இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

பாரதியின் தீர்க்கதரிசனம்

‘ரவி அறியாததைக் கவி அறிவான்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஸ்தூலப் பொருள்களின்மேல் தன் கிரணங்களை வீசி விளக்கும் சூரியனுக்குச் சூக்ஷ்மப் பொருள்களை விளக்கும் ஆற்றல் இல்லை. உள்ளத்தினுள்ளே நுண்ணிய அலைகளாக எழும்பும் உணர்ச்சிகளைத் தெளிவுறுத்தும் ஒளி அவன்பால் இல்லை. ஆனால் கவிஞன் தன் கற்பனைத் திறத்தால், உள்ளத்தால், உள்ளுவன எல்லாவற்றையும் அளந்து காட்டுகிறான். இந்த வகையில் கவி ரவியை மிஞ்சினவன்.

உள்ளொளி படைத்த கவிகளின் வாக்கிலேயும் ஓர் ஒளி சிறந்து நிற்கும். பாரதியார் இதை நினைந்துதான்,

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்

என்று பாடியிருக்கிறார். அந்த உள்ளொளி மெய்ஞ்ஞானி யிடம் உண்டு. கவிஞனிடமும் உண்டு. அந்த ஒளியினால் கண்ணுக்கெட்டாத பொருளையும் கண்டு கவிதையிலே காட்டும் ஆச்சரியமான காரியத்தைக் கவிஞன் சாதித்து விடுகிறான். அணுகவொண்ணாத இடத்தில் இருப்பதைச் சொல்ல வல்லமை படைத்த கவிஞன் இடத்தை ஜயித்து விடுகிறான். அப்படியே அவன் காலத்தையும் தாண்டிச் செல்கிறான். அவனது உள்ளொளி நெடுந்தூரத்துப் பொருளைக் காட்டுவதோடு நிற்பதில்லை; நெடுங்காலத்துக்குப் பின் வருவதையும் காட்டுகிறது. அவன் தூரதரிசி; தீர்க்கதரிசியும் ஆகிறான்.

பாரதியார் கவிதைவெறி மூண்ட உள்ளம் படைத்தவர். அந்த உள்ளத்துள்ளே ஒளி படைத்தவர். அதனால் அவர் வாக்கினிலும் ஒளி உண்டயிற்று. இத்தாலி நாட்டு மாஜினியின் வீரத்தையும் ரஷ்யாவின் புரட்சியையும் பெல்ஜியத்தின் வீழ்ச்சியையும் தூரதரிசியாக நின்று பாடினார். அது பெரிய காரியமல்ல. அடிமைத் தளையிலே சிக்கி உள்ளம் குமுறும் பாரதவாசியின் உள்ளத்தின் ஆழத்திலே சென்று, அணுகுதற்கரிய அவ்விடத்து உணர்ச்சிக்கு உருவம் அளித்துப் பாடினார். அதுவும் பெரிதல்ல. வருங்காலத்தில் நிகழ இருப்பதை முன்பே பாடினார். இது வியக்கத் தகுந்தது. இதனால் அவர் தீர்க்க தரிசி ஆகிவிட்டார்.

அவர் காலத்தில் ரஷ்யாவில் பொதுவுடைமை நிலை கொள்ளவில்லை. அதைப்பற்றிய முழுக் கற்பனை கூட உருவாகாத காலம் அது. ஆனால் ரஷ்ய நாட்டுக் கிளர்ச்சியை முன்கூட்டியே அவர் அளவெடுத்து வாழ்த்தியிருக்கிறார்.

மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற்கடைக்கண்
வைத்தாள ஆங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்

என்று ஆரம்பிக்கின்றார். மகாமேதாவிக ளெல்லாம் மிகவும் ஜாக்கிரதையாகத் தூர இருந்து பார்த்து, “பிழைத் தாற் பார்க்கலாம்” என்று சந்தேக நிலையில் இருந்த பொழுது பாரதியார் தீர்க்க தரிசனத்தால் அந்த நாட்டின் வருங்காலப் பெருமையை உணர்ந்து பாடினார்.

அடிமைக்குத் தளையில்லை யாருமிப்பொ
தடிமையில்லை அறிக என்றார்.
டிப்பட்ட சுவர்போலக் கலிவிழுந்தான
கிருதயுகம் எழுக மாதோ!

பொதுவுடைமையைப் போற்றும் நிலை உலகத்தில் இன்று வந்திருக்கிறது. முதலாளி மனப்பான்மையைத் தூவென்று தள்ளும் காலமும் வந்துவிட்டது. “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று இந்தப் பொதுவுடைமைக் கட்சியைப் பாரதியார் முன்பே பாடிவிட்டார்.

தனிஒருவனுக்கு உணவிலையெனில்
சகத்தினை அழித்திடுவோம்

என்று வீறு பேசும் அவர் வாக்கில் தீர்க்கதரிசனம் இருக்கிறது.

மகாத்மா காந்தியடிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இந்திய மண்ணில் நட்டார். பாரதியார் அதன் இளமுளையைத்தான் கண்டார். அதற்குள் அவர் அமரராகிவிட்டார். ஆனாலும் அந்த முளையிலிருந்தே, இது இப்படியெல்லாம் விளையும் என்ற உணர்வு அவருக்கு உண்டாகியது. காந்தியடிகளைப் பற்றி அன்று அவர் பாடிய பாடல்கள் இன்றுதான் நன்றாக விளங்குகின்றன. அவற்றின் பொருள் இன்று நிரம்பித் தோன்றுகின்றது.

பாரதியார், சத்தியாக்கிரகத்தை மாணிக்கம் போன்ற மார்க்கம் என்று பாராட்டுகிறார் “செம்மணிமா நெறி கண்டோம்” என்று பாடுகிறார். அது ‘செம்மணிமா நெறி’ என்று அன்று பலர் உறுதியான எண்ணம் கொள்ளவில்லை. ஆனால் இன்று போரின் அழிவுச் சக்திகளாலே அலைக்கப்பட்ட உலகமே சத்தியாக்கிரகத்தைப் போற்றுகிறது. இது புது வழி என்பதை,

பாரில் உள்ள பலநாட் டினர்க்கும் பாரத நாடு புதுநெறி பழக்க லுற்றதிங் கிந்நாள்

என்று சொல்கிறார். உலக முழுவதும் இந்த நெறியிலே பழகுங் காலம் வரத்தான் போகிறது.

மாந்தரெல் லோரும் சோர்வை
அச்சத்தை மறந்து விட்டார்
காந்திசொற் கேட்டார் காண்பர்
விடுதலை கணத்தி னுள்ளே

என்ற பாட்டுக்குப் பொருள் இன்றல்லவா நன்றாக விளங்குகிறது?

நாகபுரியில் கொடிப் போராட்டம் நடைபெற்றது. பல மாகாணங்களிலிருந்தும் தொண்டர்கள் சென்று அப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பாரதியார் இறந்த பிறகு நடந்த செய்தி. ஆனால் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்ற அவர் பாட்டைப் படித்தால் அந்தக் கொடிப் போராட்டத்தைக் கண்டு பாடியதுபோலத் தோற்றும்.

அணியணி யாயவர் நிற்கும் இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் விறல்
பைந்திரு ஓங்கும் வடிவமும் காணீர்

என்று அவர் தொண்டர் “கூட்டத்தைப் பாடுகிறார். இதை அவர் புறக்கண்ணாலே பார்க்கவில்லை. அகக் கண்ணாலே கண்ட தீர்க்க தரிசனம் இது. அதை நாம் புறக்கண்ணால் பல வருஷங்களுக்குப் பின் கண்டோம். செந்தமிழ் நாட்டுப் பொருநரும், கொடுந் தீக்கண் மறவரும், சேர நாட்டு வீரரும், சிந்தை துணிந்த தெலுங்கரும், பிறரும் சேர்ந்து கொடியைக் காக்கும் காட்சியை அவர் கண்டபடி நாம் கண்டோம்.

