
இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்
வள்ளுவரும் காந்தியும்
தமிழில் உள்ள இலக்கியங்களுள் உலகம் முழுவதும் பரவத்தக்க பொருட்செறிவும் பொதுப்பண்பும் வாய்ந்தது திருக்குறள். இந்த உண்மையை உணர்ந்தே பாரதியார், குறள் உலகம் முழுவதுக்குமே சொந்த மான நூல் என்று பாடுகிறார்.
வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு
என்பதில் அந்தக் கருத்துத் தோன்றுகிறதல்லவா?
சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்பியிருப்ப தோடு, வாழ்க்கைக்கு உதவும் படியான கருத்துக்கள் செறிந்திருக்கும் அநுபவ நூல் அது. வாழ்க்கையை நல்ல முறையில் நடத்துவதற்குத் துணையாக நம் நாட்டார் சுருதி ஸ்மிருதிகளைக் கொண்டிருக்கிறார்கள். அவை வாழ்க்கைச் சட்டங்கள். திருக்குறளையும் அவற்றைப் போலவே வாழ்வில் இன்பந்துய்க்க வரையறையான நீதிகளைக் கூறும் சட்ட நூல் என்று சொல்லலாம். ஆனால் இரண்டுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கும் நீதி நூல்களை மக்கள் விரும்பிப் படிப்பதில்லை. சட்ட நூலை யாரேனும் விரும்பிப் படிக்கிறார்களோ? இலக்கண நூல்கள் எல்லாமே, மொழிக்கு இலக்கண மாக இருந்தாலும் சரி, வாழ்க்கைக்கு இலக்கணமாக இருந்தாலும் சரி, மக்களுக்குக் கவர்ச்சி தருவதில்லை.
இந்தத் திறத்தில் திருக்குறள் வேறுபடுகின்றது. அது வாழ்க்கை நியதிகளை வரையறுக்கும் நூல்; வாழ்க்கைக்கு வரம்புகோலும் சட்ட நூல்தான். ஆயினும் சுவை நிரம்பிய இலக்கியமாக, படிக்கப் படிக்க இன்பந்தரும் காவிய ருசியோடு விளங்குகிறது.
உலக முழுவதுக்கும் பொதுவான உண்மைகளைத் திருக்குறள் கூறுகிறது. அதனால் அதற்குப் பொதுமறை என்ற பெயர் வழங்குகிறது: எங்கும் வழங்கும் பெருமைக்கு உரியதாக இருப்பதோடு என்றும் வழங்கும் பெருமைக்கு உரியதாக இருப்பதோடு என்றும் வழங்கும் பெருமையும் அதற்கு உண்டு. இட எல்லை கடந்து நிற்கும் தன்மையும் காலங்கடந்து நிற்கும் தன்மையும் அதன் பால் இருப்பதற்கு அது கூறும் பேருண்மைகளின் செறிவும் ஆழமுமே காரணம்.
இந்த இயல்பைத் திருக்குறளைச் சிறப்பிக்க வந்த ஒரு பாட்டு வெளியாக்குகிறது. அது வாடாத மாலை போன்றதாம். என்றும் வாடாதது. எப்போதும் மலர்ச்சியோடு விளங்குவது. காலத்தின் மாறுபாடுகளால் கலங்காது எதிர்தோன்றி நிலைத்து நிற்பது. தன்னைப் பயில்வார்களுக்குத் தேன் போலச் சுவை மலிந்து விளங்குவது. இப்படி இந்தப் பாட்டில் திருக்குறளின் பெருமை சொல்லப்பெறுகிறது.
என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும் நின் றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்.
புதிய புதிய காலங்கள் வந்தாலும் அந்த அந்தக் காலங்களுக்கும் பொருத்தமான உண்மைகளைச் சொல்லிக் கால வெள்ளத்தில் நிலைநிற்கும் என்ற கருத்தை, “யாணர்நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து” என்ற பகுதி குறிப்பிக்கிறது. யாணர் நாள்- புதுக் காலம்.
உண்மை எவ்விடத்தும் எக்காலத்தும் உண்மையாகத்தான் இருக்கும். “உண்மையே அழகு” என்று கூறுவர். சிறந்த உண்மைகளைச் சொல்லும் பேரிலக் கியமாகிய திருக்குறள் அழகிய இனிய நூலாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் கண்முன் எத்தனையோ அதிசயங்கள் நிகழ்கின்றன. நாமும் உட னிருந்து பார்ப்பதனால் அவற்றின் உண்மையான மதிப்பை நாம் உளங்கொள்வதில்லை. ராமர் காலத்தில் வாழ்ந்த மனிதனுக்கு நம்மளவு ராமபக்தி இருக்குமா என்பது சந்தேகந்தான். இதிகாசமாகவும், காவியமாகவும்,சரித்திரமாகவும் உருக்கொண்ட நிகழ்ச்சிகள் காலத்திலே ஊறி இனிமையையும் பெருமையையும் அடைந்திருக்கின்றன. இன்று அச் செய்திகளுக்கும் அவற்றோடு தொடர்புடைய பெரியோர்களுக்கும் உலகத்தார் அளிக்கும் மதிப்பு, அவை நிகழ்ந்த காலத்தில் இருந்திருக்குமா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். கண்முன்னே காணும் ஒன்றில் மனம் ஆழ்ந்து பதிவதில்லை. பழகிய பாலைப் போல அந்தப் பண்டத்தில் புளிப்பு உண்டாகிவிடுகிறது. கருத்தில், கற்பனையில், எதிர்பார்க்கும் ஆர்வத்தில், ஒரு பண்டம் இருந்தால் அதன் கௌரவமே வேறு. கடவுள் கண்காணாப் பொருளாக இருப்பதனால்தான் பெரு மதிப்புக்கு உரியவராக விளங்குகிறார்போலும்!
இன்று ராமர் இல்லை; கிருஷ்ணர் இல்லை; புத்த பகவான் வாழவில்லை; கிறிஸ்து மகான் பேசவில்லை ; முகம்மது நபி உயிரோடு இல்லை. ஆனாலும் அவர்களுடைய அபராவதாரம் போன்ற மகாத்மா காந்தி யடிகள் வாழவில்லையா? அந்தப் பெரியாருடைய ஆற்றலால் நம் கண்முன் எத்தனை அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன ! நரியைப் பரியாக்குவதும் பரியை நரியாக்குவதும் போன்ற அதிசயங்கள் அல்ல. அவற்றைக் காட்டிலும் கடினமானவை; பலதிறப் பட்ட மக்களின் மனக்குரங்கை அடக்கியாட்டும் அதிசயம்!
காந்தியடிகள் உண்மையை உயர்வாக எண்ணுபவர். அஹிம்சையை வாழ்க்கை நெறியாக உடையவர். எத்தனையோ சமயாசாரியர்களும் பெரியார்களும் தோன்றி அன்பு நெறியையும் அருள் நெறியையும் வகுத்த நாடு இது. அவர் சொல் நின்ற தேசமாகிய இங்கே மற்றொருவர் சொல் ஆட்சிபெற வேண்டு மாயின் அந்தச் சொல் ஆற்றலுடைய சொல்லாக இருக்கவேண்டும். சொல்லுக்கு ஆற்றல் பொருளால் வருவது. காந்தியடிகளின் சொல் பொருள் நிரம்பியது இருதயத்துக்கு ஒரு பாஷை உண்டென்றால் அது காந்தியடிகளின் சொல்தான். உள்ளமும் உரையும் உடலும் உண்மை நெறியிலே செல்லும் தகைமை யைக் காந்தியடிகள் ஒருவரிடத்திலேதான் காண்கிறோம். அவர் தம் உள்ளத்தே தோன்றியதை என் றும் கரந்து உரையாடுவதில்லை. அவர் வாழ்க்கையே உண்மையின் உருவம். “சத்திய சோதனை” என்று அடிகள் தம் சரித்திரத்திற்குப் பெயர் கொடுத்தா லும், நாம் அதற்குச் “சத்தியத்தின் வெற்றி” என்று திருநாமம் சூட்டிப் போற்றலாம்.
இதுகாறும் உலகில் பல பாகங்களிலே அவ்வக் காலத்து வாழ்ந்த பெரியார்களில் காந்தியடிகளைப் போலத் தம் காலத்திலேயே உலகெங்கும் பரவிய புகழுடையார் அரியரென்றுதான் சொல்லவேண்டும். இன்று கொள்கை வேறுபாடுகளால் காந்தியடிகளைத் தூற்றும் பகைவர்களும் அவருடைய தியாக உணர்ச்சியையும், உண்மைத் தன்மையையும் போற்றுகிறார்கள். வாய்திறந்து போற்றா விட்டாலும் அவர்கள் உள்ளத்தில் அடிகளின் மதிப்பு இருக்கத்தான் இருக்கிறது.
உள்ளமறிய உண்மை நெறியில் வாழும் ஒருவர் உலகத்தார் உள்ளத்தில் வாழ்வார் என்பது ஒரு பெரிய உண்மை. இந்த உண்மையை வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
காந்தியடிகள் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளராக இருப்பதற்கே காரணம், அவர் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதுதான்; ஒழுகுவது என்பது திரிகரணங்களையும் ஈடுபடுத்துவது. இந்தக் குறளுக்கு வியாக்கியானம் காந்தியடிகளின் வாழ்க்கை என்று இப்போது சொல்லிவிடலாமே.
காந்தியடிகள் அஹிம்சையையும் உண்மையையும் இருவழிகளாக, இரண்டு மூச்சு நாடிகளாகக் கொண்டு வாழ்பவர். நன்கு வாழ விரும்புவோர், தனி மனிதராயினும், தேசத்தாராயினும், இவற்றை உயிர் நிலையாகக் கொள்ளவேண்டு மென்று வற்புறுத்துபவர். மற்ற இயல்புகளெல்லாம் இவற்றுக்கு இனமாக வருபவைகளே. அஹிம்ஸையும் உண்மையும் நோக்கமாக மனித சமுதாயம் வாழுமானால் போரில்லை, பொறாமையில்லை, வறுமையில்லை, துன்பமில்லை. அவ்விரண்டினின்றும் வழுவாமல் வாழும் உலகத்தைத் தேடிக்கொண்டு இன்பநிலை தானே வந்து எய்தும்.
அஹிம்ஸை, உண்மை- இந்த இரண்டையும் மற்ற எல்லாப் பண்புகளிலும் சிறந்தனவாக எடுத்துச் சொல்லும் காந்தியடிகள் உள்ளம், வள்ளுவர் உள்ளத்தின் இக்காலத்து உருவம். திருவள்ளுவரும் அந்த இரண்டு பண்புகளையே யாவற்றினும் சிறந்தனவாக எடுத்துச் சொல்கின்றார். இது பெரிய வியப்பாகத் தோன்றுகிறதல்லவா?
“நீங்கள் நூற்றுக் கணக்கான நீதிகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள். அவ்வளவையும் கடைப் பிடிக்க எனக்கு ஆற்றல் இல்லை. ஏதேனும் ஒன்று, இரண்டு எடுத்துச் சொல்லி, ‘இப்படி நட திட்டமாகச் சொல்லிவிடுங்கள்’ என்று ஒருவர் திருவள்ளுவரைக் கேட்டால், அவர் என்ன சொல்வார்? இந்த இரண்டையுந்தான் சொல்கிறார்.
ஒன்றாக நல்லது கொல்லாமை, மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
“ஒன்றுதான் நான் கடைப்பிடிக்க முடியும் என்றால் அதற்கு ஏற்ற நல்ல பண்பு அஹிம்ஸை ; இன்னும் ஒன்று மேற்கொள்வேன் என்றால் உண்மையைக் கடைப்பிடிக்கலாம்” என்பது வள்ளுவர் கருத்து. அன்று வள்ளுவர் மொழிந்த உண்மையே இன்று மகாத்மாவின் மணிவாசகமாக மலர்கிறதென்று கொள்வதில் என்ன பிழை?
காந்தியடிகள் கண்டுபிடித்துத் தந்த ஆயுதம் சத்தியாக்கிரகம். “சத்தியாக்கிரகத்தின் ஆசிரியன் நான்” என்று அடிக்கடி அடிகள் சொல்வதுண்டு. அஹிம்ஸை முறையில், கொடிய நெஞ்சினர் உள்ளத்தை வசப்படுத்த ஆற்றும் போர் சத்தியாக் கிரகம்; உண்மையின்பால் உள்ள உறுதியால் நடை பெறுவது இந்தப் போராட்டம்.
சத்தியாக்கிரகத்தின் சிருஷ்டிகர்த்தா காந்தியடிகளானாலும், அதன் வித்து இந்த நாட்டுக்குரிய பரம்பரைச் சொத்து. எதிரியைப் படைகொண்டு பொராமல் பொறுமையாலும் தவத்தினாலும் வெல்லும் செய்தியைப் புராண வரலாறுகளிலே காணலாம். ஆனால் அந்தப் போராட்டத்தைத் தவம் புரிபவர்களும் முனிவர்களும் நிகழ்த்தியதாகப் படிக்கிறோம். காந்தியடிகளோ, “தவமும் தியாகமும் துறவிகளுக்கும் வனவாசிகளுக்கும் மாத்திரம் விதித்தனவல்ல. பிரம்ம சரியம் சந்நியாசிகளுக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. உண்ணாமை முனிவருக்கு மாத்திரம் உரியதல்ல. அவை இல்வாழ்வாரும் மேற்கொள்வதற்கு உரியனவே” என்று உபதேசிக்கிறார். அவர் ஆணையின் வழி ஒழுகும் சத்தியாக்கிரகத் தொண்டரில் பலர் தியாகிகள்; மனைவியோடு வாழ்ந்தும் பிரம்மசரிய விரதம் காப்பவர்; விருந்துண்ணும் வாய்ப்பிருந்தும் உண்ணாவிரதம் கொள்பவர்கள்.
தவத்தின் இலக்கணம் எதுவோ அதுதான் சத்தியாக்கிரகத்தின் இலக்கணம். துறவறத்தாருக்கே உரியதென்று தனியுரிமை முத்திரை பூண்டிருந்த தவம், இன்று காந்தியடிகளின் உபதேசத்தால் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் பயன்படுவதாக நிற்கும் பொழுது ‘சத்தியாக்கிரகம்’ என்ற புதுப் பெயரைப் புனைந்தது.
சத்தியாக்கிரகம் உண்மையும் அஹிம்ஸையும் இணைந்து நிற்பதே. உண்மையைக் குறித்து உறுதியாக நின்று, அஹிம்ஸை நெறியில் போராடுவது சத்தியாக்கிரகம். பகைவரால் ஹிம்சைக்கு உள்ளானாலும், அதனை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எள்ளளவும் ஹிம்சை புரியாமல் போராடுவது சத்தியாக்கிரகம். இதனைக் காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களில் நிகழ்த்திய சத்தியப் போராலும், அடிகளுடைய நல்லுரையாலும் உணர்ந்து கொள்ளலாம்.
திருவள்ளுவர் தவத்தின் இலக்கணத்தைச் சொல்லும் குறள் ஒன்று உண்டு. அதனையே சத்தியாக் கிரகத்தின் இலக்கணமாகவும் கொண்டுவிடலாம்.
உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண்
செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
என்பது அந்தக் குறள். “தனக்கு வரும் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதும், எந்தப் பிராணிக்கும் அக்காரணத்தாலோ வேறு காரணத்தாலோ துன்பத்தை உண்டாக்காமல் இருப்பதுமாகிய அத்தகைய பண்பே தவத்துக்கு உருவம்” என்பது பொருள்.
“துன்பத்தை ஏற்றுக்கொள்; ஆனால் நீ ஒரு வரையும் துன்புறுத்தாதே” என்பதற்கும், தடியடியை முகமலர்ச்சியோடு தாங்கிக்கொள்; ஆனால் அதற்கேதிரே உன் விரலைக் கூட அசைக்காதே என்பதற்கும் வார்த்தைகளில் வேறுபாடு இருக்கலாம். கருத்து ஒன்றுதான். முன்னதற்குப் பெயர் தவம்; பின்னதற்குப் பெயர் சத்தியாக்கிரகம். அதைச் சொன்னவர் வள்ளுவர்; இதைச் சொன்னவர் காந்தியடிகள்.



