
இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்
இமயமும் குமரியும்
உடலாலும் உரையாலும் உள்ளத்தாலும் மனிதன் செயல் ஆற்றுவான். இந்த மூன்றையும் திரிகரணங்கள் என்று கூறுவர். இந்த மூன்றிலும் தூய்மை யுடையவனாக இருக்க மனிதன் முயல வேண்டும்.
உடலைத் தந்தவள் தாய்; உரையைத் தந்தது தாய் மொழி; உள்ளத்தைத் தந்தது தாய்நாடு. ஒரு தாயின் மக்களுக்குள் உடல் தோற்றத்தில் ஒரு பொதுமை இருக்கும். அவ்வாறே ஒரு தாய்மொழியைப் பெற்ற கூட்டத்தினரின் சமஷ்டியான பொதுமையைக் காணலாம். ஒரு நாட்டில் வாழ்வாரிடையே உள்ளப் பண்பில் ஒருவகைப் பொதுமையைக் காண லாம். நாட்டை ‘நேஷன்’ என்றும், உள்ளப்பண்பைக் ‘கல்ச்சர்’ என்றும் மேல்நாட்டினர் கூறுவர்.
ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் தாயென்னும் பொதுப்பற்றை உடைமையால் ஒன்றுபட்டிருப்பர். ஒரு மொழியைப் பேசும் கூட்டத்தினர் தாய் மொழிப் பற்றுக் காரணமாக ஒன்றுபட வேண்டும்.
ஒரு நாட்டில் வாழ்வார் தாய்நாடு என்ற பொதுப் பற்றுத் தம்மைப் பிணிக்க ஒன்றுபட்டு விளங்க வேண்டும்.
இந்தியா முழுவதும் ஒரு நாடு ; ஒரே உள்ளப் பண்பை யுடையவர் வாழும் நாடு என்று பழங்கால முதல் நாம் நம்பி வருகிறோம்; நூல்களும் சான்று பகர்கின்றன. இந்தியா என்ற பெயர் இதற்குப் பிற நாட்டார் வைத்து வழங்குவது. பரத கண்டம் என்ற பெயர் பழங் கிரந்தங்கள் சிலவற்றில் வழங்குகிறது. பெரும்பாலும் ஜம்புத்தீபம் அல்லது நாவலந் தீவு என் பதே இந்நாட்டின் பெயராகப் பல வடமொழி தென் மொழி நூல்களில் காணப்படுகிறது.
இயற்கை யமைப்பிலேயே இந்தநாடு மற்ற நாடு களிலிருந்தும் பிரிக்கப் பெற்றுத் தனித் தன்மை உடையதாக விளங்குகிறது. வடதிசைக்கண் வான் தோயும் இமயம், அறமும் தவமும் மலிந்த பார்த நாட்டுக்கு முடிபோல நின்று எல்லை கோலுகின்றது. அப்படியே தென்கோடியில் குமரிமுனை நாவலந் தீவின் தென் எல்லையாக உள்ளது. கிழக்கும் மேற்கு மாகிய இருமருங்கும் கடல்கள் எல்லை வகுக்கின்றன.
தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் மொழியினால் ஏனைய நாட்டினரோடு வேறுபட்டிருந்தாலும், உள்ளப் பண்பினால் நாவலந் தீவு முழுவதுக்கும் உரிய பொதுமையை மேற்கொண்டவர்களே. உடை, உணவு முதலியவற்றில் சில சில மாற்றங்களை அவர்களிடையே காணலாம்; ஆனாலும் அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பற்றிய சிந்தனையில் யாவரும் ஒருவராகவே இருந்தனர். தமிழ் நாட்டுக்கு வடவேங்கடமும் தென்குமரியும் எல்லையாக இருந்தாலும், தங்கள் உள்ளப் பண்புக்கு எல்லை வடவிமயமும் தென் குமரியும் என்பதைத் தமிழர்கள் மறக்கவில்லை.
தமிழ் நாட்டு அரசர்கள் வடநாட்டு அரசர்களோடு தொடர்புடையவராக இருந்தனர். சேர சோழ பாண்டியர்கள் அக்கினி, கதிரவன், சந்திரன் என்னும் முக் குலத்தினராகத் தம்மைச் சொல்லிக் கொண்டனர்.
சோழ அரசர்கள் தங்கள் முன்னோருள் ஒருவராகச் சிபிச் சக்கரவர்த்தியைக் கொண்டார்கள். கிள்ளிவளவன் என்னும் சோழ மன்னனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண் புலவர், ஈகை அவன் குலத்துக்கே உரிய பண்பு என்று சொல்கிறார்.
புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப்பு எறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
என்பது அவர் வாக்கு. “புறவினது வருத்தத்தைக் களையவேண்டி, கறை பொருந்திய அடியை உடைய யானையினது வெள்ளிய தந்தத்தால் கடைந்து செறிக்கப்பட்ட வெள்ளிய ஓரங்களை உடைய துலாக்கோலின் தட்டில் புகுந்த சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்தவனே!” என்பது இதன் பொருள். இதனால் பாரதநாட்டு மன்னவர் குலங்கள், ஒன்றனோடு ஒன்று தொடர்புடையவை என்பதை உணரலாம்.
தமிழ்நாட்டு மன்னர் பலர் வடக்கே சென்று இமயத்தளவும் தம் புகழ் ஓங்கவேண்டு மென்ற அவாவினால், அம் மலையின் கண்ணே தங்கள் அடையாள பொறியைப் பொறித்தார்களென்று தெரிகின்றது. சேரன் ஒருவன் இவ்வாறு இமயத்தளவும் தன் வீரப் புகழைச் செறித்தமையால் ‘இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்’ என்ற பெயரைப் பெற்றான். சோழர் களுள் கரிகாலன் இமயத்துக்குச் சென்று தன் புலிப் பொறியைப் பொறித்தானென்று நூல்கள் கூறுகின்றன. அவ்வாறே உக்கிரகுமார பாண்டியன் தன் கயற் பொறியை இமயத்தின் மேல் பொறித்தானாம். ஏக சக்கராதிபத்தியம் என்று அக்காலத்து மன்னர்கள் நினைத்தது இதைத்தான் ; இமய முதல் குமரிவரையில் தம் ஆணை நிலவுவதையே அவர்கள் விரும்பினர். உள்ளப் பண்பால் ஒத்த மக்கள் வாழும் இந்த நிலப் பரப்பு முழுவதையும் தம் ஆட்சிக்குள் அமைப்பதே அவர்கள் லக்ஷ்யம். கடல் கடந்து பிறநாட்டில் வீரம் நாட்டினாலும், தம் சொந்த நாடாகக் கொண்டு ஆள விரும்பியது இந்நாவலந் தீவைத்தான்.
மதுரைக் காஞ்சி யென்னும் பழந்தமிழ் நூலில் மாங்குடி மருதனார் என்னும் சங்கப்புலவர் இந்தக் கருத்தைப் புலப்படுத்துகிறார். ஓர் அரசனது பெருமையைக் கூறும்பொழுது நாவலந் தீவிலுள்ள மன்னர் அனைவரும் அம் முடிமன்னனுக்கு அடங்கி அவன் ஏவல் கேட்கின்றனர் என்று அமைக்கின்றார். நாவலந் தீவுக்கு எல்லை வகுத்துக் காட்டுகிறார்.
தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாஎல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப.
குறுங்கோழியூர்கிழார் என்னும் புலவர், யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேர அரசனைப் பாடுகின்றார். அவனுடைய முன்னோரது பெருமையைச் சொல்கிறார். அவர்கள் நாவலந்தீவு அனைத்தையும் ஒரு குடைக்கீழ் ஆண்டவர்கள். தெற்கே குமரியும், வடக்கே பெரிய மலையாகிய இமயமும், கிழக்கும் மேற்கும் கடல்களும் எல்லையாக உள்ள இப்பெரிய நிலப்பரப்பில், குன்று மலை காடு நாடு என்று பலவகையாக அமைந்துள்ள பிரதேசங்களில் உள்ளோர் யாவரும் ஒன்றுபட்டு அவர்ளுக்கு வழிபாடு கூறினர். தீமையைக் கடிந்து செங்கோல் செலுத்தி, நியாயமாக வரும் வரியைப்பெற்று நடுநிலையிலே நின்று, யாரும் தடை கூறாத வண்ணம் தம் சக்கரத்தை உருட்டி னார்கள். அவர் ‘ஆணைச் சக்கரம் ‘இனிதுருண்ட சுடர் நேமி’ யாகத் திகழ்ந்தது. அவ்வாறு இந்நிலமுழுதும் ஆண்டவர்கள் வழியிலே பிறந்தவன் சேரன்.
இப்படிப் புலவர் பாடுகிறார்.
தென்குமரி வடபெருங்கல்
குணகுட லாஎல்லை
குன்றுமலை நாடுகாடு
ஒன்றுபட்டு வழிமொழியக்
கொடிதுகடிந்து கோல் திருத்திப்
படுவதுஉண்டு பகல்ஆற்றி
னிதுஉருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல!
‘ஒன்றுபட்டு வழிமொழிய’ என்று கூறுவதன் கருத்தைச் சிந்திக்க வேண்டும். அடக்கு முறையாலும், செயற்கையினாலும் மக்கள் ஒன்றுபட இயலாது.
ஒன்றுபடும் உள்ளப் பண்புடையவர்களே ஒன்றுபடுவார்கள். தென்குமரி வடபெருங்கல் ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரே உள்ளம் சிந்திக்கின்றது. ஆகவே ஒன்றுபடுவது எளிதாயிற்று.
தமிழர், இமயமும் குமரியும் இணைந்த உள்ளப் பண்பை நன்கு உணர்ந்திருந்தனர். பல காதப் பரப்பு இடையிட்டு இவ்விரண்டும் பிரிந்திருந்தாலும், நாவலந் தீவின் சால்புக்கு இவை இரண்டும் முடியும் அடியும் என்பதை அவர் தேர்ந்தனர். நூல்களிலும், பழமொழி களிலும், பழக்க வழக்கங்களிலும் இமயமும் குமரியும் இணைந்திருக்கும் ஒற்றுமையைத் தமிழர் குறிப்பித்து வந்தனர்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் என்னும் புலவர் பாடுகிறார். அவன் புகழ் விரிகின்றது; நாவலந் தீவையும் கடந்து செல்கின்றதாம். இதைச் சொல்லும்போது எல்லை கூறுகின்றார்.
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.
[பனிபடு நெடுவரை – இமய மலை. தெனாஅது – தெற்கில் உள்ளது. உரு – அச்சம். குணாஅது – கிழக்கின் கண்ணது. தொடுகடல் – சகரரால் தோண்டப் பட்ட கீழ்கடல். குடாஅது – மேற்கில் உள்ளது. தொன்று முதிர் பெளவம் – பழையதாக முதிர்ந்த மேல்கடல்.]
சேரமான் ஒருவனை ஒரு புலவர் வாழ்த்துகிறார். “நீ அசஞ்சலனாக வாழவேண்டும்” என்று கூற வந்தவர்,
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே என்று உவமை சொல்லுகிறார். காஞ்சன சிருங்கத்தை யுடைய இமாசலத்தையும், பொதியமலையையும் போல, நீ அசஞ்சலனக வாழ வேண்டுமென்பது அவர் வாழ்த்து. குமரியைக் கூறா விட்டாலும் பொதியிலைக் கூறினார். வடமலையும் தென்மலையும் ஒன்றுபடுகின்றன.
பிசிராந்தையார் என்ற சங்கப்புலவர் ஓர் ஆண் அன்னத்தைப் பார்த்துப் பாடுவது போல வைத்துக் கோப்பெருஞ் சோழனது பெருமையை விளக்குகிறார். இமயமும் குமரியும் அன்னச் சேவல் வாழ்க்கையிலும் ஒன்றுபடுகன் றன. இமயமலையில் உள்ள மானஸ சராவரமென் னும் பொய்கையில் அன்னங்கள் வாழ்கின்றன என்பர். பிசிர் ஆந்தையார் கண்ட அன்னம், தென் குமரித் துறையில் உள்ள அயிரை என்னும் மீனை உண்டு விட்டுத் தன் இனத்தார் வாழும் இமய மலைக்குச் செல்கின்றது. ௮தை இடைமறித்துக் கூறுகின்றார் புலவர் :
அன்னச் சேவல், அன்னச் சேவல்
……………………………………………………
‘குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயின்.
வட நாட்டிலே வாழ்ந்தோர் ஏதேனும் பாவம் செய்தால் குமரியாட வருதல் வழக்கம். இது சீவக சிந்தாமணி முதலிய நூல்களால் விளங்கும். தமிழ் நாட்டி லுள்ளார் அவ்வாறே கங்கையாடச் செல்வது மரபு.
“ஆஸேது ஹிமாசல பரியந்தம்” என்ற தொடர் நாவலந் தீவின் ஓருமையைக் காட்டுவது, “காசி முதல் ராமேசுவரம் வரையில்” என்ற உலக வழக்கும் இதையே குறிக்கும். இன்றும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடினோர், கங்கை நீரைக் காவடியாகக் கட்டி எடுத்துவந்து ராமேசுவரம் சென்று ராமநாதப் பெருமானுக்கு அந்தக் கங்கை நீரை அபிஷேகம் செய்த பிறகே, காசி யாத்திரை நிறைவேறியதாக எண்ணுவர். ‘காசிக்குப் போனான், காவடி கொண்டு வந்தான்’ என்ற பழமொழி இந்தச் செயலைக் குறிக்க வந்ததே.
வடநாட்டில் நிகழ்ந்த புராண நிகழ்ச்சிகளை யெல்லாம் அறிந்த தமிழ் நாட்டினர், தென்னாட்டிலும் அத்தகைய நிகழ்ச்சிகளை நினைவுறுத்தும் தலங்களை ஏற்படுத்தி வழிபடுகிறார்கள். இமாசலத்தில் பார்வதி கல்யாணம் நடைபெற்றது; பொதியிலைச் சார்ந்த பாவநாசத்திலும் அது நடைபெற்றதாகப் புராணம் கூறுகிறது. ராமாயண பாரதக் கதைகளோடு சம்பந்தப்படுத்தி, தங்கள் தங்கள் ஊர்களுக்குத் தமிழ் நாட்டார் கதைகளை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். “வடக்கே நிகழ்ந்தவை எங்களுக்கும் சொந்தம் ” என்ற கருத்தைப் புலப்படுத்துவன அவை.
இமயமும் குமரியும் இந்திய நாட்டின் எல்லை ; இந்நாட்டுக்கே உரிய சால்புக்கும் அவை எல்லை. பரந்துபட்ட இந்த நிலப்பரப்பிலுள்ள சமஷ்டியான ஒருமையை அவை அரண்செய்து பாதுகாக்கின்றன.
தென்குமரி வடபெருங்கல்
குணகுட லாவெல்லை
என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சங்கப்புலவர் இந்த ஒருமையை நினைந்து பாடினார்.
நம் கண்முன் வாழ்ந்து புகழுடம்பு பெற்ற பாரதியாரும் அதையேதான் பாடுகிறார்.
வடக்கில் இமயமலை பாப்பா—தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய்—இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா !
வேதம் உடையதிந்த நாடு—நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம்—இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
இந்துஸ்தானம் பூகோள எல்லையில் அடங்கியது மாத்திரமன்று. வைதிகப் பண்பும் வீரமும் சேர்ந்து ஒன்றுபட்டு அந்த ஒருமையிலே பிளவின்றிப் பிரிவின்றிச் சேதமின்றி விளங்குவது என்ற அரிய தத்துவத்தைத்தான் பாரதியார் இந்தப்பாப்பா பாட்டின் மூலமாகப் பெரியவர்களுக்கும் உபதேசம் செய்கிறார்.