இன்று விஞ்ஞானத்தின் விளைவினால் தினமும் ரேடி யோவைக் கேட்டு மகிழ்கிறோம். டெல்லியில் தலைவர் ஜவஹர்லால் பேசுகிறார். நாம் குமரிமுனையில் இருந்தாலும் இருந்தபடியே கேட்கிறோம். பாரதியார் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒன்று விஞ்ஞானத்தால் விளையப்போகிற தென்றால் யாரும் நம்பமாட்டார்கள்.ஆனால் பாரதியார் சொல்லி யிருக்கிறார்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

என்ற பாட்டு ரேடியோவை ஞாபகப்படுத்தவில்லையா? பாரதியார் இதைப் பாடிய அன்று, ‘இது வெறும் கவிக் கனவு’ என்றுதான் மனிதர்கள் நினைத்திருப்பார்கள். இன்று அது உண்மை நிகழ்ச்சியாகிவிட்டது.

நம் நாட்டில் இன்று மந்திரி பதவியை வகிக்கும் மங்கையர் இருக்கின்றனர். சட்ட சபைக் கூட்டத்தைத் தலைமை வகித்து நடத்துவோர் இருக்கின்றனர். பாரதி யார் இவர்களை வரவேற்றிருக்கிறார்.

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள்
நடத்த வந்தோம்

என்று பாடியதை அந்தக் காலத்தில் பார்த்தவர்களில் பாரதியாரின் நண்பர்கள், “எத்தனை ஆசை இவருக்கு! இது வீண் பேராசை” என்று நினைத்திருப்பார்கள். மற்றவர்கள், “என்னவோ பைத்தியம் உளறுகிறது!” என்று சொல்லியிருக்கக்கூடும். இன்றோ, பட்டங்கள் ஆண்டு சட்டங்கள் செய்யும் பெண்களைக் கண்ணாரக் காண்கிறோம்.

ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட் அமெரிக்காவுக்குச் சென்று இந்தியாவின் நிலைமையைத் தீயைக் கொப்புளிக்கும் பிரசங்கங்களால் விளக்கினார். மீண்டும் விடுதலை பெற்ற இந்தியாவின் பிரதிநிதியாக அகில ஐக்கிய மகா சபைக்குச் சென்று இந்தியாவின் உயர்வை நிலை நாட்டினார். எத்தனையோ மகளிர் கல்வி கற்கப் பிற நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். பாரதியார் இத்தகைய புதுமைப் பெண்களை வரவேற்று இருபத்தைந்து, முப்பது வருஷங்களுக்கு முன்பே பாடிவிட்டார்.

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேறவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்தே திலக வாணுத லார்நங்கள் பாரத் தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்

என்பது அவர் தீர்க்கதரிசனப் பாட்டு.

இந்திய நாட்டையே தெய்வமாக வைத்துப் போற்றும் வழக்கம் நமக்கு வந்துவிட்டது. பாரத தேவி யென்று பாட்டும் படமும் எழுதிப் போற்றுகிறோம். பாரதியாரே அதற்கு வழிகாட்டியிருக்கிறார். பராசக்தியின் ஒரு கூறாகவே அவர் பாரத தேவியைக் கருதினார்; வழிபட்டார்; பாடினார். பழைய புலவர்கள் தெய்வங்களைப் பல பலவிதமாகத் தோத்திரம் செய்திருக்கிறார்கள். அந்த மாதிரியே பாரத தேவியைப் பாரதியார் பாடியிருக்கிறார். பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி, பாரத தேவியின் திருத்தசாங்கம், பாரத மாதா நவரத்தின மாலை என்ற பாடல்களின் உருவங்கள் பழைய சம்பிரதாயத்தை அநுசரித்தவை.

பாரத தேவியின் திருத்தசாங்கம் என்பது அத்தேவியின் சிறப்பை விளக்கும் பத்து அங்கங்களைப் பற்றிச் சொல்வது. அங்கமென்றது தலை, கால் முதலியவற்றை அல்ல; பதவிப் பெருமையைக் காட்டும் உரிமைப் பொருள்கள். பாரததேவியின் நாமம், நாடு, நகர், ஆறு, மலை, வாகனம், ஆயுதம், முரசு, மாலை, துவஜம் என்ற பத்தையும் புகழ்ந்து பாடியிருக்கிறார் பாரதியார்.

பாரதமென்பது ஒரு தேசம். பாரதநாட்டை ஆரிய நாடென்றும் சொல்வது பாரதியார் வழக்கம். பாரததேவி யின் நாடு இது என்னும் போது, “வான் நாடு, பேரிமய வெற்புமுதல் பெண்குமரி யீறாகும், ஆரியநா டென்றே அறி” என்று பாரதியார் எல்லை கட்டிச் சொல்கிறார்.

பாரததேவியின் நகரம் எது? அவள் எழுந்தருளி யிருக்கும் நகரம் என்று தனியே எதைக் குறிப்பிடுவது? பாரதியார் காலத்தில் பாரத தேவிக்குக் கோயில் உண்டாகவில்லை. இருந்திருந்தால் சுலபமாக அந்தக் கோயில் உள்ள ஊரைச் சொல்லிவிடலாம்.

பாரததேவிக்குத்திருக்கோயில் கட்டவேண்டும் என்று காலஞ் சென்ற ஸ்ரீ சுப்பிரமணிய சிவா விரும்பினார். சேலம் ஜில்லாவில் பாப்பாரப் பட்டியில் கோயில் கட்ட எண்ணிச் சித்த ரஞ்சன தாஸைக் கொண்டு அஸ்திவாரமும் நாட்டினார். ஆனால் கோயில் எழும்பவில்லை. பாரத தேவிக்குரிய தலமும் அவர் காலத்தில் நிர்த்தாரணம் ஆகவில்லை.

பல வருஷங்கள் சென்ற பிறகு பாரத தேவிக்குக் கோயில் உண்டாகியது. அதைத் திறந்து வைக்கும் பெருஞ் செயலைப் பாரத தேவியின் தலைமகனாராகிய காந்தியடிகள் நடத்தி வைத்தார். இன்றும் அக்கோயில் யாவரும் கண்டு மகிழ விளங்குகிறது.

பாரத தேவியின் திருக்கோயில் உள்ள அந்த நகரம் எது தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்த விஷயந்தான். பாரத மக்களுக்குப் புனிதமான தலமாக விளங்கும் காசியிலே, மகாத்மாவால் திறக்கப் பெற்ற பாரத தேவி திருக்கோயில் நிலவுகிறது. எனவே பாரத தேவிக்குரிய நகரம் என்று ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் காசித் தலத்தைத்தான் சொல்லலாம்.

பாரதியார் அதைத்தான் தேவிக்குரிய நகரமாகப் பாடி யிருக்கிறார். பாரத தேவியின் கோயில் காசியில் எழும்புவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பாடியது அந்தப் பாட்டு. காசியிலே கோயில் கட்டியவர்களுக்கு இந்தப் பாட்டு ஒன்று இருப்பதே தெரியாது. அவ்வளவு தூரம் போவானேன்? பல தமிழருக்கே பாரதியார் பாரத தேவியைத் தம் கவிதையால் முன்கூட்டியே காசியிலே பிரதிஷ்டை செய்துவிட்ட செய்தி தெரியாதே!

இன்மழலைப் பைங்கிளியே எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல் சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க்கின்னமுது
தானென்ற காசித் தலம்.

பாட்டில் வெட்ட வெளிச்சமாகக் காசித்தலமென்றே சொல்லியிருக்கிறார். காசியென்று அர்த்தம் பண்ணும்படி வேறு வார்த்தை போடவில்லை. பாரதியார் தீர்க்கதரிசியா அல்லவா? நீங்களே, சொல்லுங்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !