இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

வள்ளுவர் வைகிறார்

திருவள்ளுவர் உலகத்துக்கே உபதேசம் செய்ய வந்த பெரியவர். மகா சாது. இனிய வார்த்தைகள் கூறவேண்டுமென்பதை வற்புறுத்துபவர். “இனிய வார்த்தைகள் இருக்கும் போது வன்சொற்களை வழங்க வேண்டிய அவசியம் என்ன?” என் று கேட்கிறவர் அவர். ‘அவருக்குக் கோபம் வருகிறது, கடுமையாகப் பேசுகிறார், ‘வன்சொல் வழங்குகிறார்’ என்றால் அதற்குக் காரணமில்லாமல் போக நியாயம் இல்லை. குணம் என்னும் குன்றேறி நின்ற வள்ளுவருடைய வெகுளி மிகவும் கொடூரமானது. அது கணப் போது நிற்பதாக இருந்தாலும் பாதுகாப்பதற்கு அரியது.

நல்ல வேளையாக அவர் யாரையும் குறிப்பிட்டுக் கோபித்துக் கொள்ளவில்லை. பொதுவாகச் சில ணங்களையும் அந்தக் குணமுடையாரையும் நினைக் கும்பொழுது அவரை அறியாமலே சினம் பொங்குகிறது போலும்!

நாகரிக உணர்வுடைய மக்களுக்குக் கோபம் வந்தால் அவர்களுடைய வசவுகள் தனிப்போக்காகத் தான் இருக்கும். இழிந்த சுபாவம் உள்ளவர்கள் வாழ்த்தினால் கூட அந்தப் பாஷை நயமாக இராது. வள்ளுவர் கோபம் மூண்டு வைதால் கூட அது கவிதையாக இருக்கிறது.

யாராவது தகாத காரியம் செய்துவிடுகிறான். அவனைக் கண்டாலே நமக்குக் கோபம் வருகிறது. “அவனும் ஒரு மனுஷனா?” என்று கடிந்து சொல்கிறோம். வள்ளுவருக்குக் கூட இந்த மாதிரி கடிந்து சொல்லத் தெரியும். உபயோகமில்லாமல் “சள சள” என்று பேசிக்கொண்டு தன் வாயையும், கேட்போர் காதையும் வலியெடுக்கும்படி செய்கிறானே, அந்த மகானுபாவனைத்தான் அப்படி வைகிறார்.

“சே, அவன் ஒரு மனிதனா? பயனில்லாத வார்த்தைகளைக் கொட்டுபவனை மனிதன்” என்று சொல்லக்கூடாது; மனிதர்களுக்குள் பதர் என்று சொல்லவேண்டும் என்று கூறுகிறார்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்

“சோற்றுக்குக் கேடாக உட்கார்ந்திருக்கிறதே, இது இருந்து என்ன, இல்லாமற் போனால்தான் என்ன? என்று யாரோ கொடூர குணமுள்ள மருமகள் தன் கிழட்டு மாமியாரைப் பார்த்துச் சொல்கிறாள் என்று நினைக்கும்படி இருக்கிறது ஒரு பேச்சு. வள்ளுவர் அப்படிச் சொல்கிறார் என்றால் நம்பத் தோன்றுகிறதா?”

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான காரியங்கள் சில இருக்கின்றன; சிறப்பான காரியங்களும் உள்ளன. மனிதனுக்குச் சிறப்பைக் கொடுப்பவை கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம் என்பவை. ஒருவர் நல்ல விஷயத்தைச் சொன்னால் கேட்டு ரஸிக்கத் தெரிந்தால்தான் அவனை மனிதனாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் இரண்டு கால் மிருகம் என்று சொல்லவேண்டும். ‘செவி யுணர்ச்சி யில்லாமல், ரஸிக்கும் திறமையில்லாமல், சோற்றுச் சுவையை உணரும் அவர்கள், இந்த உலகத்தில் செத்துப் போனால் என்ன? வாழ்ந்தால்தான் என்ன?” என்று என்று கேட்கிறார் பொதுமறை ஆசிரியர்.

செவியிற் சுவை உணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?

அக்கிரமமான காரியம் செய்தவர்களைக் கண்டால் நல்ல மனிதர்களுக்கு வயிறு எரிகிறது. அவர்களை வையத் தோன்றுகிறது. சோற்றுக்கும் துணிக்கும் இல்லாமல் நீ நாசமாய்ப் போகவேணும்!” என்று அடிவயிற்றிலிருந்து கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. பொறாமைக்காரனைப் பார்க்கும் போது வள்ளுவருக்கும் அப்படித்தான் வருகிறது கோபம்.

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

‘ஒருவன் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமை கொள்பவனைச் சேர்ந்த உறவினர்கள் கூடப் பிண்டத்துக்கும்‌ துண்டத்துக்கும்‌ வழியில்லாமல்‌ நாசமாய்ப்‌ போய் விடுவார்கள்‌ ‘ என்று அவன்‌ சுற்றத்தாரயும் சேர்த்துச்‌ சபிக்கறார்‌.

“தனக்காகவும்‌ தெரியாது, சொன்னாலும்‌ கேட்க மாட்டான்‌ ” என்று ஒரு பழமொழி உலகத்தில்‌ வழங்குகிறது. அந்தக்‌ குணத்தை உடையவனை வள்ளுவர்‌, சீக்கிரம்‌ செத்துப் போனால்‌ நல்லது என்‌று குறிப்பிடுகிறார்‌. ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது! ஓர் ஊர் முழுவதும் தொற்று நோய் வந்துவிட்டால் அதை அடியோடு விரட்ட என்ன என்னவோ ஏற்பாடுகள் செய்கிறார்கள். இந்த முட்டாள் இருக்கிறானே, இவன் உலகத்துக்கே நோயைப் போன்றவனும். ‘சமுதாயத்துக்குப் பிளேக் நோய் போன்றவன்’ என்று இங்கிலீஷில் சொல்வது வழக்கம். இவன் உயிர் போமளவும் இந்த உலகத்துக்கு நோயும் போகாதாம்!

ஏவவும் செய்கலான், தான்தேரான், அவ்வுயிர்
போதும் அளவும் ஓர் நோய்.

“நீ நாசமாய்ப் போகவேணும்; நிர்மூலமாகப் போகவேணும்; செத்துப் போகவேணும் !’ என்பவை இக்காலத்திலும் வசவாக வழங்குகின்றன. வள்ளுவர் கோபத்தில் வழங்கும் வசவுகளில், இந்தக் குணமுடையவன் செத்துப்போவது நல்லது என்று சொல்வதும் ஒன்று. மறைவாக ஒருவனைப் பற்றிப் புறங்கூறும் இழிந்த சுபாவம் உடையவன் உயிரை வைத்துக் கொண்டிருப்பதைவிட விஷங் குடித்துச் செத்துப் போகலாமென்று சொல்கிறார்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

‘அந்த மாதிரி தர்மத்தை நினைந்து செத்துப் போகாமல் வாழ்கிறவர்கள் பூமிக்குப் பாரமாம். அப் பாரத்தைப் பூமி தாங்குவது ஏதோ தர்மமாகப் போகட்டும்’ என்ற உணர்ச்சியினாலாம்.

அறன் நோக்கி ஆற்றுங்கொல் வையம்? புறநோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

நிலத்துக்குப் பாரமாக ஏன் இருக்கிறாய்? என்று கோபித்துப் பேசும் வார்த்தைகளை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். வள்ளுவர் யார் யாரை நிலத்துக்குப் பாரமானவர்கள் என்று நினைக்கிறார் தெரியுமா? முன்னாலே சொன்ன புறங்கூறும் பேர் வழி, கொடுங்கோல் அரசனைச் சார்ந்த கூட்டம், தாக்ஷிண்யம் என்பது மருந்துக்கும் இல்லாதவன், பணத்தைக் குவித்துக் குவித்துப் பொன்காக்கும் பூதமாக இருப்பவன் ஆகியவர்களைப் பூமிக்குப் பாரமானவர்களாக அவர் சொல்கிறார்.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

கொடுங்கோலனாகிய அரசன், நீதி நூல் முதலியவற்றைப் படிக்காமல் தனக்குத் தாளம் போடும் முட்டாள்களையே பக்கபலமாகச் சேர்த்துக் கொள்வான் ; அந்தக் கூட்டத்தைவிட உலகத்துக்குப் பாரம் வேறு இல்லை.

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

தாட்சிண்யம் என்று சொல்லும் கண்ணோட்டம் இருப்பதனால்தான் உலகம் நடக்கிறது; அது இல்லாதவர்கள் இந்த உலகத்தில் இருப்பது நிலத்திற்குப் பாரந்தான்.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

நாம் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக வாரிக் குவிக்க வேண்டுமென்று பணத்தைச் சம்பாதிக்கிறதை மாத்திரம் வைத்துக்கொண்டு, அதனால் பெரும் புகழை விரும்பாத மனிதப் பிறப்பு உலகத்துக்குப் பாரம்.

கோபத்தின் உச்ச நிலையில் “பாவி!”என்று வைகிறார் வள்ளுவர். மனிதர்களை வையவில்லை; கெட்ட குணங்களையே வைகிறார், அந்த வசவை வாங்கிக் கொள்வன இரண்டு குணங்கள். பொறாமையையும் தரித்திரத்தையும் அவர் இந்தப் பட்டத்துக்கு உரியவையாகத் தேர்ந்தெடுக்கிறார்.

அழுக்காறெனவொரு பாவி.
இன்மை யெனஒரு பாவி.

தரித்திரம் பிடித்தவர்களை வைது பயன் இல்லை ; ஆகையால் தரித்திரத்தை வைகிறார்.

அதோடு நிற்கவில்லை. வறுமையினால் பிறரிடம் சென் று மக்கள் யாசகம் செய்கிறார்களே, அது எவ்வளவு இழிந்த நிலை? தரித்திரம் ஒழியவேண்டும் என்பது அவர் கருத்து.

உலகத்தில் வயிறு பிழைக்க யாசகங் கூட ஒரு தொழிலா? யாசகம் செய்து உயிர் வாழும் படியாகப் படைக்கும் கடவுள் ஒருவன் இருக்கிறானாமே; அப்படியானால் அந்தக் கடவுள் நாசமாய்ப் போகட் டும் !” என்று சாபம் கொடுக்கிறார்.

“உலகத்தைப் படைக்கிறவன் மக்களைப் படைக்கிறான் ; வயிற்றைக் கொடுக்கிறான்; பசியைக் கொடுக் கிறான். பசியை நீக்க உணவு வேண்டியிருக்கிறது. உணவைச் சம்பாதிக்க எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றன. அந்தத் தொழில்களை விட்டு அந்த மனிதன் யாசகம் செய்து உயிர் வாழட்டும் என்று பிரமதேவன் விதித்தானானால் அவன் நாசமாய்ப் போகட்டும்” என்று உள்ளம் குமுறுகிறார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

‘இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்பவர்களுக்கு, வேலை செய்து வாழ்வதை விட்டு, யாசகம் செய்து உயிர் வாழ்வதை வேண்டுமென்று விதித்தானானால், அந்தக் கொடியவன் அவர்களைப் போலவே எங்கும் திரிந்து அலைந்து கெடுவானாக!’

பிரமன் யாசகர்களுக்கு இடுந்தண்டனையை அவனுக்கே இடுகிறார் வள்ளுவர் !

“வள்ளுவப் பெருமானே, சிலர் தங்களைப் பிரம தேவனது திருவவதாரம் என்று சொல்கிறார்களே ! அப்படி இருக்கத் தாங்கள் இப்படிச் சாபம் இடுவது தகுமோ?” என்று கேட்கலாமா? அப்படிக் கேட் டால், யாராக இருந்தாலும் சரி, பரந்து கெடுக !- என்றே அவர் சொல்வார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !