இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

வாழ்த்தும் ரகசியம்

இந்திரன் தன் ஆஸ்தான மண்டபத்தில் வீற்றிருக்கிறான். அவனைச் சுற்றித் தேவர்கள் மங்கல கீதம் முழங்குகின்றனர். தேவரம்பையர் தம்முடைய இன்னிசையாடலால் அவனது திருவுள்ளத்தைக் களிப்பில் மூழ்குவிக்கின்றனர். புண்ணியத்தின் பயனாகிய போகங்களை நுகர்ந்து நுகர்ந்து செருக்கிய தேவர்கள் உல்லாச சல்லாபங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். தமக்கு இனி வேண்டும் பொருள் ஒன்றும் இன்றென்பார் போல இன்ப நிலையின் உச்சியை எட்டியுலவிய அவர்கள் சில சில சமயங்களில் தங்களுக்கு மேற்பட்ட தெய்வம் ஒன்று உள்ளதென்பதை எண்ணுகின்றனர்; வாழ்த்துகின்றனர்.

எப்பொழுதும் நிகழும் காரியமன்று அது. தம்முடைய சக்தியினால் மாற்றமுடியாத இடையூறுகள் நேருங் காலத்தில் ஆணவமே உருவாகிய அவர்கள் மனத்துள் ஒரு சிறு துணுக்கம் ஏற்படும். அசுரர்களால் தங்கள் வாழ்வு கெடுமென்று அஞ்சிய போதெல்லாம் எல்லாம் வல்ல முதல்வன் ஒருவன் உளனென்று உணரும் உணர்வும் அவனை எண்ணும் கருத்தும் அவர்பால் உண்டாகும். அப்போது வாழ்த்துகிறார்கள்; அலங்காரம் பட வாழ்த்துகிறார்கள்.

இந்திரன் முதல் எல்லாத் தேவர்களும் இவ்வாறு பரமேசுவரனை வாழ்த்துகின்ற வாழ்த்தொலி சில சமயங்களில் அண்ட கடாகங்களையே குலுங்க வைக்கும்; சில சமயங்களில் கல்லையும் உருகுவிக்கும். அவர்கள் தங்கள் அமராவதியிலிருந்து வாழ்த்துவதோடு நிற்பதில்லை. பூவுலகிற்கும் இறங்கி வந்து தலங்களுக்குச் சென்று இறைவனை ஏத்திப் பூசித்து வழிபடுகிறார்கள்; வாழ்த்துகிறார்கள்.

இவ்வளவு வாழ்த்தும் எதற்காக? ஆண்டவன் திருவருள் எல்லாவற்றிலும் வலிதென்று உணர்ந்துதான் அப்படி வாழ்த்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய லட்சியம் என்ன? தாங்கள் தருக்கி வாழும் வாழ்க்கை கெடக்கூடாது, தங்கள் பதவிக்கு ஆபத்து நேரக்கூடாது, தாங்கள் சதமென்று எண்ணி இறுமாந்து நிற்கும் அமர போகங்கள் அழிவின்றி இருக்க, அந்த அமர வாழ்விலே எக்காலமும் வாழவேண்டும் என்பதே அவர்களுடைய கருத்து: அதுதான் ஆண்டவனை வாழ்த்துவதன் ரகசியம். இறைவன் புகழைப் பெருக்கிச் சொல்லச் சொல்லத் தங்கள் வாழ்க்கையின் மேல் அவர்களுக்கு ஆசை வளர்கிறதே யொழியக் குறைவதில்லை. அவர்கள் வாழ்த்துவது தாம் வாழும் பொருட்டே.

வாழ்த்துவதும் னாவவர்கள் தாம்வாழ்வான்.

இதென்ன ஆச்சரியம்! இந்திரன் விபூதி ருத்திராட்ச தாரணம் செய்துகொண்டு பதுமாசனம் போட்டு ஒரே யடியாகத் தியானத்தில் ஆழ்ந்திருக்கின்றானே! ஆஹா! என்ன தவம்! என்ன யோகம்! எல்லாவற்றையும் மறந்து இறைவன் சரண பங்கஜங்களிலே மனத்தை லயிக்க விட்டு இவ்வாறு தியானம் செய்கிற அவனுக்கு என்ன வேண்டும்? அவனுடைய தியானத்தின் மர்மம் என்ன?

அவன் தியானம் செய்வது என்னவோ உண்மை தான் இறைவன் திருக்கோலத்தை உள்ளத்தே வைத்துச் சிந்தித்து நிற்றலும் உண்மைதான். ஆனால் தன் மனத்தை இறைவன்பால் தாழ்த்துவதற்குக் காரணம் மற்ற இடங்களில் தான் தாழ்வு அடையாமல் இருக்கத் தான். வணங்கா முடியனாய்த் தேவலோக அதிபதியாய், சுவர்க்கலோக இன்பத்தை யெல்லாம் நுகர்ந்து பூரித்துத் தன்னை யாவரும் சூழ்ந்து நின்று தொழச் செம்மாந்து வாழவேண்டியே அந்த தியானம் செய்கின்றான். தன் வாழ்வு சதமென்பதே அவன் கருத்து. என்ன பேதைமை! எல்லாத் தேவர்களும் இத்தகையவர்களே.

மனம்நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து
தம்மை எல்லாம் தொழவேண்டி.

‘தம்மை எல்லாம் தொழவேண்டி’த்தான் அவர்கள் மனம் தாழ்த்துகிறார்கள். எல்லாம் தம்மைத் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலே, முடிந்தால் வரந்தரும் பெருமானும் தம்மைத் தொழத் தாம் மேலே இருக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது! பத்மாசுரன் கதைதான் நமக்குத் தெரியுமே!

ஆனால் இறைவன் இவர்களை மதிக்கிறானா? மதிப்ப தில்லை. அறிவு வளம் படைத்த தேவாதி தேவர்களுக்கும் அவன் அரியன். அகங்காரமே சொரூபமாக உடைய அவர்களுக்கு அவன் சேயன். அகங்காரமின்றித் தன்னை அணுகும் விலங்குகளுக்கும் பறவைகளுக்குங் கூடக் கருணை புரியும் சீலம் உடையவன்.

தேவலோகத்துச் சட்டம் அங்குள்ள மலர்களில் வண்டுகள் மொய்க்கக் கூடாதென்பது. ஆனால் சிவபெருமான் திருமார்பிலுள்ள அழகிய கொன்றை மாலை அதற்கு விலக்காக நிற்கிறது. இயல்பாக அதிலே வண்டு மொய்க்காது. ஆனாலும் அப்பெருமான் கருணை அளவற்றுப் பொங்குவதனால் மதுகரங்கள் அக் கொன்றைத் தாரைச் சூழ்ந்து முரலுகின்றன. அப்படி மொய்ப்பதைக் காணும் போது சிவபெருமான் பரம கருணாநிதி என்பதை நினைக்கும்படி அக்காட்சி செய்கிறது.

சூழ்த்தமது கரமுரலுந் தாரோயை.

அத்தகைய கருணா நிதியிடம் போய் நாம் செருக்குற்ற வாழ்வையும் சதமற்ற பதவியையுமா வேண்டுவது?

அவன் இவைகளை வைத்துக்கொண்டு வியாபாரமா செய்கிறான்?

உண்மையான பக்தனும் இறைவன் திருவடியை வாழ்த்திப் பரவுகிறான். ஆனால் அவன் வேண்டுவது என்ன? இவ்வுலக வாழ்வல்ல; தன்னை யாவரும் தொழ வேண்டுமென்பதல்ல. இந்தப் பிறவியை ஒரு நோயென் றும், மானிட வாழ்வு மாயைக் காட்டில் அலையும் அலைச்ச லென்றும் உணர்ந்தவன் அவன். மீட்டிங்கு வாரா நெறியைத்தான் அவன் வேண்டுகிறான். இந்திரன் முதலிய தேவர்கள் தங்கள் தங்கள் இடத்தையும் பதவியையும் வாழ்வையும் இறுகப் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல அவன் இருக்கவில்லை. உலக நிலையாமையையும், வாழ்வு நிலையாமையையும் உணர்ந்த அவன், இந்தப் பிறவியினாலாகும் பயன் ஒன்றும் இல்லை, இது பாழான பிறவி என்று அறிவான். பிறவி நோயை வேரோடு அறுத்து விட வேண்டுமென்று அவன் தவியாய்த் தவிக்கிறான். அந்தத் தவிப்பிலே இறைவன் பால் வந்து அலறிப் பரவுகிறான்.

பாழ்த்தபிறப் பறுத்திடுவான்
யானும் உன்னைப் பரவுவனே.

இந்திரன் முதலிய தேவர்களும் வாழ்த்துகிறார்கள். மனத்தை இறைவன்பால் தாழ்த்துகிறார்கள். மேலும் மேலும் பாழ்த்துப் போகும் செயல்களைச் செய்யத்தான் அவர்களுடைய தோத்திரத் தியானங்கள். பக்தனோ பாழ்த்த பிறப்பை அறுக்கும் பொருட்டே இறைவனை எண்ணுகிறான்.

இந்தக் கருத்தை மாணிக்கவாசகப் பெருமான் தம் திருவாசகத்தில் அழகாகச் சொல்லுகிறார்:

வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மை எல்லாம் தொழவேண்டி;
சூழ்த்தமது கரமுரலும்
தாரோயை நாயடியேன்
யானுமுன்னைப் பரவுவனே.
பாழ்த்தபிறப் பறுத்திடுவான்

[வாழ்வான் – வாழும் பொருட்டு. தாழ்த்துவது- தங்கச் செய்தல். சூழ்த்த – சுற்றிய. மதுகரம் – வண்டு. முரலுதல் – ரீங்காரம் செய்தல், பாழ்த்த- பாழான.]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !