
இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்
“அவள்'”
தன் ஆருயிர்த் தமையனைத் தேடிக்கொண்டு தமரோடும் படையோடும் புறப்பட்ட பரதன் கங்கைக் கரையில் உள்ளந் தூயவனாகிய குகனைச் சந்திக்கின்றான். ராமன் மேல் நிமிர்ந்த காதலுடைய அவ் விருவருடைய சந்திப்பைக் கூறும் குகப்படலம் உணர்ச்சி ததும்பும் அழகிய சித்திரம். உள்ளம் உருக்கும் பல அருமையான கவிகளை அப்படலத்திலே காணலாம். குகனுடைய உணர்ச்சி மிக்க காதலும்,பரத னுடைய ஆழ்ந்தடங்கிய பேரன்பும் அப்படலத்தில் யமுனையும் கங்கையும்போலப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கம்பருடைய வாக்கிலே ஒரு தனியான அழகும் ஆற்றலும் பொலிகின்றன. கம்பர், பாத்திரங் களின் கூற்றாகப் பல செய்திகளை அமைப்பதோடு, பரதனைப் புகழ்ந்தும் கைகேயியை இகழ்ந்தும் சில பகுதிகளைத் தம் கூற்றாகவே அமைத்திருக்கிறார்.
பரதன், ராமபிரான் எங்கே படுத்திருந்தான் என்பதைக் கேட்கிறான். குகன் அவ்விடத்தைக் காட்டுகிறான். தருப்பைப் புல் மெத்தையில் கல்லைத் தலையணையாக வைத்து வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளியைக் கண்டு பரதன் துக்கக் கடலில் முழுகி முழுகி எழுகிறான். பிறகு லக்ஷ்மணன் எங்கே படுத்திருந்தான் என்று வினாவிய பொழுது, குகன் சொல்கிறான் :
அல்லைஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச
வில்லைஊன் றியகை யோடும்
வெய்துயிர்ப் போடும் வீரன்,
கல்லைஆண்டு உயர்ந்த தோளாய்,
கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லைகாண் பளவும் நின்றான்;
இமைப்பிலன் நயனம் என்றான்.
ராமபிரானும் சீதா பிராட்டியும் துயிலும் பொழுது, லக்ஷ்மணன் தூங்காமல் விடிய விடிய நின்று கொண்டிருந்தானாம். வில்லை ஊன்றிப் பிடித்த கை, இடையிடையே பெருமூச்சு – இந்த நிலையில் அந்த வீரன் நின்று கொண்டிருந்தான். கண்கள் தாரை தாரையாக நீர் சொரிய, இரவு முழுதும் இமை கொட்டாமல் நின்று கொண்டிருந்தானென்று குகன் சொல்கிறான். இரவு முழுவதும் இமைகொட்டாமல் ராம பிரானையும் சீதையையும் பாதுகாத்துக்கொண்டு லக்ஷ்மணன் தூங்காமல் இருந்தானென்று சொல்லும் குகன் என்ன செய்தான்? யாவரையும் பாதுகாத்துக் கொண்டு அவனும் தூங்கவில்லை.
மேலே சொன்ன பாட்டில் ‘ராமபிரானும் சீதா பிராட்டியும் துயிலும்போது’ என்ற பொருளைத் தருவது,
அல்லைஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச
என்ற முதல் அடி. ‘இருளை ஆட்சி கொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழ குடையவனாகிய ராமபிரானும் அவளும் துயிலும் போது’ என்பது தன் பொருள். ராமபிரானை,
‘அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகன்’ என்று ஐந்து சொற்களால் வருணித்த கவிஞர், பிராட்டியை ‘அவள்’ என்ற சுட்டுப் பெயராலே குறித்துச் செல்கின்றார். இது நியாயமா? காவிய நாயகனுடைய பெருமைகளுக்குக் குறைவில்லாத சிறப்பைப் பெற்ற காவிய நாயகியை இப்படிச் சொல்லி விட்டுவிடுதல் காவிய கதிக்கு இழுக்கல்லவா? அழகி என்று கூடச் சொல்லவில்லையே!- இப்படி முதலில் தோன்றுகிறது நமக்கு.
இந்தப் பாட்டு, கவியின் கூற்றாக அமைந்தது அல்ல; குகனுடைய வார்த்தையாக வருகிறது. சிறந்த நாடகக் கவிஞராகிய கம்பர் கதா பாத்திரங்களின் கூற்றுக்களில் அவர்களுடைய உள்ளத்தை வெளிப்படுத்திச் சிறந்த உயிரோவியங்களைச் சிருஷ்டிப்பதில் இணையற்றவர். ஒரே நிகழ்ச்சி நிகழும்போது, தத்தம் குண வேறுபாடுகளாலே வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளியிடும் முரண்பட்ட பாத்திரங்களை ராமாயணத்தில் நாம் காணுகிறோம். கவிஞர் அவ்வளவு பாத்திரங்களின் குணங்களையும் ஒன்றனோடு ஒன்று கலக்காமல், தத்தம் சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் சொல்லும் செயலும் நிகழுமாறு கதைப் போக்கில் அமைத்துக் காட்டுகிறார்.
இந்த ரீதியில் குகனுடைய கூற்றாகிய இதில் அவனது தூய உள்ளம் குறிப்பாகத் தெரியும்படி கம்பர் அமைத்திருக்கிறார்.
குகன் நாவாய் வேட்டுவனானாலும், காட்டில் வாழும் வாழ்க்கையை .. உடையவனேயானாலும், உள்ளத்தால் அவன் தூயவன். அவனுடைய உள்ளச் சிறப்பையும் அன்பையும் நன்குணர்ந்தே ராமபிரான் அவனைத் தோழனாகக் கொண்டான்; இயல்பாகத் தன்னுடன் பிறந்த சகோதரர்களோடு மற்றொரு சகோதரனாக ஏற்றுக் கொண்டான். அதற்குரிய தகுதி குகனிடத்தில் உண்டென்பதே ராமனது எண்ணம்.
சிறிது கதையைப் பின்னாலே புரட்டிப் பார்க்கலாம். ராமனும், லக்ஷ்மணனும் சீதையைப் பறிகொடுத்து விட்டுத் துயர்க்கடலில் ஆழ்ந்து காட்டில் நடந்து செல்கிறார்கள். கிஷ்கிந்தைக்கு வந்தபோது அநுமான் எதிர்ப்படுகிறான். சீதா பிராட்டி ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபொழுது தன் அணிகளைக் கழற்றி முடிந்து தான் சென்ற வழியின் அடையாளம் தெரிய வேண்டிக் கீழே போட்டாள். அந்த முடிச்சுகளை யெல்லாம் கிஷ்கிந்தைவாசிகளாகிய குரங்குகள் பொறுக்கி எடுத்து அநுமனிடம் தந்தன. அநுமன் ராமபிரானைக் கண்டு பேசி அவனது நிலையை உணர்ந்தான். ராமன், “யார் கொலோஇச் சொல்லின் செல்வது?” என்று மிகவும் வியப்படைந்தான். இருவரும் பழக்கம் செய்துகொண்ட பிறகு சீதாதேவியின் அணிகளை அநுமன் ராமனுக்கு முன்னர் எடுத்துவைக்க, அவற்றைக் கண்ட அவன் மிகவும் வருத்தமுறுகிறான். தன் கண்ணீரினால் அவற்றைக் கழுவிச் சீதாபிராட்டியையே கண்டது போன்ற உணர்ச்சியில் பலவாறு புலம்புகிறான்.
இந்தக் கட்டத்தில் வால்மீகி ஒன்று சொல்கிறார். அணிகலன்களைக் கண்ட ராமன் ஒருவாறு ஆறுதல் பெற்று அவற்றைத் தன் இளையவனுக்குக் காட்டி, “தம்பி, பார்த்தாயா? உன் மதனியின் ஆபரணங்கள் அல்லவா? தெரிகிறதா?” என்று கேட்கிறான். லக்ஷ்மணன், அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து விலக்கிக் கொண்டு வந்தவன், சீறடிச் சிலம்பினைக் கண்டதும், “அண்ணா, இது பிராட்டியின் அணிகலம் என்பது நிச்சயம்” என்றானாம். அன்னையென எண்ணித் தொண்டாற்றும் தூய உள்ளம் படைத்தவனானாலும், லக்ஷ்மணன் பிராட்டியை நிமிர்ந்து பார்த்ததில்லை. அவளுடைய திருவடி ஒன்றையே நோக்கிப் பணி புரிந்தவனாகையால் சிலம்பு மாத்திரம் அவனுக்குத் தெரிந்த அணிகலமாயிற்று. திருமேனியைக் கண் ணெடுத்துப் பார்த்து அறியாதவன் ஆதலின் மற்ற ஆபரணங்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறமை அவனுக்கு இல்லை.
இந்த உயர்ந்த இயல்பைத் திருவள்ளுவர் ‘பேராண்மை’ என்று திருக்குறளில் பாராட்டுகிறார்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ, ஆன்ற ஒழுக்கு.
பகைவரை அடக்கும் ஆற்றல் ஆண்மை; பிறன்மனை நோக்காமல் மனத்தை அடக்கி நிறுத்தல் பேராண்மை. இந்தப் பேராண்மை உடைய லக்ஷ்மணன், சீதா பிராட்டியைப் பிறன்மனை யென்றமை பற்றி நோக்குதல் ஒழிந்தனன்.
பல நாட்கள் உடன் இருந்து பணி செய்துவந்த லக்ஷ்மணனே பிராட்டியின் திருமேனியைப் பார்க்கவில்லை; ராமனுக்கு இளையானாம் பேறுபெற்ற தூய உள்ளத்தானாகிய குகன் ஓரிரவுப் பொழுதே ராமனோடு பழகியவன். சீதாபிராட்டியின் திருமேனியைப் பாராத இயல்பு அவன் பாலும் இருந்தது. அவனும் லக்ஷ்மணனைப் போன்ற பேராண்மை உடையவனே.
ராமபிரானைக் கண்கொண்டு அடிமுதல் முடிவரை நோக்கி அம்மேனியழகிலே ஈடுபட்டவன் குகன். ஆகையால் அவ்வழகுக் கோலத்தைப் பாராட்டும் பண்புடையவ னானான். “அல்லை யாண்டு அமைந்த மேனி அழகன்” என்று கண்ணாற்கண்ட பேரழகை வாயார வருணிக்கின்றான். அத்தகைய அழகன் துயிலும் போது அருகே நிழல் போலத் தொடர்ந்து வந்த சீதை துயில்வதைக் குறிப்பால் உணர்ந்தானேயன்றி அப்பிராட்டியின் திருமேனியை ஏறிட்டுப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அல்லவோ அவ்வழகை வருணிக்க முடியும்? எனவே, “அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச” என்று மாத்திரம் சொல்லித் தன் பேராண்மையைப் புலப்படுத்துகிறான்.
இந்தத் தூய்மை குகனிடம் உள்ளதென்பதை லக்ஷ்மணன் முதலிலேயே உணர்ந்து கொண்டான் போலும்! “பாம்பறியும் பாம்பின் கால்” அல்லவா? அதனால்தான் குகன் ராமனைப் பார்க்க வந்தபோது அவன் வரவைச் சொல்லப்புக்க லக்ஷ்மணன் ராமனிடம்,
”உள்ளந் தூயவன்”
என்று பாராட்டுகின்றான்.
‘பிறன்மனை நோக்காத பேராண்மை’யை விளக்கும் நிகழ்ச்சிகளை வேறு தமிழ் நூல்களிலும் காணலாம். மணிவாசகர் இயற்றிய திருக்கோவையாரில் ஒரு காட்சி வருமாறு:
ஒரு காதலி தன்னைக் காதலித்த காதலனுடன் தன் உறவினர் அறியாமல் புறப்பட்டு விடுகிறாள். தன் காதலனை மருமகனாகத் தன் தாய் தந்தையர் ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற ஐயம் உண்டாகவே, அவள் அவனுடன் சென்று அவன் ஊரிலே மணம் செய்து கொள்ளலாம் என்று துணிந்துவிடுகிறாள். அவ் விளங்காதலனும் காதலியும் ஒரு பாலைவனத்தின் வழியே போகிறார்கள்.
இங்கே வீட்டில், அந்தப் பெண்மணியைக் காணாமல் தாய் முதலியோர் வருந்துகின்றனர். அவளை வளர்த்த செவிலித்தாய், “நான் அவளைத் தேடிக் கொணர்வேன்” என்று சொல்லித் தன் தளர்ச்சியையும் நோக்காமல் புறப்பட்டு விடுகிறாள்.
நீண்டு பரந்த பாலை நிலத்தில் தள்ளாடித் தள்ளாடி வருகிறாள். நெடுந் தூரத்தில் யாரோ இரண்டு பேர், ஒரு பெண்ணும் ஓர் ஆடவனும், வரும் தோற்றத்தைக் கண்டு தன் மகளும் அவள் காதலனுந்தான் மீண்டனர் என்று அவள் உவக்கின்றாள். அவர்கள் அருகில் வந்தபோது அவள் ஏமாந்து போகிறாள்; அவர்கள் வேறு ஒரு மட மங்கையும் அவள் காதலனுமாக இருக்கிறார்கள். அவள் உள்ளம் தளர்ந்தாலும், உரை தளராமல், “உங்களைக் கண்டு, என் மகளும் அவள் காதலனும் இருக்கிற மாதிரியே இருப்பதைப் பார்த்து, அவர்களே வந்து விட்டார்கள் என்று மகிழ்ந்தேன். இந்தக் காதற் சிறப்போடே இருவர் உங்கள் எதிரே போயினரோ?? என்று கேட்கிறாள்.
அந்தக் காதலன் விடை சொல்லத் தொடங்குகிறான். “பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் என்னை ஆட் கொண்டருளிய நடராஜப் பெருமானுக்கு உரிய மலையில் உள்ள சிங்கத்தைப் போன்ற தோற்றத்தையுடைய ஒரு காளையைக் கண்டேன். அவனுக்கு அயலில்……” மேலே பேச்சை முடிக்கத் தெரியவில்லை. “அயலில் உன் மகள் சென்றாள்” என்று அவன் சொல்வானென்று மிக்க ஆவலோடு எதிர்பார்க்கிறாள் கிழவி. அவனோ அந்த விஷயம் வரும்போது தன் பேச்சை நிறுத்தி விடுகிறான்.
‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றவன்’ ஆகையால் அவன் அந்த ஆடவனைத்தான் பார்த்தான்; அருகே வந்த மடமகளைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அல்லவா அவளும் உடன்வந்தாளென்று சொல்ல முடியும்?
சொல்லாமல் இருந்தால் கிழவி ஏமாந்து போவாளே! அவள் ஆவலைத் தீர்க்க வேண்டுமே; அதற்கு வழி என்ன? “அயலே…” என்று நிறுத்தினவன் உடனே தன் காதலியைப் பார்த்து, “தூண்டா விளக்குப் போன்றவளே, இந்த அம்மை சொல்கிறதைக் கேள். என்ன அது?” என்று குறிப்பாக அவளை விடை சொல்லும்படி ஏவுகிறான். அவனுடைய வார்த்தையில் அவனது பேராண்மையும், கடமை உணர்ச்சியும், நாகரிகப் பண்பும் மலிந்து விளங்குகின்றன. பாடல் வருமாறு:
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மைஇம் மேதகவே பூண்டார் இருவர்முன் போயினரோ? – புலியூர் எனைநின்று ஆண்டான் அருவரை ஆளியன்னானைக்கண்டேன்;அயலே– தூண்டா விளக்கனை யாய்,என்னை யோ அன்னை சொல்லியதே?
இத்தகைய தமிழ் நூல் மரபுகளையெல்லாம் உணர்ந்த கம்பர், “அவள்” என்று குகன் பிராட்டியைச் சுட்டும் வார்த்தையில், அவனுடைய பேராண்மையைக் குறிப்பினால் புலப்படுத்துகின்றார் என்றே கருதுகிறேன்.



