிலே மலர்ந்திருக்கும். பாரதியார் தம்முடைய வாழ்க்கையில் ஒழுங்கும், பொறுமையும், நைச்சியமும் இல்லாதவர் என்றுதான் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆயினும் அவருடைய உள்ளம் கவிதா சிகரத்தை எட்டிப் பிடிக்கும் உன்னதம் வாய்ந்ததாக இருந்தது. முன்கோபம் உள்ளவராக இருந்தாலும் அவர் உள்ளம் குழந்தைத் தன்மை உடையது. தமக்கு எத்தனை துன்பம் வந்தாலும் அஞ்சாமல் தைரியத்தோடு பிறருக்கு உதவும் அன்பு அவர் உள்ளத்தில் ஊற்றெடுத் தது. பகையுணர்ச்சி யென்பது அவரிடம் மேற்பரப்பிலே தோன்றியதே யொழிய உள்ளத்தின் ஆழத்தில் இருக்க வில்லை.

கவிஞர்களும் வேதாந்திகளும் அநேகமாக ஒத்தகுண முடையவர்கள். அதுவும் வாழ்க்கையைப் பண்படுத்த உதவுவதுதான் கலை என்று திட்டமாக வகுத்துக் கொண்ட இந்தப் பாரத தேசத்தில், வேதாந்திகள் எதைச் சொன்னார்களோ, அதையே கவிஞர்கள் இன்னும் நயமாகச் சொன்னார்கள்.

மெய்ஞ்ஞானிக்குப் பகையும் நட்பும் இல்லை. எல்லோரையும் சமமாகப் பார்க்கும் திறம் அவன்பால் இருக்கும். இந்த நிலை எல்லா மனிதரிடமும் இருக்க வேண்டுமென்பதே லட்சியவாதிகளின் கொள்கை.

திருவள்ளுவர் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வழியைச் சொல்பவர். அவர் பகைவர்கள்பால் விரோதம் கொள்ளாமல் இருக்கத் தந்திரம் சொல்கிறார். ஒருவன் நமக்கு எத்தனையோ அபகாரங்கள் செய்தாலும் அவற்றை யெல்லாம் மறந்துவிடவேண்டும். எப்படி மறப்பது? அவன் செய்த உபகாரம் ஒன்றை ஆழ்ந்து சிந்தியுங்கள்; அப்போது அந்த அபகார நினைவுகள் மறைந்துவிடும். கொன்றதற்குச் சமானமான தீங்காக இருந்தாலும் அதனை மறந்துவிட இதுதான் வழி.இவ்வாறு வள்ளுவர் சொல்கிறார்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

ஏசு கிறிஸ்து இந்த ஒழுக்கத்தை வற்புறுத்திப் பேசுகிறார். “நமக்கு ஒருவன் செய்த குற்றத்தை மறந்து மன்னிக்கத் தெரிந்தால்தான், நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு இறைவனிடமிருந்து கிடைக்கும்” என்று சொல்கிறார். “நல்லதாக இருப்பதை ஆயுள் முழுவதும் மறக்காதே. தீங்காக இருந்தால் அப்பொழுதே மறந்து விடு” என்பது வள்ளுவர் உபதேசம்.

தீங்கு செய்பவனைப் பகைக்காமல் இருப்பது ஒரு நிலை. அதற்குமேல் ஒரு நிலை உண்டு. அது அவனையும் நட்பாளனாகப் பாவித்து வாழ்வது. ஏசு நாதர், “ஒரு கன்னத்தில் ஒருவன் அடித்தால் அவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு” என்று சொல்கிறார். திருவள்ளுவரோ, “நமக்குத் துன்பம் உண்டாக்குகிற மனிதனைத் தண்டிக்கத்தான் வேண்டும். அவனும் திருந்த வேண்டும்” என்று சொல்பவரைப் போல ஆரம்பிக்கிறார். குற்றம் செய்தவனைத் தக்கபடி தண்டிக்க வேண்டும் என்ற ஆத்திரந்தான் இயற்கையாக மனிதருக்கு உண்டாகும். இந்த ஆத்திரக்காரருக்கு அவர் போக்கிலே உபதேசம் செய்பவரைப் போல, ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல்’ என்று ஆரம்பிக்கிறார். “நல்ல வேளை! வள்ளுவரும் நம்முடைய கட்சிக்கு வந்துவிட்டார். தீமை செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அவருக்கு இருக்கிறது போலும்!” என்று முதலில் தோன்றுகிறது. ஆனால் அடுத்தாற்போல் ஏமாற்றி விடுகிறார். “அந்த மனிதனுக்கு நன்மை செய்துவிடு. அப்போது அவன் நாணமடைந்து குன்றிப்போய், ‘இவ்வளவு நல்லவருக்கு நாம் ஏன் தீமை விளைத்தோம்!’ என்று மனம் குலைவான். அதுவே போதும் அவனுக்குத் தண்டனை’ என்று சொல்கிறார்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

நம்முடைய தனிப்பெருந் தலைவராக விளங்கிய மகாத்மா காந்தியடிகளும் இந்த உயர்ந்த பக்குவத்தைப் பலமுறை பலவகையாக வற்புறுத்தியிருக்கிறார்.

வேதாந்தியும் கவிஞருமாகிய பாரதியாரும் இத்தகைய கொள்கையில் ஊறியவர். அவர் பகைவனை வாழ்த்த வேண்டுமென்று சொல்கிறார். “நெஞ்சமே, பகைவனிடத்திலே நீ கருணை கொள். தின்ன வருகின்ற புலியானாலும் அதனை அன்போடு போற்றுவாயாக” என்று பாடுகிறார்.

பகைவ னுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவ னுக்கருள் வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமேநன்னெஞ்சே
பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்.
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்.

கவிதையில் இந்தக் கருத்தை வெளியிட்டதன்றி, வேறொரு சமயத்திலும் அவர் உள்ளம் வெளியாயிற்று,

1906-ஆம் வருஷம் நடந்த நிகழ்ச்சி அது. இந்தியர்களின் வெறுப்புக்குப் பாத்திரரான லார்டு கர்ஸன் இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக ஆட்சி நடத்தி வந்தார். இந்தியர்களின் ஒழுக்கத்தைப் பற்றி இழிவாகப் பேசியவர் அவர்.

லார்டு கர்ஸனுடைய மனைவி 1906-ஆம் வருஷம் ஜூலை மாதம் இறந்துவிட்டாள். வங்காளத்தில் வெளி யாகும் ஆங்கில தேசீயப் பத்திரிகையான அமிருதபஜார் பத்திரிகையில் அந்த மரணத்தைப் பற்றிய குறிப்பொன்று வெளியாயிற்று. ‘கர்ஸன் இந்தியருக்குச் செய்த தீமைக்குரிய தண்டனையைக் கடவுள் கைமேல் அளித்துவிட்டார். இளம்பிராயத்திலேயே அழகிய மனைவியை இழக்கும் துர்ப்பாக்கியம் அவருக்கு நேர்ந்தது’ என்னும் பொருள் பட அக்குறிப்பு இருந்தது.

பாரதியார் கண்ணில் அது தென்பட்டது. அவர் கர்ஸனுடைய வாய்த் துடுக்கைக் கண்டித்தவரே. ஆனாலும் அக்குறிப்பு அவர் கண்ணையும் கருத்தையும் உறுத்திற்று. அமிருதபஜார் பத்திரிகையின் துணிவையும் தேச பக்தியையும் இயல்பாகவே பாராட்டும் இயல்புடைய பாரதியார் இந்த விஷயத்தில் அதன் போக்கை விரும்ப வில்லை. “பகைவனுக் கருள்வாய்” என்று பிறகு பாடுவதற்கு ஏற்றபடி பண்பட்டு வரும் உள்ளம் அல்லவா? உடனே தாம் நடத்தி வந்த “இந்தியாவில் ஒரு குறிப்பை எழுதினார்.

“தேசாபிமானத்திற்கும் நல்லறிவுக்கும் பெயர் படைத்ததாகிய கல்கத்தா ‘அழிருதபஜார்’ பத்திரிகையைப் பற்றிக் கண்டனை வார்த்தை எழுதும்படி நேர்ந்து விட்டதே யென்று வருத்தமடைகிறோம். ஆனால் கூடப் பிறந்த சகோதரனாயிருந்த போதிலும் அவனுடைய குணங்களை மறைத்து வைப்பது அழகாக மாட்டா தல்லவா? ஆதலால் எத்தனையோ மதிப்புக்கிடமாகிய ‘அமிருதபஜார் பத்திரிகை’ கூட ஒரு பிழை செய்யும் பக்ஷத்தில் அதை எடுத்துக் காட்டுவது நமது கடமையாகின்றது. லேடி கர்ஸன் சென்ற வாரம் இறந்து போய் விட்டதைப்பற்றி இப்பத்திரிகை எழுதி வரும்போது, இந்தியர்களை லார்டு கர்ஸன் கஷ்டப்படுத்தியதன் பொருட்டாக அவருக்கு இவ்வளவு பாலியத்தில் சிறந்த மனைவி இறந்து போய்விட்டது சரியான தெய்வ தண்டனை யென்று கூறுகிறது. இது சிறிதேனும் கௌரவமற்ற மனிதர்கள் பேசும் மாதிரியாக இருக்கிறதல்லவா? நமது பரம சத்துருவாக இருந்தபோதிலும், அவனுக்கு மனைவி யிறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும்போது நாம் அவன் செய்த தீமைகளை எடுத்துக் காட்டிச் சந்தோஷம் அடை வது பேடித்தனமான செய்கை.

லார்டு கர்ஸன் நமக்குச் செய்த தீமைகளின் பொருட்டு அவரை வேண்டிய மட்டும் கண்டனை புரியலாம். அவரைத் தகுந்தபடி சிக்ஷை புரியாமல், நம்மை இமிசித்ததன் பொருட்டு மரியாதை செய்யும் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டாரைக் கண்டனை செய்து பேசலாம். அதை விட்டு ‘ஏ, ஏ, லார்டு கர்ஸன், நீ என்னைத் தொந்தரை செய்தாயல்லவா? அதற்காகத்தான் உன் மனைவி செத்துப் போனாள்!’ என்று குழந்தைத்தனமாக அமிருத பஜார் பத்திரிகை பேசுவது அதன் பெருமைக்கு முற்றும் விரோதமாகும். உண்மையான ஆசிரியன் தனது விரோதிகளுக்குக்கூடத் துக்கம் ஏற்பட்ட சமயத் தில் இரக்கமடைவானேயன்றிச் சந்தோஷமடைய மாட்டான்.”

இந்தக் காலத்து ஆசிரியர்களுக்கும் இந்த உபதேசம் பயன்படும் அல்லவா?

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !